சிறார்களின் சித்திரைத் திருவிழா
மதுரைவாசிகளை நூல்கள் வாசிப்பிலும், அது தொடர்பான பல்வேறு பணிகளிலும் 'புக் கில்டு ஆஃப் மதுரை' எனும் புத்தக வாசிப்பு, எழுத்து குழுமத்தினர் ஈடுபடுத்தி வருகின்றனர்.
மதுரைவாசிகளை நூல்கள் வாசிப்பிலும், அது தொடர்பான பல்வேறு பணிகளிலும் 'புக் கில்டு ஆஃப் மதுரை' எனும் புத்தக வாசிப்பு, எழுத்து குழுமத்தினர் ஈடுபடுத்தி வருகின்றனர். பிரபல எழுத்தாளர்களை மதுரைக்கு வரவழைத்து வாசகர்களைச் சந்திக்க வைத்தல், கலந்துரையாடல், நூல் விமர்சனம் செய்தல், புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்தல் போன்ற செயல்பாடு
களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் புதிய முயற்சியான சிறார் - இளைய தலைமுறை எழுத்தாளர்களுடன் இணைந்து மூத்த எழுத்தாளர்கள் எழுதிய 'சிறார்கள் கொண்டாடும் சித்திரைத் திருவிழா' எனும் நூல் அண்மையில் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து அமைப்பின் பொறுப்பாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ் கூறியது:
'நான் திருச்சியைச் சேர்ந்தவன் என்றாலும், மதுரை வாசியாகிவிட்டேன். பேனாவும் காமிராவுமாக வளர்ந்த நான் மண்சார்ந்த கலை, கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் அம்சங்களை ஆவணப்படுத்தி, எதிர்வரும் தலைமுறைக்கு எழுத்து மூலமாகவும் ஒளிப்படங்களாகவும் கொண்டு செல்லும் வகையில் தன்னம்பிக்கை, மனிதவள மேம்பாட்டு தொடர்பான பத்து நூல்களை எழுதியுள்ளேன்.
'தமிழ்நாட்டின் கலாசாரத் தலைநகரம்' என்ற பெருமையோடு திகழும் மதுரையில் காலத்தைக் கடந்து இன்றும், என்றும் போற்றக்கூடிய சித்திரைத் திருவிழாவின் பல சிறப்புகளைப் பதிவு செய்யும் ஒரு சிறு முயற்சியைத் தொடங்கினேன்.
'எனது புகைப்படங்களை வைத்து நானே நூல் எழுதுவதும், வெளியிடுவதும் சாதனை அல்ல. சிறார், இளைய தலைமுறை எழுத்தாளர்களை வைத்து, அவர்கள் கண்ணோட்டத்தில் பதிவு செய்யலாம்' என்ற எண்ணத்தில்தான் இந்த நூல் வெளியானது. வெறும் வர்ணனை நூல் அல்ல; மாறாக இது ஒரு கள ஆவணம்.
ஆன்மிகம், பாரம்பரியம், கலாசாரத்தைத் தாண்டி அனைத்து மத, இன மக்களின் மனமகிழ்ச்சியின் வெளிப்பாடு. சுருக்கமாக இந்த நூல் அனைவராலும் கொண்டாடப்படும் அனுபவப் பகிர்வாகும். விழாக் காலத்தில் சிறார்களின் கொண்டாட்டம், அவர்கள் குடும்பங்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாடு, சிறார்களுக்குப் போடப்படும் கடவுள் வேடங்கள் இந்த நூலில் பதிவாகியுள்ளன.
இன்னும் சில வாரங்களில் சித்திரைத் திருவிழா மதுரையில் தொடங்கிவிடும். அதற்கு முன்னோட்டமாக இந்த நூலை வெளியிட்டுள்ளோம். ஒரு வட்டத்துக்குள் அடைபடாமல் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
அதோடு, பல்துறை வல்லுநர்கள் அவர்களது பார்வையில் இந்த சித்திரைத் திருவிழாவைப் பதிவு செய்துள்ளோம். புதிய முயற்சியாக மக்கள் எழுதும் நூலின் பதிப்பாசிரியர் என்ற பொறுப்பில், மதுரைவாழ் மக்களுக்கு ஒரு சிறிய விதையாகச் சமர்ப்பிக்கிறேன். இது விருட்சமாக வளர்ந்து மதுரை மண்ணையும் அதன் கலாசாரப் பெருமையையும் எதிர்காலத்தில் சொல்லும்' என்கிறார் நிக்கோலஸ் பிரான்சிஸ்.