அதிமுக வழக்குரைஞர் எழுப்பிய கேள்வியால் முதலில் சற்று திடுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு புன்னகைத்தபடியே பதிலளித்தார்.
'தேர்தல் பிரசாரத்தின்போது, யார், யார் எங்களுக்காகப் பணியாற்றினார்கள் என்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்க முடியாது. அதுவும் கட்சியின் தலைவர் என்கிற முறையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக நான் பிரசாரம் மேற்கொள்ளும் நிலையில், நான் போட்டியிடும் தொகுதியின் பிரசாரத்தை முன்னின்று நடத்த என்னால் இயலாது. கட்சி சாராத அனுதாபிகள், கூட்டணிக் கட்சியினர் என்று பலரும் எனக்காகப் பிரசாரம் செய்திருப்பார்கள். அவர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ, அல்லது பிரபாகரனோ எனக்குப் பிரசாரம் செய்ததாக எனக்கு நினைவில்லை.'
'உங்களுக்கு நினைவில்லையா அல்லது பிரசாரம் செய்யவில்லையா?'
'எனக்குத் தெரிந்து பிரசாரம் செய்யவில்லை. எனக்குத் தெரியாமல், எனது அனுமதி இல்லாமல் பிரசாரம் செய்ததாகவும் நினைவில்லை.'
'திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் உங்களுடைய அனுமதியின்பேரில்தான் பத்மநாபா படுகொலையுடன் தொடர்புடைய காந்தனுக்கு அடைக்கலம் கொடுத்தாரா?'
'நிச்சயமாக இல்லை.'
'ராஜீவ் காந்தி கொலையில் காந்தன் சம்பந்தப்பட்டிருந்தாரா?'
'எனக்குத் தெரியாது. சுப்புலட்சுமி ஜெகதீசன் 'தடா' சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டபோதுதான், அவருக்கும் காந்தனுக்கும் தொடர்பு இருந்தது என்று சொல்லப்பட்டதே எனக்குத் தெரியும்.'
'மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட 1991 மே 21-ஆம் தேதி உங்களுக்கு நினைவிருக்கிறதா?'
'இருக்கிறது.'
'அன்று ஸ்ரீபெரும்புதூரிலும், காஞ்சிபுரத்திலும் நடக்க இருந்த உங்களுடைய தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் ஏன் ஒத்திவைக்கப்பட்டன? உங்களுக்கு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படப் போகிறார் என்கிற தகவல் ஏற்கெனவே தெரிந்திருந்தது என்று கூறலாமா?'
'தேசியத் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்கள் இருக்கும் நாளில், அதே இடத்தில் மாநிலத் தலைவர்கள் கூட்டங்கள் இருந்தால், மாநிலத் தலைவர்கள் தங்களது கூட்டங்களை ஒத்திவைப்பது அரசியல் நாகரிகம். தேசியத் தலைவர்களின் பிரசாரத் தேதி கடைசி நேரத்தில் திடீரென்று அறிவிக்கப்படுவதால், அப்படி மாற்றம் ஏற்படுவது வழக்கம். அந்த அடிப்படையில்தான் அந்தத் தேதியில் எனது பிரசாரக் கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. அதற்கு உள்ளர்த்தம் கற்பிக்க முற்படுவது, தரம் தாழ்ந்த அணுகுமுறை.'
'ஜெயின் கமிஷனை முதலில் புறக்கணித்த நீங்கள் இப்போது ஆளும்கட்சியாக இருப்பதால் மீண்டும் பங்கேற்கிறீர்கள், அப்படித்தானே?'
'ராஜீவ் படுகொலை தொடர்பான விசாரணையை 1983 இலங்கை இனப் படுகொலையில் இருந்து தொடங்கி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தித்தான் நாங்கள் (திமுக) புறக்கணிக்க முடிவெடுத்தோம். இப்போது ஆளுங்கட்சியாக இருப்பதால்தான் நாங்கள் மீண்டும் பங்கேற்கிறோம் என்பதை நான் மறுக்கிறேன். மத்திய அரசின் ஆளும் கூட்டணியிலும், மாநிலத்தில் ஆளும் கட்சியாகவும் இருப்பதால், கமிஷன் எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் மீண்டும் பங்கேற்கிறோம் என்று கூறுவது தவறு.
அப்படிக் கூறினால், அது கமிஷனின் நோக்கத்தையும், நேர்மையையும் சந்தேகிப்பதாக இருக்கும்.'
கருணாநிதி கூறி முடித்ததும், அவரது பதிலுக்கு எதிர்க்கேள்வி எழுப்ப எழுந்திருந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. என்ன கேட்கப் போகிறார் என்று எல்லோரும் ஆவலுடன் அவரை நோக்கித் திரும்பினோம்.
'1987 ஜூலை மாதத்திலிருந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவான பின்னரும், விசாரணையில் திமுக பங்கு கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டது ஏன்? உடனடியாக விசாரணையில் பங்கேற்றிருக்க வேண்டியதுதானே?'
வாழப்பாடி ராமமூர்த்தியையும் அவரது கேள்வியையும் முதல்வர் கருணாநிதி சட்டையே செய்யவில்லை. அந்தக் கேள்விக்கு ஏற்கெனவே பதிலளித்தாகி விட்டது என்று சொல்வதாக இருந்தது அவரது மௌனம்.
'இப்போது ஆளுங்கட்சியாக இருப்பதால்தான் மீண்டும் விசாரணையில் கலந்துகொள்ள முடிவு செய்திருக்கிறீர்கள் என்று நான் கூறுகிறேன்.' என்கிற வாழப்பாடி ராமமூர்த்தியின் குற்றச்சாட்டையும் அவர் காதில் வாங்கிக் கொள்ளாததுபோல முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
வாழப்பாடி ராமமூர்த்தி விடுவதாக இல்லை. முழு வேகத்துடன் தனது குறுக்கு விசாரணையைத் தொடங்கினார் அவர்.
'விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று திமுக தீர்மானம் நிறைவேற்றியது ஏன்?'
'அப்படியொரு தீர்மானம் எந்தக் காலத்திலும் திமுகவால் நிறைவேற்றப்படவில்லை. இது உங்கள் கற்பனை. பொய்யான பரப்புரை. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டது. அதைத் திமுகவோ, தமிழக அரசோ எதிர்க்கவில்லை.'
'பத்மநாபா கொலைக்குப் பிறகு, புலிகளுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டோம் என்கிற வாதத்தை வலுப்படுத்துவதற்காகத்தான், அப்படித் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்று கூறுகிறீர்கள்...'
அதற்குப் பதில் எதுவும் கூறாமல், தமிழக அரசின் வழக்குரைஞரைப் பார்த்தார் முதல்வர் கருணாநிதி. அவர் முதல்வர் கூறிய கூற்றை வலுப்படுத்த, முரசொலி நாளிதழில் வெளியான செய்தியின் ஒரு பகுதியை, நீதிபதி ஜெயினிடம் தாக்கல் செய்தார்.
'1990 பிப்ரவரி 12-ஆம் தேதி, திருச்சியில் நடந்த திமுக மாநில மாநாட்டில் நிறைவு உரையாற்றியபோது, இந்திய ராணுவத்தைத் தோற்கடித்த விடுதலைப் புலிகளுக்கு வீர வணக்கம் தெரிவித்து நீங்கள் பேசியது உண்மைதானே?'
'அப்படிப் பேசியதாக எனக்கு நினைவில் இல்லை. பேசியிருந்தால், அது முரசொலியில் பதிவாகி இருக்கும். ஏனைய நாளிதழ்கள் கட்டம் கட்டி வெளியிட்டிருக்கும். அப்படி இல்லாதபோது, அதை உங்கள் கற்பனையாகத்தான் நான் பார்க்கிறேன்.'
'நீங்கள் இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று கூறுகிறீர்களா?'
'விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனானாலும் சரி, ஈபிஆர்எல்எஃப் தலைவர் வரதராஜப் பெருமாளானாலும் சரி, பத்மநாபா படுகொலைக்குப் பின்னர் அவர்களுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டோம் என்று ஏற்கெனவே இந்த கமிஷனில் நான் கூறியிருக்கிறேன். அதையே ஏன் மீண்டும் மீண்டும் எழுப்பி எனது நேரத்தையும், கமிஷனின் நேரத்தையும் வீணாக்குகிறீர்கள்?'
'உங்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வை.கோபால்சாமி, உங்கள் அனுமதியுடன்தான் யாழ்ப்பாணம் சென்றாரா?'
'என் அனுமதியுடன் அவர் செல்லவில்லை. ஆனால், அவர் யாழ்ப்பாணம் சென்றது எனக்குத் தெரியும். அவர் சென்ற நான்கைந்து நாள்களுக்குப் பின்னர், அது தொடர்பாக அவர் எழுதிய கடிதம் எனக்குக் கிடைத்தது.'
'அவர் பிரபாகரனைச் சந்திக்கத்தான் யாழ்ப்பாணம் சென்றிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?'
'யாழ்ப்பாணம் செல்வதாகத்தான் அவர் அதில் எழுதியிருந்தார். பிரபாகரனைச் சந்திக்கப்போவதாக அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிடவில்லை.'
'அவர் திரும்பி வந்த பிறகு பிரபாகரனைச் சந்தித்தது குறித்து தெரிவித்தாரா?'
'திரும்பி வந்ததும் அவர் என்னைச் சந்தித்தார். இலங்கைக்கு முறையான வழியில் முன் அனுமதி இல்லாமல் சென்றது குறித்து நான் அவரைக் கடுமையாகக் கண்டித்தேன். கோபால்சாமியின் பயணம் தொடர்பாக, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.'
'அதற்கு அவர் என்ன சொன்னார்?'
'அதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று ராஜீவ் காந்தி எனக்கு ஆறுதல் சொன்னார்.'
'அவ்வளவு நெருக்கமாக இருந்த நீங்கள், பிறகு ஏன் இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தீர்கள்? இந்திய அமைதிப்படையை விமர்சித்தீர்கள்?'
'இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சுமுகமான தீர்வு ஏற்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். இப்போதும்கூட இலங்கையில் தமிழர்கள் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அந்த நோக்கத்தில்தான் இந்தியா-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது என்பதையும் ஒத்துக் கொள்கிறேன்.'
'பிறகு ஏன் எதிர்த்தீர்கள்?'
'ராஜீவ் காந்தியின் நோக்கத்தை நான் குறை சொல்லவில்லை; செயல்பாட்டைத்தான் விமர்சித்தேன். அந்த ஒப்பந்தத்தில் பிரபாகரனும் இலங்கை அரசும் கையொப்பம் இட்டிருக்க வேண்டும். பிரபாகரனை ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டவராக்கி இருக்க வேண்டும். அண்டை நாட்டின் பிரதமர் என்கிற முறையில் ராஜீவ் காந்தி சாட்சிக் கையெழுத்துத்தான் போட்டிருக்க வேண்டும்.'
'ராஜீவ் காந்தி நாட்டை ஆளத் தகுதியற்றவர் என்று நீங்கள் ஏன் விமர்சித்தீர்கள்?'
'ஒப்பந்தத்தின் நோக்கம் நிறைவேறவில்லை என்பதால் அப்படிக் கூறினேன். மற்றபடி, தனிப்பட்ட முறையில் ராஜீவ் காந்தி மீது எனக்கு எந்தவிதக் காழ்ப்புணர்வும் கிடையாது.'
'கடற்படையினரும் மற்றவர்களும் இடைமறித்துப் பிடித்த போராளிகளை உங்களது மாநில அரசு ஏன் விடுவித்தது?'
'பிடிக்கப்பட்டவர்கள் போராளிகள் அல்ல, இலங்கைத் தமிழர்கள். அவர்களை விடுவித்தது தமிழக அரசல்ல, நீதிமன்றம். முறையான, சரியான தகவல்கள் இல்லாமல் இதுபோன்ற கேள்விகளைக் கேட்கக்கூடாது. எனது நேரம் வீணடிக்கப்படுகிறது.'
அப்போது வாழப்பாடி ராமமூர்த்தி மேலும் சில கேள்விகளை முன்வைத்தபோது, முதல்வர் கருணாநிதிக்கு எரிச்சல் வந்தது.
'ஒரு கேள்வி கேட்கும்போது, வேண்டுமென்றே ஐந்தாறு விஷயங்களைச் சேர்த்துக் கேட்கிறார் வாழப்பாடி ராமமூர்த்தி. அதற்கு விரிவாகத்தான் பதில் கூற வேண்டியுள்ளது. கேள்வியை மட்டும் அனுமதித்து, பதில் கூற வாய்ப்பளிக்க மறுத்தால், இந்தக் கமிஷனில் இடம்பெற விரும்பவில்லை.' என்று முதல்வர் கருணாநிதி கூறியபோது, நீதிபதி ஜெயின் உள்பட அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.
'விரிவான பதில் கூற உங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. நீங்கள் விரும்பினால் இப்போதுகூட கமிஷன் நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொள்ளலாம். யாரையும் வாக்குமூலம் தந்தாக வேண்டும், விசாரணைக்கு உள்பட்டாக வேண்டும் என்று கமிஷன் நிர்பந்திக்க முடியாது...' என்று நீதிபதி ஜெயின் சொன்னதும், முதல்வர் கருணாநிதி சற்று அமைதியானார். அவரிடம் இருந்த எரிச்சலும், கோபமும் சற்று தணிந்தது.
வாழப்பாடி ராமமூர்த்தியும், அங்கே நிலவிய பதற்றத்தைக் குறைக்கும் விதத்தில், தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்து கொண்டார்.
குடியரசுத் தலைவரின் தமிழக விஜயம் காரணமாக முதல்வர் கருணாநிதி சென்னை திரும்ப வேண்டி இருப்பதால், விசாரணையை அவரது அடுத்த தில்லி விஜயம் வரை ஒத்திவைக்க வேண்டும் என்கிற தமிழக அரசு வழக்குரைஞரின் வேண்டுகோளை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
'சாட்சி அளிப்பவருக்கு கமிஷன் உதவ வேண்டும். விசாரணை கமிஷன் மூலம் சிலர் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபடுவது தடுக்கப்பட வேண்டும்.' என்கிற முதல்வர் கருணாநிதியின் கருத்துகளைத் தலையாட்டி ஆமோதித்தார் நீதிபதி ஜெயின்.
அதுவரையில் காணப்பட்ட இறுக்கம் முற்றிலுமாக அகன்று, நீதிபதி ஜெயின் நட்பு ரீதியில் சகஜமாகப் பேசத் தொடங்கினார். 'சில முக்கியமான தலைவர்கள் விசாரணைக் கமிஷனுக்கு உதவத் தயாராக இல்லை. நோட்டீஸ் அனுப்பினால் பதிலளிப்பதில்லை. தங்களுக்குத் தெரிந்த விவரங்களைப் பகிர்ந்துகொள்ள மறுக்கிறார்கள்...' என்று தனது ஆதங்கத்தை நீதிபதி ஜெயின் வெளிப்படுத்தினார்.
அன்றைய விசாரணை முடிந்து கமிஷனின் அமர்வு முடிவுக்கு வந்தபோது, அனைவரின் மனதிலும் மேலெழுந்த கேள்வி, 'நீதிபதி ஜெயின் மறைமுகமாகக் குறிப்பிட்ட அந்த முக்கியமான தலைவர் யார்?' என்பதுதான்...
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.