பணிக்குப் போகும் பெண்கள் பிரசவ காலத்தில் விடுப்பு எடுக்க வேண்டிவரும். இது தவிர்க்கமுடியாத கட்டாயம். அதனால் மாநில மத்திய அரசுகளும், தனியார் நிறுவனங்களும் பேறுகால விடுமுறையை மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை அளிக்கின்றன. குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள மத்திய அரசு பெண் ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தில் நீண்ட நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் அனுமதித்துள்ளது. ஆக, பேறு கால விடுமுறை உலகளாவிய நிலையில் எல்லா நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படும் மரபு. பேறு கால விடுமுறை நாட்கள் நாட்டுக்கு நாடு கூடலாம் குறையலாம். இந்த மரபு நியூஸிலாந்திற்கும் பொருந்தும் தானே ..!
""நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன். முப்பத்தெட்டு வயதாகும் ஜெசிந்தா பேறுகாலத்திற்கு போவதற்காக வெறும் ஆறு வாரம் விடுப்பு எடுத்தார். விடுப்பில் போகுமுன் நியூசிலாந்து அரசு நிர்வாகப் பொறுப்பை துணை பிரதமரான வின்ஸ்டன் பீட்டர்ஸ் கவனிக்க வேண்டும் என்று பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு சென்றார். சென்ற ஜூன் 21- இ ல் ஜெசிந்தா முதன் முதலாகத் தாயானார். பிறந்தது மகள். பெயர் நேவே டே அரோஹா இந்த பிரசவத்தின் மூலம், "உலக நாடுகளில், பிரதமராக இருக்கும் போது தாயான "இரண்டாவது பிரதமர்' என்ற பெருமை ஜெசிந்தாவை வந்தடைந்துள்ளது. உலகிலேயே பிரதமர் பதவி வகிக்கும் போது தாயான முதல் பிரதமர் பாகிஸ்தானின் பேநசீர் புட்டோ ஆவார். அவரும் முதலாவதாக மகளைப் பெற்றெடுத்தார்.
நியூசிலாந்தின் நாடாளுமன்றம் இருப்பது வெலிங்டன் நகரில். ஜெசிந்தாவின் சொந்த வீடு இருப்பது ஆக்லாந்தில். மகள் நேவே பிறந்ததிற்குப் பிறகு தனது சொந்த வீட்டிற்குச் சென்ற ஜெசிந்தா அங்கே சில வாரங்கள் தங்கியிருந்தார். மகப்பேறு விடுமுறை காலத்திலும் துணைப் பிரதமருக்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்கிவந்த ஜெசிந்தா, விடுமுறை முடிந்ததும் பிரதமர் பணியில் சேருவதற்காக வெலிங்டன் திரும்பியுள்ளார்.
ஜெசிந்தாவின் கணவரான கிளார்க் கைபோர்ட், தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணிபுரிகிறார்.
ஜெசிந்தாவின் வாழ்க்கையில் திருப்பம் இங்கேதான் ஏற்பட்டுள்ளது.
குழந்தை பிறந்து சில வாரங்களே ஆகியிருக்கும் போது, ஜெசிந்தா பிரதமராக தனது அலுவலகம் சென்று விட்டால், சிசுவை யார் கவனித்துக் கொள்வது..?
"ஜெசிந்தா நாட்டைக் கவனித்துக் கொள்... நான் வீட்டில் இருந்து மகளைக் கவனித்துக் கொள்கிறேன்.. மகளைக் குறித்து நீ கவலைப்பட வேண்டாம்' என்று கிளார்க் சொல்லிவிட்டார்.
"இப்படி ஒரு கணவன் கிடைக்க நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்..' என்று கணவனை பெருமையுடன் பேச, பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். "எனது ஒவ்வொரு விஷயத்திலும் கணவர் கிளார்க் எனக்கு ஆதரவாக துணையாக நிற்கிறார்.
ஒரு குழந்தைக்கு நாங்கள் பெற்றோர் ஆனதும், தனது பங்கை நிறைவேற்ற தனது பணியை விட்டு தற்காலிகமாக ஒதுங்கிக் கொண்டு, குழந்தைக்காக தனது முழு நேரத்தையும் ஒதுக்கியிருக்கிறார்' என்று ஒரு பேட்டியில் ஜெசிந்தா தனது கணவர் குறித்து பதிவு செய்திருக்கிறார்''. இவர்கள் உண்மையில் வித்தியாசமான கணவன் மனைவி தானே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.