தமிழ் சினிமாவின் நிறம், சமீபகாலமாக மாறத் தொடங்கியிருக்கிறது. பகட்டான ஜிகினா பொய்களும் அதிகார மிடுக்குகளும் நிறைந்த தமிழ் சினிமா, மக்களின் வாழ்க்கையை அதன் பிரச்னைகளுடன் சித்திரிக்கத் தொடங்கியிருக்கிறது. அப்படி அச்சு அசலாக நம் வாழ்க்கையை கடந்த ஆண்டில் பேசிய சினிமாக்களின் வரிசை!
கடைசி விவசாயி
மேலோட்டமாகத் தெரியும் பாரம்பரிய விவசாய, வாழ்வியல் வழிமுறைகள், ஜாதிய கட்டமைப்பு, சிறுதெய்வ வழிபாட்டுக் காரணங்கள் போன்றவற்றையும் தாண்டி, திரைக்கென எந்த சமரசங்களும் இல்லாத எதார்த்தம் வழியே புவி அரசியல் பன்னாட்டு வியாபாரத் தந்திரங்கள் தொடங்கி, தத்துவங்கள் வரை இந்தப் படத்தில் கிடைக்கும் அரசியல், வாழ்வியல் குறியீடுகள் ஏராளம்.
"கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்' பாடலுடன் தொடங்கும் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரை முருகனின் வாகனமாகச் சித்தரிக்கப்படும் மயில் ஒரு குறியீடாகவே வருகிறது. "ஒரு சில காட்சிகளில் வருகிறார்கள்' என்பதாகவே விமர்சிக்கப்பட்ட விஜய் சேதுபதி, யோகி பாபுவின் பாத்திரங்கள் மிகவும் முழுமையானவை என்பதையும் தாண்டி படத்தின் ஓட்டத்துக்கும் அது நமக்கு உணர்த்தும் கருத்துகளுக்கும் அத்தியாவசியமானவை . முதியவர் நல்லாண்டி ஏற்று நடித்த கதை நாயகனான மாயாண்டியின் வாழ்க்கை. மாயாண்டியின் வாழ்க்கைக்கு உதாரணமாக பூமியின் சுழற்சியை மட்டுமே கூற முடியும் .
சேத்துமான்
மாட்டுக்கறியினால் நிகழும் கலவரத்தில் தன் மகனையும் மருமகளையும் பறிகொடுக்கிறார் பூச்சி. பேரன் குமரேசனின் பாதுகாப்பு கருதி அவனைத் தூக்கிக் கொண்டு வேறு ஊருக்கு வந்து ஒதுக்குப்புறமாகக் குடிசை போட்டு, கூடை பின்னியும் கூடவே பண்ணையார் வெள்ளையனின் வீட்டில் சிறிய வேலைகளைச் செய்வதுமாய் வாழ்க்கை நடத்துகிறார். வெள்ளையனுக்குப் பன்றிக்கறி சாப்பிடவேண்டும் என ஆசை வருகிறது. கூட்டுக்கு ஆள் சேர்க்க ஊரில் ஒவ்வொருவரிடமாகப் பேசிக் கூட்டம் தேற்றுகிறார். பன்றியை வாங்கி வந்து சமைக்கும் பொறுப்பு பூச்சி தலையில் விழுகிறது. அதன் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்கள்தான் மீதிக்கதை. ஓர் எளியக் கதைக்கரு. அதையொட்டி உருவாகியிருக்கும் இயல்பான படம் சேத்துமான். இயக்குநர் தமிழ் இந்தப் படத்தில் மொழி வழியிலான பிரதிக்கும் பிம்பங்கள் வழியிலான பிரதிக்கும் நடுவில் தமிழ்த் திரையுலகில் இருந்து வருகிற கனமான கோட்டை அழித்து, மெல்லிய இழையாக மாற்றியிருக்கிறார். உலகில் இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் வருகிற பசியைத்தான் பேசுகிறது படம். ஆனால், கிடைப்பதைத் தின்று பசியாற்றிக் கொள்ளும் எளியவரின் பசியல்ல இது. வகை வகையாகவும், வக்கணையாகவும், என்ன தின்னலாம் என்று அலைகிற வலியவரின் பசி. சாதி பேதம், மத பேதம், பால் பேதம் போன்று இது பசி பேதம்.
ஆதார்
ஒரு சாமானியனுக்குப் போராட்டங்கள் என்பதெல்லாம் அவ்வளவு எளிதானதா? , காவல் துறை உண்மையில் அவ்வளவு நேர்மையாக எல்லா புகார்களையும் விசாரிக்கிறதா?, இங்கு அதிகாரத்தின் முன்னும், பணத்தின் முன்னும் அமைதியாக இருக்கும் ஜனநாயகத்தின் தூண்கள் ஒரு சாதாரண மனிதனுக்காக எந்த எல்லை வரை போராடுகின்றன என்பதை விவாதமாக முன் வைத்தது "ஆதார்'. மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மனைவி காணாமல் போக, காவல் நிலையத்தில் பிறந்த குழந்தையுடன் புகார் தர வருகிறார் கட்டட வேலை செய்யும் கருணாஸ். புகாரை வாங்கிக் கொள்ளும் காவல்துறை கருணாஸின் மனைவிக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை விசாரணையின் மூலம் அறிந்து கொண்டு புகாரையும் முடித்து வைக்கிறது. ஆனாலும் இதை நம்ப மறுக்கும் கருணாஸ், மீண்டும் போராடத் தொடங்குகிறார். "காவல்துறை உங்கள் நண்பன்' என்பது வெறும் வெற்று வார்த்தைகளாகவே மாறிவிட்டதொரு சூழலில், ஒரு சாதாரண மனிதனின் பிரச்னைக்குக் காவல்துறையால் தீர்வு தர முடியுமா, அவர்களின் அதிகாரம் அவர்களை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார் இயக்குநர் ராம்நாத்.
கார்கி
தன் தாய், தந்தை, தங்கையுடன் வசித்து வருகிறார் பள்ளி ஆசிரியையான சாய் பல்லவி. அவரின் தந்தை செக்யூரிட்டியாகப் பணியாற்றும் அபார்ட்மென்ட்டில் ஒரு ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட, நான்கு வடமாநிலத்தவர்கள் கைது செய்யப்படுகின்றனர். சாய் பல்லவியின் மொத்தக் குடும்பத்தையே புரட்டிப்போடும் விதமாக, அதே வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சாய் பல்லவியின் தந்தையும் கைது செய்யப்படுகிறார். தந்தைக்காக நீதிப் போராட்டம் நடத்துகிறாள் மகள். அந்தப் போராட்டம் வென்றதா, அது வெளிக்கொண்டு வரும் உண்மைகள் என்னென்ன என்பதுதான் கதை. கார்கி என்னும் பள்ளி ஆசிரியையாகச் சாய்
பல்லவி. சுற்றியிருப்பவர்கள் கை கழுவிவிட்ட பிறகும் சட்ட ரீதியாக விடாமுயற்சியுடன் போராடும் பாத்திரத்தில் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணின் பிம்பத்தைக் கச்சிதமாகப் பிரதிபலித்திருந்தார். தன் தாயிடம், " என்ன இருந்தாலும் நான் உன் பையன் இல்ல, பொண்ணு. அதான் உனக்கு என்மேல நம்பிக்கை இல்லை, அப்படித்தானே?" என்னும் போது வெளிப்படும் அவரின் கோபம் கலந்த விரக்தி முகபாவங்கள் அத்தனை இயல்பு. ஊரே திரண்டு விரட்டும்போதும் சரி, உண்மையை உணரும்போதும் சரி, எதற்கும் பின்வாங்காமல் அவர் எடுக்கும் முடிவுகள் கார்கி கதாபாத்திரம் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது.
பயணிகள் கவனிக்கவும்
எந்த நிகழ்வு நடந்தாலும் அதை சமூக வலைதளங்களில் புகைப்படமாகவும், விடியோவாகவும் பதிவேற்றம் செய்து வருபவர்கருணாகரன். ஒருநாள், அசதியாக மெட்ரோ ரயிலில் படுத்துறங்கிய விதார்த்தை, போதை ஆசாமி என தவறாக சமூக வலைதளங்களில் கருணாகரன் பதிவேற்றம் செய்ய, வைரலாகி விடுகிறது. இந்தப் பதிவால் விதார்த்தின் வாழ்க்கை எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டது? அதன் பிறகு கருணாகரன் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக் கதை. வலைதளங்களில் பகிரப்படும் செய்தி உண்மையா என்பதை ஒன்றுக்கு பல முறை அலசி ஆராய்ந்து பகிருங்கள். அப்படி அது உண்மையான செய்தியாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அதன் விளைவு எப்படியாக இருக்கும் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியது படம். விதார்த், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளியாக வாழ்ந்த அத்தனை நிமிடங்களும் அத்தனை அற்புதம். தேசிய விருது மேடையில் விதார்த்துக்காக ஒரு விருது காத்திருந்தாலும் ஆச்சரியமில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.