முகப்பு
தினமணி கதிர்

திரைக்கதிர்

வசூலில் ஷாருக்கானின் 'ஜவான்' புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இது இந்திய சினிமாவின் புது அத்தியாயம் என்கிறார்கள்.

Updated On : 17 செப்டம்பர், 2023 at 3:19 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:29 AM

வசூலில் ஷாருக்கானின் 'ஜவான்' புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இது இந்திய சினிமாவின் புது அத்தியாயம் என்கிறார்கள். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்'  திரைப்படம் கடந்த  7-ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான இப்படம், வசூலில் புதிய சாதனைகள் படைத்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியான நான்கு தினத்திற்குள் 520 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்து வருகிறது. 'ஜவான்' படம் வெளியாகி மூன்றாவது நாளான செப்டம்பர் 9-ஆம் தேதி, இந்திய திரையுலக வரலாற்றில் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரே நாளில் ஹிந்தி பதிப்பு மட்டுமே 68.72 கோடி ரூபாயையும், உலகளவில் 144.22 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளது. 

--------------------------------------------------------------------------

'விடுதலை - பாகம்  2' படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கிறார். இவருடன் முதன்மையான கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். மேலும் சமுத்திரக்கனி, நான் கடவுள் ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.

Advertisement

--------------------------------------------------------------------------

'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து  ரஜினிகாந்தின் 171-ஆவது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கப் போவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில்  பதிவிட்டிருக்கிறது. ரஜினிகாந்தின் 171-ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப்போகிறார் என தகவல் வெளியான நிலையில்,  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அதனை உறுதி செய்திருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

--------------------------------------------------------------------------

கமலின் 233 - ஆவது படம்  'விக்ரம்' படத்தை விட அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகவிருக்கிறது. 'விக்ரம்' படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி என மல்டி ஸ்டார்கள் இணைந்து நடித்தது போல, இதிலும் மல்டி ஸ்டார்கள் கூட்டணி உருவாகிறது. யாரும் எதிர்பார்த்திடாத இரண்டு பெரிய ஸ்டார்கள் படத்தில் இருக்கிறார்கள் என்கிறார்கள். மிலிட்டரி பின்னணியில் நடக்கும் கதை இது என்றும், பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கலாம் என்றும் சொல்கிறார்கள். 'இந்தியன் 2'வில் இளமையான கமல் இருக்கிறார் என்ற சர்ப்ரைஸ் போல, இதில் கமலின் தோற்றம் பேசப்படும் எனவும் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.