தென் தமிழக மாவட்டங்களில் ஒன்று. மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான மாவட்டம். மதுரைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக 1996 முதல் முதல் செயல்படத் தொடங்கியது. மலைப்பிரதேசம் மற்றும் சமவெளி என இந்த மாவட்டம் இருவகை நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இணையாக மேகமலை போன்ற சிறு சிறு மலைகள் வடக்கு தெற்காக பரவியுள்ளன. இவை கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்தைப் பிரிப்பது போன்று உள்ளன. இம்லைப் பகுதியில்தான் பெரியகுளம், உத்தமபாளையம், மற்றும் ஆண்டிப்பட்டி தாலுக்காக்கள் உள்ளன.
2889 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தினை, வடக்கே திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கே மதுரை மாவட்டமும், தெற்கே விருதுநகர் மாவட்டமும், மற்றும் மேற்கு தென்மேற்கு பகுதிகளில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டமும் சூழ்ந்துள்ளன.
தேனி மாவட்டம் நிர்வாக வசதிக்காக பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் என 5 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரமாக தேனி நகரம் உள்ளது. மாவட்ட நிர்வாகத்திற்காக சர்வ தேச தரச்சான்று "ஐ.எஸ்.ஓ. - 9001' விருது பெற்ற மாவட்டம். இதன் எல்லைக்குள் 4 சட்ட மன்றத் தொகுதிகள் உள்ளன.
வரலாற்றுத் தகவல்கள்!
ஹைதர் அலி மைசூர் பகுதியை ஆட்சி செய்தபோது உத்தமபாளையம் மைசூர் அரசின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் ஆலய வளாகத்தில் கடந்த நூற்றாண்டில், கட்டுமானப் பணிகளுக்காக தோண்டியபோது கிடைத்த செப்பேடுகள் குறிப்பிடத்தக்கவை. இவற்றை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் "சின்னமனூர் செப்பேடுகள்' என்றே குறிப்பிடுகின்றனர். இச்செப்பேடுகள் தற்போது லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கின்றன.
இங்குள்ள கம்பம் பகுதி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழர்களின் ஆட்சிக்குட்பட்டதாக இருந்துள்ளது. 1374 இல் சாம்பனார் என்ற விஜயநகரப் பேரரசை சேர்ந்த மன்னர் இப்பகுதியைக் கைப்பற்றினார். வெற்றியின் விளைவாக ஒரு கோட்டையையும் கட்டினார். இவருக்குப்பின் வந்த விஸ்வநாத நாயக்கர்தான் கோட்டைக்குள் சிவ-விஷ்ணு ஆலயத்தைக் கட்டினார். இக்கோட்டைதான் இப்போது கம்பராயர் ஆலயமாக உள்ளது. விஸ்வநாத நாயக்கர் உருவாக்கிய 72 பாளையங்களில் கம்பம் பாளையமும் ஒன்று.
இந்நிலப்பகுதி 1900 க்கு முன் குறைவான மக்கள் வசிக்கும் இடமாகவே இருந்துள்ளது. 1886 இல் கேரள மாநிலத்தில் பாயும் பெரியாறு அணை திட்டம் மூலம், கம்பம் பள்ளத்தாக்கில் பாயும் வகையில் கொண்டுவரப்பட்டது.
இதனால் 1890 முதல் 1920 வரையிலான காலத்தில் சிவகாசி, கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர் மற்றும் சுற்றிலுமுள்ள பல பகுதி மக்களும் இங்கு குடியேறத் தொடங்கினர்.
மலைகளும், பள்ளத்தாக்குகளும்!
மேகமலை!
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதி. உயர்ந்த மலைகளை மேகங்கள் வருடிச் செல்வதால் மேகமலை எனப் பெயர் பெற்றது. அழகான சுற்றுலாத் தலம்! உயரம் 1500 மீ. ! அடிவாரத்தில் புல்வெளிகளும், மலைச்சரிவுகளில் தேயிலை, காபி எஸ்டேட்டுகளும், மிளகு, கிராம்பு, ஏலக்காய் போன்றவையும் பயிரிடப்படுகின்றன. உச்சிப் பகுதி நிசப்தமான வனப்பகுதியாகவும் உள்ளது.
இம்மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரும், மற்றும் மலைச்சரிவுகளிலிருந்து வெளிவரும் ஊற்று நீரும், நீரோடைகளாக தவழ்ந்து, பின் ஒன்றிணைந்து சிற்றாறுகளாக மாறி, அருவிகளாக கீழிறங்கி ஆறுகளாக ஒடி வைகை ஆற்றுடன் கலக்கின்றன. இம்மலைப்பகுதியிலேயே ஆறு அணைகள் உள்ளன.
அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலம். இதமான குளிருடன் மனதை மயக்கும் இடம்.
வெள்ளி மலை!
மேகமலைத் தொடரின் ஒரு பகுதிதான். வெள்ளி நிற மேகங்கள், பசுமையான மலைச் சிகரங்களைச் சூழ்ந்து இருப்பதால் வெள்ளி மலை எனப்படுகிறது.
வருச நாட்டுக் குன்றுகள்!
பழனி மலைக்குன்றுகளுக்கு தெற்கே வருசநாடு, ஆண்டிப்பட்டி என்ற இரு மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. கம்பம் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியாக வருசநாடு கிராமம், மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகள் உள்ளன. இம்மலைப் பகுதியில்தான் வைகை நதி தோன்றுகிறது!
சுதந்திரத்திற்கு முன்பு இப்பகுதி மிகவும் அடர்ந்த மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக இருந்துள்ளது. இவ்வனப்பகுதிக்குள் நுழைந்தவர்கள் பாதை அறிந்து திரும்பி வருவது என்பது சாத்தியமற்ற ஒன்று! அக்காலத்தில் "வருச நாட்டுக்குப் போனா வச்ச இடத்தைச் சொல்லிட்டுப் போ!'' என்ற பேச்சு வழக்கு இருந்தது! இதற்கு வருச நாட்டுக்கு போறவங்க உயிருடன் திரும்பி வருவது இயலாது. அதனால் வைத்திருக்கிற சொத்துக்கள் பற்றின விவரத்தையும், வைத்த இடத்தையும் சொல்லிட்டு போ...என்பது பொருள். இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டு மழையும் குறைந்துவிட்டது!
குரங்கனி மலைப்பகுதி!
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைவாசஸ்தலம். போடிக்கு அருகில் உள்ளது. தவழும் மேகங்கள், பலத்த காற்று, சுகமான குளிர்ச்சி, பசுமையான வனப்பகுதிகளோடு மனதை வசீகரிக்கும் இடம். மலையேற்றத்திற்கு ஏற்ற அழகான இடம். இம்மலை மேல் உள்ள "டாப் ஸ்டேஷன்' என்ற இடத்திற்குச் செல்ல 12 கி.மீ. நீளமுள்ள மலையேற்றப் பாதை வனத்துறையினரால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக டாப்ஸ்டேஷனின் (84 மீ நீளமுள்ள) இரும்புக் குழாய்களினால் ஆன தடுப்புக் கம்பிகளும், பொருத்தப்பட்டுள்ளது.
இங்கேயிருந்து மூணாறுக்கு அடர்ந்த வனப்பகுதி மற்றும் புல்வெளி பகுதிகளைக் கடந்து நடந்தே சென்று விட முடியும்.
கம்பம் பள்ளத்தாக்கு!
மலைகளுக்கு இடையிலான பள்ளத்தாக்குப் பகுதி. கேரளத்திலிருந்து திருப்பிவிடப்பட்ட பெரியாறு நதியினால் வளம் பெறுகிறது. இதன் கிழக்குப் பகுதியில் உள்ள மலைகளில் 7 அணைகள் உள்ளன.
கம்பம் பள்ளத்தாக்கின் மிக அருகிலேயே கேரள எல்லையை ஒட்டி குமுளியும், தெற்கே 30 கி.மீ. தொலைவில் தேக்கடியும் இருக்கிறது. இப்பள்ளத்தாக்கு உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்டது. இதன் மேற்கே ஏலமலையும், கிழக்கே வருசநாட்டு குன்றுகளும், தெற்கே சுருளிமலையும் அமைந்துள்ளன.
வருசநாட்டு பள்ளத்தாக்குப் பகுதி!
ஆண்டிப்பட்டி மலைத்தொடருக்கும், மேகமலைத்தொடருக்கும் இடையே உள்ளது. வருசநாடு என்றால் மழை மிகுந்த நாடு எனப் பொருள் படும். 13ஆம் நூற்றாண்டு வரை சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இங்குள்ள பகவதி அம்மன் கோயில் "மாட்டுவண்டி பந்தயம்' பிரசித்தி பெற்றது.
ஆறுகளும், அருவிகளும், அணைகளும்!
மலையடிவாரத்தில் இந்த மாவட்டம் உள்ளதால் எண்ணற்ற நீரோடைகள், சிற்றாறுகள், ஆற்றுப் பள்ளத்தாக்குகள், அருவிகள், ஏரிகள், அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் என நீரோட்டம் உள்ள இடமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் கண்கொள்ளா காட்சியாக செழிப்புடன் இருக்கும்.
இதனாலேயே இங்குள்ள பல பகுதிகள் சுற்றுலா பயணிகளை கவருபவையாக உள்ளன.
வைகை ஆறு!
இந்நதி வருச நாட்டுக் குன்றுகளில் தோன்றுகிறது. இங்குள்ள மலைகளில் தோன்றும் சுருளியாறு, மணலாறு, மேல் மணலாறு, மூங்கிலாறு, கொட்டாங்குடியாறு, வராகநதி உள்ளிட்ட பல சிற்றாறுகள் பல திசைகளில் இருந்தும் பாய்ந்து வந்து வைகை நதியுடன் சங்கமிக்கின்றன.
வைகை அணை!
ஆண்டிப்பட்டி அருகே வைகை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நீர் இங்கு சேமிக்கப்படுகிறது. இங்குள்ள நீர் மின் நிலையம் மூலம் 6 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
முக்கியமான சுற்றுலாத் தலமான இந்த அணைக்கு அருகில் அழகான பூங்காக்கள் உள்ளன. பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல், உல்லாச ரயில், மேலும் பூங்காவை அடுத்து சிறு மிருகக் காட்சிசாலை உள்ளன. அதற்கு அருகில் வைகை நதியின் தோற்றம் முதல் சங்கமம் வரையிலான பாதையின் வரைபடம் போல் தரையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அணைக்கு அருகில் தமிழக அரசின் விவசாய ஆராய்ச்சி மையமும் இருக்கிறது.
வைகை அணையைப் போன்று நீர்த்தேக்கத்துடன் கூடிய மஞ்சளாறு அணை, மணலாறு அணை, சோத்துப் பாறை அணை போன்றவை முக்கியமான அணைகளாகும்.
சுருளி அருவி!
வைகை நதியின் துணையாறுதான் சுருளி ஆறு. இது வைகை அணைக்கு முன்னரே ஆண்டிப்பட்டிக்கு அருகில் வைகை ஆற்றுடன் கலக்கிறது. இவ்வாற்றின் பாதையில் உள்ள சுருளி அருவி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கிறது. மிகவும் புனிதமாகக் கருதப்படுவதால் சுருளி தீர்த்தம் என்று சொல்வர். பிரபலமான சுற்றுலாத்தலம்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள இந்த அருவி, இரண்டு அடுக்காக தொடர் நீர்வீழ்ச்சியாக கீழிறங்குகிறது. முதலில் 150 அடி உயரத்திலிருந்து ஒரு பொய்கையில் விழுந்து, பின் சிறிது தூரம் ஓடி, மீண்டும் 40 அடி உயரத்திலிருந்து கீழிறங்குகிறது! சிலப்பதிகாரத்திலேயே இவ்வருவி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவ மழைகாலம்தான் அருவியில் குளிப்பதற்கு ஏற்ற காலம். அருகில் சுருளியாண்டவர் என அழைக்கப்படும் முருகன் கோயில் உள்ளது. மேலும் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் குகைகள் உள்ளன. இவை கைலாய குகைகள் என அழைக்கப்படுகின்றன.
மேலும் அருவிக்கு சற்றுத் தொலைவில் மலைச்சரிவில் "கோடிலிங்கம் லிங்க பர்வத வர்த்தினி ஆலயம்' உள்ளது. சிறிதும் பெரிதுமாய் 1000 லிங்கங்களுக்கு மேல் இங்கு அமைக்கப்பட்டுள்ளது! இங்கு கோடி லிங்கங்கள் அமைக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
கும்பக்கரை நீர்வீழ்ச்சி!
பெரியகுளம் ஊரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருக்கிறது. இங்கிருந்து 18 கி.மீ. தூரத்தில்தான் கொடைக்கானல் சிகரம் இருக்கிறது. அங்கிருந்து வரும் குளிர்ச்சியும் சுவையும் கொண்ட நீரூற்று நீரே இங்கு அருவியாக வீழ்கிறது.
இந்த அருவியின் மேல்பகுதியில் பாறைகளில் பெரிய பள்ளங்கள் உள்ளன. அதே போல் அருவியின் கீழ் பகுதியிலும் பெரிய பள்ளங்களும், பாறை இடுக்குகளும் உள்ளன. இந்த நீர் நிறைந்த பெரிய பள்ளங்களை யானை கெஜம், பாம்பு கெஜம் என பலவிதங்களில் அழைக்கின்றனர்.
சுற்றிலும் பெரிய மரங்கள் சூழ காட்சிதருவது இந்த அருவிக்கு தனிச் சிறப்பைக் கொடுக்கிறது!
இவற்றைத் தவிர சின்ன சுருளி, புலியருவி, குறத்தி அருவி, என மேலும் சில அருவிகள் உள்ளன.
வனவளம்!
மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 34% பகுதி வனமாக இருக்கின்றன. மொத்தம் 27 வனப்பகுதிகள் இங்குள்ளன. அதில் 19 வனப்பகுதிகள் ரிசர்வ் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
இந்த இயற்கை வனங்களைத் தவிர 45 ச.கி.மீ. பரப்பளவிற்கு மனிதர்களால் உருவாக்கப்பட்ட வனப்பகுதியும் இங்குள்ளன.
மேகமலை வனவிலங்கு சரணாலயம்!
மேகமலையில் உள்ள சுமார் 600 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட வனப்பகுதி "மேகமலை வன உயிரின சரணாலயமாக' அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சரணாலயம் பெரியாறு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வன உயிரின சரணாலயங்களுக்கு இடையில் உள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் இவ்வனத்தில் விலங்குகளின் நடமாட்டம் அதிகம். புலி, யானை, சிறுத்தை, கரடி, புள்ளிமான், தேவாங்கு, சிங்கவால் குரங்கு, மலை அணில், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் உள்ளிட்ட பலவகையான உயிரினங்களின் வசிப்பிடமாக இந்த சரணாலயம் உள்ளது. அரிய பறவையினமான "இருவாச்சி' இவ்வனப்பகுதியில் காணப்படுகின்றன.
விவசாயமும், தொழில் வளமும்!
விவசாயமே மாவட்டத்தின் முக்கிய தொழிலாகும். மொத்த நிலப்பரப்பில் 40% நிலம் விவயாய நிலமாக உள்ளது. கரும்பு, பருத்தி, நெல், தானியங்கள், பருப்பு வகைகள், வேர்கடலை, எள், வாழை, தேங்காய், தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு, திராட்சை , மாம்பழம் உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
ராயன் பட்டியில் 28 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட திராட்சை ஆராய்ச்சி நிலையம் இருக்கின்றது. இந்நிலயத்தில் 120 வகையான திராட்சைகள் உள்ளன. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சை சாகுபடி அதிகம் நடைபெறுகிறது. இங்கு ஆண்டுக்கு 90,000 டன்களுக்கும் அதிகமாக பன்னீர் திராட்சை விளைவது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் தேயிலை தொழிற்சாலைகள், நூற்பாலைகள், சர்க்கரை ஆலைகள் போன்றவை உள்ளன. ஆண்டிப்பட்டியில் கைத்தறி, மற்றும் விசைத்தறி, நெசவுத் தொழிலில் சிறப்புடன் விளங்குகிறது.
போடிநாயக்கனூர் ஏலக்காய், காபி, தேயிலை, மற்றும் மிளகு விற்பனையில் முக்கிய சந்தையாக விளங்குகிறது.
மின் உற்பத்தி!
பெரியாறு, சுருளியாறு, மற்றும் வைகை என ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு 3 நீர் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றைத் தவிர கம்பம், தேனி, ஆண்டிப்பட்டி, கண்டமனூர் மற்றும் போடி பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தியும் நடைபெறுகிறது.
தொடரும்....
தொகுப்பு: கே. பார்வதி, திருநெல்வேலி டவுன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.