மகளிர்மணி

மனநோய் குணமடைய எளிய வழி! எஸ். வந்தனா பதிலளிக்கிறார்

மன நோயும் மற்ற நோய்களைப் போன்றதுதான். மனநோயில் பல வகைகள் உண்டு. மனநோய் பற்றி நான் முன்பு வந்த இதழ்களில் விளக்கமாகக் கூறியுள்ளேன்.

தினமணி

மனநோய் உள்ளவர்களுடன் இருந்தால் எனக்கும் மனநோய் வருமோ என்று பயமாக இருக்கிறது. அவர்களுடன் பழகுவதற்கு அச்சமாக இருக்கிறது. நான் வசிக்கும் சூழல் அப்படியானதாக உள்ளது. இந்த எண்ணம் சரியா? தவறா? விளக்குங்கள்! 
-  தாமரைச்செல்வி, சென்னை-87.
மன நோயும் மற்ற நோய்களைப் போன்றதுதான். மனநோயில் பல வகைகள் உண்டு. மனநோய் பற்றி நான் முன்பு வந்த இதழ்களில் விளக்கமாகக் கூறியுள்ளேன். பொதுவாக மனநோய் உள்ளவர்களை நம்மால் அறிய முடியாது. ஆனால், உடம்பு சம்பந்தப்பட்ட நோய்களை எளிதில் அறிய முடியும். உதாரணமாக, காய்ச்சல்-காயம் போன்ற உடல் பிரச்னை உள்ளவர்களை நாம் எப்படி பார்த்துக் கொள்கிறோம்? அதேபோன்றுதான் மனநோய் உள்ளவர்களையும் பார்த்துக் கொள்ள வேண்டும். மனநோய் வருவதற்குப் பல காரணங்கள் உண்டு. மரபு வழியாகவும், சுற்றுச்சூழல் மூலமாகவும், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களாலும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. மனநோய் என்பது தொற்றுநோய் அல்ல. மனநோய் உள்ளவர்களுடன் இருந்தால் எனக்கும் மனநோய் வருமோ என்ற எண்ணம் தவறானது. பொதுவாக மன நோய் உள்ளவர்களை ஊடகங்களிலும், நாடகங்களிலும் மிகைப்படுத்திக் காட்டுவது போன்று இவர்கள் இருக்கமாட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்த முறையில் அவர்கள் தங்களுடைய உணர்வுகள், கோபங்கள், ஆசைகளை வெளிப்படுத்துவார்கள். மனநோய் உள்ளவர்களுடன் இருக்கும்போது மற்றவர்களும் அவ்வாறு செய்வார்கள் என்பது கிடையாது. மனநோய் உள்ளவர்களிடம் நாம் அன்பாகவும், அக்கறையுடனும், பாசமாகவும் பேசும்போது அவர்கள் நடவடிக்கையில் நிச்சயமாக மாற்றம் வரும். சீக்கிரமாக அவர்கள் குணமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன.

மேடம்! "ஒபிசிடி' என்பதன் விரிவாக்கம் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? இதற்கான சிகிச்சை முறைகள் பற்றி விளக்கம் தருவீர்களா?
- ஜி.ஆர்.ராகவன், காகிதபுரம், கரூர்.
ஒபிசிடி என்பது உடல் பருமன் ஏற்படுதலைக் குறிப்பது. தற்பொழுது WHO அறிக்கையின் படி உலகில் வேகமாகப் பெருகிவரும் ஆபத்தான ஒன்று உடல் பருமன் என்னும் ஒபிசிடி. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடியது. அதிகப்படியான உணவு உட்கொள்ளுவதால் ஏற்படுகிறது என்பது உண்மை அல்ல. அவற்றிற்கு நிறைய காரணங்கள் உண்டு. நமது சுற்றுச்சூழல், பரம்பரை, உடல்வாகு, உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, நொறுக்குதீனி, எப்பொழுதும் படுக்கையில் கிடப்பது போன்றவற்றால் உடல் அளவிலும், மன அளவிலும் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. உடல் பருமனால் உடல் அளவில் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, இதயநோய், மார்பகப் புற்றுநோய், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஏற்படுகிறது. மனஅளவில் மனச் சோர்வு, மன அழுத்தம், சுய மதிப்பீடு குறைவு, சமூகத்திலிருந்து விலகித் தனிமையை நாடுதல், கூட்டு வலி, தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சி போன்றவை ஏற்படுகிறது. உடல் பருமன் என்பது நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக்கூடிய ஒன்று. உடல் பருமன் குறையும்போது, மனமும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் பருமன் குறைய உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, தேவையில்லாத கவலையைத் தவிர்த்தல், இத்துடன், மனதிற்கு ஓய்வும் (RELAXATION) மிக முக்கியம். இவற்றைத் தொடர்ந்து செய்யும்போது உடல் பருமன் குறைந்து மாற்றம் ஏற்படத் தொடங்கும்.

என்னுடைய தந்தைக்கு வயது 60. தற்போது, அவரால் எதையும் நினைவில் வைக்க முடியவில்லை. அவருடைய மறதியினால் எனக்கும் என் மனைவிக்கும் நிறைய பிரச்னைகள் வருகின்றன. நான் என்ன செய்வது?  
- தமிழ்மணி, கன்னியாகுமரி.
மறதி என்பது அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால், வயதானவர்களுக்கு டிமென்ஷியா (DEMENTIA) அதிகமாக இருக்கும். டிமென்ஷியா என்பது மூளையில் ஏற்படும் பாதிப்பு. மூளையில் இருக்கும் அணுக்கள் சிறிது சிறிதாக குறையும்போது மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது. அப்பொழுது அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது. ஞாபக மறதி, கவனமின்மை, முடிவெடுத்தலில் பிரச்னை, அதிக யோசனை, குழப்பமான எண்ணங்கள், பேசுவதில் பிரச்னை, பார்ப்பதில் பிரச்னை, தூக்கமின்மை, புரிந்து கொள்வதில் பிரச்னை போன்றவை ஏற்படுகின்றன. இது நரம்பியல் சம்பந்தப்பட்ட ஒரு நோய். அதனால் அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் தாமதமாக இருக்கும். இவை வருவதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. அவைகளில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு (THYROID), ஊட்டச்சத்துக் குறைவு போன்றவை முதலில் ஏற்படுகிறது. அதனால் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்குப் பிரச்னை ஏற்படுகிறது. இவ்வாறு உள்ளவர்களுக்கு தங்களைப் பற்றிய நினைவுகளும், மற்றவர்களைப் பற்றிய நினைவுகளும் போகப் போக குறையும். அவ்வப்போது அவர்களுக்கு மனஅழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் போன்றவை வரலாம். இவற்றை சிகிச்சையின் மூலம் கட்டுப்படுத்த முடியும். அவர்களைப் பற்றி குடும்பத்தில் உள்ள நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  இவற்றில் இருந்து அவர்கள் விடுபட அவர்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் தேவை. முக்கியமாக, சுற்றுச் சூழலிலும், சமூக வலைத் தளங்களிலும், உடற்பயிற்சியிலும், அறிவாற்றல் பயிற்சி (cognitive Training) மற்றும் அறிவு சார்ந்த விளையாட்டிலும் ஈடுபடுவதால் நிறைய மாற்றம் ஏற்படும். இவ்வாறு மாற்றம் ஏற்படும் போது அவர்கள் நடவடிக்கையிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்த்துகள்!
(நிறைவு)
- ரவி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி: அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தோ்வு

டிராக்டா் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

காரிலிருந்த ரூ. ஒரு லட்சம் நூதன முறையில் திருட்டு

மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT