முகப்பு
தினமணி கதிர்

அன்பே சிவம்!

'மக்கள் பணியே மகத்தான பணி' என்பதை உணர்ந்து, கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் 'அன்பே சிவம்' எனும் அமைப்பினர் ஆர்ப்பாட்டமின்றி சேவையாற்றி வருகின்றனர்.

Updated On : 21 ஜூன் 2026, 4:05 am IST
பகிர்:

செ.ஆதிபகவன்

'மக்கள் பணியே மகத்தான பணி' என்பதை உணர்ந்து, கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் 'அன்பே சிவம்' எனும் அமைப்பினர் ஆர்ப்பாட்டமின்றி சேவையாற்றி வருகின்றனர். கீழே இருப்பவரை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, அங்குள்ள தமிழர்களால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பத்தாம் ஆண்டு தொடக்க விழாவை குடும்ப விழாவாக பி.ஆர்.எஸ். அரங்கத்தில் அண்மையில் கொண்டாடினர்.

திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத் தலைவர் மு.முத்துராமன் தலைமையேற்க, கல்யாண் பள்ளி தலைமை நிர்வாக அலுவலர் பிரியா பாலன், விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி சு.முருகன், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் முனைவர் நயினார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க, ஐ.ஏ.எஸ். அலுவலர் ராஜமாணிக்கம் சிறப்புரை ஆற்றினார்.

Advertisement

Advertisement

இயற்கை விவசாயத்தில் தமது அனுபவத்தைப் பகிர்ந்த இயற்கை விவசாயி அந்தோணிச்சாமி, வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டங்களை அமைத்து, நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்ய பெண்களுக்கு அறிவுரை வழங்கினார்.

'அன்பே சிவம்' தன்னார்வலர் முருகன்

'எனக்கு பதின்மூன்று வயது இருக்கும்பொழுது திருவனந்தபுரத்துக்கு வந்தேன். இங்கு பல தொழில்கள் பார்த்துவிட்டு ஒரு கடையை நடத்திவந்தேன். அந்த நேரத்தில் எனது தந்தைக்கு இதயக் கோளாறு ஏற்பட்டது. அறுவைச் சிகிச்சை செய்ய ஒரு லட்சம் ரூபாய் ஆகும் என்று மருத்துவமனையில் கூறினர். மிகவும் சிரமப்பட்டு, பணத்தைத் திரட்டி, அறுவைச் சிகிச்சையை செய்தோம். பணம் இருந்தால் ஒரு உயிரைக் காப்பாற்றிடலாம்.

பணம் இல்லையென்றால் சிரமம்தான். பணத்தால் மருத்துவ வசதி தடைபடக் கூடாது என்றும், கஷ்டப்படுறவங்களுக்கு உதவிகள் செய்யணும் என்றும் என் மனதில் எண்ணம் உருவானது. விஷயத்தை தங்கராஜிடம் கூறினேன். 'நல்ல காரியத்தை தாமதிக்கக் கூடாது. உடனே ஓர் அமைப்பைத் தொடங்கணும்' என்று கூறி முதன்முதலா ஒரு தொகையை அவர் நன்கொடையாக அளித்தார். தொடக்கத்தில் 11 பேரின் நன்கொடையில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு இன்று ஆலமரமாய் வளர்ந்திருக்கிறது' என்றார்.

தன்னார்வலர்கள் தங்கராஜ், செல்வகுமார், பழனி செல்வம், மாரிமுத்து

'இந்த அமைப்புக்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என்று நிர்வாகிகள் யாருமே கிடையாது. எல்லோருமே சேவை மனப்பான்மையுள்ள தன்னார்வலர்கள்தான். அவர்கள் மற்றவர்களுக்கு உதவச் செல்லும்போது போக்குவரத்துச் செலவு, உணவுச் செலவு என்று எதையும் அமைப்புக்கான பணத்திலிருந்து எடுப்பதில்லை. சொந்த பணத்தையே பயன்படுத்துகிறார்கள்.

திருவனந்தபுரம் சாலை அரசு தமிழ்ப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர் அன்றாடத் தொழில் செய்பவர்கள். எனவே அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி உதவிகளை முதலில் வழங்கினோம். இப்போதும் தேவையானவற்றை இலவசமாகக் கொடுக்கிறோம். அந்தப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, இயற்கைச் சார்ந்த முன்னெடுப்புகளையும் செய்து வருகிறோம். இதேபோல், நிறைய பள்ளிகளுக்குச் சென்று பல சமூகப் பணிகளைச் செய்து வருகிறோம்.

தென்காசி மாவட்டம், சிவகிரிக்கு அருகேயுள்ள அருகன்குளம் என்ற ஊரில் அரசு பள்ளிக்குக் கழிவறை, ஆழ்துளைக் கிணறு உள்ளிட்ட வசதிகளை மேற்கொண்டுள்ளோம். பள்ளியைச் சுற்றி நிறைய மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இன்று அந்தப் பள்ளி மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

புற்றுநோய், சிறுநீரகப் பிரச்னை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி செய்துவருகிறோம். திருமண உதவி, வீடு கட்ட உதவிகளையும் செய்கிறோம். புயல், கரோனா, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர் நடக்கும்போது தமிழ்நாடு, கேரளப் பகுதிகளுக்குச் சென்று அடித்தட்டு மக்களுக்கு உதவி செய்து வந்துள்ளோம். இதுவரை பத்தாயிரம் பேருக்கு மேல் உதவிக்கரம் நீட்டி இருக்கிறோம்' என்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments