நிலம் என்பது வெறும் மண் அல்ல, உயிர்! நிலம் காக்கும் ஜமாபந்திகள்! நீதியும் நியாயமும் - 4
நிலம் என்பது வெறும் மண்ணல்ல, அதுதான் உயிர், எனவே, மக்கள் தங்கள் நிலத்தைக் காக்க ஜமாபந்தி, வருவாய்த் தீர்வாயங்களைப் பயன்படுத்திக் கொள்வது பற்றி...
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மருங்காபுரி அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் பழுவஞ்சி. சங்க காலத்தில் அது ஒரு நாடு. செழித்து விளைந்த பூமி. இன்றைக்கு மானாவாரிக் காடு. அதிகாலைப் பொழுதில் கையில் தூக்குப்போனியுடன் காத்திருக்கும் ஆண்களையும் பெண்களையும் அந்த வழியாகச் திருச்சி செல்லும் போக்கு வண்டிகள் சுமந்து செல்லும். திருச்சி மாநகருக்கு வெளியில் இறங்கிக் காத்திருப்பார்கள். அவர்களைச் சந்தையில் காய்கறிகளைப் பொறுக்கி எடுப்பதைப் போல தரகர்கள் வேலைகளுக்குத் தகுந்தாற்போல் பொறுக்கி எடுத்து அழைத்துச் செல்வார்கள். அதில் கணேசனும் ஒருவர். அத்துக்கூலிக்குத்தான் போவார். ஒரு நாள் வேலை கிடைக்கும். பல நாள்கள் நண்பகல் வரை காத்திருந்துவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்ப வேண்டும். ஊரில் கணேசனுக்கும் நிலம் இருந்தது. வானம் பொய்த்த காலத்தில் அதில் அவருக்கு எந்த வருமானமும் இல்லை. வேறு வழியின்றிப் பிழைப்பிற்காக நகரத்தில் அத்துக்கூலியாகச் சென்று வந்தார். நிலத்தில் பற்றிப் படர்ந்திருந்த ஒரு தாவரத்தை வேரோடு பறிந்து எறிவதைப் போல, அவரது நிலத்தில் இருந்து ஒருநாள் கணேசன் தூக்கி எறியப்பட்டார். தலைமுறை தலைமுறையாக அனுபவித்த நிலத்தை இழந்துவிட்டார். ஓர் அகதியைப் போல கணேசனின் வாழ்க்கை மாறியிருக்கிறது.
அந்த நிலத்தில்தான் கணேசனின் தாத்தா விவசாயம் செய்தார். தந்தை விவசாயம் செய்தார். கணேசனும் விவசாயம் செய்து வந்தார். ஒரு நாள் திடீரென நிலத்திற்குள் கொடி கட்டிய சில கார்கள் வந்து நின்றன. ‘நிலத்தை நாங்கள் வாங்கி விட்டோம்; வெளியேறிக் கொள்’ என்றார்கள். என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன்பாகவே சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன. கணேசன் அங்குமிங்கும் ஓடினார். கடைசியில், எனது அலுவலகத்திற்கு வந்தார். அவர் கொடுத்த நிலத்தின் புல எண்ணைக் கணினி வழி ஆய்வு செய்து, பதிவுத்துறையின் நடவடிக்கைகளைப் பார்த்தேன். கணேசன் மோசடிப் பேர்வழிகளால் ஏமாற்றப்பட்டிருந்தார் என்பதற்கான சான்றுகள் இருந்தன. ஒரு செங்கை அம்மாள் என்பவரின் பவர் ஏஜெண்ட் கண்ணன் என்பவர், ஒரு செந்தில் என்பவருக்கு கிரயம் செய்து கொடுத்திருக்கிறார். அந்த மூன்று பெயர்களையும் அதற்கு முன்பு கணேசன் கேட்டதும் இல்லை; அப்படியான நபர்கள் அந்தக் கிராமத்தில் வாழவும் இல்லை. வருவாய் ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்தபோது, கணேசனின் நிலம் செங்கை அம்மாள் என்ற பெயரில் பதிவாகி இருந்த விவரம் தெரியவந்தது.
கணேசனின் குடும்பத்தில் செங்கை அம்மாள் என்ற பெயரில் எவரேனும் இருந்தனரா என்று விசாரித்தேன். ‘தனக்குத் தெரிந்து கடைசி இரண்டு மூன்று தலைமுறைகளில் அப்படி யாரும் இல்லை’ என்று கணேசன் உறுதியாக மறுத்தார். அதற்கு முன்னரும் ‘அந்தப் பெயரில் யாரும் இருந்ததாக எந்தத் தகவலும் இல்லை’ என்றார். கணேசன் குடும்பத்திற்குச் சொந்தமான நிலம் தொடர்பான வருவாய் ஆவணங்களில், செங்கை அம்மாள் என்ற பெயர் தவறாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த ஒருவர் திட்டமிட்டுச் செயல்பட்டு அந்த நிலத்தை மோசடியாக அபகரித்துவிட்டார்.
Advertisement
Advertisement
வருவாய்க் கோட்டாட்சியருக்கு இது குறித்து விரிவான புகார் அளிக்கப்பட்டது. விசாரணை செய்வதற்கான வாய்தா தேதிகள் ஒன்று இரண்டு என நீண்டன. இரண்டு மூன்று வருவாய்க் கோட்ட ஆட்சியர்கள் மாறிவிட்டனர். மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ‘செங்கை அம்மாள் யார் என்றாவது காட்டுங்கள்’ என்றார் கணேசன். இறப்புச் சான்று கொடுத்தார்கள். மணப்பாறை நகராட்சி வழங்கி இருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரியில் அவர் வாழ்ந்ததற்கான ஆதாரம் ஏதும் இருக்கிறதா எனத் தேடினோம். அந்த முகவரியில் செங்கை அம்மாள் என்று யாரும் வாழவில்லை. வருவாய்க் கோட்ட ஆட்சியரால் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை கோரப்பட்டது; அறிக்கையும் பெறப்பட்டது. செங்கை அம்மாள் என்பவரின் வாக்காளர் பதிவோ, குடும்ப அட்டைப் பதிவோ அல்லது அவர் வாழ்ந்ததற்கான வாய்மொழிச் சான்றுகளோ எதுவும் இல்லை என்று வட்டாட்சியர் அறிக்கை சொன்னது.
கற்பனையான செங்கை அம்மாள்தான் ஒருவருக்கு பவர் பத்திரம் எழுதிப் பதிவு செய்து கொடுத்திருக்கிறார். செங்கை அம்மாளின் பவர் ஏஜெண்ட்தான் நிலத்தை மற்றொருவருக்கு விற்பனை செய்திருக்கிறார். அது பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த வருவாய்க் கோட்டாட்சியரின் விசாரணை ஒருநாள் முடிவுக்கு வந்தது. வருவாய்த் துறை, பதிவுத்துறை, நகராட்சி நிர்வாகம் என மூன்று துறைகளுமே,செங்கை அம்மாள் யார் என்பதைக் கூறவில்லை. நீதிமன்றத்தை நாடிக் கொள்ளுங்கள் என்று வருவாய்க் கோட்டாட்சியர் தனது கடமையை முடித்துக்கொண்டார். காவல் துறை விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்ற கணேசனின் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. காத்திருப்புகளும் ஏமாற்றங்களுமே கணேசனுக்குப் பரிசாகக் கிடைத்தன. தனக்கான நீதியைத் தேடிக்கொள்ளும் வலிமையை கணேசன் முற்றாக இழந்துவிட்டார். காவல் துறையில் நேரடியாகப் புகார் அளிக்கும் அளவிற்கு கணேசனுக்கு ‘வலிமை’ இல்லை. அதிகாரத்தின் இரும்புக் கதவுகளைத் தட்டிக்கூடப் பார்க்க முடியாத நிலையில்தான் பல கணேசன்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நிலம் என்பது வெறும் மண் அல்ல. எல்லா உயிர்களுக்கும் அதுதான் உயிர். நிலமின்றி எதுவும் இல்லை. மனிதர்களுக்கு உயிரும் உணர்வுமாக இருப்பது நிலம்தான். நிலம்தான் எல்லாவற்றுக்குமான அடையாளம். பூமியில் நடைபெற்ற எல்லா போர்களும் நிலத்திற்காகத்தான் நடைபெற்றிருக்கின்றன. நிலத்திற்காகத்தான் மனிதர்கள் சண்டையிட்டு மடிந்திருக்கிறார்கள். மனித நாகரிகம் வளர வளர மக்களிடையே புரிதல் வளர்ந்தது. தங்களுக்கென எல்லைக்கோடுகளை வரையறுத்துக்கொண்டனர். ஜனநாயகம் மலர்ந்தது. ஆனாலும், நிலம் தொடர்பான ஆசை மனித மரபணுவில் புதையுண்டு கிடக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் அடுத்தவர் நிலத்தை அபகரிக்கும் போக்குகளாக மாறுகின்றன. மக்கள்தொகைக்கு ஏற்ப நிலங்களைக் கையாளும் நடைமுறைகளிலும் மாற்றம் தேவைப்படுகின்றன. நிலங்களுக்காக அன்று நடைபெற்ற ஆயுதப் போர், இன்று டிஜிட்டல் போராக மாறியிருக்கிறது. மனித மனங்கள் மாறவே இல்லை.
இந்தியாவை ஆட்சி செய்த முகலாயர்கள் நிலம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் முக்கியமானவை. அரசுக்கு வருவாயைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முகலாயர்கள் நிலங்களை வகைப்படுத்தினார்கள். பருவ காலங்களில் கிடைக்கும் விளைச்சல், நிலங்களின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலங்கள் வகைப்படுத்தப்பட்டன. அக்பர் தன்னுடைய ஆட்சிக் காலத்தில்தான் நிலங்களுக்கு வரி வசூல் செய்யும் திட்டத்தை வகுத்தார். இந்தக் காலகட்டத்தில்தான் நில உரிமையாளர்கள் குறித்த ஆவணங்கள் உருவாக்கப்பட்டன. முகமதிய நாள்காட்டி அடிப்படையில் விளைச்சல் அறுவடை காலத்தைக் கணக்கிட்டு ஜூலை 1 முதல் ஜூன் 30 வரையிலான காலத்தை ‘பசலி ஆண்டு’ (Fasli year) எனப்பட்டது. இந்தியாவில் தற்போது வரை வருவாய்த் துறையில் பசலி ஆண்டுதான் நடைமுறையில் உள்ளது. விவசாய நிலங்களுக்கான வரிகள் பசலி ஆண்டு குறிப்பிடப்பட்டுதான் வசூலிக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில் இருந்து 590 ஆண்டுகளைக் கழித்தால் பசலி ஆண்டு கிடைக்கும். பசலி ஆண்டு முறை இந்தியாவிற்கு வெளியில் தெற்கு ஆசியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நிலச் சீர்திருத்தம் தொடர்பான இந்திய வரலாறு மிக நீண்டது. முகலாயர்கள் ஆட்சிக் காலத்திலும் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலும் நில உடைமை தொடர்பாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவை அனைத்தும் வருவாய்ப் பெருக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்றாலும், தற்போது அவைதான் அடிப்படை ஆவணங்களாக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால், அந்தத் தகவல்கள் அனைத்தும் சரியானவை என்று உறுதியாகக் கூற முடியாது. சரியானவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்தத் தகவல்கள் நிலங்களின் உரிமையாளரிடம் இருந்து நேரடியாகப் பெற்றிருக்க வாய்ப்பே இல்லை. அந்நிய மொழி தெரிந்த ஒருவரால்தான் அந்தத் தகவல் கடத்தப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில்தான் ஆவணங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். வேறு வழியில்லை. ஆவணங்கள் தயாரிக்கும்போதும் பெயர்கள் இடம் மாறியோ அல்லது தவறுதலாகவோ பதிவு செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. சுதந்திர இந்தியாவில் நிலச் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆவணங்களில் கண்டறியப்பட்ட தவறுகள் பின்னாளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடைசியாக, தமிழ்நாட்டில் ஜூன் 1, 1979 முதல் ஏப்ரல் 30, 1987 வரையிலான காலகட்டத்தில் நில உடைமை மேம்பாட்டுத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் கொண்டுவந்த நில உடைமை மேம்பாட்டுத் திட்டம் ஓர் உறுதியான நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. குறிப்பாக, 1980 நவம்பர் 14 ஆம் நாள் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்தின் மூலமாக கிராம முன்சிப்கள் (Village Munsif) மற்றும் கர்ணம் (Village Accountant) பதவிகள் ஒழிக்கப்பட்டன. இதன் மூலம் குறிப்பிட்ட இரண்டு இனக் குழுக்களிடம் இருந்த அதிகாரங்கள் முடிவுக்கு வந்தன. தற்போது நடைமுறையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் ஜமீன் ஒழிப்பு நடவடிக்கைக்கு நிகரானதாக இருந்தன. தகுதியான எவராலும் கிராம நிர்வாக அலுவலராகப் பணி செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
நில உடைமையாளர்களுக்கு சட்டபூர்வமான ஆவணம் வழங்கும் நடவடிக்கையாக, 1983 இல் தமிழ்நாடு பட்டா பாஸ் புத்தகம் சட்டம் கொண்டுவரப்பட்டது. இருந்தபோதிலும் அதிலும் பல இடங்களில் நடைமுறைத் தவறுகள் ஏற்பட்டன. அது, கணேசன் போன்றவர்கள் நிலம் இழப்பதற்குக் காரணமாக இருந்தது. நீண்ட நெடிய வரலாறு கொண்ட நிலச் சீர்திருத்த வரலாற்றில் தேவையான திருத்தங்களும் மாற்றங்களும் தொடர்ச்சியாகச் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படாததன் விளைவு, வேளாண் குடிமக்களிடம் சிக்கல்களாக வெடித்து வருகின்றன; அவை, நீதிமன்றங்களில் வழக்குகளாகக் குவிந்து வருகின்றன.
யு.டி.ஆர். என்ற நில உடைமை மேம்பாட்டுத் திட்டப் பணிகளில் (Updating of Registry or Updating of Revenue Records) செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் சரியானவைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய கடமை அந்தந்த நில உரிமையாளர்களுக்குத்தான் உள்ளது. அதில் தவறுகள் இருப்பது கண்டறியப்பட்டால் யு.டி.ஆர். மேல்முறையீட்டு அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலருக்கு முறையீடு செய்ய வேண்டும். உரிய விசாரணைக்குப் பிறகு உண்மை கண்டறியப்பட்டால், அதில் திருத்தம் செய்து கொள்ளலாம். அவரது உத்தரவு ஏற்புடையதாக இல்லை என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம். குடிமக்களுக்குப் பல்வேறு வழிகள், வாய்ப்புகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் அறிவும் தெளிவும் வேண்டும். இவற்றையெல்லாம் தவறவிட்டால் செங்கை அம்மாள் போன்ற கற்பனை மனிதர்களின் பவர் ஏஜெண்டுகள் தோன்றுவார்கள். பவர் ஏஜெண்ட் நிலத்தை விற்றுவிட்டுப் போய்விடுவார். உரிமையாளர் ஒருநாள் தனது நிலத்தில் இருந்து தூக்கி எறியப்படுவார். சட்டம் ஆவணத்தின் பக்கமே நிற்கும். நியாயத்தைத் தேடிக் கண்டடைவதற்குள் எல்லாம் கையைவிட்டுப் போயிருக்கும்.
தமிழ்நாட்டில் பசலி ஆண்டின் அடிப்படையில்தான் நிலம் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தில் தணிக்கை செய்யப்பட்டுப் பதிவு செய்யப்படுகின்றன. இந்த நடைமுறைகள் ‘ஜமாபந்தி’ அல்லது ‘வருவாய்த் தீர்வாயம்’ என்ற பெயரில் நடைபெறுகிறது. இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் வருவாய்த் துறை அலுவலர்கள், குடிமக்கள் மாநாடு நடத்துகிறார்கள். அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்கள், தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்கள் சரியாக உள்ளனவா, வாரிசுகளின் பெயர் மாற்றங்கள் சரியாகச் செய்யப்பட்டுள்ளனவா என்றெல்லாம் நேரடியாகப் பங்கு பெற்றுத் தெரிந்துகொள்ளலாம். சட்டம் இதற்கான வழிவகை செய்துள்ளது. ஜமாபந்தியின்போது நடைபெறும் குடிமக்கள் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர், வருவாய்க் கோட்ட ஆட்சியர், வட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் ஒரேநேரத்தில் கலந்து கொள்வார்கள். மக்களால் அப்போது கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் உடனடியாகத் தொடர்புடைய அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட வேண்டும். அதற்குத் தீர்வும் அன்றே கொடுக்கப்பட வேண்டும். இந்த நடைமுறைகள் பலருக்கும் தெரியாது. பல நேரங்களில் இது வெறும் நடைமுறையாகவே நடத்தி முடிக்கப்பட்டுவிடும். கணேசனைப்போல் இல்லாமல், விழிப்புற்ற மனிதர்களுக்குத்தான் சொந்த நிலத்தில் வாழ்வு நிலைக்கும். தலைமுறைக்கும் நீடிக்கும்.
(தூக்குப்போனி என்பது கைப்பிடியுடன் கூடிய உருளை வடிவ உணவுப் பாத்திரம். அத்துக்கூலி என்பது முதலாளி - தொழிலாளி உறவு எதுவும் நீடிக்காத கூலித் தொழிலாளியைக் குறிக்கும். அந்த நிமிஷத்துடன் அந்த உறவு முடிந்துவிடும்).
நீதிக்கான குரல் ஒலிக்கும்...
நியாயத்திற்கான பயணம் தொடரும்...
கட்டுரையாளர் : வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர்
Tamilmani Arumugam, Advocate.
advocatetamilmani@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.