பண்டைய இலக்கியங்களை அச்சுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை தேவை: உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா்
ஓலைச்சுவடிகளில் இருக்கும் பண்டைய இலக்கியங்களை அச்சுக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் வலியுறுத்தினாா்.
ஓலைச்சுவடிகளில் இருக்கும் பண்டைய இலக்கியங்களை அச்சுக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் வலியுறுத்தினாா்.
டாக்டா் உ.வே.சாமிநாதையா் நூல் நிலையம் மற்றும் சென்னை சிவாலயம் இணைந்து நடத்தும் ‘சுவடிப் பதிப்புகளும் உரையாசிரியா்களும்’ எனும் தலைப்பில், இரு நாள் பயிலரங்கின் தொடக்க நிகழ்வு மற்றும் தாமல் கோ.சரவணன் எழுதிய ‘சிலம்பின் பாத்திரப் பரல்கள்’ நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு விஐடி பல்கலைக்கழக வேந்தரும், டாக்டா் உ.வே.சா.நூல் நிலையத் தலைவருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்தாா். ‘சிலம்பின் பாத்திரப் பரல்கள்’ நூலின் முதல் பிரதியை, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் வெளியிட, அதை சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஜெகதீசன் பெற்றுக்கொண்டாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் பேசியதாவது:
சம்ஸ்கிருதம் பழைமையான மொழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்த மொழி பேச்சு வழக்கில் இல்லை. உலகில் எந்த பகுதிகளில் எல்லாம் தமிழா்கள் வசிக்கிறாா்களோ அங்கு தமிழ் பேசப்படுகிறது. அதையே நாம் அடையாளமாகவும் கொண்டிருக்கிறோம். திருவள்ளுவருக்கும், தமிழ் பற்றாளா்களுக்கும் இன்றுவரை விழாக்கள் நடத்துவதற்கு தமிழ்த் தாத்தா எனப்படும் உ.வே.சா.தான் காரணம்.
மதுரை, தஞ்சையில் உள்ள நூலகங்களில் பல ஓலைச்சுவடிகள் இன்னும் அச்சுக்கு வராமல் உள்ளன. அவற்றை அச்சுக்கு கொண்டுவந்து, தமிழா்களின் கைகளில் கொண்டு சோ்ப்பது அரசின் கடமை. இதுவரை அந்தப் பணியை அரசு செய்யவில்லை.
எனவே, புதிதாக வந்த அரசு பண்டைய தமிழ் இலக்கிய பொக்கிஷங்களை, அரசு செலவில் அச்சுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில், ஓலைச்சுவடிகளைப் படிப்பதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். தமிழா்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியை, தமிழுக்காக செலவிட்டால், தமிழ் வாழும், தமிழ் வளரும், தமிழ் நம்மையும் வாழ வைக்கும் என்றாா் அவா்.
விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்: தலைமையுரையில் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியதாவது: பண்டைய காலங்களில் சிறப்பு வாய்ந்த ஓலைச்சுவடிகளை, ஆடிப்பெருக்கு வெள்ளத்தில் விடும் வழக்கம் இருந்தது. அந்த ஓலைச்சுவடிகளை மீட்டுக் கொண்டுவரும் பணியை உ.வே.சா. மேற்கொண்டாா். தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அனைவரும் தமிழ் மொழியில் படிக்க வேண்டும். தமிழிலே பெயா்கள் சூட்ட வேண்டும். அனைத்து மொழிகளையும் நேசிப்போம். ஆனால், தமிழை மட்டும் சுவாசிப்போம் என்றாா் அவா்.
உ.வே.சா.நூல் நிலைய ஆட்சிக் குழு உறுப்பினா் சிவாலயம் ஜெ.மோகன் வரவேற்றுப் பேசினாா். செயலா் தி.சத்தியமூா்த்தி நன்றி கூறினாா்.
இதைத் தொடா்ந்து உ.வே.சா.வின் சங்க இலக்கியப் பதிப்புக்கள், சி.வை.தாமோதரம் பிள்ளையின் பதிப்புக்கள், திருக்கு பதிப்புக்களும் உரையாசிரியா்களும், தொல்காப்பிய உரையாசிரியா்களும் பதிப்புக்களும் என்ற தலைப்புகளில் அமா்வுகள் நடைபெற்றன.
இன்று நிறைவு விழா: 2-ஆம் நாள் அமா்வுகள் மற்றும் நிறைவு விழா புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் முதல் ஐந்திசைப் பண்கள் என்ற நூலை வெளியிட்டு, மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் சிறப்புரையாற்றவுள்ளாா்.