'உயிரினங்களில் பல்லிகள் என்றாலே பலருக்கும் அருவருப்பாக இருக்கும். ஆனால் பல்லிகள் மனித குலத்துக்கு நன்மையைச் செய்கின்றன. பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கின்றன. கொசுக்கள், கரையான்கள், ஈக்கள், பூச்சிகளை உணவாக ஏற்று, பல்லிகள் உயிர்வாழ்கின்றன' என்கிறார் 'அழிந்து வரும் பல்லியினங்கள்' குறித்து முப்பது
ஆண்டுகளாக ஆராய்ந்துவரும் வன உயிரின ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி.
மதுரை பாரதி யுவகேந்திராவின் சுவாமி விவேகானந்தர் விருது, ஜப்பான் ஹியோஷி நிறுவனத்தின் ஹியோஷி இளம் சுற்றுச் சூழல் ஆய்வாளர் விருது, திருச்சி தூய வளனார் கல்லூரியின் சிறந்த சுற்றுச் சூழல் அறிவியல் புத்தக எழுத்தாளர் விருது, புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்ரீவஸ்தவா அறிவியல்- சமூக நிறுவனத்தின் சிறந்த அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளை இந்த ஆராய்ச்சிகளுக்காகப் பெற்றுள்ளார்.
அவரிடம் பேசியபோது:
'பூமியின் சூழல் மண்டலத்தில் மிக முக்கியமானவை உயிரினங்கள். சூழல் மண்டலங்கள் இயங்குவதில் உயிரினங்களின் பங்கு அதிகம். இயற்கையின் இயக்கம் என்பது மனிதனைத் தவிர பிற உயிரினங்களைக் கொண்டதுதான்.
யானைகள், புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், மயில்கள், வண்ணத்துப் பூச்சிகள், அந்துப் பூச்சிகள், பல்லிகள், பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்களை பெரிய, சிறிய உயிரினங்கள் என இரு வகைப்படுத்தலாம். சிறிய உயிரினங்களில் பல்லிகள், வண்ணத்துப் பூச்சிகள் அடங்கும்.
உலகில் சுமார் 7 ஆயிரம் பல்லியினங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 231 பல்லியினங்கள் உள்ளன. இந்தப் பல்லியினங்கள் பூச்சிகளின் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைத்து உயிர்ச் சங்கிலித் தொடரில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும் பல உயிரினங்களுக்குக் குறிப்பாக பாம்பு, பறவைகளுக்கு உணவாகின்றன. கொசுக்களைக் கட்டுப்படுத்துவதில் கெக்கோ பல்லியினங்கள் மிக முக்கியமானவை.
பல்லியினங்களை மனிதர்கள் நேரடியாகக் கொல்லாவிட்டாலும் அவற்றின் வாழிடங்களை அழிப்பதால் அவற்றின் எண்ணிக்கை மிகக் குறைந்து வருகிறது. நகர்மயமாதலாலும் விவசாய நிலங்களில் வீடுகள் கட்டுமானத்தாலும் சூழல் மண்டலத்தின் உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது.
நாட்டில் வனப்பகுதிகள் அழிந்து கொண்டே வருவதால் சிறு உயிரினங்கள் குறித்த தகவல்கள் கிடைப்பதில்லை. வாழிடங்கள் அழிந்து வருவதால் பல்லியினங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட யாரும் விரும்புவதில்லை. 1970-களில் இருந்து இதுவரை 58 சதவீத ஊர்வன வகைகள் அழியத் தொடங்கி, எண்ணிக்கை குறைந்து வருவதாக இங்கிலாந்தில் உள்ள லண்டன் விலங்கியல் சங்கம் தெரிவித்துள்ளது.
பல்லியினங்களை வீட்டில்தான் நாம் பார்த்திருப்போம். கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள திருச்சி அருகே பச்சைமலையில் தென்னிந்திய பாறை அகமா (அறிவியல் பெயர் சம்மோபிலஸ் டோர்சலிஸ்) சமிலியன் பச்சோந்திகள் காணப்படுகின்றன.
அகமா ஆண் பல்லி வகைகள் தட்டையான உடலமைப்பைக் கொண்டவை. பக்கவாட்டில் கருப்புப் பட்டை காணப்படும். தொண்டை, வயிற்றுப் பகுதியில் மஞ்சள் நிறமிருக்கும். இனப்பெருக்க காலங்களில் ஆணின் தலை, முதுகு சிவப்பு நிறமாக மாறும். பாம்புக் கண் பல்லியினம் புளியஞ்சோலையில் உள்ளது. இவை பாறைகள் மற்றும் மண்ணில் புதைந்து வாழ்பவை.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பாலக்காட்டுக்கு அருகே ஸ்லெண்டர் டே ஜெகோஸ் என்ற பல்லியினம் மஞ்சள், சிவப்பு உடலமைப்பும் வால்பகுதி கருப்பு, வெள்ளை பட்டையுடனும் இருக்கும். உடலில் முள் போன்று இருக்கும்.
'கடலோர பகல் பல்லி' என்பது கடற்கரையோரங்களில் எர்ணாகுளம், திருவனந்தபுரம் பகுதிகளில் கடற்கரையோரங்களில் காணப்படுகிறது. ஆண் பல்லியின் தொண்டை அடர்ந்த மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
மனிதர்கள் மட்டுமில்லாமல் பல்லிகளும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றன. மன அழுத்தத்தின்போது கார்பன் மற்றும் நைட்ரஜன் போன்ற வேதிப் பொருள்களை உடலில் சுரக்க வைப்பதால் அதற்கு ஆற்றல் கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான பல்லியினங்கள் அழிந்து வரும் நிலையில் உள்ளன. இதனால் சிறு உயிரினங்களான பல்லியினங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் பல்லிகளைப் பற்றி மேலும் பல உண்மைகளைத் தெரிந்து கொள்ள முடியும். மனிதக் குலத்துக்கு நன்மை செய்யும் பல்லியினங்கள் அழிந்து வரும் பட்டியலில் உள்ளன'' என்கிறார் அசோக சக்கரவர்த்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.