தேவவிரதன்
இன்றைய கல்யாண சந்தை பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருத்திக்கும் என்று எனக்குத் தெரியாது. இப்போது 'மணமகன் தேவை' விளம்பரங்களைவிட 'மணமகள் தேவை' விளம்பரங்கள்தான்அதிகம் உள்ளன. ஆண், பெண் விகிதாசாரம் குறைந்துகொண்டே வருவதால் ஏற்பட்டுள்ள இதை பல சமூக ஆர்வலர்கள் விளக்கிவருகிறார்கள்.
சமீபத்தில் எனக்கு நேரிடையாக ஏற்பட்ட இரு நிகழ்வுகள் இது உண்மைதான் என்று அறியவைத்தது. முதலாவது என்அலுவலக நண்பர் ஒருவர் தன் திருமண வயதில் உள்ள மகனுக்காக திருமண மையத்தில் தன் மகனைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்யச் சென்றிருக்கிறார். அங்கு இவரை வரவேற்ற மையத்தின் அதிகாரியின் முதல் கேள்வி, 'பிள்ளைக்கா, பெண்ணுக்கா?'. இவர் 'பிள்ளை' என்றதும், அசுவாரஸ்யமாக 'பிள்ளை...யா? சரி. எழுதிவச்சிட்டுப் போங்க' என்று சொன்னாராம்.
அப்போது இன்னொரு தம்பதி வந்து அவர்கள், 'பெண்' என்றதும் காரியதரிசி, 'வாங்க...வாங்க... உங்க பெண்ணைப் பற்றிச் சொல்லுங்க' என்று ஆவலுடன் கேட்டு ஆச்சார உபசாரங்கள் நடந்திருக்கின்றன.' என்று சிரித்தபடி சொல்லியிருக்கிறார்.
அடுத்து நான் சந்தித்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது...
நண்பர் ஒருவரின் வீட்டுக்கு நான் சென்றிருந்தபோது அவர் மனைவி கோகிலாவுக்கு போன் வந்தது. 'ஓ, சகுந்தலா மாமி... வாங்கோ, வீட்டிலேதான்இருக்கோம்' என்றாள் நண்பரின் மனைவி.
நான் வந்து நீண்ட நேரமானதால், அவர்கள் வீட்டுக்கு இன்னோர் விருந்தாளி வருகிறார் என்பதாலும் நான் 'சரி, கிளம்புகிறேன்' என்றேன்.
இருவரும் என்னைத் தடுத்தனர். 'இருங்கள். நீங்கள் சகுந்தலா மாமியை அவசியம் சந்திக்கவேண்டும். மிகவும் சுவாரஸ்யமானவர். அவர் தன் பெண்ணுக்கு வரன் தேடிக்கொண்டிருக்கிறார். அந்தப் பெண் மிகவும் கெட்டிக்காரி பிளஸ் அழகி' என்றனர்.
அடுத்த ஐந்தாவது நிமிஷம் மணியோசை கேட்டது. சகுந்தலா மாமி நேரில் பார்க்க அவ்வளவு 'பெரியமாமி' யாக இல்லை. நவநாகரிக மாமிதான்.
அறிமுகம் முடிந்ததும் கோகிலா 'உட்காருங்கோ மாமி' என்று உபசரித்தாள்.
கோகிலா. ஓர் 'க்ளாஸ்' தண்ணீர் மட்டும் கொண்டுவா. நான் சீக்கிரம் போகவேண்டும். மீரா வந்துவிடுவாள்.' என்றபடிஅமர்ந்தார்.
மீரா அவர் பெண் என்று இங்கு அறிமுகம் செய்யவேண்டியது அனாவசியம்.
தண்ணீர் கொண்டு வந்த கோகிலா 'மீரா சாதாரணமாக ரொம்ப 'லேட்டா'க வருவாள் என்றுதானே சொல்வீர்கள்?' என்றாள், பின்னர் என் பக்கம் திரும்பி, 'இவங்க டாடர் மீரா பயோடெக்னாலஜியில் டாக்டர் பட்டத்துக்காக ஆராய்ச்சியில் இருக்கிறாள்' என்றாள்.
தண்ணீரை வாங்கிக் கொண்ட சகுந்தலா மாமி 'என்ன ரிசர்ச்சோ? காலைல எட்டு மணிக்கு போனால் ராத்திரிஒன்பது, பத்து என்றுகூட சில நாட்கள்ஆகிவிடும்.' என்றாள் சலிப்புடன்.
யு நோ... இதில் மீரா இரண்டு 'இன்டர்நேஷனல் ஜர்னலி'ல் பேப்பர்கூட பிரசுரித்துவிட்டாள். இன்னும் இரண்டு பண்ணனும் என்கிறாள்.' என்றாள் தொடர்ந்து.
மீராவுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தீர்களே? எதாவது நிச்சயம் ஆகும் போல் இருக்கிறதா?' என்றார் நண்பர் கோபால்.
அதையேன் கேட்கறே ? ஒன்று அநேகமாக நிச்சயம் ஆகும் வரை வந்துவிட்டது. மீராதான் அந்தப் பையனோட போட்டோவைப் பார்த்துவிட்டு, இவர் என்னைவிட ஒரு'இன்ச்' குள்ளமாக இருப்பார்போல இருக்கிறதே?' என்றாள்.
பையன் ஹீல்ஸ் வைத்த ஷூ போட்டுக்கலாமே?' என்றேன் நான்.
மாமி சட்டென்று என்னை முறைத்தாள். பின்சிரித்தாள்.
வெகு அழகுதான். வீட்டுக்குள் ஷூ போட்டுண்டு நடமாடமுடியுமா? நாசூக்காக ஜாதகம் சேரலைன்னு சொல்லிட்டோம்.'
ஜாதகம் பார்க்கிறீர்களா?' என்றேன் நான்.
பின்ன? ஓர் ஜோஸ்யர் இல்ல, மூன்று ஜோஸ்யர்களிடம் காட்டிவிட்டுத்தான் பேச்சே...மீராவுக்கு இதிலெல்லாம் ரொம்ப நம்பிக்கை உண்டாக்கும்.' என்றார் மாமி.
அப்படியா?' என்றாள் கோகிலா.
ஆமா... அவ ட்ரெஸ் பண்றத பார்த்து நீ அவளுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்காதுன்னு நெனச்சிருப்பே. ஜீன்ஸ், லெக்கின்ஸ், டீஷர்ட் எல்லாம் போட்டுண்டாலும், மீராவுக்கு நம்ம கலாசாரத்தின் மேல அசாத்திய பற்றும், நம்பிக்கையும் ஜாஸ்தி.'
படிக்கற இடத்திலேயே இப்ப நிறையப் பேர் 'லைப்பார்ட்னரை' தேடிக் கண்டுபிடிச்சுவிடுகிறார்களே, மாமி?' என்றார் கோபால்.
மூச். அந்த பேச்சே மீராவிடம் கிடையாது. காதல்னு சொல்றதெல்லாம் வெறும் ஹார்மோன் சமாச்சாரம்னு எழுத்தாளர் சுஜாதாவே சொல்லிஇருக்காரே? அதேயேதான் மீராவும்சொல்லுவா. 'பயோ' படிச்சவ இல்லையா... எல்லாத்திலேயும்முதல்...'
ம்ம்... சரிதான்' என்றார் கோபால்.
புதுசா ஒரு கூத்து சமீபத்தில் நடந்தது. மீராவோட 'ரிசர்ச்' பண்ற இன்னொருத்தன் ஒருநாள் சடார்னு இவ கால்ல விழுந்து சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணி 'நீ என்னை என்ன செய்யச் சொன்னாலும் செய்யறேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்கறனேன்னு சொல்லு'ன்னானாம்.'
அய்யய்யோ, அப்புறம்?' என்றாள் கோகிலா.
மீராவுக்குத்தான் இதெல்லாம் சுத்தமா பிடிக்காதே? நத்திங் டூயிங்... அவனை எழுப்பி நல்ல வார்த்தைச் சொல்லி அனுப்பிஇருக்கா. வீட்ல வந்து எங்கிட்ட சொல்லி சொல்லிசிரிச்சா...'
உங்க பொண்ணுக்கு ஏத்த வரன் அமெரிக்காவிலே கிடைக்குமே?' என்றேன் நான்.
வாஸ்தவன்தான். நிறையப்பேர் 'அப்ரோச்'பண்ணினா. ஆனா, மீராவுக்கு அமெரிக்கா என்றாலே அலர்ஜி. வேண்டாம்மா. நான் இந்தியாவிலதான் இருக்கணும்கறா'
வித்தியாசம்தான். மீரா தனி. மத்தவ மாதிரி இல்ல. அவளோட 'திங்கிங்'கே வித்தியாசமா இருக்கும். இன்னொரு வரன் வந்தது. அதைக் கேளு கோகிலா' என்றாள் மாமி.
'சொல்லுங்கோ' என்றாள் கோகிலா.
'எல்லாம் சரியாத்தான் இருந்தது. பையன் சென்னையில்தான். அவங்களுக்கு பிசினெஸ் சென்னை, பெங்களூரு, கொச்சின் என்று மூணு எடத்திலேஇருக்கு. 'ஸ்மார்ட்டா' இருந்தான். எம்.பி.ஏ. ஆனால் என்ன பிரயோஜனம்?'
'ஏன்?' என்றேன் ஆவலை அடக்கமுடியாமல்.
'மீராவைவிட ஒருவயசு சின்னவன். அவன் வீட்டிலே பரவால்லைங்கறா. ஆனா மீராவும், அவ அப்பாவும் கட்டாயம் முடியாதுன்னுட்டா.'
'அடப்பாவமே?'
'இப்ப எல்லோரும் 'சாட்' பண்றேங்கறா... ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க. ஆனா, அதிலேயும் பிரச்னை.'
'என்ன மாதிரி?'
'டில்லில ஒரு வரன். அவன் 'சாட்'ல தனக்கு ஹிந்தி சினிமாதான் ரொம்பப் பிடிக்கும்னானாம். மீராவுக்குத்தான் சினிமான்னலே அலர்ஜி ஆச்சே?'
'நிஜமாகவா?' என்றேன் நான் ஆச்சர்யம் தாங்காமல்.
'ஆமாம். சுத்தமா ரசிக்காது. அதேமாதிரி இன்னொரு வரன். ஹைதராபாத். அவனுக்கு நல்ல படிப்பு, வேலை. ஆனால், அவன் கர்நாடக சங்கீதம் பாடுவானாம். அவன் மனைவிக்கு அதில் ரசனை வேணும்னு கேக்கிறான்.'
'மீராவுக்குத்தான் இந்திய கலாசாரம் பிடிக்குமே மாமி? கர்நாடக சங்கீதம் பிடிக்காதா?'
'ஓரளவுதான் கேப்பா. அவன் தானே கச்சேரியெல்லாம் பண்ணுவானாம். பாடகன் வேண்டாம் என்றுகண்டிப்பா சொல்லிட்டா மீரா. அவளுக்கு 'அகாடெமிக்ஸ்'லதான் அதிகஆர்வம்.'
எனக்கு உண்மையில் வியப்பு ஏற்பட்டது. ஒரு காலத்தில் பெண்களுக்கு என்னவெல்லாம் 'கல்யாண சந்தை'யில் வேண்டும் என்றார்களோ, அதாவது அழகு, படிப்பு, பாட்டு, பேச்சு என்று...அவையெல்லாம் இன்று பழிவாங்குவதுபோல்ஆண்கள் பக்கம் திரும்பிவிட்டதே?'
'இன்னொரு விஷயம். சொல்ல மறந்து விட்டேனே? ஓர் வரன். அவனும் பி. எச்டிதான். ஆனால், பிசிக்ஸில். ஏதோ தனியார் கல்லூரி என்பதால் மீராவுக்கு வரும் 'ஸ்காலர்ஷிப்'பைவிடவும் குறைந்த சம்பளம். பார்க்க நன்றாகத்தான் இருந்தான். படிப்பும் இருந்தது. வயசு வித்தியாசமும் அதிகம் இல்ல. அவர்களும், பையனும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், மீரா வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்,' என்று 'சஸ்பென்ஸ்' கொடுத்தார் மாமி.
'ஏன்? குறைந்த சம்பளம் என்பதாலா?' என்றோம் மூன்று பேரும் ஏககாலத்தில்.
'எஸ். ஆனால், மீரா சொன்ன காரணத்தை நீங்கள்கேட்கணும்.'
'என்ன காரணம்?' என்றேன் நான்.
'எனக்கு பரவா இல்லைம்மா... ஆனால், நாளைக்கு அவனுக்கு கட்டாயம் தாழ்வுமனப்பான்மை வந்துவிடும். அதுவாழ்க்கையைப் பாதிக்கும் என்றாள் மீரா. அவளுக்குத்தான் எத்தனை தீர்க்கதரிசனமும், புத்திசாலித்தனமும், பார்த்தீர்களா?' என்றார் பெருமையுடன்.
எங்கள் மூவருக்குமே இதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
'சகுந்தலா மாமி சமையலில் எக்ஸ்பர்ட். அதோட ஸ்வீட், ஜாம், ஜெல்லி, ஊறுகாய் இவையெல்லாம் சூப்பரா பண்றதில மாமியே அடிச்சுக்கவே முடியாது' என்றாள் கோகிலா.
'ஐயோ, கோகிலா. அதெல்லாம் இப்ப பண்றதே இல்ல. மீரா நிஜத்தில் என்னைவிட நன்னா சமையல், ஸ்வீட் எல்லாம் பண்ணுவா. நீ வா ஒருநாள். நான் அவளை பண்ணி காட்டச்சொல்றேன்.' என்றாள் மாமி.
'இந்தப் பக்கம் எங்க வந்தீங்க மாமி? நான் கேட்கவே மறந்துபோனேன்?' என்றாள் கோகிலா.
'மீரா விஷயமாகத்தான். உங்கள் தெருவுக்கு பக்கத்து தெருவில் சி.ஏ. படித்தவரின் குடும்பம் இருக்கிறது. அவர்களைப் பார்த்து ஜாதகம் வாங்கிப்போகத்தான் வந்தேன்.'
'பார்த்தாச்சா?'
'ம்ம். போட்டோகூட இ.மெயில்ல அனுப்பறேன்னு சொன்னா. நல்ல இடம்தான். ஜாதகம் சேரணும்.' என்று கிளம்பினாள் சகுந்தலா மாமி.
'உங்க சூரிதார் ரொம்ப நன்னா இருக்கு மாமி... எங்க வாங்கினீங்க?' என்றாள் கோகிலா.
'இதுவா? மீராதான் தில்லிக்கு ஓர் 'கான்பரன்ஸ்'க்கு போனபோது பார்த்து வாங்கிண்டு வந்தா...அவ 'செலக்ஷன்' எல்லாமே நன்னாத்தான் இருக்கும்' என்றாள் மாமி பெருமையுடன். தொடர்ந்து 'இந்த 'ஹாண்ட்பாக்' கூட மீரா வாங்கினதுதான்' என்றாள்.
'சரி. நான் வரேன் கோகிலா. நீங்க ரெண்டு பேரும் ஒருநாள் வீட்டுக்கு வாங்கோ...மீராவுக்கு லீவா இருக்கிற நாளா பார்த்து' என்று விடைபெற்றார் சகுந்தலா மாமி. மாமியை அனுப்பிவிட்டு கதவை சாத்திக்கொண்டு வந்த கோகிலா என்னைப் பார்த்து புன்னகை செய்தாள்.
'அப்பா... மழைபெய்து ஓய்ந்ததுபோல் இருக்கு. எத்தனைமுறை மீரா, மீரான்னு மாமி சொல்லிஇருப்பா?' என்றார் கோபால்.
'எனக்குத் தெரியும், நான் எண்ணி விட்டேன். நாற்பது தடவை என்று நினைக்கிறேன்' என்றேன் நான் சிரித்தபடி. 'ரியலி ?' என்று கேட்டு விட்டுச் சிரித்தனர் கோபாலும், கோகிலாவும்.
'நிஜமாகவே இதைத்தான் 'பெண்ணின் பெருமை' என்று சொல்லவேண்டும், இரண்டுவிதமாகவும்' என்றேன் நான். மீண்டும் நாங்கள் மூவரும் சிரித்தோம்.
***
பின்குறிப்பு: இந்த சந்திப்பு நடந்து மூன்று வருஷங்கள் ஆகி இருக்கும்.
முதல் நண்பரின் பையன் அதிர்ஷ்டசாலி. அவனுக்குத் திருமணமாகி ஒருகுழந்தைகூட பிறந்துவிட்டது.
மீரா தன்னுடைய ஆராய்ச்சியை முடித்து டாக்டர் பட்டம் வாங்கிவிட்டாள் என்று மட்டும் தெரிந்தது.
மணவாழ்க்கை பற்றிதெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆசை உங்களுக்கு வருவதுபோல் எனக்கும் வந்தது. சமீபத்தில், நான் நண்பர் வீட்டுக்குச் சென்றபோது மீரா பற்றி விசாரித்தேன்.
'ஓ, உங்களுக்கு இன்னும் மீராவை பற்றி நினைவு இருக்கிறதா? அவள் இப்போது தமிழ்நாட்டில் இல்லை. கொங்கன் கடற்கரையின் அருகே உள்ள ஓர்அழகான ஊரில் உள்ள ஓர் பெண்கள் கல்லூரியில் மூத்த விரிவுரையாளராக இருக்கிறாள். காலேஜில் அவளுக்கு நல்லபேரும், புகழும் இருக்கிறதாம்.
நான் 'அதுகிடக்கட்டும். மீராவின் கல்யாணம்?' என்றேன் மிகுந்த ஆர்வத்துடன். நண்பரும், அவர் மனைவி கோகிலாவும் சிரித்தனர்.
'தெரியுமே. நீங்கள் அந்தக் கேள்வியைத்தான் உடனே கேட்பீர்கள்என்று?' என்றனர் ஒரே குரலில்.
'பின்னே? அன்று நான்அந்த அளவும் 'மீராபுராணம்' கேட்டதற்கு முடிவு என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டாமா?' என்றேன் நான் சிரித்தபடி.
'மீரா அவள் ஆராய்ச்சி செய்யும் காலத்தில் 'யு.எஸ்ஸில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யூனிவர்சிட்டி ஆப் பப்ளிக்ஹெல்த், பால்டிமோர், மேரிலாண்ட்' கலாசாலையில் இவளைப் போலவே ஆராய்ச்சி செய்யும் ஓர் இந்திய மாணவருடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. அவரும் ஓர் மிகுந்த இந்திய பண்பாடுகளை மதிக்கும் ஓர் இந்தியர். ஆனால், கொங்கன் பகுதியைச் சேர்ந்தவர். ஆராய்ச்சி தொடர்பாக ஓர்ஆராய்ச்சிக் கட்டுரையைப் படிக்க மீரா ஜான் ஹாப்கின்ஸ் சென்றபோது ஏற்பட்ட தொடர்பு இறுதியில் காதலில் முடிந்திருக்கிறது. அவரும் இந்தியாவில் குறிப்பாக அவரின் சொந்த மாநிலத்திற்கு பக்கத்தில் ஓர்
பெரிய ஆராய்ச்சிநிலையம் உருவாக்குவதில் ஆர்வமாக இருந்ததால் அவர் இந்தியா திரும்பியதும் தொடர்பு மேலும் வலுவாகி திருமணத்தில் முடிந்துவிட்டது. அதனால்தான், மீராவும் அங்குள்ள ஓர் கல்லூரியிலேயே வேலைக்குச் சேர்ந்துவிட்டாள். அதோடு கணவருக்கு அந்தப் புதியஆராய்ச்சி நிறுவனம் அமைப்பதில் மிகுந்த உதவியாகவும் இருக்கிறாள். எல்லாம் சுபம்.' என்றாள் கோகிலாசிரித்தபடி.
நான் என்ஆவலை அடக்கமுடியாமல் 'அந்த மாப்பிள்ளையின் உயரம், பருமன், வயது, ரசனை, எல்லாம் மீரா போட்ட கண்டிஷன்களுடன் ஒத்துபோகிறதா?' என்று கேட்டேன்.
கோகிலாவும், கோபாலும் சிரித்தனர். 'எல்லாம் கச்சிதமாக. ஆனால், ஒன்றே ஒன்று ...' என்று இழுத்தாள் கோகிலா.
நான் ஆவலை அடக்கமுடியாமல் 'என்ன அது?' என்றேன் பரபரப்பாக.
'அவருக்கு தமிழ்தெரியாது. மீராவுக்கு கொங்கணி தெரியாது.'
'ஸோவாட்?' என்றேன் நான். 'இரண்டுபேரும் பொதுவாக ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், இப்போது மீரா அவருக்கு தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தி தமிழ் கற்றுத்தருகிறாளாம். எப்படி?' என்றார் கோபால்.
'ஓ... வாவ்... இப்போது சகுந்தலா மாமியின் 'பெண்ணின் பெருமை' நிஜமாகவே பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான்' என்றேன் நான் சிரித்தபடி.
'ஆமாம். இப்போது சகுந்தலா மாமியைச் சந்தித்தால் 'பெண்ணின் பெருமை'யை மட்டும் பேசுவதில்லை... 'மருமகனின் பெருமை'யையும் சேர்த்து.' என்று சிரித்தபடி சொன்னாள் கோகிலா.
இன்றைய உலகில் 'பெண்சாதனையாளர்களுக்கு' குறைவே இல்லை என்பதுடன், அவர்கள் 'நினைத்ததை முடிப்பவர்கள்' என்பதிலும் ஐயமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.