மகளிர்மணி

ஷில்பாவின் புதிய "செயலி'

DIN

நாற்பத்தெட்டு வயதிலும் உடலைக் கட்டமைப்புடன் வைத்துக் கொள்வதில் குறிப்பிட்டுச் சொல்லப்படுபவர் ரம்யா கிருஷ்ணன். இன்னொருவர் மும்பை படவுலகின் ஷில்பா ஷெட்டி. வயது நாற்பத்திநான்கு என்றாலும் யோகா உடல் பயிற்சி, நடனம் என்று பிசியாக இருப்பதால் "ஆண்டுதோறும் கூடும் வயதைத் தூரப் போ' என்று சொல்லி வயதை ஆண்டுதோறும் குறைத்துக் கொண்டிருப்பவர் ஷில்பா ஷெட்டி. 
இந்திய நடிகைகளில் யாரும் செய்யாத புதுமையை ஷில்பா சாதனையாகச் செய்திருக்கிறார். 
நடிகை, முதலீட்டாளர், தொழில் முனைவர், சின்னத்திரை கலைஞர், யோகா பயிற்சியாளர், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் உணவு ஆலோசகர் என்று பன்முகங்கள் கொண்டிருக்கும் ஷில்பா சமீபத்தில் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் பயிற்சிகள், சத்தான உணவுகள் பற்றிய விளக்கம் அடங்கிய செயலி ஒன்றையும் அறிமுகம் செய்திருக்கிறார். 
"உடல் பயிற்சி, உடலை அழகாக வடிவமாக வைத்துக் கொள்வதில் எனக்கிருக்கும் ஆழ்ந்த அனுபவத்தின் வெளிப்பாடுதான் இந்த செயலி. இன்றைய டிஜிட்டல் கால கட்டத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கும். இந்த செயலியால் அனைவரும் குறிப்பாகப் பெண்கள் பயன் பெறலாம் நான் கியாரண்டி.
எல்லாம் நான் எனக்காக தேடித் தேடி படித்தவை. சொந்தமாகச் செய்து பார்த்தவை. சரியென அனுபவபூர்வமாக உறுதி செய்தவை. சந்தேகம் என்றால் என்னை ஒருதரம் பாருங்கள். உண்மையென்று உணர்வீர்கள்' என்கிறார் ஷில்பா.
உழைப்பு அனுபவம் இவற்றின் மூலம் உருவான செயலிக்கு "ஷில்பா ஷெட்டி ஆப்' என்று பெயர் சூட்டியிருக்கிறார். தற்சமயம் "iOS' தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த ஆப் விரைவில் கூகிள் ப்ளே ஸ்டோரிலும் வெளியாகும். இந்த "ஆப்'பில் 15 வழிகாட்டிகளும், 21 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் யுக்திகளும் பயிற்சிகளும் உண்டு. 
தினமும் செய்யும் யோகா பயிற்சிகளும், தொப்பை குறைய, பிரசவத்திற்குப் பிறகு உடல் பருமனாகிவிட்டால் உடலை எப்படி குறைப்பது குறித்த பயிற்சிகளும் ஆப்பில் அடக்கம். வெளியான சில நாட்களில் உடல் கட்டுக்கோப்பு குறித்த "ஆப்'களில் ஷில்பாவின் ஆப் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 
"இந்த ஆப்பை வெளியிட்டிருப்பதன் முக்கிய லட்சியம், நான் பெற்ற உடல் நன்மைகளை அனைவரும் பெற்று நோய் நொடியின்றி உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதுதான். கடந்த சில ஆண்டுகளாகவே உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்த யோசனைகளை, புத்தகமாக, குறுந்தகடுகளாக, காணொளியாக நான் வெளியிட்டு வருகிறேன். யூ டியூபிலும் எனக்கு சேனல் உள்ளது. அதன் நீட்சியே இந்த ஆப். இதில் ராக்கெட் அறிவியல் இல்லை. உண்மைதான். அதே சமயம் உடல் விஞ்ஞானம் உள்ளது. என்னைப் பார்ப்பவர்கள் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். சருமத்தை எப்படி பராமரிப்பது என்று கேட்கிறார்கள். நான் அனுபவத்தில் உணர்ந்து கொண்டதை, என்மேல் பரிசோதித்து உண்மை என்று கண்டு கொண்டதை அனைவருக்கும் சொல்வது என்று தீர்மானித்தேன். இந்த முயற்சியில் எனது அனுபவம், நேரம், பணத்தை முதலீடு செய்துள்ளேன். 
ஆப் வெளியிட்ட கையோடு, ஷில்பா இன்னொரு அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
"பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கப் போகிறேன்' என்ற அறிவிப்புதான் அது. கடந்த பதினொரு ஆண்டுகளாக ஷில்பா படங்களில் நடிக்கவில்லை என்றாலும், தனியார் சேனல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களின் கவனங்களைப் பெற்று வந்திருக்கிறார். 
"தற்போது, மீண்டும் பெரிய திரையில் பிரவேசம். கையில் மூன்று திரைக்கதைகள் எனது பரிசீலனையில் இருக்கின்றன. திருமணம் ஆன புதிதில் மனைவியாக, பிறகு கணவருடன் சேர்ந்து பல்வேறு பிஸினஸ்களில் முதலீட்டாளராக, பிறகு மகனுக்குத் தாயாக என்று பல அவதாரங்கள். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் அந்தந்த பொறுப்பு எனக்கு முக்கியமாகப்பட்டது. மகனுக்கு ஏழு வயதாகிறது . இந்த காலகட்டத்தில் திரைப்படங்களில் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. நடிக்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்படவும் இல்லை. இப்போது எனக்கு நேரம் நிறையக் கிடைக்கிறது. அதனால் தான் மீண்டும் படங்களில் நடிப்பது என்கிற முடிவு." 
"நான் 17 வயதில் நடிக்க வந்துவிட்டேன். 32 வயதில் திருமணம். குழந்தை பெற்றுக் கொண்டு செட்டில் ஆக வேண்டும் என்று தீர்மானித்தபோது திருமணம் செய்து கொண்டேன். திருமணம், நான் திரைப்பட உலகில் உச்சத்தில் இருந்த போது நடந்தது. 
சினிமாவா? திருமணமா? என்று நண்பர் குந்த்ரா கேட்டபோது .. அவரையே திருமணம் செய்து கொண்டேன். சினிமாவுக்கு முழுக்குப் போட்டேன். தற்சமயம் மீண்டும் நடிக்க வருவதில் கணவருக்கு சம்மதம்தான். அவர் இன்றைக்கும் சிநேகிதராகவே பழகுகிறார்'' என்கிறார் ஷில்பா.
- கண்ணம்மா பாரதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT