ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
திரைக்கலைஞர்கள் வாழ்வில் நடைபெற்ற ருசிகர சம்பவங்கள் இன்று நினைத்தாலும் சுவாரசியமாகவே இருக்கும்.
திரைக்கலைஞர்கள் வாழ்வில் நடைபெற்ற ருசிகர சம்பவங்கள் இன்று நினைத்தாலும் சுவாரசியமாகவே இருக்கும். அப்படி சில ருசிகரங்கள்:
திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளை குடியரசுத் தலைவர் மாளிகையில், அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு முன்னிலையில் நாகசுவரம் வாசித்தார்.
மெய் சிலிர்த்துப் போன நேரு, 'தங்களுக்கு என்ன வேண்டும்' என்று கேட்டபோது, இராஜரத்தினம் பிள்ளையோ, 'எங்கள் ஊரில் திருட்டுப் பயம் அதிகம். மின்சார வசதி அளிக்க வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சி முடிந்து அவர் ஊருக்கு வந்தபோது, திருவாவடுதுறை முழுவதும் மின்விளக்கு வெளிச்சத்தில் மின்னியது.
ஒருமுறை சென்னை ஒற்றைவாடைக் கொட்டகையில் கலைவாணர் என்.எஸ்.கே. குழுவினரின் 'வள்ளுவம்' என்ற நாடகம் நடைபெற்றது. கலைவாணரும், மதுரமும் இணைந்து நடித்த காட்சி முடிந்தவுடன் திரையை மூட மறந்துவிட்டார் திரைச்சீலை இறக்கும் தொழிலாளி.
கலைவாணர், 'திரையைப் போடு' என்று எப்படி பகிரங்கமாகச் சொல்வது என யோசித்தார்.
உடனே மதுரத்திடம், 'நான் இத்தனை நேரம் சொன்னது உன் மனதில் படுதா?, படுதா?' என்று அழுத்திச் சொன்னார்.
'படுதா' என்ற சொல்லின் அழுத்தத்தைப் புரிந்துகொண்ட தொழிலாளி சட்டென்று முன்பக்கம் படுதா திரையை இழுத்துவிட்டார்.
சென்னை கலாஷேத்ரா அரங்கில், எம்.டி.ராமநாதனின் கச்சேரி தொடங்கி, சிறிது நேரம் சென்றது.
நான்காவது, ஐந்தாவது வரிசையில் அமர்வது குறித்து ரசிகர்களிடம் சலசலப்பு ஏற்பட்டது.
இராக ஆலாபனையில் லயித்திருந்த ராமநாதன் கீர்த்தனையை ஆரம்பித்தார். சலசலப்பு வரும் வரிசையைச் சுட்டிக் காட்டி பாடலில், 'எந்தரோ மஹானு பாவுலு...' என்று வரியைப் பாடும்போது, 'எந்த ரோ மஹானு பாவுலு' என்று சைகையால் கேட்டுவிட்டு, 'அந்தரிகி வந்தனமு..' என்று கைகூப்பினார். அப்போது, ரசிகர்களின் சிரிப்பலை பரவி, அரங்கமே சற்று நேரத்தில் அமைதியானது.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது பெயருக்கான காரணத்தை ஒரு முறை சொன்னது:
'தர்கா என்றதும் 'ரஹ்மான்' என எனக்கு பெயர் வரக் காரணமாக இருந்த சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.
சூஃபி தர்காவில் இருந்த பெரியவர் சில பெயர்களைப் பரிந்துரைத்தார். அப்துல் ரஹ்மான், அப்துல் ரஹீம் உள்பட எந்தப் பெயர் எனக்கு நன்றாக இருக்கும் என்று விளக்கமாகக் கூறினார்.
'ரஹ்மான்' என்னும் பெயரை நான் உடனடியாக விரும்பினேன். பிறகு என் தாயாருக்கு 'அல்லாஹ்ரக்கா' சேர்க்க வேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தது. இப்படியாக நான் ஏ.ஆர்.ரஹ்மான் ஆனேன். அதாவது 'அல்லாஹ்ரக்கா ரஹ்மான்'.
இது ஒரு அசாதாரண பெயர்' என்றார் ரஹ்மான்.
கவிஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ் தமிழிலும், தெலுங்கிலும் கவிஞராகி இருந்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனால், அவர் ஓர் உருது கவிஞர். 'முஷய்ரா' எனும் உருது மொழிக் கவியரங்குகளில் பங்கு கொண்டு ஓர் ஆயிரம் ரசிகர்களின் முன்னிலையில், மேடையில் கவிதை பாடுகின்ற ஜனரஞ்சகக் கவிஞர் அவர்.
'கூப்ஸூரத்' மகள்கள் 2 பேர் உண்டு. ராதா சலுஜாவும், மதுபாலாவும். ராதா சலூஜா எம்ஜிஆருக்கு கதாநாயகியாய் நடித்தவர். 'மொகலே ஆஸம்', 'அக்பர்' என்று தமிழில் 'டப்' செய்யப்பட்டபோது, மதுபாலாவுக்காக லதா மங்கேஷ்வர் பாடிய ஹிந்தி, உருது பாடல்களின் தமிழாக்கத்தைப் பாடியவர் பி.சுசீலா.
வைஜயந்திமாலா 1949-இல் 'வாழ்க்கை' படத்தில் அறிமுகமானபோதும், பிறகு 'பெண்' படத்தில் வீணை எஸ்.பாலசந்தருக்கு நேரடியாக நடித்தபோதும் பின்னணி குரல் கொடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி.
'சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா.. உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா' என்று 'பெண்' படத்துக்காக, எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய பாடல் இது.
ஹிந்தி சூப்பர் ஸ்டார் தர்மேந்திரா மீது அபிமானம் கொண்டு அவர் குறித்து 208 பக்க நூலை தமிழில் எழுதியவர் அப்சல் என்பார். அந்த நூலை தர்மேந்திரா படிப்பதற்கு வாய்ப்பாக, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் எழுத்தாளர் ஏ.ஏ.ஹெச்.,கே. கோரி.
கர்ணன் படத்தில் வரும் 'என்னுயிர் தோழி' என்னும் பாடலை உன்னிப்பாய் கவனித்தால், இரு முறை பதிவு செய்யப்பட்டிருப்பதை அறியலாம்.
திரைக்கு ஒன்று. மூன்று நிமிட இசைத்தட்டுக்கு ஒன்று. இடையில் வரும் 'இன்ட்டர்லூட்' வித்தியாசம் இருப்பதால், 3 நிமிட தட்டுப் பாட்டுக்காக ஒரிஜினல் பாட்டையே 'கட்' பண்ணும் வேலை நடக்கவில்லை.
இசைக் கருவிகள் இரு முறை இசைக்கப்பட்டு பி.சுசீலா இருமுறை பாடல் பாடி, இரு முறை பதிவு செய்யப்பட்டது. ஆனால், 'இன்ட்டர்லூட்' மாறுபாட்டைத் தவிர, சுசீலாவின் பாடும் தொனியில் ஏற்ற, இறக்கங்களில் தெளிவு- கனிவுகளில் ஒரு சிறு வித்தியாசம் கூட காண முடியாது.
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
சொந்த வாழ்க்கையில் ஓய்வெடுக்க விரும்பிய பாடகி எஸ்.ஜானகி, 'இனிமேல் திரைப்படங்களிலும், மேடைகளிலும் பாட மாட்டேன்' என தீர்க்கமாக அறிவித்தார். '10 கல்பனகள்' என்ற மலையாளப் படத்துக்காக அவர் பாடியிருந்த 'அம்மபூவினு' என்ற பாடல்தான் அவர் பாடிய கடைசிப் பாடலாகும்.
தமிழில் சரோஜா தேவி நடித்த 'கல்யாண பரிசு', 'பாசம்', 'மணப்பந்தல்', 'பெரிய இடத்துப் பெண்' ஆகிய திரைப்படங்கள் தெலுங்கிலும் வெளியாகின. அதிலும், அவர்தான் கதாநாயகி. இவற்றில் 'மணப்பந்தல்' திரைப்படம் தெலுங்கில், 'இன்டிகி தீபம் இல்லாலே' என்றும், 'பாசமலர்' படமானது 'மஞ்சி செடு' என்றும் படமாக்கப்பட்டன. இவற்றை டி.ஆர்.ராமண்ணாவே இயக்கினார். இரண்டிலும் என்.டி.ராமாராவ் கதாநாயகன்.
தமிழில் 'நிச்சயதாம்பூலம்', 'பட்டிக்காட்டு பொன்னையா' ஆகிய படங்களைத் தயாரித்து இயக்கிய பி.எஸ்.ரங்கா, கன்னடத்தில் 'அமரசில்பி ஜக்கன்னசாரி' என்ற படத்தை உருவாக்கினார்.
இது தமிழில் 'சிற்பியின் செல்வன்' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இந்தப் படம் கர்நாடகத்தில் பேளூர், ஹளபேடு ஆகிய சிற்பக் கலைக்கு முக்கியத்துவம் பெற்ற இடங்களின் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
இந்தப் பட நாயகன் கல்யாண குமார். சிற்பக்கலை என்றாலே நடனக் கலைக்கும் முக்கியத்துவம் என்பதால், அதில் சரோஜா தேவி நடித்தார்.
இந்தப் படத்தைப் பார்த்த கர்நாடகத்தின் அன்றைய முதல்வர் நிஜலிங்கப்பா வெகுவாக ரசித்து, சரோஜாதேவிக்கு 'அபிநய சரஸ்வதி' என்ற பெயரை சூட்டினார்.
கோட்டாறு ஆ.கோலப்பன்