பிரணாப் 
தினமணி கதிர்

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 219

காங்கிரஸ் கட்சியினர் பலர் சந்தேகப்பட்டதுபோல, மீண்டும் மீண்டும் போஃபர்ஸ் பிரச்னையை தேவே கெளடா அரசு எழுப்புவதன் பின்னணியில், உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தாவுக்கும் இடதுசாரிகளுக்கும் முக்கியமான பங்கு இருந்தது.

கி. வைத்தியநாதன்

காங்கிரஸ் கட்சியினர் பலர் சந்தேகப்பட்டதுபோல, மீண்டும் மீண்டும் போஃபர்ஸ் பிரச்னையை தேவே கெளடா அரசு எழுப்புவதன் பின்னணியில், உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தாவுக்கும் இடதுசாரிகளுக்கும் முக்கியமான பங்கு இருந்தது. இடதுசாரிகளைப் பொறுத்தவரை, அவர்கள் ஆட்சியில் இருந்த மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது காங்கிரஸ்தான். பாஜகவுடன் அந்தக் கட்சிகளுக்கு நேரடியான மோதல்கள் இருக்கவில்லை.

பிரதமர் தேவே கெளடாவுக்கும், கர்நாடக மாநிலத்தில் பிரதான எதிரியாக இருந்தது காங்கிரஸ் கட்சிதான். அப்போது அங்கே பாஜக தடம் பதித்திருக்கவில்லை. அதனால் இடதுசாரிகளின் காங்கிரஸ் எதிர்ப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அவர் முற்பட்டார்.

ஐக்கிய முன்னணியில் இடம் பெற்றிருந்த முக்கியமான மாநிலக் கட்சிகள் பலதும்கூட காங்கிரஸ் எதிர்ப்பில் வளர்ந்தவை. திமுக, தெலுங்கு தேசம், அஸாம் கண பரிஷத் ஆகிய கட்சிகளும் நேரடியாக இல்லாவிட்டாலும், காங்கிரஸூக்கு எதிரான அரசின் போக்கை மறைமுகமாக ஆதரிக்கவே செய்தன.

'ராஜீவ் காந்தி இறந்து ஐந்தாண்டுகள் கடந்துவிட்டன. போஃபர்ஸ் பீரங்கி பேரம் நடந்து பத்தாண்டுகளாகப் போகின்றன. இதற்குப் பிறகும் அந்தப் பிரச்னையை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் காங்கிரஸை பலவீனப்படுத்திவிட முடியும் என்று கருதுகிறீர்களா?' என்று நான் தோழர் ஏ.பி.பர்தனிடம் நேரடியாகவே கேட்டேன்.

'ராஜீவ் காந்தி இறந்துவிட்டால், ஊழல் நடக்கவில்லை என்றாகிவிடுமா? போஃபர்ஸ் பிரச்னையை முன்வைத்து இதுவரையில் மூன்று மக்களவைத் தேர்தலை நாங்கள் சந்தித்திருக்கிறோம். உண்மையை வெளிப்படுத்துவோம் என்று மக்களுக்கு வாக்களித்திருக்கிறோம். ஆட்சியில் பங்கு பெற்றிருக்கும் நிலையில் நாங்கள் போஃபர்ஸ் பிரச்னையைக் கிடப்பில் போட்டால், எங்கள் மீதான நம்பகத்தன்மை போய்விடும்' என்பதுதான் அவரது பதிலாக இருந்தது.

அதற்குப் பிறகும் நீண்ட நேரம் அவருடன் போஃபர்ஸ் பிரச்னை குறித்தும், அரசியல் சூழல் குறித்தும் பேசிக் கொண்டிருந்தேன்.

'நீங்கள் எல்லோரும் எதிர்பார்ப்பதுபோல, போஃபர்ஸ் பிரச்னை காரணமாக காங்கிரஸ் கட்சி ஐக்கிய முன்னணி ஆட்சிக்குத் தரும் ஆதரவை விலக்கிக் கொள்ளாது. போஃபர்ஸ் பிரச்னை இருந்தால்தான் சோனியா காந்தி அரசியலுக்கு வரமாட்டார் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களும்கூட மனதுக்குள் போஃபர்ஸ் குறித்த உண்மைகள் வெளிவருவதை விரும்புவார்கள்.'

'ஐக்கிய முன்னணியில் காங்கிரஸூம் இடம்பெற வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.மூப்பனார் கூறியிருக்கிறார். அதற்கான வாய்ப்பு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?'

'அப்படி காங்கிரஸ் அமைச்சரவையில் சேர்ந்தால், நாங்கள் விலகிவிடுவோம். காங்கிரஸூடன் எந்தவிதத்திலும் கூட்டணியோ, சமரசமோ செய்து கொள்ள இடதுசாரிகள் தயாராக இல்லை...'

'ஆனால், அவர்களது ஆதரவில் ஆட்சி அதிகாரத்தில் மட்டும் இருப்பீர்கள்; இது என்ன நியாயம்?'

'அவர்கள்தான் எங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறார்கள்...'

நான் எதுவும் பேசவில்லை. எங்களுக்குள் நடந்த உரையாடல்களை நான் ஒலிப்பதிவு செய்திருந்தேன். அதைப் பேட்டியாக பிரசுரிக்கலாமா? என்று கேட்டபோது, 'தாராளமாக...' என்று சொன்னார். கூடவே இன்னொன்றையும் சொன்னார்- 'உங்களிடம் இவ்வளவு நேரம் பேசியதே, இதையெல்லாம் நீங்கள் பிரசுரிக்க வேண்டும் என்பதற்காகத்தான்!'

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த நேரம். பட்ஜெட் விவாதங்கள் தொடங்கி இருந்தன. அதனால் பெரும்பாலான தலைவர்கள் தில்லியில்தான் இருந்தனர். காங்கிரஸ் பொதுச் செயலராக இருந்த ஆர்.கே.தவாணை சந்தித்துப் பல நாளாகியிருந்தது. அவரைப் பார்க்க கோல்ஃப் லின்ங்ஸ் போயிருந்தேன்.

தமிழகத்தில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடந்திருந்தன. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக ஜி.கே.மூப்பனார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இன்னொருபுறம், தமிழ்நாடு காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக கே.வீ.

தங்கபாலு நியமிக்கப்பட்டிருந்தார். இரண்டு அறிவிப்புகளும் ஒரே நாளில் வெளியாகின என்பதுதான் ஆச்சரியம்.

ஆர்.கே.தவாண் உள்ளே யாருடனோ பேசிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். நான் அலுவலக அறையில் சென்று அமர்ந்தேன். கே.வீ.தங்கபாலுவை இடைக்காலத் தலைவராக நியமித்து, அவருக்கு உதவ 20 பேர் கொண்ட இடைக்காலக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருந்தது. அது குறித்த செய்திக்குறிப்பு அங்கே இருந்தது.

'இடைக்காலத் தலைவர் நியமனம் பார்த்தேன். 20 பேர் கொண்ட கமிட்டியும் பார்த்தேன். எதற்காக இடைக்காலக் குழு?' என்ற எனது கேள்வியைக் கேட்டதும் முறைத்துப் பார்த்தார் ஆர்.கே.தவாண்.

'இந்தியாவில் உள்ள எல்லா மாநில காங்கிரஸ் கமிட்டியிலும் கோஷ்டிகள் உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் உள்ளதுபோல இத்தனை கோஷ்டிகளை வேறு எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாது. மூப்பனாரும், தமிழ் மாநில காங்கிரஸூம் பிரிந்த பிறகு கோஷ்டிகள் குறையும் என்று பார்த்தால், அது அதிகரித்திருக்கிறதே தவிரக் குறைந்தபாடில்லை' என்று சலித்துக் கொண்டார் அவர்.

'ஆர்.கே.தவாணாலேயே கோஷ்டிகளைச் சமாளிக்க முடியவில்லை என்றால், வேறு யாரால்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?' என்று நான் கேட்டபோது அவர் சிரித்துவிட்டார்.

'கட்சித் தலைவரின் (சீதாராம் கேசரி) நம்பிக்கையைப் பெற்றவர்; ஜெயலலிதாவுடனும், அதிமுகவுடனும் மீண்டும் சுமுகமான உறவை ஏற்படுத்தக் கூடியவர்; மூப்பனாரை மீண்டும் கட்சிக்குக் கொண்டுவர முயற்சிகள் எடுப்பதாகக் கூறியிருக்கிறார். இந்த மூன்று காரணங்களுக்காகவும்தான் தங்கபாலைத் தேர்ந்தெடுத்தோம்' என்று கூறி நான் என்ன சொல்லப் போகிறேன் என்கிற எதிர்பார்ப்புடன் என்னைப் பார்த்தார்.

'நீங்கள் சொன்ன மூன்று காரணங்கள் மட்டுமல்லாமல், கே.வீ.தங்கபாலுக்கு இன்னொரு தகுதியும் இருக்கிறது. சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸில் தொடங்கி, இன்றுவரை கட்சி மாறாத காங்கிரஸ் விசுவாசியாக இருப்பவர்' என்று சொன்னபோது, அவர் ஆமோதித்துத் தலையாட்டினார்.

கடந்த சில மாதங்களில் நான் சந்தித்த சில தலைவர்கள், அவர்களுடனான உரையாடல்கள், கடைசியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தனுடனான சந்திப்பு உள்ளிட்டவை குறித்து ஆர்.கே.தவாணிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். கடைசியாகக் கேட்டேன்-

'ஐக்கிய முன்னணியில் இருக்கும் அனைத்துக் கட்சியினரும் காங்கிரஸ் தங்களது ஆட்சியைக் கவிழ்த்துவிடாது என்று உறுதியாக நினைக்கிறார்கள். தங்களது ஆட்சி கவிழ்ந்தால், இழப்பு காங்கிரஸூக்குத்தான் என்பது அவர்களின் கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'

வழக்கம்போல, சிகரெட்டைப் பற்றவைத்துப் புகையை இழுத்துவிட்டார். சாம்பலைத் தட்டியபடி பேசத் தொடங்கினார்.

'இந்த ஆட்சி கவிழ்வதால், காங்கிரஸை தவிர வேறு எந்தக் கட்சிக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று அவர்கள் கருதுவது தவறில்லை. அதே நேரத்தில், அவர்களது மதவாத எதிர்ப்பு என்பது போலித்தனமானது என்பதை இதுபோன்ற பேச்சு வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் அழிந்து பாஜக ஆட்சிக்கு வந்தால், மதவாத எதிர்ப்பு என்கிற போர்வையில் சிறுபான்மையினரின் வாக்குகளுடன் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று எல்லா கட்சிகளும் நினைக்கின்றன.'

'அப்படியானால் ஆட்சி கவிழுமா?'

'அதை எப்படி சொல்ல முடியும்? முதலில், நமது காங்கிரஸ் எம்.பி.க்களே ஆட்சி கவிழ்வதை அனுமதிப்பார்களா? ஒன்று மட்டும் நிச்சயம். இப்போது பாஜக எதிர்ப்பு என்கிற காரணத்துக்காக ஒன்றாக இணைந்து ஐக்கிய முன்னணியை ஏற்படுத்தி இருக்கும் இந்தக் கட்சிகள் எல்லாமே வருங்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும், பார்த்துக் கொண்டிருங்கள்...'

'அப்படியானால் காங்கிரஸ்...?'

'கூட்டணி ஆட்சிக்குத் தயாரானால் மட்டும்தான், வருங்காலத்தில் காங்கிரஸ் என்கிற கட்சி இருக்கும். இந்திராஜி கால வலிமையான காங்கிரஸின் காலம் முடிந்துவிட்டது!'

ஆர்.கே.தவாண் அப்போது என்னிடம் சொன்ன எல்லாமே அடுத்த ஐந்தே ஆண்டுகளில் நடந்தன. வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் அந்தக் கட்சிகள் இடம் பெற்றன. இடதுசாரிகளும் முலாயம் சிங், லாலு பிரசாத் ஆகியோரின் கட்சிகளும்தான் கடைசிவரை விதிவிலக்காகத் தொடர்கின்றன.

அடுத்த ஒரு வாரம் நான் சென்னை வந்து விட்டேன். என் தனிப்பட்ட குடும்ப விஷயங்களும், நிர்வாக ரீதியிலான சில காரணங்களும் சென்னையில் தங்க வைத்துவிட்டன. அதற்குப் பிறகு நான் தில்லி திரும்பியபோது, ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு எதிரான காங்கிரஸின் முனைப்பு வேகம் எடுத்திருந்தது.

ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கும் இன்னொரு கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியானது நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த பட்ஜெட் குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கி இருந்தது. இத்தனைக்கும் ஐக்கிய முன்னணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தது மார்க்சிஸ்ட்டுகளும், அதன் பொதுச் செயலாளர் காம்ரேட் ஹர்கிஷண் சிங் சுர்ஜித்தும்தான்.

நாடாளுமன்றம், ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுதல் குழு, மக்கள் மன்றம் மூன்றிலும் அரசின் பட்ஜெட்டை எதிர்க்கப் போவதாக காம்ரேட் சுர்ஜித் தெரிவித்தபோது, 'கெளடா அரசின் நாள்கள் எண்ணப்படுகின்றன' என்று பொதுவெளியில் பேசத் தொடங்கிவிட்டனர். தங்களது எதிர்பார்ப்புக்கேற்ப பட்ஜெட் அமையவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக், புரட்சி சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஏனைய இடதுசாரிக் கட்சிகளும் கருத்துத் தெரிவித்திருந்தன.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகள்; மருத்துவக் காப்பீட்டுத் துறையில் தனியார் அனுமதி; நிறுவன வருமான வரி, உற்பத்தி வரி, சுங்க வரி உள்ளிட்டவை குறைக்கப்பட்டிருப்பது போன்றவை மார்க்சிஸ்ட் கட்சியால் விமர்சிக்கப்பட்டிருந்தன.

'பணக்காரர்களுக்கான பட்ஜெட். ஏழைகளுக்கு சிதம்பரத்தின் பட்ஜெட்டில் ஏதுமில்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சி, தனது பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே செல்வாக்கை இழந்தது. அதிலிருந்து ஐக்கிய முன்னணி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் காம்ரேட் சுர்ஜித் பேட்டியே அளித்திருந்தார்.

ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் மட்டுமல்லாமல் மார்க்சிஸ்ட் கட்சியும் விமர்சிக்கத் தொடங்கி இருந்ததால், விரைவில் தேர்தல் வரப்போகிறது என்கிற கருத்து பரவத் தொடங்கியது. தேர்தல் வந்தால் அதை எதிர்கொள்ள பாஜக தயாராகியது என்றேகூடச் சொல்ல வேண்டும்.

இன்னொருபுறம், உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸூம், பாஜகவும் மும்முரமாகக் களமிறங்கி இருந்தன. காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டணி ஆட்சியை முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், ஜனதா தளமும் ஆதரிக்க வேண்டும் என்பது காங்கிரஸின் கோரிக்கை. அதற்கு அந்தக் கட்சிகள் செவி சாய்ப்பதாக இல்லை.

மூன்று மாதங்களுக்கு முன்னால், சந்திக்க விருப்பம் தெரிவித்து நான் எழுதியிருந்த கடிதத்துக்கு, ஒரு நாள் சற்றும் எதிர்பாராமல் பதில் வந்தது. அதுவும் தொலைபேசி அழைப்பு மூலம்... சற்றும் தாமதிக்காமல் அந்த சந்திப்புக்கு விரைந்தேன்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள்... ஆஷிகா ரங்கநாத்!

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

SCROLL FOR NEXT