தினமணி கொண்டாட்டம்

பிடித்த பத்து: கவிஞர் ஈரோடு தமிழன்பன் தனக்குப் பிடித்த பத்து விஷயங்களைப் பட்டியலிடுகிறார்

DIN

தாகூரை இப்போதும் படிக்கிறேன்!
பிடித்த உணவு: புலால் உண்ணும் குடும்பத்தைச் சார்ந்தவனாக இருந்தும், அதன் சுவையே தெரியாமல் வளர்ந்தவன். பணிபுரிந்த இஸ்லாமியக் கல்லூரியான புதுக் கல்லூரியில் அமர்க்களமான பிரியாணி உண்டு என்றாலும், நான் சிறுபான்மையினரில் ஒருவனாக புலால் உண்ணாதவனாக இருந்தேன். மென்மையான உணவுகள் - இட்லி, தோசை - யாவும் பிடிக்கும். காய்கறிகள் சார்ந்த உணவு பிடிக்கும். உப்பு, நெய் பயன்படுத்துவதில்லை. உடல் நலம் பேணும் நாட்டமே காரணம். மனைவியும், பிள்ளைகளும் புலால் உணவு உண்பதில்லை!
பிடித்த தலைவர்: தந்தை பெரியார். எதிர்மறைச் சமூக சிந்தனையாளராக இருந்து, சமூக சீர்திருத்த ஆற்றலோடு செயல்பட்டு இயக்கத்தை நடத்தியவர். எழுத்தாளர் கல்கி சொன்னது போல, "சமூகம் என்ற பல்கலைக்கழகத்தில் தேர்ந்த அறிஞர்'.
பிடித்த எழுத்தாளர்: உலக அளவில் கவிஞர் பாப்லோ நெருடா. தமிழ் நாட்டளவில் பாரதி, பாரதிதாசன்.
மிகப் பிடித்த நூல்கள்: தமிழுக்கு உயிராக இருக்கும் தொல்காப்பியமும், தமிழருக்கு உரியதாக இருக்கும் திருக்குறளும். 
மிகப் பிடித்த இடம்: நியூ ஜெர்சிக்கு அருகே உள்ள கேம்டென் என்ற நகரிலுள்ள வால்ட் விட்மன் நினைவிடமான அருங்காட்சியகம். பார்த்தபோது, மானசீகமாக எனக்கும், என் கவிதைக்கும் தாடி வளர்ந்ததுபோல் இருந்தது. அவருடைய "புல்லின் இதழ்கள்' கல்லறையைச் சுற்றிலும் ஒரு பச்சைக் கவிதையைப் பாடிக்கொண்டிருந்தன. 
பிடித்த உறவினர்: என் உயர்வுக்கெல்லாம் வழி வகுத்தவர், உயர்ந்த தமிழர் தத்துவ ஞானி சுவாமி சிவானந்தரின் மாணவர், என் அண்ணன் ஆசிரியர் நா. தங்கவேலு. தந்தையாகவும், தாயாகவும் இருந்து என்னை வளர்த்த அருமையான ஆளுமை.
பிடித்த நண்பர்: இளம் பருவத்தில் என்னோடு பள்ளியில் படித்த வ.சே.சா. சுப்பிரமணியன் என்னும் மணியன். நான் பிறந்த சென்னிமலையில் என் கூடப் படித்தவன். அவன் தான் நான் படத்துக்குப் பாட்டும் கதையும் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டவன். (அதற்காக ஒரு கதையும் எழுதினேன்!)
மறக்க முடியாத நிகழ்ச்சி: அறுபதுகளில் எங்கள் ஊர் வந்த சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் ராம் மனோகர் லோகியா அவர்களுடன் மூன்று நாட்கள் கூடவே தங்கி உரையாடிக் கொண்டிருந்த நாட்கள்.
பிடித்த இந்தியக் கவிஞர்: வங்கம் தந்த தலை சிறந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். அவரை இப்போதும் நான் படித்துக்கொண்டிருக்கிறேன்.
பிடித்த நடிகர்: கப்பலோட்டிய தமிழனாகவும், வீரபாண்டிய கட்டபொம்மனாகவும்,அப்பர் அடிகளாகவும் பாத்திரங்களை ஏற்று, தன்னை மறந்து நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
சந்திப்பு: சாருகேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT