மக்களவையில் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு நெருக்கமாக இருந்தவர்களை பெரோஸ் காந்தி கடுமையாகச் சாடியபோதும், பத்திரிகைகளுக்கு ரகசியத் தகவல்களை அளித்தபோதும் இந்திரா தனது தந்தைக்கு ஆதரவாக இருந்து, கணவர் பெரோஸ் மீது கோபம் கொண்டார்.
புவனேசுவரத்தில் 1964 ஜனவரி மாதத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நேருவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, அவரது நிலைமையைக் கண்டு வேதனையுற்றார் இந்திரா. அதே ஆண்டு மே மாதத்தில் தனது கடைசிப் பயணமாக டோராடூன் சென்றபோது, இந்திராவும் உடன் சென்று கவனித்துகொண்டார்.
டி.எஸ்.ரங்கராஜன் எனும் இயற்பெயரைக் கொண்ட வாலி, ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர். ஆந்திர இலக்கியவாதியும், திரைப்பட எழுத்தாளராகவும் விளங்கிய 'ஸ்ரீஸ்ரீ' (ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாசராவ்), எஸ்.ரங்கராஜன் எனும் இயற்பெயரைக் கொண்ட சுஜாதா, பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், 'ஃபைவ் ஸ்டார்' திரைப்படத்தில் அறிமுகமான சுசி கணேசன் உள்ளிட்டோரும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூருக்கு பின்னர், வங்கத்தில் பெரிதும் பேசப்படும் கவி காஜி நஸ்ருல் இஸ்லாம். இவரை 'புரட்சிக்கவி' என்பர். தனது குழந்தைகளுக்கு கிருஷ்ணா முகம்மது சவ்யாசச்சி, அனிருந்தா என்று ஹிந்து பெயர்களைச் சூட்டினார். சுதந்திரம் வேண்டி எழுச்சிமிக்க இசைக்கவிதைகளை இயற்றியதோடு, சிறந்த இசைக்கலைஞராகவும் விளங்கினார்.
இவரது சிலை கிழக்கு மேதினிப்பூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஹால்தியா நகராட்சி வளாகத்தின் பூங்காவில் 1999-ஆம் ஆண்டு ஜூன் 9-இல் இடது முன்னணி ஆட்சியில் நிறுவப்பட்டது. இதே வளாகத்தில் ரவீந்திரநாத் தாகூருக்கும் சிலையும் உள்ளது. இங்கு இலக்கியக் கூட்டங்கள் நடைபெற்றுவருவது சிறப்பானது.
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
தமிழில் நூல் வெளியிட்டதற்காக, குற்றம் சாட்டப்பட்டு முதன் முதலில் சிறை சென்றவர் ஜீவா. 'நான் ஏன் நாத்திகனானேன்' என்ற கட்டுரையைத் தமிழாக்கம் செய்ததுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.
வேதநாயகம் பிள்ளை 1857-இல் நீதிபதியானார். அன்று நீதிமொழி ஆங்கிலம்தான். அதனால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். அதை நீக்க வேதநாயம் 1805-1861 வரையிலான சட்டம், வழக்குகள், தீர்ப்புகள் ஆகியவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து தமிழாக்கம் செய்தார். 'சித்தாந்த சங்கிரதம்' என்ற பெயரில் அது நூலாக 1862-இல் வெளிவந்தது. தமிழின் முதல் சட்ட நூல் இதுதான்.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.
'இரண்டு வரியில் ஒரு திகில் கதை எழுத முடியுமா?' என்று கேட்டால் பலரும் தயங்குவர். ஆனால், மார்டின் கார்னர் என்ற அமெரிக்க கதாசிரியர் எழுதினார்.
'உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் உட்கார்ந்திருந்தான். கதவு தட்டப்பட்டது.'
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
ஒருமுறை எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம் தனது மகன் லா.ரா.சப்தரிஷியிடம் சொன்னது:
'அதென்ன அன்புள்ள அப்பாவுக்கு என்று கடிதம் எழுதுவது. அப்பா என்றாலே அன்புதானே. தனியா எதுக்கு அன்புள்ள..'
-அ.யாழினி பர்வதம், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.