தினமணி கதிர்

புள்ளிகள்

உலகத் திரைப்பட வரலாற்றில் தமிழ்த் திரையுலகமானது தனித்துவம் வாய்ந்தது.

DIN

உலகத் திரைப்பட வரலாற்றில் தமிழ்த் திரையுலகமானது தனித்துவம் வாய்ந்தது. பழம்பெரும் நடிகர்களின் நினைவுகளையும், அவர்களின் நடிப்பையும் இன்றும் நினைவு கூர்ந்துப் பேசுவோர் உண்டு. சில நிகழ்வுகளைஅறிவோம்.

கல்கி கிருஷ்ணமூர்த்தியும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் 'கிருஷ்ணலீலா' நாடகத்துக்குச் சென்றிருந்தனர். அவர்களை வரவேற்றுப் பேசிய நாடக நிர்வாகி, 'இன்று கம்சனாக நடித்தவருக்கு கடும் ஜூரம் வந்துவிட்டதால், அவரால் வழக்கம்போல் சிறப்பாக நடிக்க முடியவில்லை' என்றார்.

இதற்கு கல்கி, 'கம்சன் ஒரே கிருஷ்ணனைதான் எதிர்கொண்டான். இங்கே இப்போது இரண்டு கிருஷ்ணர்கள். ஒருவர் நான். மற்றொருவர் என்.எஸ்.கே. என இருவர். அப்புறம் கம்சனுக்கு ஜூரம் வராமல் என்ன செய்யும்?' என்றார். கூட்டத்தில் கரகோஷம்.

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.

1954-இல் வெளிவந்த 'கூண்டுக்கிளி' படம் சிவாஜி கணேசனும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படமாகும். கே.வி.மகாதேவன் இசையமைப்பில், ஏ.எம்.ராஜாவும், ஜிக்கியும் பாடிய 'மயக்கும் மாலைப் பொழுதே நீ போ.. போ... இனிக்கும் இன்ப இரவே நீ வா.. வா..' எனும் டூயட் பாடலை 'கூண்டுக்கிளி' எனும் படத்துக்காகப் பதிவு செய்தார்கள். ஆனால், அந்தப் படத்தில் பாடல் சேர்க்கப்படவில்லை.

பின்னர், 1955-இல் டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் 'குலேபகாவலி' படத்தில்தான் பாடல் சேர்க்கப்பட்டது. 'குலேபகாவலி'யின் இசையமைப்பாளர் விசுவநாதன்- ராமமூர்த்தியாக இருந்தாலும், கூண்டுக்கிளி, குலேபகாவலி ஆகிய இரு படங்களுக்கும் ஒரே பாடலாசிரியர் தஞ்சை என்.ராமையாதாஸ்.

எங்கே சென்றாலும் அப்பேதெல்லாம் நடிகை பத்மினியிடம் ஓயாமல் எல்லோரும் கேட்ட கேள்வி, 'சிவாஜி கணேசனை ஏன் நீங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை' என்பதாகவே இருந்தது. யாருக்கும் பதில் சொல்லாத பத்மினி ஓய்வாக இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் வீட்டில் இருந்தபோது, 'நான் நாயர் பெண். அவர் கள்ளர் வகுப்பு.

நடக்கிற காரியமா?' என்று மனம் திறந்தார். இதை அவர் சொல்லும்போது, பத்மினியின் கண்கள் மின்னி ஒளி வீசின என்று கூறியிக்கும் முத்துலிங்கம், சிவாஜி கணேசனைப் பற்றி பேசும்போதெல்லாம் அவர் கண்ணில் மின்னல் வந்து போனதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்து அவரின் துணைவி கௌரவம்மாள் சொன்னது:

'எனக்கு பட்டுக்கோட்டை பக்கத்தில் ஆத்திக்கோட்டை சொந்த ஊர். எங்க அண்ணன் சின்னையனும், பட்டுக்கோட்டையாரின் அண்ணனும் சிங்கப்பூரில் வேலை பார்க்கும்போது நண்பர்கள். 'எனக்கு ஒரு தங்கை. அவளுக்குத் திருமணம் பண்ணனும்' என் அண்ணன் சொல்லியிருக்கிறார்.

அப்போது பட்டுக்கோட்டையின் அண்ணன் எதுவும் சொல்லவில்லையாம். சிங்கப்பூரில் இருந்து லீவுக்கு வந்தபோது, தம்பியைக் கூட்டிட்டு என்னைப் பெண் பார்க்க வந்துட்டார். அப்போ பட்டுக்கோட்டையாரின் அண்ணனுக்குதான் பெண் பார்க்கப் போறோமுன்னு நினைச்சிட்டு வந்தாராம்.

பெண் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும்போது, பெண் எப்படி இருக்குன்னு அண்ணன் கேட்க, 'அழகா தான் இருக்கு' என்று பட்டுக்கோட்டை சொன்னாராம்.

'உனக்கு தான்டா இந்தப் பெண்' என்று அண்ணன் சொன்னதும், பட்டுக்கோட்டைக்கு ரொம்பச் சந்தோஷமாய் போச்சாம். அப்போ வீட்டுக்கு வந்து எழுதியதுதான், 'ஆடை கட்டி வந்த நிலவோ? கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?' என்ற பாட்டு. இப்போ தெரிஞ்சுக்கிருக்குமே நான்தான் அந்த ஆடை கட்டி வந்த நிலவு.

ஒருநாள் அவங்க அண்ணன் மனைவிக்கு வளைகாப்பு. அப்போது நான் கிண்டலாக, 'அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் முகத்தில் பொன் சிரிப்பு' என்றேன்.

இதை 'கல்யாணப் பரிசு' படத்துல அவர் பல்லவி போட்டு, பாட்டாக எழுதினார். இது நீ எழுதிய பாட்டு. இந்தா பிடி சன்மானம் என்று அந்தப் பாட்டு எழுதியதற்கு கிடைத்த சன்மானத்தை எனக்குப் பரிசாக அளித்தார்' என்றார் கௌரவம்மாள்,

தமிழ்த் திரையுலகில் பயணித்த ஜூடோ கே.கே.ரத்தினம், இந்தியத் திரைத்துறையிலும் முன்னணி சண்டைக் காட்சி இயக்குநர். 200-க்கும் அதிகமான படங்களில் சண்டைக்காட்சிகள் அமைத்து கின்னஸ் சாதனையைப் படைத்தவர். ரஜினிகாந்தின் 46 படங்களுக்கும், கன்னட நடிகர் ராஜ்குமாரின் 52 படங்களுக்கும் சண்டைக் காட்சிகளை அமைத்தவர் இவர்.

1930-இல் குடியாத்தம் நகரில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் ரத்தினம். சிலம்பம், குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜூடோ போன்ற தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்று, குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்றவர். குடியாத்தம் வி.கே.கோதண்டராமன் வாயிலாக, திரைத்துறைக்கு அறிமுகமானார். முக்தா சீனிவாசனின் 'தாமரைக்குளம்'படத்தில் நடிகராகத் தொடங்கிய பயணம் சேலம் மார்டன் தியேட்டர்ஸில் 'கொஞ்சும் குமரி' படத்தில் சண்டைக்காட்சி இயக்குநராக மாறியது.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தமிழ்த் திரையின் முதல் குறும்படத்தில் நடித்த பெருமை டி.பி.ராஜலட்சுமியைச் சேரும். சாகர்முவிடோன் தயாரித்து 1931-இல் வெளியான 'குறத்தி பாட்டும் நடனமும்' என்ற குறும்படத்தில் நடித்தவர்.

இந்தியாவில் நடிகர், நடிகைகள் சிலர் சொந்த மாநிலத்தைவிட்டு நடிப்பதற்காக வேறு மாநிலங்களுக்குச் செல்வது வழக்கம். வேறு நாடுகளில் இருந்து வந்து குடியுரிமையைப் பெற்று பலர் பிரபலமாக உள்ளனர். நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துள்ளார். இவர் டென்மார்க் நாட்டின் குடியுரிமையைப் பெற்றவர்.

'டாக்கு மகராஜ்' என்ற படத்தில் நடித்த நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ், இலங்கை நாட்டின் குடியுரிமையையும், நடிகைகள் கேத்ரினா கைஃப், அலியா பட் ஆகிய இருவரும் பிரிட்டன் குடியுரிமையையும், நடிகைகள் சன்னி லியோன், நோரா ஃபதேஹி கனடா குடியுரிமையையும், நடிகர் இம்ரான்கான் அமெரிக்க குடியுரிமையையும் பெற்றுள்ளனர்.

கோட்டாறு ஆ.கோலப்பன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT