முகப்பு
சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: கல்லையும் கரைக்கும் - மாவிலிங்க மரம்

நான் தான் மாவிலிங்க மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் "கிரட்டாயேரா அடன்சோனி' என்பதாகும். என்னை கிரேட்டேவா ரிலிஜியோசா என்றும் சொல்வாங்க.

Updated On : 1 பிப்ரவரி, 2020 at 10:12 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:12 PM


குழந்தைகளே நலமா?

நான் தான் மாவிலிங்க மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் "கிரட்டாயேரா அடன்சோனி' என்பதாகும். என்னை கிரேட்டேவா ரிலிஜியோசா என்றும் சொல்வாங்க. நான் கெப்பாரிடேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு வில்வபத்திரி, வரணி, மாவிலங்கம், மாவிலங்கு, மாவிலங்கை, மகாவிலங்க மரம், அதிசரணம், மரலிங்கம், மாவிப்பட்டை, மாவிட்டை, மாவிளக்கப்பட்டை என வேறு பெயர்களும் உண்டு. நான் ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாகக் காணப்படுவேன். இந்தியாவில் பரவலாக நான் காணப்படுவேன். எனக்கு சிவன் கடாட்சம் உண்டு என்றும் சொல்றாங்க. என் கிளைகள் ஒழுங்கற்று வளரும், மரப்பட்டை சாம்பல் நிறத்திலும், வழவழப்பாகவும் இருக்கும். என் இலைகள் உங்கள் விரல்கள் போன்று மூன்று கூட்டு இலை அமைப்பைக் கொண்டதாகும். என் பூக்கள் இளமஞ்சள் நிறத்தில், இலைகள் உதிரும் போது உண்டாகும். வெண்ணிற மலர்கள், மலர்ந்தவுடன் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

குழந்தைகளே, நான் கொஞ்சம் வலிமையற்றவன். அதனால், கடினமான பொருள்கள் செய்ய யாரும் என்னை பயன்படுத்துவதில்லை. ஆனாலும், என்னை தீக்குச்சி, சீப்பு செய்ய பயன்படுத்தலாம். என் இலைகள் கால்நடைகளுக்கு நல்ல உணவு. என் இலை, பட்டை, வேர் ஆகியவை மருத்துவ குணம் கொண்டவை. என் இலைகளை தண்ணீரில் போட்டு அவித்து, அந்தத் தண்ணீரால் கை, கால்களைக் கழுவி வந்தால் வீக்கம் வலி போன்றவை குணமாகும்.

Advertisement

என் மரப்பட்டையை அரைத்து நீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் உடனே கரைந்து சிறுநீருடன் கற்கள் வெளியேறும். என் பட்டையை சிதைத்து உட்புறமாக வைத்துக் கட்ட, கட்டிகள் கரையும். வேர்ப்பட்டையை நன்கு அரைத்துக் கொட்டைப் பாக்களவு உண்டு வந்தால் வண்டுக் கடி குணமாகும்.

என் பட்டை ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி மற்றும் தோல் வியாதிகளை குணப்படுத்தும். என் பட்டையைப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை கோளாறுகள் குணமாகும். இடித்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் வாயுத் தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறுகள் குணமாகும். என் இலையை சீரகம், சுக்குடன் நீரிலிட்டு காய்ச்சி குடித்தால் காய்ச்சல், செரியாமை, வலி நீங்கும். இலையை அரைத்து உள்ளங்காலில் பற்றிட்டால் வீக்கம், எரிச்சல் குணமாகும்.

என் இலைக்கு முடக்கு வாதத்தையும் போக்கும் சக்தியிருக்கு குழந்தைகளே. என் இலைகளை சாறு பிழிந்து நெய் அல்லது வினிகர் கலந்து பருகினால் காய்ச்சல், வாந்தி எடுத்தல், வயிற்று எரிச்சல் உடனே குணமாகும். என் இலைகளை நீரில் போட்டு, அதை சுண்டக் காய்ச்சி, தேங்காய் பாலுடன் தினமும் மூன்று வேளையும் குடித்து வந்தால் முடக்கும் வாதம் ஓடி விடும்.

குளிர்காலத்தில் பனிக்காற்று தாக்குவதினால் ஏராளமானோர் முகவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர், அவர்களுக்கு மாவிலங்கம் அருமருந்தாகும்.

குழந்தைகளே, மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கலாம், ஆனால், மரங்கள் இல்லாமல் மனிதர்களால வாழ முடியாது. மனிதர்களின் இன்றைய வளர்ச்சிக்கு மரங்கள் மிகப் பெரிய பங்கினை ஆற்றி வருகின்றன. மரங்கள் இயற்கைத் தாயின் குழந்தைகள். அவரின் அழகுக்கு அழுகு ஊட்டுவன.

நான் கோயம்புத்தூர் மாவட்டம், சூலக்கல், அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயிலில் தலவிருட்சமாக இருக்கேன்.

மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.