தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே!: சுனில்தத்துடன் ஹிந்திப் படத்தில் நான்!   - குமாரி சச்சு

சலன்

மேக்கப் அறையில் என் கைகளைக் காண்பிக்கச் சொன்னார்கள். "சரி' என்று நான் என் கைகளைக் காண்பித்தேன். அதற்குள் ஒருவர் வந்து, ""அவங்களுக்கு மேக்கப் போட வேண்டாம்... உடனே "செட்'டுக்கு அழைத்து வரச் சொன்னார்கள்...''  என்றார். நானும் மேக்கப் அறையில் இருந்து எழுந்தேன்.

"முதலில் ஏன் மேக்கப் போடச் சொன்னார்கள். பின்னர் ஏன் வேண்டாம் என்று சொன்னார்கள்..?'  ஒன்றுமே புரியாமல் நின்றேன். வந்தவர் ஓர் உதவி இயக்குநர் என்று நினைக்கிறேன். அவர் உடனேயே ""சீக்கிரம் வாருங்கள்... நாம் "செட்'டுக்குப் போகலாம்'' என்று ஆங்கிலத்தில் கூற, நான் அவரைத் தொடர்ந்து நடந்தேன். "எந்த செட்...?' என்று எனக்குத் தெரியாது. ஆனால், "இவர் வீரத்திருமகன் படக்குழுவைச் சேர்ந்தவர் இல்லையே..!' என்று மனதில் நினைத்தவாறு செட்டிற்கு அவர் பின்னால் சென்றேன். 

ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள ஒரு செட்டில்  உள்ளே நுழைந்தவுடன் எனக்குப் புரிந்து விட்டது; நான் நடிக்கும் படமான  "வீரத்திருமகன்'  செட் இது இல்லை என்று. ஏனென்றால் நான் கதாநாயகியாக நடிக்கும் "வீரத்திருமகன்' படக்குழுவில் உள்ள ஒருவர் கூட அங்கு இல்லை. எல்லோரும் புதியவர்களாக இருந்தார்கள். அது மட்டுமல்ல ஒருவர் கூட தமிழ் பேசவில்லை. எல்லோரும் ஹிந்தியில்  பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த உதவி இயக்குநர் என்னிடம் வந்து ஒரு மோதிரத்தைக் கொடுத்து வலது கையில் போட்டுக் கொள்ளச் சொன்னார். அதற்குப் பிறகு கேமரா முன்னால் நிற்க வைத்தார். நானும் அவர் சொல்கிறபடி எல்லாம் செய்தேன். 

அப்போது படத்தின் ஒளிப்பதிவாளர்,  இயக்குநர் பீம்சிங்கிடம் ஏதோ ஒன்றைச் சொன்னார். அப்படி சொன்னவுடன் இயக்குநர் பீம்சிங் தன்னுடன் இருந்த உதவியாளர் ஒருவரை அழைத்து அவரிடம் ஏதோ சொன்னார். அவர் உடனேயே வெளியே போனார். 

சிறிது நேரத்தில்  ஒப்பனையாளர் ஒருவர் வந்து என்னிடம் கைகளைக் காட்டச் சொன்னார். நான் காட்டிய உடன் எனது விரல்களில் உள்ள நகங்களுக்கு ஒரு வித வண்ணத்தில் "நெய்ல் பாலிஷ்' போட்டு விட்டார்.  

"சரியா...?'  என்று எல்லோரும் பார்த்தார்கள். கைகளுக்கு ஒப்பனை முடிந்தவுடன் திரும்பவும் என்னை அழைத்து கேமரா முன் நிற்க வைத்தார்கள். 

இதற்குள் ஹிந்தி நடிகர் சுனில் தத் செட்டிற்குள் நுழைந்தார். அவரைப் பார்த்தவுடன் எனது சந்தேகம் நீங்கியது. செட்டிற்கு என்னை அழைத்துச் சென்ற உதவி இயக்குநரை நான் அழைத்து மெல்ல விவரங்களைக் கேட்டேன். அவர் சொல்லச் சொல்ல, நான் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன் . 

தமிழில் ஏவி.எம். எடுத்த "களத்தூர் கண்ணம்மா' படத்தின் ஹிந்தி வடிவமான "மைன் சுப் ரஹுங்கி' படத்தின் படப்பிடிப்பு அது. தமிழில் சாவித்திரி நடித்த வேடத்தில் மீனாகுமாரியும், ஜெமினி கணேசன் நடித்த வேடத்தில் சுனில் தத்தும் நடித்து வந்தார்கள். "களத்தூர் கண்ணம்மா' வில் நமது எல்.விஜயலட்சுமி சிறப்பாக நடனமாடி இருப்பார். ஹிந்தியில் அதே நடனக் காட்சியில் நடிகை ஹெலன் நடித்திருந்தார். ஹெலன் இப்படத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட நடனத்தைச் சிறப்பாகச் செய்திருப்பார். 

முந்தையநாள் ஹெலன் படப்பிடிப்பில் நடனமாடிவிட்டு, வேறொரு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால் அன்று இரவே புறப்பட்டு பம்பாய் சென்று விட்டார். ஆனால், சுனில் தத் மறுநாள் மாலையில்தான் தனக்கு டிக்கெட் போடச் சொல்லி இருக்கிறார்.  

எப்பொழுதும் போல முந்தைய நாள் எடுக்கப்பட்ட காட்சிகளை மறுநாள் காலையில் "ரஷ்' பார்த்த இயக்குநர், "ஹெலன் நடிப்பில் இன்னும் சில  நடன அசைவுகள் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று நினைத்தாராம். ஆனால், "அவர் தான் படப்பிடிப்பு முடிந்து பம்பாய் திரும்பி விட்டாரே... என்ன செய்வது..?' என்று தெரியாமல் எல்லோரும் யோசிக்க, இயக்குநர் பீம்சிங் அதற்கான யோசனையையும் தெரிவித்தார். 

""சில காட்சிகள் மட்டும் எடுத்தால் போதும். அதற்கு ஒரு பெண் தேவை. அந்தப் பெண்ணுக்கு ஹெலன் போன்ற கைவிரல்கள் இருக்க வேண்டும். முகம் தெரியாதபடி நாம் காட்சிகளைப் படமாக்கிக் கொள்ளலாம்'' என்று அவர் சொல்ல, அப்போது உதவி இயக்குநராக இருந்த எஸ்.பி.முத்துராமன் என்னைப் பற்றிச் சொல்லி, ""சச்சுவிற்கு நீளமான விரல்கள் உண்டு. அவரை வைத்தே ஷூட்டிங் எடுத்து விடலாம்'' என்று சொன்னாராம். 

இயக்குநர் பீம்சிங் உடனேயே என்னை அழைத்து வரச் செய்தார். ஹெலனைப் போல் எனக்கும் நீண்ட விரல்கள் இருந்ததால் என் கையை வைத்து இந்தக் காட்சியை எடுப்பது என்று எல்லோரும் முடிவு செய்தனர். அவசரமாக எடுக்கப்பட வேண்டிய காட்சி என்பதாலும், நான் சிவப்பாக இருப்பதால் எனக்கு மேக்கப் கூடத் தேவையில்லை என்றும் இயக்குநர் பீம்சிங் சொல்லி விட்டார். இதன் காரணமாகவே படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு விரைவாக அழைத்துச் செல்லப்பட்டேன். இவ்வளவு அவசரத்திற்கும் காரணம், அன்று மாலையே சுனில் தத் பம்பாய் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதுதான்.

காட்சிப்படி சுனில் தத் மேல் ஹெலன் தனது கையை வைப்பது போலவும், அவருக்கு மது கிண்ணத்தைக் கொடுப்பது போன்றும் காட்சிகளை எடுத்தார்கள். பிறகு என்னிடம் ""நீங்கள் போகலாம்''”என்று கூறினார்கள். நான் ஏவி.எம். ஸ்டுடியோவில் மாதச் சம்பளத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் இதெல்லாம் அவர்களுக்குச் சாத்தியமாயிற்று. இரண்டுமே அவர்களின் படம் தான் என்பதால் அவர்களுக்குள் பேசிக்கொண்டு, என்னை அழைத்துக்கொண்டு போய் இந்தக் காட்சியை எடுத்து முடித்து விட்டார்கள்.  

என்னைப் பொருத்தவரையில் யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்றால் தயங்காமல் முதலில் சென்று உதவி செய்வேன். பிறமொழிப் படத்தில், ஒரு நடன நடிகைக்கு மாற்றாக நடிக்க வேறு ஒரு நடிகையாக இருந்தால் ஒப்புக் கொள்வாரா என்றால் மாட்டார். ஆனால், அது போன்ற விஷயங்களில் நான் பாகுபாடு பார்ப்பது கிடையாது. 

அந்தக் காலத்தில் இருபடங்களும், "களத்தூர் கண்ணம்மா'”அதன் ஹிந்திப் பதிப்பான "மைன் சுப் ரஹுங்கி' கூட கறுப்பு வெள்ளை படம் தான். ஆனாலும் எதுவும் சரியாக இருக்கணும் என்று ஏவி.எம். செட்டியார் விரும்புவார் என்று பார்த்துப் பார்த்து, ஹெலன் என்ன மோதிரம் அணிந்திருந்தாரோ, அதே மோதிரம் எனக்கும் அணிவித்தார்கள். அவர் என்ன கலரில் நகத்துக்குச் சாயம் பூசிக் கொண்டிருந்தாரோ அதையே என் விரல் நகங்களுக்கும் பூசி விட்டார்கள். 

கறுப்பு வெள்ளை படத்தில் வர்ணங்கள் தெரியாது என்றாலும் கூட, சில வர்ணங்கள் "டார்க்' ஆகவும், சில வர்ணங்கள் "லைட்' ஆகவும் தெரியும். இந்தப் படப்பிடிப்பிற்கு என் இரு கைகளும் உதவின என்றுதான் சொல்லவேண்டும். ஒரு கை சுனில் தத் அவர்களுக்கு மது கோப்பையைக் கொடுப்பது போலவும், இன்னொரு கை அவரின் தோள்களின் மீது இருப்பது போலவும் எடுத்தார்கள். 

ஏவி.எம். என்னும் திரைப்படப் பல்கலைக்கழகத்தில் தான் நான் இதற்கு முன்பே ஒரு ஹிந்திப் படத்தில் நடித்திருக்கிறேன். அவர்களின் "பாய் பாய்'”என்ற ஹிந்திப் படத்தில் நான் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது ஒரு பாடலுக்கு டெய்ஸி ராணி என்ற குழந்தை நட்சத்திரத்துடன் இணைந்து நடனமாடி இருக்கிறேன். அது மட்டுமல்ல, ஜெமினி நிறுவனம் தயாரித்த ஒரு ஹிந்திப் படத்திலும் நான் நடித்திருக்கிறேன். இந்த "களத்தூர் கண்ணம்மா'”ஹிந்திப் படத்தில் நான் நடித்து இருக்கிறேன் என்று சொல்வதை விட, எனது கைகள் நடித்து இருக்கின்றன; அதுவும் சுனில் தத்துடன். மற்றொரு சம்பவம்: "வீரத்திரு
மகன்' படத்தின் ஒரு பாடல் காட்சியை எடுக்கும்போது காதணியை என் காதில் வைத்து தைத்து விட்டார்கள். எப்படி...?  

  (தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT