முகப்பு
ஸ்பெஷல்

கனவுக் கன்னி தேடல்... முக்கோண காதல் கதையில் வென்ற விஜய்!

முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி... காதல் நாயகனின் நினைத்தேன் வந்தாய் திரைப்படம் குறித்து...

Updated On : 21 ஜூன் 2026, 5:00 pm IST
நினைத்தேன் வந்தாய் போஸ்டர்
பகிர்:

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய், 90களின் இறுதியில் லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை உள்ளிட்ட படங்களில் நடித்து காதல் நாயகன் என்ற அந்தஸ்த்தை பெற்றார். காதலுக்கு மரியாதை படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான படம் நினைத்தேன் வந்தாய்.

இந்தத் திரைப்படம் முக்கோண காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும். காதல், குடும்ப உறவு, நகைச்சுவை என அனைத்தும் கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் தேவயானி, ரம்பா முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் பெல்லி சந்ததி என்ற தெலுங்கு மொழிப் படத்தின் மறுஉருவாக்கமாக எடுக்கப்பட்டது. தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றார்போல, மாற்றங்கள் செய்யப்பட்டு இயக்கியிருப்பார் செல்வபாரதி. இந்தப் படத்தில் இரு நாயகிகளுடன் விஜய் நடித்திருந்த காட்சிகள் அமைந்திருக்கும். காதல் திரைப்படமாக இருந்தாலும், குடும்ப ரசிகர்கள் மட்டுமின்றிப் பல தரப்பட்ட பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisement

Advertisement

நினைத்தேன் வந்தாய் படத்தில் விஜய், கோபால கிருஷ்ணன் என்ற பாத்திரத்தில் நடித்திருப்பார். இசையை நேசிக்கும் இசைக்க லைஞரான விஜய், கனவில் கண்ட கனவுக்கன்னியை தேடுவார். முகம் தெரியாத, இடுப்பின் கீழ் மச்சம் என்ற ஒரே அடையாளத்தை வைத்துக்கொண்டு, தன் காதலியைத் தேடும் காட்சிகளில் நகைச்சுவையுடன் தத்ரூபமான நடிப்பை வழங்கி இருப்பார். விஜய்யின் நகைச்சுவைக்கு முக்கிய பங்காற்றியிருப்பார்கள் மணிவண்ணனும் சார்லியும்.

விஜய்யின் தந்தையான வினு சக்ரவர்த்தி, தான் பார்க்கும் பெண்ணான தேவயானியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறுவார். தான் விரும்பும் கனவுக்கன்னி ரம்பாவைத் திருமண நிகழ்வில் கண்டறிவார் விஜய். இருவருக்கும் காதல் மலரும். தேவயானியும் விஜய் மீது அதீத காதல் கொண்டிருப்பார். காதலுக்கும் குடும்ப உறவுகளுக்குமிடையே சிக்கித் தவிக்கும் காட்சிகள், ரம்பாவுடனான காதல் காட்சிகள், தேவயானி மற்றும் எஸ்.என். லட்சுமி உடனான நகைச்சுவைக் காட்சிகள், வினு சக்ரவர்த்திக்கு பயப்படும் காட்சிகள் எனத் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வழங்கியிருப்பார் விஜய்.

ஆர். சுந்தர்ராஜன் மற்றும் செந்தில் ஆகியோர் வரும் நகைச்சுவை காட்சிகள் என ரசிக்கும்படியாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் இடம்பெற்ற அண்ணா டிபன் சாப்டீங்களானா, அண்ணா காபி சாப்டீங்கானா என்ற வசனங்கள் பட்டிதொட்டியொங்கும் பரவி வைரலானது.

இந்தப் படத்தில் விஜய் முதன்முதலாக திரைப்படம் முழுவதும் கண்ணாடி அணிந்து நடித்திருப்பார். அந்த காலக்கட்டத்தில் அவரது உடல்மொழி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று, கண்ணாடி போட்டால் விஜய், கண்ணாடியைக் கழற்றினால் அஜித் என்று சொல்லும் அளவுக்குப் பிரபலமானது.

விஜய்க்கு ரம்பாவும், தேவயானியும் சகோதரிகள் என தெரியவரும் காட்சிகள், விஜய்க்காகத் தன் காதலை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கும் தேவயானியின் உணர்ச்சி மிகுந்த காட்சிகளில் விஜய்யின் தனித்துவமான நடிப்பு, உச்ச கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. நாயகன் பிம்பத்தை மேலும் உயர்த்தியது.

நினைத்தேன் வந்தாய் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்து விஜய்யின் வெற்றிப் படங்களின் வரிசையில் இணைந்தது.

இந்தப் படத்துக்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்திருப்பார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. வண்ண நிலவே பாடலில் விஜய், கனவுக்கன்னி ரம்பாவை தேடுவார், பாடல் காட்சிகளில் ரம்பாவின் முகத்தைக் காட்டாமல், விஜய்யின் உடல்மொழியை வைத்து நடனம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பாடல் இன்றளவும் விஜய்யின் சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கிறது.

எஸ்.பி. பாலச்சுப்பிரமணியம், அனுராதா ஸ்ரீராம் பாடிய என்னவளே என்னவளே பாடலில் ரம்பா மற்றும் விஜய்யின் நடனம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தது.

மல்லிகையே, மல்லிகையே, உன் மார்பில் விழி மூடுகிறேன் தினமும் கனவு, பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா போன்ற பாடல்கள் இசை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டு தற்போதும் வானொலி, தொலைக்காட்சி, இணையத்தில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

மனிஷா மனிஷா போல் இருப்பாளா பாடலில் அனைத்து நடிகைகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது, இப்பாடலின் தனிச்சிறப்பு. இளைஞர்கள் அதிகம் முணுமுணுத்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.

கிளைமேக்ஸ் காட்சியில் இடம்பெற்ற உன்னை நினைத்து நான் எனை மறப்பது அன்பே பாடலில் விஜய், ரம்பா, தேவயானி ஆகியோரின் காதல் ஏக்கம் அழுத்தமாகக் காட்டப்பட்டிருக்கும்.

நினைத்தேன் வந்தாய் படத்தின் பாடல்கள் இசையின் வெற்றியாக இல்லாமல் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காக அமைந்தது. இந்தப் பாடல்கள் காலத்தால் அழியாமல், மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன.

நாயகனை இரு நாயகிகள் காதலிக்கும் பழைய முக்கோணக் காதல் கதையாக இருந்தாலும், திரைக்கதை விறுவிறுப்புடன் எடுக்கப்பட்டிருப்பது நினைத்தேன் வந்தாய் படத்தின் பலம்.

இந்தத் திரைப்படம் அதிகம் பேசக்கூடிய படமாக இல்லாமல் இருந்தாலும், தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்க்கக் கூடிய படமாக இருக்கிறது.

அடுத்தடுத்த படங்களில் நடிகர் விஜய் அதிரடி நாயகனாக வளர்ந்தாலும், காதல் நாயகனாக நடித்த நினைத்தேன் வந்தாய் திரைப்படம், வெற்றிப் படங்கள் வரிசையில் இணைந்து, குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் படமாக இன்றும் நினைவில் நிலைத்திருக்கிறது.

summary

a look at the Romantic Hero vijay film Ninaithen Vandhai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments