முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்!

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி...

Updated On : 15 ஜூன் 2026, 3:50 am IST
முதல்வர் விஜய்.
பகிர்:

அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.

கடந்த ஆண்டு மே மாதம் ஒரு சுற்றுலா குழு மூலம் நானும் என் மனைவியும் ஜப்பான் நாட்டுக்குச் சென்றிருந்தோம். அப்போது, நாங்கள் தங்கியிருந்த ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு ஜப்பானின் இள நங்கையர் சிலர், தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் என்ற செய்தி கேள்வியுற்று என்னைச் சந்திக்க வந்தார்கள்.

அவர்கள் அனைவரும் நடிகர் விஜய்யின் ரசிகைகள் என அறிந்து கொண்டோம். பேச்சின் இடையே அவர்கள், 'தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் எங்கள் விஜய் அண்ணன்தான்' என்று மகிழ்ச்சி பொங்க சொன்னார்கள். நாங்கள் அனைவரும் வியப்புடன் கேட்டோம். ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது இரண்டாவது கூட்டணி அரசு.

Advertisement

Advertisement

1952-இல் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்கள் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றபோது, குற்றாலத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ராஜாஜியை அணுகி தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டினர் காமராஜர் தலைமையிலான தமிழ்நாடு காங்கிரஸார்.

அவரும் மாணிக்கவேலு நாயக்கர், எஸ்.எஸ். இராமசாமி படையாச்சி போன்றோரின் கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அரசை அமைத்தார். ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், 'கம்யூனிஸ்ட்கள்தான் எனது முதல் எதிரி' என்று அறிவித்து அவர்களின் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தினார். இதன் விளைவு 1957, 1962-இல் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் இருக்கத்தக்க பெரும்பான்மை பெற்றது. 1952-க்குப் பின்னர் இப்போதுதான் தமிழக அரசியலில் கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது.

தேர்தலுக்கு முன்பு ஜோசப் விஜய் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, ஏன்? துணை முதல்வர் பதவி கூடத் தருவதாக சொன்னார். ஆனால், பிற அரசியல் கட்சிகள் இவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஏனெனில், வெற்றி நமதே என்ற கருத்தில் நிலைகொண்டிருந்தனர் என்பதே உண்மை. ஆனால், ஜோசப் விஜய் கட்சி தொடங்கிய ஓரிரு ஆண்டுகளில் அதிசயம் நிகழ்த்தி விட்டார்.

இந்த நேரத்தில் முதல்வருக்கு ஒரு பணிவான மனம் கனிந்த வேண்டுகோள் ஒன்று. சுமார் 60 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் மதுப் பழக்கம் வழக்கமாகி போனது. இன்று நாட்டில் நடக்கும் அனைத்து கொடிய குற்றச் சம்பவங்களுக்கும் மது அருந்துவதே பின்புலனாக இருந்திருப்பதை குற்றப் பதிவேடுகள் புலப்படுத்துகின்றன. வாகன விபத்துகளில் 95% குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால்தான் என்று பல அறிக்கைகள் கூறுகின்றன.

கற்பனைக்கு எட்டாத பாலியல் வன்கொடுமைகளும் அதனால் தொடர்கதையாகின்றன. வள்ளுவப் பெருந்தகை மதுவை 'நஞ்சு' என்றார். மக்களால் இந்த அரசுதான் வேண்டும் என்று விரும்பி தேர்வு செய்த பிறகு அந்த நஞ்சை தன் மக்கட்கு விற்பனைப்படுத்தலாமா? சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொல்லியதைப் போல், இளம் விதவைகள் தமிழ்நாட்டில்தான் அதிகம்; இதற்குக் காரணம் கணவர்களின் அகால மரணம். 'நோய் நாடி நோய் முதல் நாடி' என்ற குறள் வழி மூலத்தை அழிக்காமல் உயிர் காப்பதெப்படி? நமது பேராசான் இதன் கொடுமையை விளக்கித்தானே 'கள் உண்ணாமை' என்றதொரு அதிகாரத்தைப் படைத்து பத்து குறள்களை மனதில் பதியுமாறு எழுதினார்.

ஹிந்து சமயமோ, இஸ்லாமோ, கிறிஸ்தவமோ, பௌத்தமோ, சமணமோ, சீக்கியமோ வேண்டாத ஒன்றை, விலக்கிய ஒன்றை, அரசே விற்க வேண்டுமா? எனவே, எல்லா தீங்குக்கும் காரணமாக உள்ள மதுவை, மது விலக்கு என்ற சட்டத்துக்கு உயிர் கொடுத்து உடனே அமல்படுத்துங்கள். நிச்சயம் லட்சசோபலட்ச குடும்பங்கள் உங்களை 'உண்மையான ஜனநாயகன்' என்று சொல்லி மகிழ்வார்கள். உங்கள் கட்சியினர் அல்லது அரசு அதிகாரிகள் சிலர் மதுவிலக்கு வேண்டாம், அரசுக்கு வருவாய் குறைந்து விடும், பல கவர்ச்சியான திட்டங்களை செய்ய முடியாது என்று சொல்லக்கூடும்.

மயங்கி விடாமல் தயக்கம் காட்டாமல் இதுதான் உண்மையான மாற்றம் என்ற அளவில் செயல்படுங்கள். உடனடியாக மது விற்பனைக் கூடங்களை மூடினால் அதன் பணியாளர்களை என்ன செய்வது எனக் கேட்கலாம். அவர்களுக்கு அவரவர் தம் சொந்த ஊர்களில் கிராமப்புற மேம்பாட்டுக்காக கிராம நல ஊழியர்களாக பணி அமர்த்தலாம். அந்தந்த கிராமங்களில் விளையும் கச்சாப் பொருள்களைக் கொண்டு கைவினைப் பொருள்களை உற்பத்தி செய்து அருகில் உள்ள பெரிய ஊர்களில் சந்தைப்படுத்தலாம்.

கிராமப் பொருளாதார மேதைகளான ஜே.சி. குமரப்பா, நானாஜி தேஷ்முக் போன்றோரின் சிந்தனை, கருத்துகளை உள்வாங்கிச் செயல்படுத்தலாம். மதுக்கூட பணியாளர்களுக்கு தக்க கிராமிய சூழலில் பயிற்சி கொடுத்து வங்கிகள் மூலம் நிதியுதவி செய்து கால்நடை வளர்ப்பும், சாண எரிவாயு திட்டம், தேனீ, மரங்கள், மூலிகைத் தோட்டம் அமைத்தல் போன்றவற்றில் ஈடுபாடு கொள்ளச் செய்யலாம். இயற்கை சார்ந்த தொழில் முறையைக் கற்கச் செய்து தொழில்முனைவோராக்கலாம். குடிக்கிற ஏழை குடிசை வீட்டில் வசிக்கிறார்.

மதுவை விற்கிறவர் நல்ல வீட்டில் குடியிருக்கிறார். மது ஆலையை நடத்துகிறவர் பெரிய சொகுசு பங்களாவில் வாழ்கிறார். பிறர் உடல், மனம் அழிய எவரும் காரணமாக இருத்தல் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் மணிமேகலை காவியம் 'மயக்குங் கள்ளும், மன்னுயிர் கோறலும், கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்' என்று பேசும்.

தன் மக்களை நீதிமுறை செய்து, தக்க வழியில் காப்பாற்றுவது முதல்வரின் கடமையாகும். இதன் பொருளில்தான் வள்ளுவர் 'முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்' என்றார். எனவே, உண்ணற்க மதுவை என்ற வழி உடன் சட்டம் இயற்றி அமல்படுத்துங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.