FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 19-07-2026

எந்தவொரு சிந்தனையாக இருந்தாலும் அது குறித்த குறள் முன்னெழுந்து நிற்கும்.

Updated On : 19 ஜூலை 2026, 5:51 pm IST
திருவள்ளுவர்
பகிர்:

எந்தவொரு சிந்தனையாக இருந்தாலும் அது குறித்த குறள் முன்னெழுந்து நிற்கும். எனக்கு இது வழக்கமாகி விட்டது. ஆசிரியர் உரைக்குத் தகுந்த திருக்குறள் கொடுப்பதைப் போலவே, 'இதற்கென்ன குறள்?' என்று அன்றாட நிகழ்வில்கூட வள்ளுவச் சிந்தனை இணைந்து விடுகிறது.

'தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்'' என்ற குறளுக்குப் பரிமேலழகர் தரும் உரை இது- 'தக்கார் தகவிலர்' என்பது இவர் நடுவுநிலைமை உடையவர், இவர் நடுவுநிலைமை இலர் என்னும் விசேடம், அவரவர் எச்சத்தால் காணப்படும்; அவரவருடைய நன்மக்களது உண்மையானும், இன்மையானும் அறியப்படும். தக்கார்க்கு எச்சம் உண்டாதலும், தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இரு திறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும், தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.

பரிமேலழகரை வழிமொழிந்து 'ஒருவர் நடுவுநிலைமை உடையவர்; அஃதில்லாதவர் என்பதை அவருக்கு நன்மக்களிருப்பதாலும் இல்லாததாலும் அறிந்து கொள்ளலாம். (அவர் புகழாலும் தெரிந்து கொள்ளலாம் என்பாரும் உளர்)'' என்பது கா.சு.பிள்ளையின் பார்வை.

Advertisement

Advertisement

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. மக்கட்பேறு என்பதோ, நன்மக்கட்பேறு என்பதோ ஒருவர் செயல்பாட்டால் அமைவதில்லை. முற்பிறவிப் பயனால்தான் மக்கட்பேறு அல்லது நன்மக்கட்பேறு அமைகிறது என்று சொன்னால், எல்லாமே ஊழ்வினை என்று சொல்லும் பகவத் கீதையின் வினைச் சட்டத்தின் (தியரி ஆஃப் கர்மா) வழிமொழிதலாகிவிடும்.

மற்ற உரையாசிரியர்கள் சிலர் என்ன சொல்கிறார்கள் என்று புரட்டிப் பார்த்தேன். 'நடுவுநிலைமை' என்கிற அதிகாரத்தின் கீழ் இந்தக் குறள் அமைந்திருப்பதால், 'நடுவுநிலைமை உடையவர், நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும், பழியாலும் காணப்படும்'' என்று டாக்டர் மு. வரதராசனாரின் உரை கூறுகிறது.

புகழும், இகழும்தான் திருவள்ளுவரால் எச்சமாகக் கருதப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்தும். மக்கள் செல்வமோ, பொருள் செல்வமோ ஒரு மனிதனின் வாழ்க்கைக்கான அளவுகோலாகவோ, சான்றாகவோ இருந்துவிட முடியாது.

குறள் குறித்த சிந்தனை எழுந்ததற்குக் காரணம், தமிழகக் காவல் துறையின் மேனாள் தலைவர் வி. வைகுந்தின் மறைவு. பழுத்த பழமாக அகவை 89 வரை வாழ்ந்து மறைந்திருக்கிறார். இத்தனையாண்டுகள் வாழ்ந்தார் என்பதல்ல பெருமை; 'தக்கார் தகவிலர்' என்ற குறளுக்குப் பொருளாக, எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தார் என்பதுதான் சிறப்பு.

வைகுந்த் பதவியில் இருந்தபோது நான் அவரிடம் நெருங்கிப் பழகவில்லை. அவர் பணி ஓய்வு பெற்ற பிறகு, வாரத்துக்கு ஒரு முறையாவது சந்தித்துப் பேசும் அளவுக்கு மிகவும் நெருக்கமானோம். நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் இடம் பெரும்பாலும் அவரது வீட்டுக்கு அருகில் இருந்த 'துக்ளக்' பத்திரிகை அலுவலகம். ஆசிரியர் சோ சாரை சந்திக்க நான் போகும்போது அவரும் அங்கே இருப்பார்.

வைகுந்த் பணி ஓய்வு பெற்ற பிறகு பல சமூக சேவைப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் என்பது இருக்கட்டும், காவல் துறைப் பணியில் அவர் செய்த இரண்டு மிகப் பெரிய சாதனைகள், காலங்கள் கடந்தும் பேசப்படும். அது குறித்து ஊடகங்கள் அதிகம் வெளிப்படுத்தவில்லை என்ற ஆதங்கம்தான் அவர் குறித்து என்னை எழுத வைத்திருக்கிறது.

டிஜிபி வைகுந்துக்கு முன்னும் பின்னும் கால் நூற்றாண்டு காலம், முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில், முதல்வர் உள்பட எந்தவொரு அரசியல்வாதியின் தலையீடும் இல்லாமல், பணம் கைமாறாமல் சீருடைப் பணியாளர் தேர்வு நடத்தப்படவில்லை என்று உறுதியாகக் கூறலாம். அப்போது நியமிக்கப்பட்டு இப்போது அநேகமாகப் பணி ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் காவல் துறையினர் இதை வழிமொழிவார்கள்.

'காவல் துறையைச் சேர்ந்தவர்கள் பணியிட மாற்றம் பெற்றால், குடியிருக்க வீடு கிடைப்பதற்கு படும் பாடு சொல்லி மாளாது. போலீஸ்காரர் என்றால் வாடகைக்கு வீடு தர மாட்டார்கள். அதனால்தான் 'காவல் துறையினருக்கு வீட்டு வசதி வாரியம் ஏற்படுத்துவோம்; அவர்களது குடும்பத்தினர் அலைக்கழிக்கப்படக் கூடாது' என்று முதல்வர் ஜெயலலிதாவிடம் நான் சொன்னபோது, உடனடியாக ஒப்புதல் வழங்கினார்'' என்று தெரிவித்தார் அவர்.

இப்போது எல்லா நகரங்களிலும் காணப்படும் காவல் துறையினருக்கான குடியிருப்புகள், தமிழகக் காவல் துறையின் மேனாள் தலைவர் (டிஜிபி) வைகுந்த் விட்டுச் சென்றிருக்கும் எச்சம்!

கொழும்பில் 'தமிழன்' நாளிதழின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது அங்கே எழுத்தாளர் சாந்தனைச் சந்தித்தேன். அயலகத் தமிழ் எழுத்தாளர்களைத் தாய்த் தமிழகம் அதிகம் தெரிந்திருக்காமல் இருப்பது மிகப் பெரிய இழுக்கு. ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழிலேயே உரையாடும் உண்மைத் தமிழர்கள் அவர்கள்தான் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

அயலகத் தமிழர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தாயகம் குறித்த மரியாதையும், பாசமும் சொல்லி மாளாது. மணிப்பூர், அஸ்ஸாம் சென்ற பயணக் கட்டுரைப் புத்தகங்களையும், சாகித்திய அகாதெமியின் 'ஃபெலோஷிப்' விருதைத் தொடர்ந்து, தில்லி, கொல்கத்தா, சென்னை என்று பயணித்த அனுபவங்களின் தொகுப்பான 'எழுத்தின் மொழி' புத்தகத்தையும் எழுத்தாளர் சாந்தன் அன்பளிப்பாகத் தந்தார்.

அவர்கள் நம்மை நேசிக்கிறார்கள்; நாம் அவர்களை உதாசீனப்படுத்துகிறோம் என்ற வருத்தம் எனக்கு எப்போதுமே உண்டு. தமிழக அரசின் 'கலைமாமணி' விருது வழங்கும்போது குறைந்தது ஐந்தாறு அயலகத் தமிழர்கள் அதில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்.

அடுத்த முறை யாழ்ப்பாணம் செல்லும்போது எழுத்தாளர் சாந்தனைச் சந்தித்து அளவளாவ வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். 'தமிழன்' நாளிதழின் இலக்கியத்துக்கான விருது பெற்ற சாந்தனுக்கு எனது வாழ்த்துகள்!

விமர்சனத்துக்கு வந்திருந்தது ரகுநாத்.வ எழுதிய 'உயிர்வெளவல்' என்கிற கவிதைத் தொகுப்பு. அதிலிருந்து ஒரு கவிதை...

கல்லெறிந்து

விரட்டியவர்களுக்கெல்லாம்

ஆளுக்கொரு குட்டியினைப்

பரிசளித்தது தெருநாய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments