நல்லாட்சியின் மூன்று காவலர்கள்!
மக்களாட்சி அமைப்பில் பல்வேறு குழுக்கள் தோன்றுவது இயல்பானது.
மக்களாட்சி அமைப்பில் பல்வேறு குழுக்கள் தோன்றுவது இயல்பானது. அவை நல்ல நோக்கத்துடன் செயல்பட்டால் புதிய சிந்தனைகள் உருவாகவும், நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாகவும் அமையும். ஆனால், இவ்வகை குழுக்கள் தன்னலத்தை முன்னிறுத்தி நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் செயல்படத் தொடங்கினால், அது ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி, சமூக அமைதியையே சீர்குலைக்கும்.
இதைவிடவும் ஒரு நாட்டுக்கு மிகக் கொடியது வெளிப்படையாகத் தெரியாத உட்பகை. இது நாட்டின் உள்ளிருந்து மெதுவாக வளர்ந்து, சூழ்ச்சி முறையில் செயல்பட்டு, குழப்பத்தையும் கலவரத்தையும் உருவாக்கும். இத்தகைய உள்நாட்டு பகைவர்கள் தங்கள் குறிக்கோளை அடைவதற்காகவும், சுயநலத்தை நிறைவேற்றுவதற்காகவும், நாட்டின் நலனையே பலிகொடுக்கத் தயங்கமாட்டார்கள்.
இத்தகைய சக்திகள் கட்டுப்படுத்தப்படாமல் வளர அனுமதிக்கப்பட்டால், நாடு தனது நிலைத்தன்மையை இழந்து, வீழ்ச்சியடையும் நிலைக்குத் தள்ளப்படும்.
Advertisement
Advertisement
ஒரு நாட்டின் அமைதியையும் நிலைத்
தன்மையையும் சீர்குலைக்கும் காரணி
களைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி, அவற்றை நீக்கி நல்வழிப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது வள்ளுவம்.
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்
வேந்துஅலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு. (குறள் 735)
தன்னலம் காரணமாக உருவாகும் பல வகையான பிரிவினைக் குழுக்கள்; நாட்டை உள்ளிருந்து சிதைக்கும் உட்பகை; அரசையும் மக்களையும் துன்புறுத்தும் வன்முறைக் கும்பல்கள் இல்லாததே சிறந்த நாடாகும்.
ஒரு நாட்டுக்கு வெளிப்பகையைவிட ஆபத்தானது உட்பகை. வெளிப்பகை வெளிப்படையாகத் தெரியும்; ஆனால், உட்பகை மறைந்து செயல்படும். அது மக்களிடையே சந்தேகத்தையும் வெறுப்பையும் வளர்த்து, சமூக ஒற்றுமையை மெதுவாக அழித்துவிடும்.
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவுஇடத்து
மண்பகையின் மாணத் தெறும். (குறள் 883)
மண் பானையை அறுக்கும் கருவிபோல் உட்பகை என்பது நாட்டின் வலிமையை உள்ளிருந்தே உடைத்துவிடும்.
அதேபோல் வன்முறையும் கொலைச் செயல்களும் நாட்டின் அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைகின்றன.
அன்பும் அறமும் நிலவ வேண்டிய இடத்தில் வன்முறை தலைதூக்கினால் மக்கள்
நிம்மதியை இழக்கின்றனர்.
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும். (குறள் 321)
உயிரைக் காப்பதே அறத்தின் முதன்மைக் கொள்கையாக இருக்க வேண்டும்.
இன்றைய உலக சூழலும் இந்தக் குறள் கருத்துகளை தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
ஜி7 கூட்டமைப்பு நாடுகளுக்குள் உக்ரைன் போர், வர்த்தகக் கொள்கை, காலநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளில் ஒருமித்த கருத்து இல்லாத நிலை காணப்படுகிறது. இந்த நாடுகள் உலக அரசியல், பொருளாதார திசையை தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக இருந்தாலும், ('பல்குழுவாக') ஒரே நோக்கில் இணைந்து செயல்பட முடியாத சூழலில், உலகளாவிய முடிவுகள் தாமதமடைகின்றன.
உட்பகையும் வன்முறையும் ('கொல் குறும்பு') ஒரு நாட்டை எவ்வாறு சிதைக்கின்றன என்பதை சர்வதேச மீட்புக் குழு அமைப்பின் சமீபத்திய அறிக்கை உட்பகையின் பேரழிவை வெளிப்படுத்தியுள்ளது. சூடான் நாட்டில் ராணுவக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கும், எண்ணற்ற குடும்பங்களின் இடம்பெயர்வுக்கும் காரணமாகியுள்ளது.
இவ்வாறு, உலகின் பல்வேறு நிலைகளிலும் ஒற்றுமை இல்லாமை, உட்பகை மற்றும் வன்முறை ஆகியவை ஏற்படுத்தும் தீமைகள் வெளிப்படையாகக் காணப்படுகின்றன. இதனால், வள்ளுவரின் கூற்றுப்படி, பல்குழு ஆதிக்கம் இல்லாமல், உட்பகை நீங்கி, வன்முறை ஒழிந்தால்தான் உலகமும் நாடும் உண்மையில் நிலைத்தன்மையுடனும் வளமுடனும் விளங்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.