தினமணி கதிர்

அடுத்து என்ன...?: கோலிவுட் இயக்குநர்களின் பரபர அப்டேட்!

தமிழ் சினிமா இயக்குநர்களின் அடுத்த திட்டம் என்ன... 

டெல்டா அசோக்

தமிழ் சினிமா இயக்குநர்களின் அடுத்த திட்டம் என்ன... அது குறித்த பரபர அப்டேட் தகவல்கள் இங்கே...
செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனி

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2004-ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி அடைந்த படம், '7ஜி ரெயின்போ காலனி'. 'காதல் கொண்டேன்' வெற்றிக்குப் பிறகு, செல்வராகவன் கொடுத்த கிளாஸிக் சினிமா இது. செல்வராகவனைப் பிடித்த எல்லோருக்கும் 7ஜியை நிச்சயம் பிடித்திருக்கும். இன்னும் சொல்லப் போனால், செல்வராகவனை தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்கள் பட்டியலில் இணைத்த படம் இது. 

படம் வெளியாகிக் கிட்டத்தட்ட 20 வருடங்களாகின்றன. ஆனாலும், 7ஜியின் தாக்கம் குறையவில்லை.  'புதுப்பேட்டை 2',  'ஆயிரத்தில் ஒருவன் 2' அப்டேட் கேட்டுக் கொண்டிருந்த செல்வாவின் ரசிகர்களுக்கு அவர் தரவிருக்கும் சூப்பர் அப்டேட் '7ஜி ரெயின்போ காலனி 2'. ரவி கிருஷ்ணாதான் இதிலும் ஹீரோவாக நடிக்கிறாராம். இதற்காக உடல் எடையைக் குறைத்து தயாராகி வருகிறார் என்கின்றனர். 

2011-இல் வெளியான 'ஆரண்ய காண்டம்' படத்திற்குப் பிறகு, அவர் நடிக்கவிருக்கும் படம் இது. முதல் பாகத்தைத் தயாரித்த ஏ.எம்.ரத்னம்தான் இதையும் தயாரிக்கவிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாதான் இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. நா. முத்துக்குமார் மட்டும் மிஸ்ஸிங்!

மூன்றாவது முறையாக இணையும்
ஹரி - விஷால் கூட்டணி

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஜீ நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பூஜை சென்னையில் கடந்த வாரம் ரொம்பவே எளிய முறையில் நடந்திருக்கிறது. விஷால் இப்போது ஆதிக் ரவிச்சந்தின் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடித்து வருகிறார். 'துப்பறிவாளன் 2' படத்தையும் விஷால் இயக்கி நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது ஹரியுடன் இணைந்திருக்கிறார். ஹரியுடன் விஷால் இணைந்த 'தாமிரபரணி', 'பூஜை' படங்கள்தான் 'சண்டைக்கோழி'க்கு படத்துக்குப் பிறகு விஷாலை குடும்ப ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. சமீப காலமாக முழு ஆக்ஷன் படங்களில் அவர் கவனம் செலுத்தி வந்தார். பல படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. வெற்றி கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் விஷாலே இயக்குநர் ஹரியிடம் பேசியிருக்கிறார்.

அதன் பின்னர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு முடிவானதாகச் சொல்கிறார்கள். ஹரியின் வழக்கமான ஃபார்முலா படம். நெல்லை, காரைக்குடியில் இதன் படப்பிடிப்பும் இருக்கும் என்றும் ஜூலையில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சொல்கிறார்கள். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ், உள்பட சிலர் பரிசீலனையில் உள்ளனர்.இது விஷாலின் 34-ஆவது படமாகும்.

தனுஷூக்கு மீண்டும் படம்; துருவ் விக்ரமுடன் ஒரு படம்
மாரி செல்வராஜ் 

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' மற்றும் 'வாழை' ஆகிய படங்களை இயக்கி வருகிறார். நடிகராக உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாகச் சொல்லப்படும் 'மாமன்னன்' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

குறிப்பாக, நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரம் இப்படத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் 'மாமன்னன்' திரையைக் காணக் காத்திருக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் தனுஷ் உடனான தனது அடுத்த படம் குறித்தும் 'மாமன்னன்' படம் குறித்தும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ''இப்போது துருவ் விக்ரமுடன் ஒரு படம் திட்டத்தில் இருக்கிறது. அதன் பிறகு தனுஷூடன் படத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அப்படத்தை தனுஷின்  நிறுவனமே தயாரிப்பதும், அதற்கு நானே இயக்குநராக இருப்பதும் எனக்கே பெரிய அப்டேட்டாக இருந்தது. 

தனுஷ்  என் மேல் ஒரு பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார். படமும் மிகப்பெரிதாக வரும் என்று நம்புகிறார். அதை நான் நிச்சயம் பூர்த்தி செய்வேன்' என்றார்.

மேலும் மாமன்னன் படம் பற்றிப் பேசிய அவர், 'மாமன்னன்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வாரம் அதுபற்றிய அப்டேட் வெளியிடப்படும். இது தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும். மேலும், 'மாமன்னன்' இன்றைய அரசியலைப் பற்றிப் பேசும் படமாகவும், நான் எடுக்க நினைத்த முக்கியமான படமாகவும் இருக்கும் என்றார். 

துருவ நட்சத்திரம் 2 
கௌதம் மேனனின் புது திட்டம்  

'கோப்ரா', 'பொன்னியின் செல்வன் 1' படங்களை அடுத்து 'துருவ நட்சத்திரம்' படமும் அப்போதே வெளியாகியிருக்க வேண்டியது. விக்ரமின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியான ஆச்சரியங்களில் ஒன்று 'துருவ நட்சத்திரம்' படத்தில் போஸ்டர். டைட்டிலின் கீழே, 'சேப்டர் 1 - யுத்த காண்டம்' என்றிருந்தது விக்ரமின் ரசிகர்களை இன்னும் புருவம் உயர்த்த வைத்தது. புதிய வடிவமைப்பிலிருந்த டைட்டிலுடன் போஸ்டர் வெளியானதையடுத்து படம் விரைவில் வெளியாகிவிடும் என்பதே ரசிகர்களின் கணிப்பாக இருக்கிறது. 

இந்நிலையில் படத்தின் அப்டேட் குறித்தும், ரிலீஸ் திட்டம் குறித்தும் விசாரித்ததில். 'துருவ நட்சத்திரம்' படத்தின் கதையை முதலில் ரஜினியிடம்தான் சொன்னார் கெளதம் மேனன். த்ரில்லர் ஜானரான இந்தக் கதை ரஜினிக்குப் பிடித்திருந்தாலும் ஏனோ நடிக்காமல் விட்டு விட்டார். அந்தக் கதையில்தான் விக்ரம் கமிட் ஆனார். கடந்த 2017-ஆம் ஆண்டு துருக்கியில் தொடங்கியது படப்பிடிப்பு. இப்படத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், அர்ஜுன் தாஸ், ராதிகா உட்படப் பலரும் நடித்துள்ளனர்.

துருக்கியில் நடந்த முதல் ஷெட்யூலைத் தொடர்ந்து வேறு சில நாடுகளிலும் படப்பிடிப்பு நடந்தது. விக்ரம் இதில் துருவா, ஜான், ஜோஸ்வா எனப் பல கெட்டப்களில் நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக ரிதுவர்மா நடித்துள்ளார். விறுவிறுப்பாகத் தொடங்கிய படப்பிடிப்பு பின்னர் யார் கண்பட்டதோ தெரியவில்லை, வேகம் குறைய ஆரம்பித்தது. இந்நிலையில்தான் மீண்டும் உயிர்பெற்று, கடந்த ஆண்டு படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் சென்னையில் சில நாள்கள் பேட்ச் ஒர்க் வேலைகளும் நடந்தன.

இந்நிலையில்தான் இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கும் ஐடியா வந்திருக்கிறது. கெளதம் மேனன் இப்போது நடிப்பில் பிசியாக உள்ளதாலும், அவரது நடிப்பிற்கு வரவேற்பு இருப்பதாலும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் கதையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். க்ளைமாக்ஸில் அவரது கதாபாத்திரத்துடன் அதிரடி திருப்பங்களுடன் சேப்டர் ஒன்று நிறைவு பெறுகிறது என்றும், அதுவே இரண்டாம் பாகத்திற்கான லீடாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள். 

அநேகமாக 'தங்கலான்' படத்திற்கு முன்னதாகவே 'துருவ நட்சத்திரம்' படம் திரைக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

SCROLL FOR NEXT