இளைஞர்மணி

கண்டதும் கேட்டதும் 32 - பி.லெனின்

தினமணி

பரமேஸ்ரனிடம் தற்போது உரையாடப் போவது 22 வயதான இலங்கைத் தமிழர். இவரது பெயர் செளமீகன். நான் வேலை செய்யும் BOFTA நிறுவனத்தில் ஓராண்டு இயக்குநர் படிப்பு படித்தவர். நான் பாடம் எடுக்கும்போது மிகவும் உன்னிப்பாக கவனித்து குறிப்புகளை வைத்துக் கொண்டு, நான் ஓய்வாய் இருக்கும்போதெல்லாம் என்னிடம் வந்து தன் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வார். அதோடு கூட BOFTA வில் எடுக்கும் குறும் படங்களில் நடிக்கவும் செய்தார்.
1966 ஆம் ஆண்டிலிருந்து எனக்கு AVM Lab இல் உள்ள அனைத்து தொழிலாளர்களிடமும் பரிச்சயம் இருந்தது. எனக்கு எப்போதும் இளைஞர்களுடன் இருப்பது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதன் காரணம் எந்த விஷயத்தையும் நானே செய்யாமல் இந்த இளைஞர்களுக்கு அனுபவம் வேண்டுமென்பதற்காக என்னுடன் எப்போதும் அவர்களை அழைத்துச் செல்வேன். அதனைப் போன்றுதான் AVM Lab இல் இருக்கும் பரமேஸ்வரனை சௌமீகனுடன் சென்று சந்தித்தேன்.
பரமேஸ்வரன் எதிரில் இருந்த இளம் இயக்குநர் செளமீகனைப் பார்த்தார்:
"தம்பி, உன்னைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்குது. இந்த சின்ன வயசுலேயே நீ லெனின் சாரோட சேர்ந்து இருக்குறது நீ செய்த புண்ணியம். நாங்களெல்லாம் அவரிடம் ஒழுக்கத்தை கத்துக்கினோம். சரியான மனிதராய் இல்லாட்டி அவர் கிட்டேயே சேத்துக்க மாட்டார். நீ கொடுத்து வச்சவன். அவரிடம் நெறைய நேரம் செலவு பண்ணு. நெறைய கத்துக்கோ. அவர் படிக்காத புத்தகமே இல்லைன்னு சொல்லலாம். அவரோட டிரேட் மார்க்கே தோள்ல ஒரு பை தொங்கறதுதான். அதுல அப்ப தான் வெளிவந்த புத்தகங்கள் இருக்கும். அந்த புத்தகத்தை யார் கேட்டாலும் கொடுத்துடுவாரு. அவரைப் பத்தி என்னோட பேட்டியிலே நிறைய வரும். நீ என்னைப் பேட்டி காணப் போறியா? உன் பேர் என்ன?'' என்று கேள்வியுடன் தன் பேச்சை முடித்து எதிரில் இருந்த இளம் இயக்குநர் செளமீகனைப் பார்த்தார்.
" சார் என் பெயர் செளமீகன். எனக்கு பேட்டி எல்லாம் எடுக்கத் தெரியாது. நீங்க பேசுங்க. அதை இந்த செல்லுல நான் பதிவு செய்துக்குவேன். அத சார் கிட்ட கொடுக்கறதுதான் என் வேலை'' செளமீகன் பதறிப் போய்க் கூறினார்.
"ஏன் செளமீகன் இவ்வளவு பதறுறீங்க? ஒன்று தெரியுமா? லெனின் சார் எதுக்குமே பதறினது கிடையாது. அவரோட அமைதிதான் அவரோட வீரமே. அவர் எடிட்டிங் செய்து கொண்டிருக்கும் ரூமை திறந்து கொண்டு உள்ளே போய், " சார்... கீழே விழுற ஸ்கைலாப் நம்ம லேப் மேலதான் விழப் போவுதான்னு'' சொன்னாக் கூட, " சரிப்பா நான் இந்த சீனை எடிட் செய்து முடிச்சிட்டு வர்றேன்''னு அமைதியா சொல்வாரு. அப்படிப்பட்ட குணம் அவரது. இப்ப எல்லாம் பேட்டி எடுக்குறேன் பேர்வழின்னு ஒரு மைக்க வாய் முன்னால நீட்டுறாங்க. அத மாதிரின்னு நெனைச்சேன். ஆனா ஒண்ணு சொல்லட்டுமா? இப்ப எனக்கு 92 வயசாவுது. நான் இந்த AVM Lab க்கு 12 வயசுல வந்தேன். எவ்வளவோ படங்களை செய்து கொடுத்திருக்கிறோம். ஆனா இங்கே இருந்த தொழிலாளர்களைப் பற்றி யாரும் இதுவரை வாயைத் திறந்த பேசினதே இல்ல. லெனின் சார் மூலமா இப்ப நீ தான் வந்து நிக்குற. அதுக்குக் காரணம் லெனின்சார்தான். அவர் தொழிலாளிகள் மேல் வைச்சிருக்கிற அன்பு மாதிரி இங்க தன்னை தொழிலாளிகளோட பிரதிநிதின்னு உயரமா காட்டிக்குறவங்க கிட்ட கொஞ்சமும் பார்க்க முடியாது. ஏன்னா நானும் தொழிற்சங்கம் அமைச்சி அதற்கு தலைவனா இருந்தவன்தான். எனக்கு முன்னால கண்ணப்பன் என்பவர் தலைவராய் இருந்தார். ( இவர் டைரக்டர் வி.சேகருடைய மாமனார். இவரைப் பற்றி பின்வரும் தொடரில் விவரிப்போம்)
அவர் 1985 வரை தலைவராய் இருந்த பின் நான் மீண்டும் தலைவராக ஆனேன். ஆனா நாங்க தொழிலாளர்களோட அனைத்துக் கஷ்டத்தையும் உணர்ந்து அவர்களுக்காக பாடுபட்டோம். எங்களுக்குப் பக்கபலமா லெனின் சார் இருந்தத குறிப்பிட்டுச் சொல்லணும்'' என்றார்.
செளமீகன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். அங்கு சிறிது நேரம் மெளனம் நிலவியது. நான் லேப் எதிரில் இருந்த அத்தி மர நிழலின் கீழே ஒரு சேரில் அமர்ந்து கொண்டு அவர்களைப் பார்த்தபடி அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். 
"செளமீகன் என்னோட பெயர் பரமேஸ்வரன். ஆனா எனக்கு இன்னொரு பெயர் இருக்கு தெரியுமா?'' என்று பரமேஸ்வரன் கேட்டார்.
"இன்னா சார் சொல்றீங்க? இன்னொரு பேரா... எனக்குத் தெரியாது சார். நீங்களே சொல்லிடுங்க...'' என்றார் செளமீகன்.
"என்னோட பேரு பரமேஸ்வரன். ஆனா இங்க இருக்குற எல்லா தொழிலாளர்களும் என்னைப் பொம்மாச்சின்னுதான் சொல்லுவாங்க. நேரா என்னை அந்தப் பெயர் வச்சி கூப்பிடறது இல்ல. அவங்களுக்குல்ள என்னைப் பத்திப் பேசும்போது பொம்மாச்சின்னு பேசிக்கறது எனக்குத் தெரியும்'' என்று சிரித்தபடி கூறினார்.
"சார் அப்ப உங்களைப் பரமேஸ்வரன்னு சொல்லட்டுமா? இல்ல பொம்மாச்சின்னு கூப்பிடட்டுமா?'' செளமீகன் தாழ்ந்த குரலில் அவரைப் பார்த்துக் கேட்டார்.
"பாத்தியா இததான் நான் எதிர்பார்த்தேன். நீ லெனின் சாரோட நல்ல சிஷ்யன்தான். அவரோட கிண்டல் உன்னிடமும் இருக்குதே. என்ன பொம்மாச்சியோ, பரமேஸ்வரனோ எப்படி வேணும்ன்னாலும் கூப்பிட்டுக்கோ... ஒண்ணும் தப்பில்லே'' என்று கூறினார்.
அவர்கள் இருவரும் தாத்தா பேரன் போல பேசுவதைக் கண்டு நான் சிரித்தேன். 
"செளமீகன்... நான் இந்த வேலைக்கு வரும்போது ஐந்தாவதுதான் படிச்சிட்டு இருந்தேன். இப்ப பெரிய நடிகர்கர்கள் ஆனவங்க. எல்லாம் சின்ன வயசுலேயே குடும்ப வறுமையால இந்த சினிமா வேலைக்கு வந்தவங்கன்னு நீ தெரிஞ்சுக்கோ. அது என்னமோ அந்த காலத்துல வறுமையான குடும்பத்துப் பிள்ளைகள தத்து எடுத்துக்கற நிறுவனமா இந்த சினிமா ஃபீல்ட் இருந்து இருக்குது (என் கூற்று: இப்போதும் அப்படியேதான் சினிமா எல்லாரையும் தத்து எடுத்துக் கொள்கிறது). அது போலதான் நானும் வேலைக்கு வந்தேன். முதல்ல அட்டென்டரா வேலையில சேர்ந்தேன். அப்போ AVM லேப்பும், ஸ்டுடியோவும் காரைக்குடியில் இருந்து தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருந்தது. இப்போது அது தரைமட்டமாக இருக்கிறது'' 
பரமேஸ்வரன் தன் பேச்சை நிறுத்திக் கொண்டு சில நொடிகள் கழித்து மீண்டும் பேச்சை ஆரம்பித்தார்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT