FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

எச்சரிக்கை மணி கேட்கிறதா?

கரப்பான் பூச்சிகள் சனதா கட்சி என்றொரு கட்சி இந்திய அரசியலில் திடீரென்று பிரசவமாகி இருக்கிறது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:24 am IST
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி - PTI
பகிர்:

கரப்பான் பூச்சிகள் சனதா கட்சி என்றொரு கட்சி இந்திய அரசியலில் திடீரென்று பிரசவமாகி இருக்கிறது. கருத்தரித்த சுவடு எதுவும் தெரியாமலேயே, பிள்ளையின் வீறிட்ட ஒலியிலேயே, அதன் பிறப்புத் தெரிய வந்தது!

கம்சனைப் பலி கொள்வது கண்ணனின் பிறப்பு நோக்கம் என்பது போல, கல்வி அமைச்சர் பிரதானின் கழுத்துக்குக் குறி வைத்துக் கொண்டு பிறந்தது கரப்பான் பூச்சி!

நீட் தேர்வு கூட நேரடியாக அவர்களின் குறியாக இல்லை! அதன் வினாத் தாள் கசிவு, அதில் ஊடுருவி நின்ற அதிகாரிகளின் ஊழல், அதனால் ஒரு மறு தேர்வு என்னும் மாணவர் அலைக்கழிப்பு, இவற்றை முன்னிறுத்தியே அந்தப் போராட்டம் நிகழ்ந்தது!

Advertisement

Advertisement

ஒவ்வொரு இளைஞனும் தானே பாதிக்கப்பட்டவன் என்பதால், அந்தப் போராட்டத்தில் ஓர் உயிரோட்டம் இருந்தது!

லடாக்கைச் சேர்ந்த ஒருவரின் உண்ணாநோன்பு இவர்களின் போராட்டத்திற்கு வலிமை சேர்த்தது!

தேர் புறப்பட்டு விட்டது, அதுவாகச் சேர்க்கை சேர்ந்தது என்றாகி விடக் கூடாது என்று வடத்தில் கை வைக்க காங்கிரசின் ராகுலும், பொதுவுடைமைக் கட்சியினரும் முன் வந்தனர்!

இடையில் யார் வருகிறார்கள் என்பது முக்கியமில்லை! வெள்ளைக் கொடி வீசித் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தவன் எவனோ, அவனே சேர்க்கை சேரும் வரை பொறுப்பாவான்!

அந்தக் கரப்பான் பூச்சி இயக்கம் முன் வைத்த கோரிக்கை மைய அரசின் கல்வி அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும் என்பது!

ஊழல் செய்தவர்கள் அதிகாரிகள்! தண்டிக்கப்பட வேண்டும் என்பது அமைச்சரை! நம்முடைய கே.என். நேருவின் மீது முன்னாள் முதல்வர் இசுடாலின் வழக்குப் பதிய விடாமல் பாதுகாத்தாரே, அது போல் அந்த நீட் ஊழல் அதிகாரிகளைக் கல்வி அமைச்சர் பாதுகாத்தாரா என்றால் இல்லை! அவர்களின் மீது வழக்குகள் பாய்ந்திருக்கின்றன! சி.பி.ஐ.யின் வளையத்திற்குள்ளேயே அந்த அதிகாரிகள் கொண்டு வரப்பட்டு விட்டார்கள்!

அரியலூர் ரயில் விபத்துக்காக லால் பகதூர் சாத்திரி பதவியை இராசினாமா செய்தார். அவர் எந்தக் கடமையைச் சரியாகச் செய்திருந்தால், அந்த விபத்து நடந்திருக்காது என்று அவர் கடைசி வரையிலும் சொல்லவே இல்லை!

சாத்திரியின் அந்த இராசினாமா ஒரு மிகையான செயல்தான்! ஆனாலும் அத்தனை பேர் சாவினாலும் ஏற்பட்டிருந்த ரணத்திற்கு மருந்திட்டது போன்ற ஓர் ஆறுதல் ஏற்பட அந்த இராசினாமா உதவியது! அவ்வளவுதான்!

ஆனால், பிரதானின் இராசினாமாவால் அத்ததைய ஆறுதல் எதுவும் ஏற்படப் போவதில்லை; ஊழலின் மூலம் அதிகாரிகள்தான் அமைச்சரில்லை!

ஆயினும், இந்த நீட் வினாத்தாள் கசிவுக்கான பலிகடா அவரே என்பதில் தீர்மானமாகப் போராளிகள் இருந்தனர்!

இப்படி ஒரு பலவீனமான கோரிக்கையைப் போராளிகள் மட்டுமில்லாத ராகுலும் வலியுறுத்துகிறாரே என்று மோடி வியந்து, எந்தப் பாடுமில்லாமல் பிரதானை விடுவித்து விட்டார்!

அந்த மந்திரியை விடுவித்ததன் மூலம், போராட்டத்தில் காற்று "புசுக்கென்று' இறங்கி விட்டது!

இன்னும் கொஞ்ச நாளில் மோடி பிரதானை வேறு துறைக்கு மந்திரி ஆக்குவார்! வலிந்து இராசினாமா செய்த லால்பகதூர் சாத்திரி மீண்டும் மந்திரி ஆக வில்லையா?

இந்த நீட்டையே கொண்டு வந்தவர் மோடி என்பதுபோல் ராகுலும், இசுடாலினும் பேசுகிறார்கள்!

நீட்டைக் கொண்டு வந்தது காங்கிரசு ஆட்சியில்! அதன் சட்ட வடிவை முன்மொழிந்தவர் திமுகவின் அமைச்சர் காந்திச் செல்வன்!

இவ்வளவு கேவலமான தேர்வைக் கொண்டு வந்ததற்கான காரணத்தை ராகுலோ, இசுடாலினோ ஒரு நாளும் சொன்னதில்லை!

நாங்கள் முட்டாள்தனமாக இதைக் கொண்டுவந்து விட்டோம் என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, அதை ரத்து செய்யும்படி மோடியை வலியுறுத்த வேண்டும்! அதுதான் கெளரவமான மனிதர்களின் செயல்!

இசுடாலின் ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். நீட்டில் தகுதிப்பாடு எங்கே இருக்கிறது? சலுகைகள் நிறுவனப்படுத்தப் பட்டிருக்கின்றன என்று கூறி இருக்கிறார்!

இந்தச் சலுகைகளை நிறுவனப்படுத்தியதில் தன் தில்லி ஆட்சியின் பங்கு எவ்வளவு என்று அவர் கூறவில்லை!

ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி நிறுவனரும் கல்வியைத் தொழிலாக்கி, லார்சன் அண்ட் டியூப்ரோ கம்பெனி அளவுக்குக் கொழுக்க முடிந்து எப்படி?

கல்விக்குப் பணமே மூலதனம் என்று ஆகிவிட்ட பிறகு, அரசியலுக்கும் அதுதானே மூலதனமாக முடியும்!

கல்வி நிறுவனப்படுத்தப்பட்டதைப் பற்றி யார் பேசுவது? பேசும்போது வெட்கம் ஏற்படாதா? சலுகை பெறாத வர்க்கத்திற்காக எடப்பாடியாவது ஏழரை விழுக்காடு ஒதுக்கீடு என்று மருத்துவக் கல்லூரிகளில் ஏற்படுத்தினார்!

மாணவன் மத்தியானம் "மாட்னி' ஆட்டம் பார்ப்பதற்கு நீங்கள் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்தீர்களே தவிர, தரமான கல்வியை அடிமட்ட மக்கள் பெற என்ன செய்தீர்கள்?

இப்போது தமிழ்நாட்டை மட்டும் எடுத்துக் கொள்வோம்; அதில் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று வெளியே வருகிறார்கள் ஏழரை இலட்சம் பேர்! மருத்துவம், உயர் பொறியியல் தவிர எவனும் எதையும் படிப்பாகவே கருதுவதில்லை!

ஆகவே "வடிகட்டல்' தொடங்குகிறது! போட்டி முறுக்கேறுகிறது; தனிப் பயிற்சி வகுப்புகள் ஏற்படுகின்றன! அதற்கு ஆகும் செலவில் ஒரு பண்ணை வீடு வாங்கி விடலாம்; ஆகவே வசதியற்றவர்கள் முதற்கட்டமாக இங்கே கழிக்கப்பட்டு விடுகிறார்கள்!

ஏழரை இலட்சத்தில் ஒன்றரை இலட்சம் பேரே தலைப்பாகையை வரிந்து கட்டிக் கொண்டு, நீட்டை நெருங்கவே முடியும்! அதில் வெறும் அறுபத்தையாயிரம் பேரே நீட்டில் தேர்ச்சி பெறுகின்றனர்! இந்த அறுபத்தையாயிரம் பேரில் வெறும் பன்னிரண்டாயிரம் பேருக்கு மட்டுமே மருத்துவ இடங்கள் மொத்தத்தில் இருக்கின்றன!

அரசுக் கல்லூரிகள் நீங்கலாக, பெரிய அளவிலான தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அறுநூறு மதிப்பெண் எடுத்தவனுக்கு இடம் கிடைக்காது. இருநூறு மதிப்பெண் எடுத்தவனிடமே கொடுப்பதற்கு இரண்டு கோடி, மூன்று கோடி என்று இருப்பதால் அவனுக்கே இடம் கிடைக்கும்! மீண்டும் "நிறைந்த தகுதிகள்' தள்ளப்படுகின்றன; குறைந்த தகுதிகள் கொள்ளப் படுகின்றன!

தேர்ச்சி அடையாத அருமைச் சகோதரி அனிதா செத்ததற்கு இவ்வளவு கண்ணீர் விடுகிறோமே, பயிற்சி வகுப்புகளுக்குப் பெரும் பணம் செலவழித்து, மூன்றாண்டுகள் கிறுக்குப் பிடிக்காத குறையாகப் படித்து, கடைசியில் நீட்டில் ஐநூறு, அறுநூறு மதிப்பெண் எடுத்துப் போதிய பணம் இல்லாத காரணத்தால், இருநூறு மதிப்பெண் எடுத்தவனிடம் இடங்களைப் பறிகொடுத்து விட்டு, தெருக்களில் லோலோ என்று அலைகிற மாணவர்கள் ஓரிருவர் இல்லை, ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேர்! அவர்களும் இன்பத் தமிழர்களே! அவர்கள் சாகாத காரணத்தால் நீங்கள் அவர்களின் படத்திற்குப் பூப்போட்டு மூன்று முறை சுற்றி வருவதில்லை!

'நீட்' காங்கிரசு மற்றும் திமுகவினர் ஈன்ற மூளைக் குழந்தை! மோடி அதற்குச் சுவீகாரத் தகப்பனே தவிர, சொந்தத் தகப்பன் இல்லை! நீட்டில் மோடியின் பங்கு எதுவுமில்லையே ஒழிய, கல்வியில் வேண்டிய குழப்பங்களை மோடி செய்துள்ளார்!

அவருடைய மும்மொழித் திட்டம் இந்தியா முழுதுக்கும் குழப்பம்!

ஆங்கிலம்- தாய்மொழி நீங்கலாக மூன்றாவது மொழியாக ஒரு குசராத்தியோ, மராத்தியோ, வங்காளியோ படிப்பது நாக்கு வழிக்கத்தான் பயன்படும்!

"யூரோ' அல்லது "பவுண்டில்' சம்பளம் வாங்குவது நல்லதா? அல்லது இந்தி மொழியை மூன்றாவது மொழியாகப் படித்து விட்டு, அகமதாபாத்தில் போய் ஆடு மேய்ப்பது நல்லதா?

என் வீட்டுக்கு நேற்றுக் கடலூர்ப் படையாச்சி மகன் வந்திருந்தான். வயது பதினேழு இருக்கும்! சாத்திரா பல்கலை.யில் விண்ணூர்தி தொழில்நுட்பம் படிக்கிறானாம்! நான்காண்டுப் படிப்பு! மொத்தம் பத்து இலட்சம் செலவாகுமாம் படிப்புக்கு மட்டும்! அம்மாவிடம் பிரெஞ்சு படித்துக் கொள்ளச் சொன்னானாம்! "எதற்கு?' என்று கேட்டார்களாம்! "மருமகளோடு நீ பேசுவதற்கு "என்றானாம்! அடி செருப்பாலே' என்றார்களாம்!

கல்வி என்பது மேட்டுக்குடிகளுக்கு ஒரு தரத்தில் இருக்கிறது! பெருவாரியான பள்ளக்குடிகளுக்கு இன்னொரு தரத்தில் இருக்கிறது! ஒரே கல்வி இரு வேறு தரத்தில்!

நம்முடைய அரசுப் பள்ளியில் எட்டாவது படிக்கிறவனுக்கு, எட்டை எட்டால் பெருக்கினால் எவ்வளவு என்று தெரியவில்லை! மாண்டேகு சேம்சுபோர்ட் பள்ளியில் அதே எட்டாவது படிக்கிறவன் "நீட்டுக்கு' இப்போதே தயாராகிறான்!

ஒரே நாட்டு மக்களுக்கு இருவேறு தரத்தில் கல்வி! கிராமம்தோறும் தனியார் பொறியியல் கல்லூரிகள்!

பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் அரசு கொடுக்கும் சலுகைச் சம்பளங்களே அவற்றிற்குப் போதும்! அங்கே சோதனைக் கூடங்கள் இருக்காது; பேருக்கு பத்து ஆசிரியர்கள் இருப்பார்கள்; அவர்களிலும் பாதி தற்காலிகமானவர்கள்; பாடங்கள் எப்போதாவது நடத்தப்படுவதுமுண்டு! ஆனால், தேர்ச்சி அடையும்படி செய்யப்பட்டு விடுவார்கள்! இது போன்ற ஒரு கல்வி இருந்தால் என்ன?, இல்லாவிட்டால் என்ன?

தமிழ்நாட்டின் இதே நிலைதான் இந்தியா முழுவதிலும்! தங்களுக்கு வழங்கப்பட்ட மேல்நிலைக் கல்வி, அதன் தேர்ச்சிச் சான்றிதழ்கள், ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை; தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வாழ்க்கை கேள்விக்குறியாகிறது என்று இளைஞர்கள் கொதிக்கிறார்கள்!

கலகம் பிறந்திருப்பது உங்களுக்கு ஆகாத தெற்கு இந்தியாவில் இல்லை!

உங்களின் நெஞ்சுக்குகந்த வடக்கு இந்தியாவில்; இந்து இந்தியாவில்; இந்தி இந்தியாவில்!

எச்சரிக்கை மணி கேட்கிறதா?

கட்டுரையாளர்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments