தன் மடியில் பேரனை அன்போடு உட்கார வைத்துக் கதை சொல்ல ஆரம்பித்தார் தாத்தா. கதை கேட்டு பேரன் மகிழ்ந்தான்.
கதை சொல்லும் போது இடை இடையே மனிதன் எப்படியெல்லாம் வாழவேண்டுமென்று பேரனுக்குச் சொல்லிக் கொடுத்தார். பேரனும் மிக அமைதியாக அனைத்தையும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான்.
காகத்தைப் போல ஒப்புரவாக, ஆமையைப் போல அடக்கமாக, எறும்பு போல சுறுசுறுப்பாக, மானைப்போல மானத்துடன் நாமும் வாழ வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை என்றெல்லாம் பேரனுக்குச் சொல்லிக் கொண்டே போனார்.
தாத்தா மடியிலிருந்த பேரன் திடீரென்று, ""தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' என்றான்.
""தாராளமாகக் கேள் கண்ணா...'' என்றார் தாத்தா.
""காக்கை, ஆமை இவற்றுக்கெல்லாம் எத்தனை அறிவு?'' என்று கேட்டான் பேரன்.
""அவற்றுக்கெல்லாம் ஓரறிவிலிருந்து ஐந்தறிவு வரைதான்''- தாத்தா.
""நமக்கு எவ்வளவு?''
""மனிதன் உயர்ந்தவன். நமக்கு ஆறு அறிவு'' என்றார் தாத்தா.
""தாத்தா, நம்மைவிட அறிவில் குறைந்தவை நமக்கு வழிகாட்டுகின்றன. நாம் மட்டும் அப்படியே கிடக்கிறோமே... ஏன்?'' என்று கேட்டான் பேரன்.
பதில் சொல்ல முடியாமல் தாத்தா விழிப்பதைப் பார்த்துப் பேரன் வாய்விட்டுச் சிரித்தான்.
-கோ.தமிழரசன், செஞ்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.