மகளிர்மணி

தொலைக்காட்சியில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுங்கள்

பல்வேறு நல்ல விஷயங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட தொலைக்காட்சி என்பது தற்போது மனிதர்களின் நேரத்தை விழுங்கும் பூதமாக உருமாறி வருகிறது.

தினமணி

பல்வேறு நல்ல விஷயங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட தொலைக்காட்சி என்பது தற்போது மனிதர்களின் நேரத்தை விழுங்கும் பூதமாக உருமாறி வருகிறது. வெறும் நேரத்தை மட்டுமல்லாமல், குழந்தைகளின் பழக்க வழக்கங்களை கூட மாற்றி விடுகிறது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களும், விளம்பரங்களும் பெரும்பாலும் குழந்தைகளையும், பெண்களையும் குறிவைத்தே படமாக்கப்படுகிறது.

நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தொலைக்காட்சி குழந்தைகளை பாதிக்கின்றது என பல பெற்றோர் புரிந்து கொள்வதே இல்லை. குழந்தைகளின் தூக்கம், எடை, படிப்பு, பழக்க வழக்கம் என பல விஷயங்களை தொலைக்காட்சிகள் பாதிக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. 2 - 5 வயதுள்ள குழந்தைகள் ஒரு வாரத்தில் 32 மணி நேரத்தை டிவியின் முன் கழிக்கின்றனர். 6-11 வயது வரையுள்ள பிள்ளைகள் ஒரு வாரத்தில் 28 மணி நேரத்தை தொலைக்காட்சியின் முன் கழிக்கின்றனர். இந்த ஆய்வு 2009ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். அப்போது குழந்தைகளுக்கான சேனல்கள் அதிகம் இல்லை. ஆனால் தற்போது ஏராளமான குழந்தைகளுக்கான சேனல்கள் வந்து விட்டன. எனவே, இந்த நேர விகிதம் தற்போது இன்னும் அதிகரித்திருக்கும் என்பதே உண்மை.

தொலைக்காட்சியினால் ஏற்படும் பலன்கள்

தற்போது ஏராளமான தகவல்களை பல தொலைக்காட்சி சேனல்கள் மாணவர்களுக்காக வழங்குகின்றன. ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிப் பாடங்களை விளக்குதல், மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் கல்வியாளர்களைக் கொண்டு பதிலளிக்கும் வகையிலான நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், வினாடி-வினா நிகழ்ச்சிகள் என நல்ல பயனுள்ள பல நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. கடைகளில் தற்போது ஏராளமான கற்பித்தல் சி.டி.க்கள் வந்துள்ளன. குழந்தைகளுக்கு எழுதுதல் முதல் பாடல், கதைகள் என எல்லாவற்றிற்கும் சி.டி.க்கள் வந்துவிட்டன. இவற்றை போட்டுக் காண்பித்தால் குழந்தைகள் எளிதில் அவற்றை கற்றுக் கொள்ளும். நல்ல பொழுதுபோக்கு சாதனமாகவும், பொது அறிவினை வளர்த்துக் கொள்ளவும், விளையாட்டு, உடல்நலம், சமையல் என பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளவும் தொலலைக்காட்சி உதவுகிறது.

பாடுவதிலும், ஆடுவதிலும், சமைப்பதிலும் திறமை பெற்றவர்களை வெளியுலகிற்கு தெரிய வைக்கவும் தற்போது டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் உதவுகின்றன. ஏராளமான தொலைக்காட்சி அலைவரிசைகள் இருப்பதால் மறைமுகமாக பலருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுகின்றது. மன அழுத்தம், கோபம் ஆகியவற்றில் இருந்து தொலைக்காட்சி விடுதலை அளிக்கிறது.

ஆனால், இதை எல்லாம் விட ஏராளமான பாதிப்புகளை குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறது தொலைக்காட்சி என்பதே நமது குற்றச்சாட்டு.

குழந்தைகளை சோம்பேறியாக்குகிறது

குழந்தைகள் மாலையில் வெளியில் சென்று விளையாடுவதை விட்டுவிட்டு, அவர்களது விருப்பமான ஜாக்கி சான் நிகழ்ச்சியையோ, வேறு ஏதேனும் நிகழ்ச்சியையோ பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்களது உடல் சுறுசுறுப்பை இழந்துவிடுகிறது. அவர்களது அன்றாடப் பணிகளைக் கூடச் செய்யாமல் டிவி முன்பு அமர்ந்து பெற்றோரிடம் திட்டு வாங்காத குழந்தைகளே இல்லை என்று கூறலாம்.

ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் விளம்பரங்கள்

ஒரு குழந்தை ஒவ்வொரு ஆண்டும் 1000 விதமான தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்க்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. பெரும்பாலும் உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர்பானங்களும், நொறுக்குத் தீணி நிறுவனங்களும் கொடுக்கும் விளம்பரத்தைப் பார்த்து அவற்றை சாப்பிட விரும்புகின்றனர். இதனால் அவர்களது உடல்நிலை கெடுகிறது.

ஒரே இடத்தில் உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே நொறுக்குத் தீணியை உண்பதால் உடல் பருமன், விளம்பரத்தைப் பார்த்து கண்டதையும் சாப்பிடுவதால் சத்துணவு பற்றாக்குறை, தொலைக்காட்சியை மிக அருகில் பார்ப்பதால் கண் பார்வை குறைபாடு, எந்த சிந்தனையும் இன்றி தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே இருந்தால் மூளை வளர்ச்சி குறைவது, ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது அதை கவனிக்க இயலாமை, பேய், பாம்பு படங்களைப் பார்ப்பதால் அதன் மீதான பயம், இறவில் மிகக் கொடூரமான படங்களைப் பார்ப்பதால் தூக்கம் இழந்து தவித்தல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.

மன அளவில் பாதிப்பு

சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் குழந்தைகளின் மனதில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தற்போது தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறிய பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து அவர்களது வாழ்க்கையை தொடராக ஒளிபரப்புகின்றனர். இது நிச்சயமாக அவ்வயது உள்ள குழந்தைகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும். இதேப்போல, ஒரு வயதான பெண் இறந்து, அவர்களது குடும்பத்தில் குழந்தையாக பிறப்பது போல காண்பிக்கும் தொடரில், சிறு குழந்தையை பெரிய பெண்ணைப் போல பேச வைத்து அந்த குடும்பமே அந்த குழந்தையை மதிப்பதும், குழந்தைகளின் மனதில் தேவையில்லாத சிந்தனைகளை வளர்க்கும்.

பொதுவாக தொலைக்காட்சியில் பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை அதிகமாக பாதிக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. எனவே நாம் பார்க்கும் தொடர்கள் கூட குழந்தைகளை எந்த வகையிலும் பாதிக்கலாம் என்பதை தாய்மார்கள் அறிந்திருக்க வேண்டும்.

குடும்ப உறவு பாதித்தல்

குடும்பத்தில் அனைவரும் தொலைக்காட்சியை பார்ப்பதால், ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவது, உரையாடுவது போன்ற நிகழ்வுகள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் குடும்ப ஒற்றுமை குறைகிறது. குடும்ப உறுப்பினர் ஒருவர் ஏதேனும் தவறான வழியில் சென்றாலும், அது மற்றவர்களுக்குத் தெரியாத நிலை ஏற்படுகிறது. ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, அரட்டை அடிப்பது போன்றவை இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் குறைந்துவிட்டது. ஒருவர் தனது விருப்பமான நிகழ்ச்சி போடும் போது சாப்பிட மறுப்பது, மற்றவர்கள் சாப்பிடுவது, ஒரே சமயத்தில் வெவ்வேறு சானல்களில் போடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க குடும்பத்தாரிடையே சண்டை ஏற்படுவது என பல பிரச்சினைகளை தொலைக்காட்சி ஏற்படுத்துகிறது.

பிரச்சினைகள் ஏற்பட்டுவிட்டன. இனி அதில் இருந்து விடுபட என்ன வழி என்பதை பார்க்க வேண்டும். ஒரேயடியாக தொலைக்காட்சியை பார்க்காமல் இருப்பது என்பது இயலாத விஷயம். அது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடும். அவ்வாறு இல்லாமல், குறிப்பிட்ட சில நேரத்தை மட்டும் ஒதுக்கி தொலைக்காட்சியை பார்க்க அனுமதிப்பதுதான் சிறந்த வழி. குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்து வெளியில் சென்று விளையாடிவிட்டு, வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு ஒரு சில மணி நேரம் டிவி பார்க்க அனுமதிக்கலாம். அதுவும் நல்ல நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்து பார்க்க வைக்கலாம். நாம் சொல்வதை எந்த பிள்ளை கேட்கிறது என்று பெற்றோர் கூறுவார்கள். ஆனால் அதற்கு நாம்தான் வழிகாண வேண்டும். பள்ளியில் இருந்து வரும் பிள்ளையுடன் பெற்றோர் கொஞ்ச நேரம் விளையாட செல்ல வேண்டும் அல்லது அவர்களது நண்பர்களுடன் விளையாட அனுமதிக்க வேண்டும்.

வீட்டுப் பாடங்களை எழுத நேரம் கொடுத்து விட்டு பிறகு தொலைக்காட்சியின் முன்பு அமரலாம். அவர்களை டிவி பார்க்கக் கூடாது என்று கூறிவிட்டு எப்போதும் நீங்கள் டிவி முன்பு அமர்ந்திருந்தால், அவர்களது கேள்விக் கணைகளுக்கு ஆளாக நேரிடும். எனவே, குழந்தைகளுக்காக நீங்களும் சிலவற்றை தியாகம் செய்து தான் ஆக வேண்டும். அவர்களுக்கு பயனுள்ள  அல்லது நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதியுங்கள். நீங்களும் அவற்றையே பாருங்கள். தொலைக்காட்சி தொடர்களில் உங்கள் நேரத்தை சாகடிக்காமல், அவர்களுடன் உரையாடுங்கள். பள்ளியில் நடந்தவற்றை பேசுங்கள். அவர்களது பழக்க வழக்கத்தை முறைப்படுத்துங்கள்.

இரவில் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். நிச்சயமாக அப்போது தொலைக்காட்சி இயங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். அனைவரும், உணவையும், உறவையும் மட்டுமே நினைத்துக் கொண்டு சாப்பிடும் வகையிலான முறையை ஏற்படுத்துங்கள்.

சில விரும்பத்தகாத சேனல்களை டிவியில் ஒளிபரப்பாகாத வகையில் தடை செய்து விடுங்கள், தொலைக்காட்சியைப் பார்த்து பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான மறைமுகமான பதிலை கூறுங்கள். ஏன் அதையெல்லாம் கேட்கிறாய், அதைப் பற்றி பேசக் கூடாது என்று சொல்லாதீர்கள். உங்களிடம் கிடைக்காத பதிலை பிள்ளைகள் வெளியில் தேட ஆரம்பித்தால் பிரச்னைதான் ஏற்படும். எனவே, அவர்களது கேள்விக்கு நிறைவான பதிலை அது செக்ஸ் பற்றியதாக இருந்தாலும் சரி மறைமுகமாக கூறுங்கள்.

அவர்கள் விரும்பும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சரியானவை அல்ல என்று நீங்கள் நினைத்தால் அது பற்றி பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசி புரிய வையுங்கள். அதற்காக திட்டுவதால், அவர்களுக்கு உங்கள் மீது கோபம்தான் வருமேத் தவிர, அந்த நிகழ்ச்சி தவறானது என்ற எண்ணம் வராது.

எனவே, தொலைக்காட்சியை வீட்டின் ஒரு மூலையில் வையுங்கள். அது பொழுதுபோக்கு சாதனமாக மட்டும் இருக்கட்டும். அதை விடுத்து, அது வீட்டின் நடுக் கூடத்துக்கு வந்து உங்கள் வீட்டின் செல்லப் பிள்ளையாக விட வேண்டாம் என்பதே இந்த கட்டுரையின் மூலம் சொல்ல விரும்புவது.

நாங்கள் சொல்வது சரிதானே...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் அருகே தாய், மகன் தற்கொலை

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

முன்னாள் ராணுவ வீரா் மீது ஆட்டோ ஓட்டுநா்கள் தாக்குதல்

திண்டுக்கல்லில் 80 மி.மீ. மழை

தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT