தினமணி கொண்டாட்டம்

ஸ்காட்லாந்து நாடோடிக்கதை: நீயே எனக்கு மனைவி!

DIN

 ஸ்காட்லாந்தில் பரம்பரை பணக்காரர்கள் அதிகம்.
 இதில் மார்கனும் ஒருவன்.
 இவன் பிரம்மச்சாரி! நல்ல அழகன் நன்றாக படித்தவன். இதனால் பெண்கள் பலர் அவனை திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.
 ஆனால், மார்கனுக்கு, தனக்கு பொருத்தமான மனைவியை தானே தேர்வு செய்ய வேண்டும். அவள் தன்னை கவர வேண்டும் எனவும் விரும்பினான்.
 இதனை எப்படி நிறைவேற்றிக் கொள்வது என யோசித்தான்.
 அவனுக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவர் நாடகங்களுக்கு மேக்கப் போட்டு உதவுபவர்!
 அவரிடம் சென்று "எனக்கு வேண்டிய பெண்ணை என் முயற்சியாலேயே நான் தேர்வு செய்ய வேண்டும். அதற்கு நீ தான் உதவ வேண்டும்' என கோரினான்.
 "இன்னமும் கொஞ்சம் தெளிவாக சொல்'என்றார் அவர்.
 "என் மனைவியின் மனதை சோதிக்கனும். அதன்மூலம் அவளை தேர்வு செய்வேன்' என்றான் மார்கன்.
 "பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி. அதனால் உனக்கு பிடித்தவளை தேர்வு செய்ய இயலும். அதற்கு உதவியாக நான் உனக்கு, பிச்சைக்காரன் வேடம் போட்டு விடுகிறேன் நீ சென்று, திருப்தி அடையும் வரை ஒவ்வொரு பெண்ணாக சென்று சந்தித்து வா.. நல்ல முடிவு கிடைக்கும்" என்றார்.
 அடுத்த இரண்டு மணி நேரத்தில் பிச்சைக்காரன் வேடம் ரெடி.
 கண்ணாடியில் பார்த்த மார்கனுக்கு அதிர்ச்சி.
 அவனுக்கே அவனை அடையாளம் தெரியவில்லை.
 அதனால் நண்பரை பாராட்டி, 100 டாலர் பணத்தை கொடுத்துவிட்டு புறப்பட்டான்.
 முதலில் ஒரு பெண் வீட்டு வாசலுக்கு சென்றான்.
 கிழிந்த ஆடை மற்றும் முகத்தில் தாடி மீசையுடன் அவன் இளமை மறைந்திருந்தது.
 "அம்மா ரொம்ப பசிக்கிறது. உணவு கொடுங்கள். மாற்று துணி கொடுங்கள்' என்றான்.
 "என்னிடம் உணவு மீதமில்லை. மாறாக என் தந்தையின் துணிகள் உள்ளன. அதனை எடுத்துக் கொள்ளுங்கள்' என்றாள் அந்த வீட்டுப் பெண்.
 அந்த வீட்டில் கொடுத்த ஆடை தனக்கு பொருத்தமாக இல்லை என்பதால் திருப்பி கொடுத்துவிட்டான்.
 மேலும் அந்த பெண் தனக்கு சரிப்பட்டு வரமாட்டாள் எனத் தோன்ற அங்கிருந்து வெளியேறினான் மார்கன்!
 அடுத்து இரண்டாவது பெண் வீட்டிற்கு சென்றான்.
 அங்கும் முதல் பெண்ணிடம் கூறியது போலவே இரண்டாவது பெண்ணிடமும் கூறினான்.
 அதற்கு அவள், "என்னிடம் உணவுதான் உள்ளது. ஆனால் துணிமணி இல்லை! இஷ்டம் இருந்தால் சாப்பிடு. வேண்டாம் என்றால்.. சொல்' என கூறிச் சென்றுவிட்டாள்.
 அவள் பேச்சு அவனுக்கு பிடிக்கவில்லை. அதனால் அடுத்து அங்கிருந்து புறப்பட்டு மூன்றாவது பெண் வீட்டிற்குச் சென்றான்..
 முந்தைய இரண்டு வீடுகளில் கூறியது போலவே அம்மா ரொம்ப பசிக்கிறது. உணவு கொடுங்கள். மாற்றுத்துணி கொடுங்கள் என்று கூப்பிட்டான்.
 கதவைத் திறந்து வந்த அந்தப் பெண் பிச்சைக்காரன் வேடத்தில் இருந்த மார்கனை ஏற இறங்க ஒரு தடவைக்கு இரு தடவையாக பார்த்தாள்..!
 "பார்த்தா வாட்ட சாட்டமா இருக்கே. கை, கால் நல்லாதானே இருக்கு. பிறகு ஏன் பிச்சை எடுக்கிறே? நீ சோம்பேறியா? எதுக்கும் உதவாதவனா? நாலு காசு சம்பாதிச்சு துணியும், சாப்பாடும் வாங்கிக்கலாம். உனக்கு பிச்சையும், துணியும் தருவது பாவம். அதனை நான் செய்யமாட்டேன். முதலில் இந்த இடத்தை காலி செய்' என்றாள் அந்தப்பெண்.
 இந்த பதில் கண்டு திகைத்த மார்கன், இவள் தான் நம்மை கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள். இவள் தான் எனக்கு ஏற்றவள். என்னையும் வேலை வாங்குவாள். அவளும் சேமித்து குடும்பத்தை நல்ல வழியில் கொண்டு செல்வாள் என எண்ணினான்.
 உடனே பிச்சைக்காரன் வேடத்தைக் கலைத்து தன் நிஜ உருவத்தை அந்த பெண்ணிடம் காட்டினான். அவள் வெட்கப்பட்டாள்.
 "நான் வைத்த தேர்வில் நீ ஜெயித்து விட்டாய், நீயே என் மனைவி' என்றான் மார்கன்!
 அது என் பாக்கியம் என்று மேலும் தலை குனிந்தாள் அந்தப் பெண்!
 - ராஜிராதா, பெங்களூரு
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT