சமூக ஊடகங்களின் மாயை விரைவில் மறையும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
சோசியல் மீடியா மாயை விரைவில் மறைந்து போகும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது குறித்து...
தவெக ஆட்சி சோசியல் மீடியா மூலம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது எல்லாம் ஒரு காலம் வரைதான். இந்த மாயை விரைவில் மறைந்து போகும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை - வானகரத்தில் புதன்கிழமை( ஜூன் 17) நடைபெற்ற, திமுக உயர்நிலைச் செயல்திட்டக்குழு உறுப்பினர் ஆர்க்காடு நா.வீராசாமி பெயரனும் - திமுக அயலக அணித் தலைவர் கலாநிதி வீராசாமி எம்.பி. மகனுமான வி.கே. சித்தார்த் - எஸ். ஆஷ்ரயா இணையரின் திருமணத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
இந்நிகழ்வில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
Advertisement
Advertisement
ஒரு ஆண்டு எனக்கு பக்கபலமாக இருந்து, ஒவ்வொரு நாளும் அவர் பல அறிவுரைகளை ஆலோசனைகளை எனக்கு வழங்கியிருக்கிறார். எங்கே என்று கேட்டால், சிறைச்சாலையில்! 1976-இல் நாங்கள் எல்லாம் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்த போது ஆர்க்காட்டார் எங்களோடு இருந்தார்கள். சிட்டிபாபு எந்த அளவிற்கு கொடுமைகளுக்கு எல்லாம் ஆளாக்கப்பட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அவர் மறைவதற்கு என்ன காரணம் என்பதும் உங்களுக்குப் புரியும். அதைப்பற்றி எல்லாம் இந்த மணவிழா நிகழ்ச்சியில் நாம் பேச விரும்பவில்லை. அப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் சென்னை சிறைச்சாலையில் நடைபெற்றது. அந்தக் கொடுமைகளிலும் சிக்கித் தவித்தவர்தான் ஆர்க்காட்டார். அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல், இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் சிறையில் நிம்மதியாக தெம்போடு திராணியோடு இருந்தேன் என்று சொன்னால், அதற்கு ஆர்க்காட்டார் காரணமாக இருந்தார் என்பதை நான் இந்த நேரத்தில் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன்.
இன்றைக்கும் என்னுடைய கையில் மிசா தழும்பு இருக்கிறது. அதேபோன்று ஆர்க்காட்டார் இன்றைக்கும் ஒரு காது கேட்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சிறையில் பட்ட அந்தக் கொடுமையின் காரணத்தினால்தான் அந்த நிலைக்கு அவர் ஆளாக்கப்பட்டார். எனவேதான் தலைவர் கலைஞர் ஆர்க்காட்டாரை பற்றி அடிக்கடி சொல்வதுண்டு, “வைரம் பாய்ந்த ஒரு தொண்டன்” ஆர்க்காட்டார் என்று பலநேரங்களில் சொல்லியிருக்கிறார். தலைவரிடத்தில் மட்டுமல்ல; பொதுச்செயலாளராக இருந்த மறைந்த நம்முடைய பேராசிரியரிடத்துலும் நன்மதிப்பைப் பெற்றவராக விளங்கியவர் நம்முடைய ஆர்க்காட்டார். அவர் பொருளாளர் பொறுப்பை எப்படி வகித்தாரோ, அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டு பொருளாளராக இருந்தேன். அந்தப் பொருளாளர் பதவியில் இருந்து இன்றைக்கு உங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்ற இந்த இயக்கத்தின் தலைமைத் தொண்டன் என்று சொன்னால், திமுக தலைவராக இன்றைக்கு நான் பொறுப்பை ஏற்றிருக்கிறேன் என்று சொன்னால், அதெல்லாம் அவருடைய வழிகாட்டுதலின்படிதான்.
ஒரு மாநிலக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய திமுக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு தேர்தல் தோல்விக்கே இன்றைக்குப் பல கட்சிகள் காணாமல் போயிருக்கிறது. ஆனால் 75 ஆண்டு காலம் கொண்ட கொள்கைக்காக லட்சியத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சி; ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களுக்காகப் பாடுபடும் கட்சி திமுக. அந்த கட்சிக்குதான் இன்றைக்கு எத்தனையோ பேர் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு இருக்கும் ஆட்சியைப் பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஒன்றை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். சோசியல் மீடியா இன்றைக்கு எந்த அளவுக்கு பரவிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும். அந்த சோசியல் மீடியா ஒரு அளவுதான்; நாளடைவில் அதெல்லாம் மறைந்து போகத்தான் போகிறது. இன்றைக்கு சோசியல் மீடியாவை பார்க்கிறபோது, ‘கோட்’ போட்டு வந்தார்; கையில் டிஃபன் கேரியர் எடுத்து வந்தார்; வாட்ச் கட்டி வந்தார்; செஸ் விளையாடினார்; இன்றைக்கு கோட்டு போடவில்லை; பட்டு சட்டை -வேஷ்டி-யில் வந்தார். இதெல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருந்தன. அவைகள் எல்லாம் மறைந்து, நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு தமிழ்நாட்டில் முதல்வராக இருப்பவரை பார்த்து நான் கேட்பதெல்லாம், தயவுசெய்து இன்றைக்கு உங்களைப் பற்றி, உங்கள் ஆட்சியை பற்றி வரும் செய்திகளைப் படியுங்கள். படித்து, அதில் இருக்கும் உண்மையைக் கண்டுபிடிங்கள். அதற்குரிய நடவடிக்கை எடுங்கள் என்பதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள் என்று அவர் கூறினார்.