மகளிர்மணி

"ஃபோர்ப்ஸ்' பட்டியல் சென்னைப் பெண்!

அமெரிக்காவிலிருந்து பிரசுரமாகும் "ஃபோர்ப்ஸ்' இதழ், மாதம் இருமுறை வெளிவருகிறது. வர்த்தகம், தொழில், முதலீடு, விற்பனை, உடல்நலம் முதலான விஷயங்களுடன்,

கண்ணம்மா பாரதி

அமெரிக்காவிலிருந்து பிரசுரமாகும் "ஃபோர்ப்ஸ்' இதழ், மாதம் இருமுறை வெளிவருகிறது. வர்த்தகம், தொழில், முதலீடு, விற்பனை, உடல்நலம் முதலான விஷயங்களுடன், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை திறமையின், தரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து பட்டியல்களை ஆண்டுதோறும் வெளியிட்டும் வருகிறது.
பல்வேறு பிரிவுகளில் சுமார் 30 பட்டியல்களை "ஃபோர்ப்ஸ்' இதழ் வெளியிட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் "உலகின் பெரும் பணக்காரர்கள்' பட்டியல். இதில் முகேஷ் அம்பானி வழக்கமாக இடம் பிடிப்பார். தென்னகத்திலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் இடம் பிடிப்பது அபூர்வத்திலும் அபூர்வம். 
"ஃபோர்ப்ஸ்' பட்டியலில் இடம் பெறுவது என்பது ஒருவருக்கு பெருமை, கெளரவம் தரும் விஷயம். "ஒரு கனவு நனவானது' என்று சொல்வார்களே அது மாதிரி! 
இந்த இதழில் சாதனைப் படைத்த "முப்பது வயதுக்குள் முப்பது பேர் " என்ற பட்டியலில், சென்னையைச் சேர்ந்த அக்ஷயா சண்முகம் "உடல்நலம் பேணும்' பிரிவில் "புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர்' வரிசையில் இடம் பிடித்துள்ளார் என்பது "பிரேக்கிங் நியூஸ்'. 
இருபத்தொன்பது வயதாகும் அக்ஷயா அமெரிக்காவில் செயல்படும் "லூம் லேப்ஸ்' நிறுவனத்தின் தலைமை அதிகாரி. "முப்பது வயதுக்குள் முப்பது பேர்' பட்டியலில் அக்ஷயாவை "ஃபோர்ப்ஸ்' இதழ் சேர்த்துக் கொண்டுள்ளது. இந்தப் பட்டியல் நவம்பர் 15-இல் வெளியானது. 
பட்டியலில் இடம் கிடைக்க அக்ஷயா அப்படி என்ன சாதனை புரிந்தார்?
அவரே விளக்குகிறார்:
""சென்னையில், மின்சார பொறியியல் பாடத்தில் பட்டப்படிப்பு முடித்ததும் முதுநிலைப் படிப்பு படிக்கவும் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளவும் அமெரிக்காவில் 2009 -இல் மஸாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். தீர்மானித்தபடியே, பிஎச்டியும் முடித்தேன்.
உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் ஒரே சமயத்தில் தீங்கு விளைவிக்கும் புகைப்பிடித்தல், போதைப் பொருள்கள் பயன்படுத்துதலை நிறுத்த ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அந்தச் சிந்தனையின் வெளிப்பாடாக ஒரு மென்பெருளைக் கண்டுபிடித்ததற்காக "ஃபோர்ப்ஸ்' பட்டியலில் எனக்கு இடம் கிடைத்துள்ளது.
அமெரிக்காவுக்கு சென்ற பிறகு 2015-இல் "லூம் லேப்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தேன். புகைப்பிடிப்பவர்களில் சிலர் அந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், புகைப்பிடிக்க வேண்டும் என்ற உந்துதல் வரும் போது அதற்கு அடிபணிந்து புகைப்பிடிப்பார்கள். அந்தத் தருணங்களில் "வேண்டாம்' என்ற அறிவுறுத்தல் இருந்தால் புகைப்பிடிப்பதைத் தள்ளிப் போட முடியும். 
புகைப்பிடிப்பவர்களின் மனதில் புகைப்பிடிக்க வேண்டும் என்ற உந்துதல் எப்படி, எந்த நேரத்தில் உருவாகிறது? புகைப்பிடிக்க வேண்டும் என்ற உந்துதல் வரும்போது "வேண்டாம்' என்று எச்சரிக்கும் எலெக்ட்ரானிக் கருவியைக் கண்டு பிடிப்பதில் ஈடுபட்டேன். ஏறக்குறைய "ஸ்மார்ட் வாட்ச்' மாதிரி இருக்கும் அந்தக் கருவியை அணிந்து கொள்ளலாம். இந்தக் கருவியைக் கண்டுபிடிக்கத் தேவையான நிதி உதவிகளை "உடல்நலத்துக்கான தேசிய அமைப்பு' செய்தது. 
கைக் கடிகாரம் போல் தோற்றத்தைக் கொண்டிருக்கும் இந்தக் கருவியைப் புகைப்பிடிப்பவர்கள் இரண்டு வாரம் அணிந்து கொள்ள வேண்டும். இந்தக் கருவி நடத்தும் ஆய்வில், புகைப்பிடிப்பவர் அன்றாடம் நடந்து கொள்ளும் விதம், யார் யாருடன் பழகுகிறார், கலந்துரையாடுகிறார், எந்த நேரங்களில் அல்லது தருணங்களில் புகைப்பிடிக்கிறார், புகைப்பிடித்தலில் உள்ள கால இடைவெளி அவரது உளவியல் தொடர்பான விஷயங்களையும் இந்தக் கருவி பதிவு செய்யும்.
இந்தப் பதிவுகளை அடிப்படையாக வைத்து "புகைப்பிடிக்க வேண்டும்' என்ற உந்துதல் எழுப்பும் உணர்வுகள் தோன்ற ஆரம்பிக்கும் அடையாளங்களைப் புரிந்துகொண்டு, புகைப்பிடிக்க வேண்டும் என்ற உந்துதல் தோன்றுவதற்கு ஆறு நிமிடங்களுக்கு முன்பே "சிகரெட் பற்ற வைக்க வேண்டாம்' என்று எச்சரிக்கை ஒலி எழுப்பும். புகைப்பிடித்தலை நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர் இந்த எச்சரிக்கை ஒலியைக் கேட்டதும் சிகரெட் பிடிக்க வேண்டாம் என்று தவிர்ப்பார். 
இந்தக் கருவி முறையாகச் செயல்பட மென்பொருள் ஒன்றை நான் உருவாக்கியிருக்கிறேன். இந்தக் கருவி அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும். வியக்க வைக்கும் சாதனையாளர்கள் மட்டுமே "ஃபோர்ப்ஸ்' பட்டியலில் இடம் பெறுவர். அந்தப் பட்டியலில் நான் இடம் பெற்றிருப்பது மிகப் பெரிய அதிர்ஷ்டம், பெருமை'' என்கிறார் அக்ஷயா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT