கண்டதும் கேட்டதும் - 43
ஜி.வி. ஐயர், "பூதானம்' என்ற பெயரில் படத்தினை கன்னடத்தில் எடுத்தார். அது விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் தான் "பழனி' .
ஜி.வி. ஐயர், "பூதானம்' என்ற பெயரில் படத்தினை கன்னடத்தில் எடுத்தார். அது விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் தான் "பழனி' .
புளியரை என்கிற கிராமத்தில் பழனி ( சிவாஜி கணேசன்), வேலு ( ஸ்ரீராம்), ராசு ( எஸ்.எஸ். ராஜேந்திரன்), முத்து (முத்து ராமன்) என்ற நான்குபேர் அண்ணன் தம்பிகள். இவர்கள் விவசாயிகள்.
இவர்கள் அங்கிருக்கும் பண்ணையார் சொக்கலிங்கத்திடம் ( பாலையா) நிலத்தினை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகின்றனர். அவருக்கு இரண்டு கணக்கர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் எம்.ஆர். ராதா மற்றும் நாகேஷ் ஆகும்.
இதில் நாகேஷுக்கு நிறைய குழந்தைகள் இருக்கும். ஆனால் எம்.ஆர். ராதாவுக்கு இரண்டாவது திருமணம் செய்த பின்னும் குழந்தைகள் இல்லை. அதற்கு மதுரைக்கு சென்று மருந்து வாங்கலாம் என்று தனது மனைவியிடம் கூறுவார்.
தனக்கு மூன்று தம்பிகள் இருப்பதால் அவர்களை நல்லமுறையில் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பழனி திருமணமே செய்து கொள்ளவில்லை. அவர்களைத் தனது குழந்தையாகவே பாவிக்கிறார். இவரின் மூத்த தம்பியான வேலுவுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவரின் மனைவியின் பெயர் நாகம்மா.
அந்த ஊரில் எமிலி என்ற ( புஷ்பலதா) படித்த கிறித்துவ பெண் இருக்கிறாள். அவளின் தந்தையின் பெயர் ஆரோக்ய சாமி. அவர் இறந்துவிட அவள் தனது தாயின் துணையுடன் வாழ்ந்து வருகிறாள். அவளுக்கும் முத்துவுக்கும் இடையே காதல் உண்டாகிறது.
அதனைப் போன்றே பழனியின் அக்காள் மகள் காவேரிக்கும் ( தேவிகா) ராசுவுக்கும் அன்பு ஏற்படுகிறது. காவேரி ராசுவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறாள்.
பழனியின் முஸ்லிம் நண்பர் இப்ராஹிம் அவரது வீட்டு விசேஷத்தின்போது உணவு உண்டு கொண்டே "" நால்வரோடு ஐவரானோம்'' என்று மகிழ்ந்து கூறுகிறார்.
ஜாதி,மத பேதமின்றி அனைவரும் உட்கார்ந்திருந்து சாப்பிடும் காட்சி முஸ்லிம், இந்துகளின் மத நல்லிணக்கத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.
அதோடு கூட டைரக்டர் அவர்களின் அனைத்து படங்களிலும் முஸ்லிம், கிறித்துவர் என இரண்டு கதாபாத்திரங்கள் இருக்கும். அது அவர்கள் இந்துக்களோடு இணைந்து நட்பு பாராட்டுபவர்களாகவே அமைத்து இருப்பார்.
"பழனி' படத்தில் டைட்டில் பாடலாக, "ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்...' என்ற பாடல் அமைந்து உள்ளது. அந்த பாடலில், "ஊரோடு சேர்ந்துண்ணலாம்' என்ற வரிகள் வரும். அதனைப் போன்றே பழனியின் கதை அமைப்பிலும், பழனியும் அவரது நண்பர் இப்ராஹிமும் அமர்ந்து உணவு உண்பார்கள். இப்பாடலை எழுதியவர் கண்ணதாசன். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.
இந்த பாடல் உழவர்களின் சந்தையிலும், உழவர்களின் போராட்டக் களங்களிலும் அல்லது வேறு விழாக்களிலும் ஒளிபரப்பும் நிலையில் இது மக்களின் உள்ளத்தில் விவசாயிகளின் மேல் அன்பினை விளைவிக்கும். அதோடு கூட விவசாயத்தின் அருமை புரியும்.
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலையில்லை, யாரோடும் பேதமில்லை
ஊரோடு சேர்ந்துண்ணலாம்.
( ஆறோடும்)
மண்ணிலே தங்கமுண்டு, மணியும் உண்டு - வைரம் உண்டு
கண்ணிலே ஆட செய்யும் கைகள் உண்டு வியர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் கொண்டு பாசம் கொண்டு, பசுமை உண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வம் இங்கு சேராதோ
தேனான நாட்டில் எங்கும் பாயாதோ
(ஆறோடும்)
பச்சை வண்ணச் சேலை கட்டி
முத்தம் சிந்தும் நெல்லம்மா
பருவம் கொண்ட பெண்ணைப் போலே
நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா
அண்ணன் தம்பி நால்வர் உண்டு, என்ன வேண்டும் கேளம்மா
அறுவடைக் காலம் உந்தன் திருமண நாளம்மா, திருமண நாளம்மா
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதமில்லை
ஊரோடு சேர்ந்துண்ணலாம்...
(ஆறோடும்)
கைகட்டி சேவை செய்து
கண்கள் கெட்டு
உள்ளம் கெட்டு
பொய் சொல்லி பிச்சைப் பெற்றால்
அன்னைப் பூமி ஏது செய்வாள்?
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
ஏர் கொண்ட உழவன் இன்றி , போர் செய்யும் வீரன் ஏது?
போர் செய்யும் வீரன் ஏது?
போராடும் வேலையில்லை யாரோடும் பேதமில்லை
ஊரோடு சேர்ந்துண்ணலாம்
(ஆறோடும்)
பண்ணையார் சொக்கலிங்கத்துக்கு பழனியின் மூன்றாவது தம்பி முத்துவின் கிறிஸ்துவ காதலியின் மேல் விருப்பம் ஏற்பட்டு அவரால் அந்த பெண்ணுக்கு ஏற்பட இருந்த கொடுமை அவளது காதலன் முத்துவால் தடுக்கப்படுகிறது பண்ணையாருக்கு பழனியின் தம்பி மேல் வெறுப்பு இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு பழனியின் தம்பியான ராசு மஞ்சு விரட்டும்போது பண்ணையாரின் காளையைப் பிடித்துவிடுவது முக்கிய காரணமாக அமைகிறது.
இதற்கிடையில் வேலுவின் மனைவி நாகம்மாவுக்கு தனிக்குடித்தனம் செல்லும் ஆசை வந்து அவர் தனது தந்தை வீட்டுக்கு கணவனுடன் கோபித்துக் கொண்டு சென்று விடுகிறாள். அதனைக் கண்டு பழனி அவரது தந்தையிடம் பேசி அழைத்து வந்து தனிக் குடித்தனம் வைக்கிறார்.
வேலுவின் மனைவி நாகம்மாவின் கதாபாத்திரத்தினை நாம் விளக்க வேண்டும். அவள் பழனியின் குடும்பத்தோடு தனது கணவனைச் சேர வைக்காமல் பிரித்து வைத்துக் கொள்ளவே விரும்புகிறாள். அதற்காக பல தொல்லைகள் கொடுத்தாலும் அதன் உச்ச கட்டமாக பழனியின் வீட்டுக்கு கிறிஸ்துவ பெண் எமிலியால் கொடுக்கப்பட்ட, அப்போதுதான் கன்று ஈன்று இருந்த பசுமாட்டிற்கு அரளி விதை அரைத்துக் கொடுத்து கொன்று விடுகிறாள். இதனை தெரிந்து கொண்டும் பழனி அவள்மேல் குற்றம் சாட்டாமல் இருந்து விடுகிறார்.
பழனியின் நிலம் நன்கு விளைந்து அதனை அறுவடை செய்யும் நிலையில் பண்ணையார் வேறு ஆட்களை வைத்து அறுவடை செய்ய வைக்கிறார். பழனியும், தம்பிகளும் அதனைக் கேட்க அவர்தான் முருகன் கோயில் திருப்பணி செய்ய உள்ளதால் அதற்கு பணம் தேவைப்படுவதால் தனது நிலத்தினை விற்றுவிட்டேன் என்று கூறிவிடுகிறார். பழனியும் முருகன் கோயில் திருப்பணிக்கு தனது நிலம் உதவியதே என்று தனது தம்பிகளை அடக்கிவிட்டு வீட்டுக்கு வருகிறார்.
பழனியின் குடும்பத்தாரின் நன்கு விளைந்த நிலம் பறிபோனதைக் கண்டு வேலுவின் மனைவி மிகவும் சந்தோஷம் அடைகிறாள். தனது கணவருக்கு இனிப்பு முதற் கொண்டு விருந்தினை வீட்டில் சமைத்து வைக்க அது ஏனென்று தெரிந்ததும் வேலு தனது மனைவியை அடித்துவிட்டு கோபமாக வெளியில் வர அங்கு அவரை பாம்பு கடித்து விடுகிறது.
பழனி தனது தம்பியை தனது மடிமேல் கிடத்திக் கொண்டு அழுது கொண்டே வைத்தியரை கூப்பிட வைத்தியர் வந்து நின்ற நிலையில் வேலு தனது அண்ணனைப் பார்த்து, "" ராசுவுக்கும், காவேரிக்கும் நிச்சயம் செய்தபடி திருமணம் செய்து விடுங்கள். நான் ஆவியாக இருந்தாவது அவர்களை வாழ்த்துவேன்'' என்று கூறி இறந்து விடுகிறார்.
நிலத்தின் உழைப்பு பறிபோன நிலையில் தம்பியும் இறந்தது கண்டு பழனியும் அவரது இரண்டு தம்பிகளும், காவேரியும் கதறி அழுகின்றனர். வேலுவின் மனைவியும் மனம் திருந்தி தனது கணவன் இறந்தது கண்டு அழுகிறாள்.
விநோபாஜி "பூதானம்' என்ற பெயரில் ஆரம்பித்து வைத்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் அந்த கிராமத்துக்கு வந்து ஏழை விவசாயிகளுக்கு நிலம் பெற்று தர விரும்புகின்றனர்.
"பூதானம்' என்ற பெயரில் பண்ணையாரும் 5 ஏக்கர் பாறைகள் சூழ்ந்த நிலத்தை பழனிக்கு அளிக்கிறார். இதனைக் கண்ட தம்பிகள் அண்ணனிடம் கோபப்பட்டு பண்ணையார் தங்களை ஏமாற்றி விட்டதாகக் கூறுகின்றனர். அதற்கு பழனி, "" நமக்கு கைகள் இருக்கிறது அல்லவா? அப்படி இருக்கும்போது இந்த பாறைகள் எம்மாத்திரம்'' என்று கூறி, ""இந்த நிலத்தை நாம் சரி செய்து விவசாயம் செய்வோம்'' என்று கூறுகிறார்.
தம்பிகளும் அவர் பேச்சைக் கேட்டு அந்த கட்டாந்தரை நிலத்தை சீர் செய்கின்றனர். அப்போது அந்த நிலத்தை சீர் செய்வதற்கு பழனி பண்ணையாரிடம் ரூ. 2000 கடன் வாங்குகிறார். அப்போது அந்த நிலத்தில் உடைக்கப்படும் கல்லினை ரூ.2000க்கு விற்றுத் தருவதாக இப்ராஹிம் கூறிய போதும், அதனை பண்ணையார் கோயில் கட்ட கற்கள் வேண்டும் என்று கேட்க பழனி அதனை இனாமாகக் கொடுத்து விடுகிறார்.
நிலம் உழப்பட்டு, நல்ல நிலையில் விளைந்து அறுவடை செய்ய இருந்த நாளில் பண்ணையார் அந்த நிலத்தை ஜப்தி செய்கிறார். காரணம் பழனி தன்னிடம் கடன் பெற்ற பணம் ரூ. 12,000 எனவும், அது வட்டிபோட்டு ரூ. 15,750 ஆகி உள்ளதால் அவரது நிலத்தை ஜப்தி செய்வதாகக் கூறி அவரின் நிலத்தை பெற்றுக் கொள்கிறார். பழனி தான் ரூ.2000 தான் கடன் வாங்கியதாக கூறினாலும் அது எடுபடாமல் போய் விடுகிறது.
(தொடரும்)