FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ருசிக்கலாம் வாங்க!

யோகாம்பாள் சுந்தர். சென்னை திருவான்மியூரில் வசிக்கிறார். விளையாட்டுப் போல ஆரம்பித்த இவருடைய யூடியூப் சமையல் நிகழ்ச்சிக்கு விறுவிறு என்று பார்வையாளர்கள் பெருகி, இன்று ஐந்து லட்சத்தைத் தாண்டிவிட்டது.

1 பிப்ரவரி 2024, 1:39 pm IST
பகிர்:

யோகாம்பாள் சுந்தர். சென்னை திருவான்மியூரில் வசிக்கிறார். விளையாட்டுப் போல ஆரம்பித்த இவருடைய யூடியூப் சமையல் நிகழ்ச்சிக்கு விறுவிறு என்று பார்வையாளர்கள் பெருகி, இன்று ஐந்து லட்சத்தைத் தாண்டிவிட்டது. அவரது அனுபவங்களையும், வெற்றி ரகசியத்தையும் அவரிடமே கேட்போம்:

உங்கள் குடும்பப் பின்னணி பற்றி?

எங்களுக்குப் பூர்வீகம் மன்னார்குடி என்றாலும், நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். பதினேழு வயதில் எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. நம் பாரம்பரிய சமையல் இதர வீட்டு வேலைகள் எல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், புகுந்த வீடான மும்பைக்குப் போனபோது, அங்கே மக்களின் உணவு முறை, மின்சார ரயில் சார்ந்த மக்களின் வாழ்க்கை, காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடும் மக்கள் எல்லாமே எனக்கு புதுசாக இருந்தது. அங்கே, எனது கணவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஏராளமான நண்பர்கள்; உறவினர்கள், அலுவலக சகாக்கள். வார நாட்களில் ஒரே பரபரப்பு என்றால், ஞாயிற்றுக் கிழமைகள் மிகவும் ஜாலியாக பொழுது போகும்; நண்பர்கள், உறவினர்கள் வருவார்கள். அவர்களுக்கு மதிய உணவு, மாலை டிபன், இரவு டின்னர் என்று நான் சமைப்பேன். தென்னிந்திய உணவு வகைகள் மட்டுமில்லாமல், அவர்களுக்குப் பிடிக்கும் என்று வட இந்திய ஐட்டங்களையும் செய்யக் கற்றுக் கொண்டேன். இயற்கையாகவே எனக்கு அமைந்த கைமணம் காரணமாக, என் சமையலை எல்லோரும் ருசித்து, ரசித்து சாப்பிட்டார்கள். ஏற்கெனவே வந்த நண்பர்கள், உறவினர்கள் அடுத்த முறை வரும்போது, அவர்கள் முந்தைய முறை வந்தபோது சாப்பிடாத ஐட்டம் ஏதாவது சமைத்துப் போடவேண்டும் என்று ஆர்வத்துடன் பலரிடமும் புதுப்புது சமையல் குறிப்புகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வேன். இப்படித்தான் ஆரம்பித்தது எனது சமையல் ஆர்வம்.

Advertisement

Advertisement

தொலைக்காட்சி மூலமாகத்தான் நீங்கள் மக்களுக்கு அறிமுகம் ஆனீர்கள். அது எப்படி நிகழ்ந்தது?

ஐந்து வருட மும்பை வாழ்க்கைக்குப் பின், 1985-இல், நாங்கள் சென்னைக்கு வந்தோம். இங்கே வந்த பிறகும் எனது சமையல் ஆர்வம் தொடர்ந்தது. என் அம்மா, பாட்டி, மாமியார் ஆகியோரிடமிருந்து நமது பாரம்பரிய சமையல் குறிப்புகளை கேட்டுத் தெரிந்துகொண்டு, அவற்றை செய்து பார்ப்பேன்; எனது சமையல் திறமை எங்கள் உறவு வட்டம் முதல் எனது கணவரது ஆபீஸ் வரை அனைவர் மத்தியிலும் பிரபலமானது.

புதுயுகம் சேனலில் பணியாற்றிவந்த என் கணவரின் ஆபீஸ் ஊழியர் ஒருவரது மனைவி ஒரு நாள் என்னிடம், நேயர்களின் சமையலறை சந்தேகங்களுக்கு பதில் சொல்ல முடியுமா? என்று கேட்டு, மாதிரிக்கு ஒரு கேள்வி, அதற்கு ஒருவர் சொன்ன பதில் இரண்டும் அடங்கிய வீடியோ கிளிப்பிங்கை அனுப்பி வைத்தார்.

அதில் கேட்கப்பட்ட கேள்வி: "தரமான மைசூர்பாக் செய்வது எப்படி?' அதற்கு, "தரமான நெய், தரமான சர்க்கரை, தரமான கடலைமாவு பயன்படுத்தி செய்தால், தரமான மைசூர்பாக் வரும்' என்று பதில் சொல்லி இருந்தார்கள். நான், "என்னால் இது போல எல்லாம் பதில் சொல்ல முடியாது? வேண்டுமானால், சுவையான மைசூர் பாக் செய்வது எப்படி என்பதை செய்து காட்டிவிடுகிறேன்' என்று சொன்னேன். "ருசிக்கலாம் வாங்க' நிகழ்ச்சியில் நான் பங்கேற்றது இப்படித்தான்.

சொந்தமாக யூடியூப் சேனல் ஆரம்பிக்கும் ஐடியா எப்படி வந்தது? நிகழ்ச்சிகளை வீட்டிலேயேதான் ஒளிப்பதிவு செய்கிறீர்களா?

"நான் டிவியில் சமையல் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, என் மகன் ராம்பிரசாத்' நீ ஒரு சமையல் எக்ஸ்பர்ட். உன் திறமை, அறிவு எல்லாம் நம் குடும்பம், நண்பர்கள் என்ற வட்டத்துக்குள்ளே முடங்கிப் போய்விடக்கூடாது. ஒரு யூடியூப் சேனல் மூலமாக சமையல் செய்து காட்டினால், உலக அளவில் எல்லோருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பான். ஒரு கட்டத்தில், என்னுடைய சமையல் செய்முறைகளை வீடியோ எடுக்க ஆரம்பித்தான். 2019-இல் எனது முதல் சமையல் வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

வீட்டிலேயே ஓர் அறையை கிச்சன் செட் அப்பில் தயார் செய்து வைத்திருக்கிறோம். ஆரம்பத்தில் ஒரு கேமராமேனை வைத்து ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தோம். கரோனா பரவ ஆரம்பித்து, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, என் மகள் செளம்யா ஒரு நல்ல மொபைல் போன் வாங்கி, அதன்மூலமாகவே நிகழ்ச்சியை படம் பிடிக்க ஆரம்பித்துவிட்டாள். என் மகன், மகள், மருமகள் என குடும்பத்தில் அனைவரது பங்களிப்புடன் இந்த யூடியூப் சேனல் நடக்கிறது.

உங்கள் யூடியூப் சேனலின் அபார வெற்றிக்கு என்ன காரணம்?

2019-இல் துவக்கப்பட்ட என்னுடைய சமையல் யூடியூப் சேனலுக்கு ஆரம்பத்தில் சில நூறு பார்வையாளர்கள்தான் இருந்தார்கள். ஆனால், நாளடைவில், அது கொஞ்சம், கொஞ்சமாக பிரபலமானது. மாதத்துக்கு ஆயிரம், இரண்டாயிரம் என அதிகரித்து, இப்போது எனது சேனலுக்கு ஐந்து லட்சம் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். நான் சமைக்கிறபோது தேவையான பொருட்களுக்குக் கொடுக்கும் அளவுகள் ரொம்பக் கச்சிதமாக இருப்பதாக பலரும் என்னிடம் சொல்லிப் பாராட்டுவார்கள். என்னைப் பொருத்தவரை அளவுக்கு ஒரு பாலிசி வைத்திருக்கிறேன். "கை எடுக்கணும்; கண் பார்க்கணும்; புத்தி சொல்லணும்; மனசு ஒப்புத்துக்கணும்' என்பதுதான் அது. உதாரணமாக, பருப்பு போடவேண்டுமென்றால், கையால் பருப்பை எடுக்கும்போது, கண்கள் அதைப் பார்த்து, அளவு சரியாக இருப்பதாக சொல்ல, நம் அறிவுக்கும் அது சரிதான் என்று படவேண்டும்; அப்போதுதான் ருசி அபாரமாக இருக்கும். நாளடைவில் பழக்கத்தில் வருவதுதான் இந்தத் திறமை என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்,.

நிகழ்ச்சிக்காக நீங்கள் தயாரிக்கும் ஐட்டங்களை என்ன செய்வீர்கள்?

நான் வழக்கமாக நான்கு பேருக்குத் தேவையான அளவுக்குத்தான் சமைப்பேன். அதை நாங்களே சாப்பிட்டுவிடுவோம். ஆனால் பல சமயங்களில் ஸ்பெஷலாக எது செய்தாலும், நிறைய செய்து, எல்லோருக்கும் கொடுப்பது என் பழக்கம். என் சொந்தக்காரர்கள், நண்பர்கள் என பலர் எங்கள் வீட்டுக்கு அருகிலேயே வசிப்பதால், சமைத்து முடித்து, தகவல் சொன்னால், அவரவர்களே வந்துவாங்கிக்கொண்டு போய்விடுவார்கள்.

நேயர்களின் பாராட்டு அனுபவங்களில் ஒருசிலவற்றைக் கூறுங்கள்?

என் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, வயதானவர்கள் பலர், "எங்களுக்கு இத்தனை வயசாகிறது! ஆனால், நீ இன்றைக்கு சொன்ன தகவல்கள் எல்லாம் ரொம்ப புதுசாக இருந்தது!' என்று பாராட்டுவார்கள். சமீபத்தில் "ஒன் பாட் ரசம்' என்று "சாம்பார் பாத்' போல ஒன்றாகவே சாதம்+ரசம் செய்து காட்டினேன். என் குழந்தைகள் சின்ன வயசாக இருக்கும்போது, அதை செய்து, அவர்களுக்குக் கொடுப்பது வழக்கம்; அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அதை செய்து காட்டிய மறுநாள் மும்பையில் இருக்கும் என் மகன் அதை செய்து சாப்பிட்டுவிட்டு, போன் செய்து, "அம்மா! எங்கள் சின்ன வயசில் ஒன் பாட் ரசம் சாதம் செய்து எங்களுக்கு கொடுப்பாயே அதே மணத்தை நான் நேற்று செய்து, சாப்பிட்டு அனுபவித்தேன்' என ரொம்ப எமோஷனலாக பேசினான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments