2022-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடந்த பல நெகிழ்ச்சியான சம்பவங்களும் சர்ச்சைகளும்.... சினிமா ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களிடமும் பேசும் பொருளாக மாறிப் போனது. அப்படியான சம்பவங்கள் என்னென்ன என்பதைப் பற்றிய ஒரு குட்டி ரீவைண்ட் இது.
தேசிய விருதுகளில் முதலிடம்: கடந்த ஆண்டு தமிழ் சினிமா மொத்தம் 10 தேசிய விருதுகளைப் பெற்றது. கரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள், 68-ஆவது தேசிய விருதுகள் விழாவில் வழங்கப்பட்டது.
இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளி வந்தது "சூரரைப் போற்று'. அதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்த "மண்டேலா' திரைப்படம் சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த வசனத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. சிறந்த தமிழ்ப் படம், சிறந்த எடிட்டர், சிறந்த துணை நடிகைக்கான விருதுகள் என மூன்று விருதுகளை வசந்த் சாய் இயக்கிய "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் தட்டிச் சென்றது. மலையாளத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற "அய்யப்பனும் கோஷியும்' எனும் திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த பாடகி, சண்டை இயக்கம் ஆகிய 4 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது. சிறந்த பாடகியாக நஞ்சியம்மா தேர்வானது எல்லோருக்கும் நெகிழ்ச்சியானதொரு தருணமாக இருந்தது.
"தி காஷ்மீர் ஃபைல்ஸ்':1990-களில் காஷ்மீர் பகுதிகளில் இருந்து வெளியேறிய இந்து பண்டிட்டுகளின் துயரங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியான படம் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. விழாவில் பேசிய சர்வதேச திரைப்படப் போட்டித் தேர்வுக்கான குழுத் தலைவராக இருந்த இஸ்ரேலிய இயக்குநர் நாடவ் லேபிட் இத்திரைப்படம் குறித்து, "வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரசாரப் படமான "தி காஷ்மீர் ஃபைல்ஸ்', இந்த சர்வதேசத் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்து நான் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். விமர்சனங்களை இந்தத் திரைப்பட விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையாக இங்கு மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்" என்று விமர்சித்துப் பேசியிருந்தார். இது இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி தலைப்புச் செய்தியாக மாறியது.
இளையராஜாவின் அரசியல்: அம்பேத்கரும் மோடியும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும், செயல்வீரரின் நடவடிக்கையும் என்ற புத்தகம் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 -இல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருந்த இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு, மோடி ஆட்சியின் பல திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது என்றும் பெண்கள், சமூகம், பொருளாதார ரீதியாக விளிம்புநிலையில் உள்ள மக்களுக்காகப் பல நல்ல திட்டங்களை மோடி அரசு வகுத்துள்ளது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இதன் நீட்சியாகக் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ஆன்மிக இசைக் கச்சேரியை அரங்கேற்றினார் இளையராஜா. இது அவரின் அரசியல் நிலைப்பாடு பற்றிய விவாதத்தை பற்ற வைத்தது.
சோழர்கள் யார் ?: அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் புதினம் எப்போது திரைக்கு வரும் எனக் காத்திருந்த கல்கியின் ரசிகர்கள் அநேகம். அதைச் சாத்தியமாக்கி, அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்' புதினத்தை திரையில் மிளிரச் செய்தார் இயக்குநர் மணிரத்னம். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மக்களைக் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாய் திரையரங்குக்கு அழைத்து வந்தது இத்திரைப்படம். பாகம் ஒன்று நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த ஆண்டு ஏப்ரலில் இதன் இரண்டாம் பாகம் வெளியாகிறது. ஒரு புறம் இது வரவேற்பை பெற்று வரும் நிலையில் மற்றொருபுறம் படம் வருவதற்கு முன்னரே, வேறொரு விவாதத்தில் சோழர் வரலாறு தமிழ் வரலாறாகச் சென்று சேராமல் இந்து வரலாறு என்ற அடையாளத்துடன் மக்களிடம் சென்று சேர்கிறது. ராஜராஜ சோழன் இந்து அரசனாக அடையாளப்படுத்தப்படுகிறார், இது வரலாற்று திரிபு என்ற விமர்சனமும் எழுந்தது. இந்த விமர்சனத் தீயைப் பற்ற வைத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். இந்தக் கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
வாடகை தாய் பிரச்னை: நீண்ட காலமாக காதல் ஜோடியாக வலம் வந்தவர்கள் நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும். 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்த இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக் கான், கமல்ஹாசன், சிரஞ்சீவி, சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, அனிருத் ரவிச்சந்தர், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அக்டோபர் 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் தனது சுட்டுரைப் பக்கத்தில் "நயன்தாராவும் நானும் அம்மா அப்பா ஆகிவிட்டோம். பிரார்த்தனை, ஆசீர்வாதங்கள் என எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசிர்வதிகப்பட்ட அழகான இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன" என்ற செய்தியைப் பகிர்ந்திருந்தார். பின்னர், வாடகைத்தாய் முறையில் குழந்தைப் பெற்றுக் கொண்டனர் என்ற செய்திகளும் பரவின. திருமணமாகி நான்கு மாதங்களே ஆகியிருந்த நிலையில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறுவது சட்டப்படி சரியா என்ற கேள்விகள் எழ, சுகாதாரத் துறையின் விசாரணைக்குப் பின்னர், இருவரும் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டது சட்டப்படி சரிதான். அவர்கள் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டது.
விஜய்யின் பிரியாணி விருந்து: ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை என்பதால் நேரடி தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுமென தெலுங்குத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. இந்த விவகாரம் பேசுபொருளானதையடுத்து தமிழ்த் திரையுலகைச் சார்ந்த பலரும் தெலுங்குத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.
இதனிடையே சென்னையில் உள்ள பனையூரில் நடிகர் விஜய் தடபுடலான பிரியாணி விருந்துடன் தனது ரசிகர் மன்றத்தினரை இரண்டு முறை கூட்டிச் சந்தித்துப் பேசியிருந்தார். இந்த விவகாரம் தமிழ், தெலுங்குத் திரையுலகம் என பிரச்னைகளை வளர்க்க இத்திரைப்படத்தின் "வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் இயக்குநர் வம்சியும் இருவருமே தெலுங்குத் திரையிலகைச் சேர்ந்தவர்கள் என்பதால் இப்பிரச்னை சுமுகமாகத் தீர்ந்தது. படம் பொங்கலன்று அங்கும் வெளியாவது உறுதியானது.
இதற்கிடையில் இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க விநியோக உரிமம், அஜித்தின் "துணிவு' விநியோக உரிமையைப் பெற்றுள்ள ரெட் ஜெயண்ட்டுக்கு வருமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அந்த உரிமத்தைப் பெற்றது. பிறகு, தமிழ்நாட்டின் நான்கு பகுதிகளின் திரையரங்க விநியோக உரிமம் மட்டும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட்டுக்கு வந்தது. இதையடுத்து விஜய்யின் குட்டி ஸ்டோரியுடன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 24-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. ரசிகர்கள் தற்போது இரண்டு படங்களையும் திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.