'ஐயா.. என் பெயர் பழனி. விவசாயி. ஒரு மனு கொடுக்கலாமுன்னு வந்திருக்கேன்'' என்று மடித்துக் கட்டிய வேஷ்டி, கதர் ஜிப்பா, தலையில் முண்டாசுடன், தனக்கு முன் நின்று அறிமுகம் செய்துகொண்டவரை ஏளனமாகப் பார்த்தார் கலெக்டர் அலுவலக குமாஸ்தா.
மடிப்புக் கலையாத ஆடைகள், உச்சந்தலையில் ஏறி உட்கார்ந்திருக்கும் கூலிங் கிளாஸ், நாலடி பரப்பளவுக்கு நெடியை பரப்பும் வாசனை திரவியம் ஆகியவையே அந்த குமாஸ்தாவின் அடையாளங்களாக தெரிந்தன.
'விதைச்ச பயிர் சரியா முளைக்கலை. முளைச்ச பயிர், மழையில அடிச்சுக்கிட்டு போயிடுச்சு. மழையில்லாம பயிர் காய்ஞ்சிடுச்சு... ஈரப்பதம் காரணமா, நெல் மூட்டையை கொள்முதல் செய்யலை. இது மாதிரி ஏதாவது ஒரு பழைய பல்லவியைத் தானே பாடப் போறீங்க. உங்களுக்கு வேற வேலையே இல்லை.
எதுவா இருந்தாலும், பத்து மடிப்பா மடிச்சு, அங்கே வச்சுருக்கிற பெட்டியில போட்டுட்டு, திரும்பி பார்க்காம போங்க. எழுத, படிக்க தெரியாதவங்களெல்லாம், மனு கொடுக்க வந்துட்டாங்க?'' என்ற குமாஸ்தாவுடைய வார்த்தை வீச்சு, விவசாயத் தொழில் சம்பந்தமான, இதுபோன்ற ஏளனங்களை ஏராளமாகச் சந்தித்த அனுபவஸ்தரான பழனியை சிறிதும் பாதிக்கவில்லை.
பாதிப்புகள் விவசாயத்தில் சர்வ சாதாரணம். ஒரு மணி நெல்லை அரிசியாக்கி, அதை சாப்பிடுபவரின் தட்டில் கொண்டு போய் சேர்ப்பதற்குள், ஓராயிரம் பாதிப்புகள். 'உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது' என்ற பழமொழிதான், ஒரு விவசாயி தனக்கு தானே சொல்லிக் கொள்ளும் சமாதான வார்த்தை என்பது பழனிக்கு நன்கு தெரியும். அந்த வார்த்தைகளை, தன் வாழ்க்கையில் ஆயிரம் முறை உச்சரித்திருக்கிறார்.
விவசாயி என்றாலே, கல்வி அறிவு இல்லாதவர்கள் என்ற தவறான எண்ணம் பரவி கிடப்பதை எப்படி போக்குவது.
பள்ளி படிப்பு வரை பழனி படித்ததால், நன்கு எழுத படிக்கத் தெரிந்தவர். அன்று காலையில், செய்தித்தாளில் வந்த செய்தியை பார்த்து படித்து, பதறிப் போய்தான், அந்த மனுவைத் தயாரித்தார்.
விவசாயத்தின் மீது இருந்த அதீத பற்றால், அப்பா காலத்துக்குப் பிறகு, நில புலன்களை விற்றுவிட்டு, நகரத்தை நோக்கி நடையைக் கட்ட வாய்ப்பிருந்தாலும், அந்த வாய்ப்பை நிராகரித்தவர். எவ்வளவு வலியை அனுபவித்தாலும், விவசாயத்தைவிட்டு நகர மனம் இல்லாதவர். அத்துடன், கலெக்டர் அலுவலக குமாஸ்தாவுக்கு கிடைக்கும் மதிப்பில், ஆயிரத்தில் ஒரு பங்கு கூட, விவசாயிக்கு கிடைக்காது என்பதும் அவர் அறிந்த விஷயம்தான்.
'உழுவோர் உழைத்தால்தான் உலகோர் பிழைப்பர்' என்பது, விவசாயத்தை பற்றி அறியாதவர்களுக்கு தெரியாமல் இருப்பதில் வியப்பில்லை என்று நினைத்துக் கொண்டார்.
ஒரு விவசாயியின் கஷ்ட நஷ்டங்களை ஆர, அமர உட்கார்ந்து கேட்டு, புரிந்து கொள்பவர்கள் வெகு சொற்பம் என்பது அவருக்கு அத்துப்படி.
ஏரி குளங்களில் தூர் வாருதல், உர விநியோகம், நெல் கொள்முதலில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு போன்ற பொதுப் பிரச்னைகளுக்கு அவர் குரல் எப்பொழுதும் ஓங்கி ஒலிக்கும். அவர் மீது, கிராமத்து மக்களுக்கு தனி மரியாதை உண்டு.
இந்த முறை, அவர் மனு கொடுக்க வந்த விஷயமே வேறு. மனுவை அந்த இருண்ட பெட்டிக்குள் போட்டால், நூறோடு நூற்று ஒன்றாகி, அந்த மனு வெளிச்சத்தையே பார்க்க வாய்ப்பில்லை என்பது அவருக்கு தெரியும். குமாஸ்தா முன்பு நின்றிருந்த கூட்டம் கலையும் வரை காத்திருந்தார். மேஜையில் வைக்கப்பட்டிருந்த டீயை ரசித்து குடிக்க ஆரம்பித்த குமாஸ்தா, பழனியை ஓரக் கண்ணால் பார்த்தார்.
'என்ன பெரிசு. நீங்க கொண்டு வந்த பேப்பரை, அதோ அந்த மூலையில் இருக்கிற பெட்டியில் போட்டுட்டு போங்கன்னு சொல்லி, ஒரு மணி நேரம் ஆயிடுச்சு. இன்னும், இங்கேயே நின்னுக்கிட்டு இருந்தா எப்படி?''
'ஐயா.. அது வெறும் பேப்பர் இல்லைங்க. அது, நம்ம வருங்கால சந்ததிக்கான சொத்து பற்றியது!''
'சொத்து பத்துன்னா, வக்கீலை பார்க்க வேண்டியதுதானே. இங்கே வந்து கழுத்தறக்கறே'' என்று சொல்லில் மரியாதையை குறைத்து, தலையில் அடித்துக் கொண்டார் குமாஸ்தா.
குமாஸ்தாவின் சொற்கள், மனதை அறுத்தாலும், தான் நினைத்த வேலையை முன்னிழுத்து செல்ல வேண்டும் என்ற வெறியால், அதை பொறுத்துக் கொண்டார் பழனி.
'கலெக்டரை நேரே பார்த்து இந்த மனுவை கொடுக்கணுங்கறதுக்குத்தான் காத்திருக்கேன்.''
'யோவ்.. எதையாவது சொல்லிடப் போறேன். கலெக்டருக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சியா? முதலில் இடத்தை காலி பண்ணு..'' என்று தனது இருக்கையிலிருந்து எழுந்து, கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக, பழனியை விரட்டினார். அந்த அவமதிப்பு வார்த்தைகள் எதையுமே காதில் வாங்காதது போல், மூலையில் வைக்கப்பட்டிருந்த மரப் பெட்டியை நோக்கி போய், அதை ஒரு உயிருள்ள பொருளாகப் பாவித்து, அதன் மீது கைவைத்து பேசினார் பழனி:
'இன்னும் உயிரோடு இருக்கிற உன்னோட உறவுக்காரங்களோட எனக்கு நெருக்கம் ஜாஸ்தி. அவங்களோட தினமும் கொஞ்ச நேரம் பேசினாத்தான் எனக்கு தூக்கம் வருமுன்னு சொன்னா, யாரும் நம்ப போறதில்லை. ஓங்கி வளர்ந்து, ஒதுங்கறவங்களுக்கு நிழலை கொடுத்து, பூமிக்கு மழை வர்றதுக்கு உதவி செய்துக்கிட்டிருந்த ஏதோ ஒரு மரத் தேவதையின் கழுத்தையும், கையையும், காலையும் வெட்டிதான் உன்னை பெட்டி வடிவத்தில் சுருக்கியிருக்காங்க. அதனால், நான் உனக்கு ரொம்ப வேண்டப்பட்டவன்தான்' என்று தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை சுற்றும்முற்றும் பார்த்து உறுதி செய்து கொண்டு, அந்தப் பெட்டியுடனான தன் சம்பாஷணையை தொடர்ந்தார்.
'அவமதிச்சுட்டதா நினைக்காதே. உன்னை குறை சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை. ஆனால், மனுக்களைப் போட்டு புதைக்கிற சவப்பெட்டியா உன்னை பயன்படுத்தறதுதான் எனக்குப் பிடிக்கலை. இதுக்கு முன்னால, பொதுப் பிரச்னைகள் சம்பந்தமாக, உன்னை போல பல பெட்டிகளில் திணித்து நுழைத்த மனுக்களின் கதி, பல வருடங்களாகியும், கிணத்தில் போட்ட கல்லா ஆயிடுச்சு. ஆனா, இந்த மனுவை நான் அப்படி விட்டுடமுடியாது. ஏன்னா, வருங்கால சந்ததிக்குச் சொந்தமான சொத்து ஒண்ணை காப்பாத்தறதுக்குத்தான கோரிக்கை அதில் இருக்கு. அது நிறைவேறும் வரைக்கும், என் மானம், ரோஷம், கோபம் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுடறதுன்னு முடிவு பண்ணிட்டேன். என் கோரிக்கை நிறைவேறும் வரைக்கும் போராடுவேன். அதுவரை, பொறுமை காக்க வேணும். நான் இங்க வந்ததுக்கு அடையாளமா, அந்த காம்பெளன்ட் சுவர் ஓரமா, ஒரு மரத்தோட விதையை புதைச்சுட்டு போறேன்' என்று நினைத்துகொண்டே வளாகத்துக்கு வெளியில் இருந்த ஜெராக்ஸ் கடையில், மனுவை காப்பி எடுத்துக் கொண்டு, தபால் அலுவலகம் நோக்கி நடந்தார்.
சட்டை பையிலிருந்த சிறிய நோட்டை எடுத்து, அதில் குறித்திருந்த விலாசங்களுக்கு, கோரிக்கையை அனுப்ப தன்னை தயார்படுத்திக் கொண்டார். கோரிக்கையின் துவக்கத்தில், 'அனுப்புநர்' என்ற இடத்தில், 'பழனி (விவசாயி-ஓய்வு) என்று குறிப்பிட்டிருந்ததை, ஒருமுறை சரி பார்த்துக் கொண்டார்.
பழனிக்கு அறுபத்து ஐந்தைத் தாண்டிய வயது. நெல் கதிர்களை நேசித்த உள்ளம், மகனுக்கு 'இளம்கதிர்' என்று பெயரிட வைத்தது. மகனை, விவசாய பட்டப் படிப்பில் சேர்க்கும் போது, 'விவசாயத்தைத் தவிர வேறு எந்த தொழிலுக்கும் போக மாட்டேன்' என்று குலத் தெய்வக் கோயிலில் சத்தியம் வாங்கிக் கொண்ட பிறகுதான், ஃபீஸ் கட்டினார்.
மகன், உயர் பட்ட படிப்பை முடித்ததும், சில வருடங்கள் அவனுக்கு விவசாயத்தில் வழிகாட்டியாக இருந்தார். பாரம்பரியத்தையும், நவீனத்துவத்தையும் உள்ளடக்கிய விவசாய முறைகளை பின்பற்றிய தன் மகன் மீதான நம்பிக்கை உறுதியானதும், விவசாயப் பணி முழுவதையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டு, விலகினார்.
விலகிய சில நாள்களில், தினசரியின் ஒரு மூலையில் வெளியாகியிருந்த அந்த செய்தி அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
கிராமத்தை ஒட்டிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணிக்காக, சாலையின் உள்புறமாக, ஓங்கி வளர்ந்திருந்த ஆலமரத்தை வெட்டுவதற்கு, நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு இருப்பதாக வெளியான செய்திதான் அது. நீண்ட காலத் தொடர்பால், அந்த மரம், அவர் கனவில் அடிக்கடி வந்து போகும். 'செல்லமே.. செளக்கியமா இருக்கியா?' என்று கனவில் அந்த மரத்தோடு அவர் பேசுவதை, காதலியோடு பேசுவதாக நினைத்து, மனைவி சண்டை போட்டு, உண்மை தெரிந்த பிறகு, சமாதானமாகி இருக்கிறாள்.
அவர் கணக்குப்படி, குறைந்தது, அறுபது வயதுக்கு மேலான அந்த மரம், வலுவான விழுதுகளை பரப்பி, அரசு வங்கியை போல், அனைத்துத் திசைகளிலும் தன் கிளைகளை விரிவு படுத்தி நின்றது. டவுனுக்கு போக, பஸ்ஸூக்கு அதன் நிழலில்தான் காத்து நிற்பார். பசு கன்று ஈன்றவுடன் போடும் மாசியை வைக்கோல் தாளில் கட்டி அந்த ஆலமரத்தில்தான் தொங்கவிடுவார்கள்.
மாலை நேரத்தில், கிளி, காகம், குயில், புறா போன்ற பறவைகள் தங்கள் அன்றாட பயணங்களை முடித்துவிட்டு, இளைப்பாற பிறந்த வீடான அந்த மரத்தை நோக்கிதான் பறந்து வரும். ஒவ்வொரு வகை பறவையும், மரத்தின் வெவ்வேறு பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, தங்களுக்கான தனிப்பட்ட காலனிகளை உருவாக்கிக் கொண்டிருந்தன. கைக்கு எட்டாத கிளைகளில், கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, இனப் பெருக்கம் செய்யும். பறவைகள் சாப்பிட்ட அந்த மரத்தின் பழங்களின் மீதி பகுதி, மரத்தை சுற்றி, எப்பொழுதும் பரவி கிடக்கும். அங்கு செல்லும் போதெல்லாம், தானியங்களையும், பழங்களையும் திறந்த பையில் போட்டு, கிளைகளில் கட்டுவதை பழனி வழக்கமாகக் கொண்டிருந்தார்
அந்த மரத்திற்கு எந்த பாதகமும் வராமல், சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை கொடுக்கத்தான், அவர் கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்றார். நேரில் சந்திக்க முடியவில்லை என்றாலும், மனம் தளராமல், கலெக்டர் முதல், நெடுஞ்சாலை துறை வரை, சம்பந்தப்பட்ட அனைவருக்கும், மனுவை பதிவுத் தபாலில் அனுப்பிவிட்டு காத்திருந்தார்.
காத்திருந்த காலத்தில், காலையில் கூழை குடித்துவிட்டு, நடந்து, அந்த மரத்துக்கு கீழ் உட்காருவதை தன் தினசரி வழக்கமாக்கிக் கொண்டார். மதிய உணவுக்குப் பிறகு, மீண்டும் வந்து, மாலை வரை, மரத்தின் அழகையும், பறவைகளின் சுறுசுறுப்பையும் பார்த்து ரசித்துக் கொண்டு,, அங்கு பொழுதைக் கழிப்பார்.
'கரிச்சான் குருவி' என்றழைக்கப்படும் இரட்டை வால் குருவி, உருவத்தில் சிறியதாக இருந்தாலும், அதைவிட, பல மடங்கு பெரிதான காக்கையை விரட்டி செல்லும் அழகை வேடிக்கை பார்ப்பார். அந்த குருவி, விழித்தவுடன் 'கீச்கீச்' என்று குரல் எழுப்புவதை, வீட்டுத் தோட்டத்தில் அவ்வப்போது கேட்டு ரசித்தது அவருடைய நினைவுக்கு வரும். மாடுகள் இருக்குமிடத்தில் உள்ளே புகுந்து, அந்தக் குருவி பறந்து சென்றால், அதை எச்சரிக்கையாகக் கருதி, மாடுகளின் பாதுகாப்புக்கு காவல் போடும் பழக்கம், சில கிராமங்களில் நடைமுறையில் இருப்பதை நினைவு கூர்ந்து, அந்த சிறிய பறவையின் வலிமையை நினைத்து வியந்து போவார். சில இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே உணர்ந்து செயல்படுவது, பறவை இனங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் என்று நினைத்து ஆச்சரியப்படுவார்.
புயல் உண்டாகப் போவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் பறவைகள், நிலப்பரப்பின் மீது தாழ்வாகப் பறக்கும். . அப்போது கண்களுக்கு புலப்படும் பூச்சிகளை மிக அவசரமாக வேட்டையாடும் என்ற இயற்கை சார்ந்த தகவலை, கதைபோல், சிறு வயதில், தன் மகனிடம் பகிர்ந்துகொண்டது, அவர் நினைவில் நிழலாடியது.
மரத்தடியில் இளைப்பாறிய நேரத்தில், 'உங்க மேல யாரும் கை வைக்காம பார்த்துக்கற காவல்காரன் நான்' என்ற நம்பிக்கை வார்த்தைகளை மரத்துடன் பகிர்ந்து கொண்டார். மரத்தின் வேரோடும், கிளைகளோடும், கொஞ்சிப் பேசுவார். அவர் அப்படி பேசும்போதெல்லாம், கிளைகள் அசைந்து கொடுத்து, அவரை வரவேற்பது போல் இருக்கும்.
அவர் எதிர்பார்த்த அதிர்வான நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை என்பதால், தன் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட திருப்தியில் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
அன்று இரவு, சற்று சீக்கிரமாகவே உறங்கச் சென்றவர், 'ஐயோ.. அவளைத் தொடாதீங்க?'' என்ற கூக்குரலுடன் திடுக்கிட்டு எழுந்தார்.
'என்னங்க... ஏதாவது கனவு கண்டீங்களா.. காதலி கனவில் வந்தாளா?'' என்று அவர் மனைவி கேலி செய்தார்.
'ஆமா.. அது என் காதலிதான். அந்த மரத்தை யாரோ வெட்டறது போல கனவு. மரம் சாய்ந்து விழுந்ததில், கூட்டில் இருந்த முட்டைகள் உடைஞ்சு விழுந்து. பறவைக் குஞ்சுகளின் 'கீச்கீச்' சத்தம் இன்னும் காதில ரீங்காரமிடுது. ஆனா, அது கனவு இல்லை. நிஜம் மாதிரியே இருக்கு'' என்று சிறிது நேரம் கண் அயர்ந்தவர், வெட்டு சத்தத்தையும், பறவைகள், பயத்தில் நாலா திசைகளிலும் பறந்து செல்லும் ஒலியையும் கனவில் மீண்டும் கேட்டவர், துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு, ஓட்டமும் நடையுமாக நெடுஞ்சாலைக்கு வந்தார். அங்கு கண்ட காட்சி, அவரை நிலைகுலைய வைத்தது.
பத்து பேர் அடங்கிய குழு ஒன்று, ஜெனரேட்டர் மூலம் வெளிச்சத்தை வீசி, அந்த மரத்தை வெட்டி சாய்ப்பதற்கான ஆயத்தப் பணிகளை துவங்கத் தயாராகிக் கொண்டிருந்தது.
ஏதோ விபரீதம் நடக்கபோவதை உணர்ந்த சில வயதான பறவைகள், கிளைகளை விட்டு வெளியே வந்து, குரல் எழுப்பி, மரத்தை சுற்றி வட்டமடித்தன.
'எல்லோருக்கும் நிழல் கொடுத்து, சுவாசிக்க பிராண வாயுவை இலவசமாக வாரி வழங்குது. இந்த ஏரியாவில், மழை பெய்ய மழை மேகங்களை ஈர்த்து உதவி செய்துகிட்டு, ஏராளமான பறவைகளுக்கு தாய் வீடாக இருக்கும் இந்த மரத் தேவதையை வெட்ட வேணாம்னு நான் ஏற்கனவே அதிகாரிங்களுக்கு கோரிக்கை அனுப்பியிருக்கேன். தயவு செய்து, அதன் மேல் கை வைக்காதீங்க?'' என்று பழனி கெஞ்சும் குரலில் கேட்டார்.
'யோவ் பெரிசு. நாங்க ஒண்ணும் செய்ய முடியாது. உன்னை மாதிரி ஆளுங்க வந்து தடுக்காம இருக்கணும்னுட்டுதானே, இந்த வேலையை நள்ளிரவில் செய்யறோம். இது கவர்மென்ட் ஆர்டர் படியான வேலை. நீ வீட்டுக்கு போய் தூங்கிட்டு காலையில் இந்த பக்கம் வந்தால், மரம் இருந்த இடமே தெரியாது'' என்று ஏளன சிரிப்பு சிரித்தார் மேற்பார்வையாளர்.
'வேணாங்க. இந்த மரத்தை வெட்டினா, பாவம் சேரும் விட்டுடுங்க. இது, நம்ம வருங்காலச் சந்ததியின் சொத்து. அவங்களிடமிருந்து அந்த சொத்தை பறிச்சிடாதீங்க. மரத்துக்கு எந்த பழுதும் வராம, சாலை பணியை செய்துக்கோங்க?'' என்று பழனியின் குரலில் கோபத்தின் வாசம் படர்ந்தது..
'பாவப் புண்ணியமெல்லாம் பார்த்தால், வேலைக்கு ஆகாது. இது ஆபரேஷன் மாதிரி. மரத்தை துண்டு துண்டா வெட்டி, வேரில, ஆசிட்டை ஊத்துனா, இங்க அந்த மரம் இருந்த அடையாளமே தெரியாது. தேவைப்பட்டால், வெடி கூட வச்சு தகர்ப்போம். இந்த மேஜர் ஆபரேஷனை பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாது. இடத்தை காலி பண்ணு'' என்று அதிகாரி ஒருவர் சொன்னவுடன், பழனிக்கு கோபம் தலைக்கேறியது.
'முதல்ல என்னை வெட்டிட்டு, இந்தத் தேவதையை வெட்டுங்க?'' என்று மரத்தடியில், துண்டை விரித்துப் படுத்தார்.
'அரசாங்க வேலையில் குறுக்கிடுவதாக, கம்ப்ளெயின்ட் கொடுத்துடுவோம். போலீஸ் வந்து உன்னை அள்ளிக்கிட்டு போயிடும். பரவாயில்லையா?'' என்று சொல்லியவாறே, ராட்ஷச ரம்பத்தை லாரியிலிருந்து இறக்கி, அதை இயக்க மின்சார இணைப்பு கொடுக்க ஆரம்பித்தனர்.
'வேண்டாங்க. இந்த மரம், பறவைகளின் வேடந்தாங்கல். பறவைகளெல்லாம், ஓய்வு எடுக்கிற நேரம். பல கிளைகளில், கஷ்டப்பட்டு கட்டிய கூடுகளில், பறவைகள் முட்டை இட்டு அடைகாத்துக் கொண்டிருப்பதை என் கண்ணால் பார்த்தேன். இந்த மரத்தை வெட்டினீங்கன்னா, அது இந்த பறவைகளின் வீடுகளை இடிப்பது போலத்தான்'' என்று பழனி கோபத்திலிருந்து கெஞ்சலுக்கு தாவினார்.
'என்னவோ அந்த பறவைகளெல்லாம் உன் குழந்தைகள் மாதிரி பேசறே. அதுகளுக்கு இந்த மரம் இல்லைன்னா, இன்னொன்னு. இதுக்குப் போய், இப்படி சீன் போடறியே. எங்களை பொறுத்தவரையில், இந்த வேலை, புல்லை வெட்டுவது போலத்தான். ஆமா. மரத்தை வெட்டினா, கூட்டில இருக்கிற முட்டையெல்லாம் கீழே விழுந்து உடைஞ்சுதான் போகும். இதுக்கெல்லாம் போய் புலம்பறியே. வீட்டுக்கு போய், போத்திக்குணு தூங்கு'' என்று வெட்டு குழுவிலிருந்த ஒருவர், மனதில் ஈரமே இல்லாமல், அலட்சியமாக கமென்ட் அடித்தார்.
'ஒவ்வொரு பறவையும், ஒவ்வொரு விதத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்குது. ஓர் இடத்தில் பழத்தை கொத்தி திங்கற கிளி, இன்னொரு இடத்தில் இடும் தன் எச்சத்தின் மூலம், அந்தப் பழத்தின் விதையை விதைத்து செல்கிறது. இந்த ஆலமரம் கூட, ஒரு பறவை இட்ட எச்சத்திலிருந்து விழுந்த விதையிலிருந்து முளைத்து வளர்ந்ததாகத்தான் இருக்கும். அந்த விதத்தில், ஒவ்வொரு பறவையும், ஒரு விதை பந்து போலத்தான். ஏற்கெனவே, சிட்டுக் குருவி போன்ற பல பாரம்பரிய பறவை இனங்கள் அழுஞ்சுக்கிட்டு வர நேரத்தில், மரத்தை வெட்டி, இந்த பறவைகளையும் அழிச்சுடாதீங்க?'' அந்தக் குழுவிலிருந்த ஒவ்வொருவரின் காலையும் தொட்டு கும்பிட்டார் பழனி.
'யோவ்... நீ என்ன பைத்தியமா? அழுதாலும், புரண்டாலும், உன்னால இந்த மரத்தை காப்பாத்த முடியாது'' என்று அவர் பேசியது எதுவும் காதில் விழாதது போல், அவர்கள் எதிர் பேச்சு பேசினார்கள்.
வெட்டப்படப் போகும் மரத்தின் துண்டுகளை எடுத்து செல்ல, லாரிகள் அணி வகுக்க ஆரம்பித்தன.
விடியலை நோக்கி, நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. தனது அடுத்த கட்ட நடவடிக்கையை பற்றி, பழனி யோசிக்க ஆரம்பித்தார். அங்கு கூட்டம் கூட ஆரம்பித்தது. அவருடைய மகன் கதிரும் அங்கு வந்து சேர்ந்து, நடந்தவைகளை கேட்டறிந்தான்.
'இயற்கை நமக்கு அளித்த சொத்துகளைப் பாதுகாக்கும் மனப் பக்குவம் உள்ளவர்கள் யாரும், இந்த மரத்தை வெட்டி, பறவை இனங்களை அழிக்கச் சம்மதிக்க மாட்டாங்க. ஆகவே, அவருடைய போராட்டத்துக்கு நாங்கத் துணை நிற்போம்'' என்றவன் கிராமத்தினரை தொடர்பு கொண்டு பேசினான்.
அதே சமயத்தில், தன் வீட்டு தென்னை மரத்தில், விறுவிறுவென்று ஏறி, தேங்காய் பறிக்கும் கலை
பழனிக்கு நினைவுக்கு வந்தது. வேஷ்டியை கச்சமாக கட்டிக் கொண்டு, வேகமாக மரத்தில் ஏறி, பறவைகள் நடமாட்டம் அதிகமில்லாத ஒரு கிளையில் உட்கார்ந்தார்.
'வெடி வைக்க போறதா சொன்னீங்க, ஆசிட் ஊத்தப்போறதா சொன்னீங்க. இப்ப எனக்கும் சேர்த்து, அந்த சடங்குகளை செய்யுங்க?'' என்றவர், மரக் கிளையில் சாய்ந்து படுத்தார். அதற்குள், கிராமத்திலிருந்து சில கர்ப்பிணி பெண்கள் அங்கு குழுமி, மரத்தை சுற்றி உட்கார்ந்து, அரண் அமைத்தார்கள்.
'மரத்தை நம்பி ஏலேலோ.. மழை இருக்க ஐலசா... மழையை நம்பி ஏலேலோ.. மண் இருக்க ஐலசா... மண்ணை நம்பி ஏலேலோ.. மரம் இருக்க ஐலசா..
மரத்தை நம்பி ஏலேலோ.. கிளை இருக்க ஐலசா.. கிளையை நம்பி ஏலேலோ.. இலை இருக்க ஐலசா.. மகனை நம்பி ஏலேலோ நீ இருக்க ஐலசா.. உன்னைநம்பி ஏலேலோ.. நான்இருக்க ஐலசா.. என்னைநம்பி ஏலேலோ எமன்இருக்க ஐலசா
எமனை நம்பி ஏலேலோ காடிருக்க ஐலசா.. காட்டைநம்பி ஏலேலோ புல்லிருக்க ஐலசா..'' என்று மரத்தை சுற்றி கும்மியடித்து, பெண்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி ஒலி பரப்பினார்கள்.
அந்த வழியாக பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த குழந்தைகள், வேடிக்கை பார்க்க அங்கு சிறிது நேரம் நின்று, ஆசிரியை சொல்லிக் கொடுத்த ஆலமரம் பற்றிய பாடலை, தங்கள் பங்குக்கு பாடினார்கள்.
'ஆலமரமோ பெரியது அதன் பழமோ சிறியது!
அந்த மரத்தின் நிழலிலே, அரசன் படையும் தங்கலாம்!
கோலிக் குண்டு பழத்தினை கொய்து கிளிகள் மகிழ்ந்திடுமே!
உண்ண இலையும் தந்திடுமே. ஊஞ்சலாட விழிதிடுமே!
மரத்தை வெட்டினால், மழையும் மண்ணும் அழிந்திடுமே!'' என்றெல்லாம் கிராம மக்கள் பாடினர்.
எதிர்ப்பின் அடுத்தகட்டமாக, கிராமத்துப் பெண்கள், மரக்கிளைகளில் தூளி கட்டி, தங்கள் கைக்குழந்தைகளை அதில் இட்டு தாலாட்டு பாட ஆரம்பித்தனர். கர்ப்பிணிகளும், குழந்தைகளும் கூடிய கூட்டத்தையும், அங்கிருந்தவர் யூ டியூபில் பதிவிட, அந்த வீடியோ வைரலாகி, செய்தி நிறுவனங்களை மறுநாள் அந்த இடத்துக்கு வரவழைத்தது.
மரத்தின் உயிரை காப்பாற்றும் நோக்கத்தில் வெற்றி பெற, மனது வெறித்தனத்தனமாக ஒத்துழைத்தாலும், வயது காரணத்தால், பழனியின் உடல், தன் ஒத்துழைப்பை சிறிது சிறுதாக வாபஸ் வாங்கி
கொண்டிருந்தது.
ஒருவாய் தண்ணீர் கூட அருந்தாமல் தன் போராட்டத்தை தொடர்ந்த பழனியின் உடல் நிலை ஓரிரு நாள்களிலேயே மோசமாகி, பேச முடியாமல் தவித்தார். எனினும், அவர், மரத்தை விட்டு இறங்க மறுத்தார். மகனும் மற்றவர்களும், மெதுவாக வேற்று பாதையில், கஷ்டப்பட்டு மரத்தில் ஏறி, அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர்.
'பல்ஸ் ரேட் குறைஞ்சுக்கிட்டு வருது. உடனடியா ட்ரிப்ஸ் ஏத்தியாகணும். இல்லைன்னா, உயிருக்கு ஆபத்து' என்று ஆஸ்பத்திரியில் டாக்டர் உறுதியாக சொன்னார்.
டிரிப்ஸ் மூலம் உணவு செலுத்துவதற்கான உபரகணங்களை உடலில் இணைத்துக் கொள்ள பழனி உறுதியாக மறுத்தார்.
'அந்த மரத் தேவதை உயிரோட இருக்கணும்'' என்பதைத்தான் அவர் வாய் திரும்ப திரும்ப முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அவர் கண்கள் உள்ளிழுக்க ஆரம்பித்தன.
அந்தச் சமயத்தில், வெளியிலிருந்து அவர் படுத்திருந்த வார்டுக்குள் அதிகாரிகள் கூட்டம் நுழைந்தது.
ஊராட்சி மன்றத் தலைவருடன் ஆஸ்பத்திரிக்கு வந்த கலெக்டர், 'ஐயா.. உங்களுடைய அறப் போராட்டத்துக்குப் பிறகுதான், அந்த ஆலமரத்தின் மகத்துவம் எங்களுக்கு புரிஞ்சுது. அதில் வாழும் பறவைகளின் பாதுகாப்புக்கு நீங்க கொடுக்கிற முக்கியத்துவம் புல்லரிக்க வைக்குது. இதுக்கு மேல நாங்கச் செயல்படாம இருந்தால், அது மனித நேயத்துக்கே ஒரு இழுக்கு!'' என்று உணர்வுபூர்வமான வார்த்தைகளுடன், பழரசத்தை பழனியிடம் பகிர்ந்தார். பழனி பழரசத்தை வாங்க தயங்கினார்.
'ஐயா.. உங்க தயக்கம் எங்களுக்கு புரியுது. அந்த ஆலமரத்தின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. நமக்கும் நம் சந்ததியினருக்கும் சொந்தமான அந்த ஆலமரத்தை, இந்த பகுதியின் பாரம்பரிய சின்னமாக அறிவித்து, ஊராட்சி மன்றத்தில் பிரத்யேக தீர்மானம் நிறைவேற்றி இருக்காங்க? அதனுடைய நகலை உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன். மரத்தின் உயிரை காப்பாற்றிய உங்கள் உயிர் எங்களுக்கு முக்கியம்'' என்று சால்வை போர்த்திய ஊராட்சி மன்றத் தலைவரை வணங்க இரு கைகளையும் இணைத்தார் பழனி.
தன் அறப் போராட்டத்தால், ஆலமரத்தின் உயிரை காப்பாற்றிய அவர் தோளில், எண்ணற்ற சால்வைகள் ஏறின.
மறுநாள் விடியற்காலையில், ஆலமரத்தடிக்கு சென்றவர், 'அத்தனை பெருமைகளும் உனக்குத்தான்' என்று சொல்லி அந்தச் சால்வைகளை, ஆலமரத்தின் கிளைகளுக்கு போர்த்தி, மரத்தை கட்டி அணைத்து, ஆனந்த கூத்தாடினார். அந்தச் சமயத்தில் வீசிய காற்றில், தன் பழங்களையும், இலைகளையும் உதிர்த்து, அவருக்கு நன்றி சொன்னாள் ஆலமரத் தேவதை.
கரிச்சான் குருவி ஒன்று எழுப்பிய 'கீச்.. கீச்'' என்ற காதுக்கினிய ஒலி, அந்த நன்றிக்கு உயிர் ஊட்டியது.
'சமூக அந்தஸ்தில் எளியவர்களாக இருப்பவர்கள் கூட, அறப் போராட்டத்தால் வலிமை காட்டலாம்' என்பதற்கு, தன்னைவிட உருவத்தில் பெரிய பறவைகளிடம் வலிமையை காட்டும் கரிச்சான் குருவியை, ஒலி எழுந்த திசையில் அவர் கண்கள் தேடியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.