unknown
தினமணி கதிர்

கூவம், அடையாறு மாசு நீரை மாற்றுவோம்...

'சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசடையும் சூழலை மாற்றும் தொழில்நுட்பத்தை எங்கள் நிறுவனம் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் கூவம், அடையாறு ஆற்றில் உள்ள மாசு நீரை மாற்றுவதற்கான வாய்ப்புக் கொடுக்கப்பட்டால் அற்புதம் நிகழ்த்தலாம்.

தினமணி செய்திச் சேவை

தமிழானவன்

'சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசடையும் சூழலை மாற்றும் தொழில்நுட்பத்தை எங்கள் நிறுவனம் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் கூவம், அடையாறு ஆற்றில் உள்ள மாசு நீரை மாற்றுவதற்கான வாய்ப்புக் கொடுக்கப்பட்டால் அற்புதம் நிகழ்த்தலாம்' என்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த எழுபத்து ஆறு வயதான தொழில்நுட்ப விஞ்ஞானி மாணிக்கம் அத்தப்ப கவுண்டர்.

டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் வாயிலாக ராணுவ ஆராய்ச்சி- மேம்பாட்டு நிறுவனத் தயாரிப்புகளுக்கு மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்தும், தேவையான உபகரணங்களைத் தன்னுடைய நிறுவனத்தில் தயாரித்தும் நாட்டின் பாதுகாப்புப் பணிக்காக அவர் அளித்துவருகிறார். புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற அவரிடம் பேசியபோது:

'ஏவுகணை விஞ்ஞானி சிவதாணு பிள்ளைதான் ராணுவ ஆராய்ச்சி- மேம்பாட்டுக்கு முதல் காரணம். இதையடுத்து முழு வடிவம் கொடுத்தவர் 'ஏவுகணை நாயகன்' என்று வர்ணிக்கப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். ராணுவ வீரர்கள் போர் செய்வதைவிட தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் மூளைதான் முக்கிய முதலீடு என்று நம்பியவர் அப்துல்கலாம். அவரது தலைமையில் உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணை நாட்டின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் உச்சம். மற்ற நாடுகளுக்குச் சிம்ம சொப்பனம்.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிடம் இப்போதுள்ள பாதுகாப்பு தொழில்நுட்பம் வந்துவிட்டது. அப்போது பரிசோதனை செய்ய முடியவில்லை. இப்போது 'சிந்தூர் ஆபரேஷன்' என்ற ராணுவ நடவடிக்கையால் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறோம்.

உலகத்தில் பாதுகாப்பான நாடு இந்தியா. அதற்கான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்திவிட்டது. மூன்று அம்சங்களில் இந்திய நாடு பாதுகாப்புத் துறையில் முன்னோடியாக இருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் எதிரிகள் யாரும் இங்கு உள்ளே வரமுடியாது. மற்ற நாட்டின் ட்ரோன்கள் இனி நம் நாட்டில் பறக்க முடியாது. நம் நாட்டை நோக்கி கிளம்பும் நாட்டிலேயே அடித்து நொறுக்கிவிடும் தொழில்நுட்பம் நம்மிடம் அமலுக்கு வந்துவிட்டது. மூன்றாவதுதான் முக்கியம். கண்ணுக்குத் தெரியாத மின்காந்த அலையால் உருவாக்கப்படும் தடுப்புச் சுவர் தொழில்நுட்பம். தற்போது

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இந்தத் தடுப்புச் சுவர் போட்டாகிவிட்டது. சிந்தூர் போரில் அதனால்தான் பாகிஸ்தான் உள்ளே வர முடியவில்லை. இனியும் வர முடியாது.

ரஷியாவின் சில தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணையை அந்த நாடே இப்போது வாங்கத் தொடங்கிவிட்டது. உலகத்தில் 57 நாடுகள் நம் நாட்டின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை நம்பியுள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரம்மோஸ் ஏவுகணை சென்று விட்டது. உத்தரபிரதேசத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் பாதுகாப்புத் துறையின் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. விரைவில் உலகத்தில் பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில்நுட்பத்தில் நம்நாடு முதலிடத்துக்கு வரப்போகிறது.

சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தென் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டோம். 2-ஆவது உலகப் போருக்குப் பின்னர் சரியாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த தஞ்சாவூர் விமான நிலையத்தில் இப்போது 18 போர் விமானங்களைத் தயார் நிலையில் நிறுத்திவிட்டோம். இந்த விமானங்களில் உள்ள ஏவுகணைகள், கடலில் காணாமல் போனதாக ஆராய்ச்சியாளர்கள் கூறும் குமரிக்கண்டம் வரை சென்று தாக்கும் வல்லமை படைத்தவை. ஏன் இங்கு பாதுகாப்பை இந்தியா பலப்படுத்தியுள்ளது என்பது எனக்குத் தெரியாது.

இலங்கையில் பொருளாதார ரீதியாக, அங்குள்ள தமிழர்களை முதலில் முன்னேற்றினால் அங்கு நிலவும் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். இலங்கையில் ஏராளமான பனைமரங்கள் தமிழர்களிடம் இருக்கின்றன. அதிலிருந்து இறக்கப்படும் நீரைப் பதப்படுத்தி, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். அதற்கான தொழில்நுட்பம் எங்களிடம் இருக்கிறது. அதை விரைந்து சட்டப்பூர்வமாகச் செய்யப் போகிறோம். இதனால் அவர்களின் வாழ்வு மேம்படும்' என்கிறார் அத்தப்ப கவுண்டர்.

படம்: கி.ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இடி, மின்னலுடன் பலத்த மழை: வேலூரில் 134.30 மி.மீ. பதிவு

‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

பிறந்த நாள்: ப.சிதம்பரத்துக்கு முதல்வா் வாழ்த்து

மோடி பிறந்த நாள்: ஓபிஎஸ், ஜி.கே.வாசன் வாழ்த்து

அக்.2-இல் காத்திருப்புப் போராட்டம்: டாஸ்மாக் பணியாளா் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT