ஞாயிறு கொண்டாட்டம்

அடுத்த பரிமாணத்தை அடைந்தேன்!

கண்ணீர் அறியா கண்களும் உண்டோ.... மண்ணில் பெருகா குருதியும் உண்டோ..' என விரிகிறது உன்னைப் போல் ஒருவனுக்காக மனுஷ்யபுத்திரன் எழுதிய பாடல். இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த மனுஷ்ய புத்திரன் திர

ஜி. அசோக்

கண்ணீர் அறியா கண்களும் உண்டோ.... மண்ணில் பெருகா குருதியும் உண்டோ..' என விரிகிறது உன்னைப் போல் ஒருவனுக்காக மனுஷ்யபுத்திரன் எழுதிய பாடல். இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த மனுஷ்ய புத்திரன் திரைப்படத்திற்கு பாடல் எழுதியிருப்பது ஆரோக்கியமான விஷயம். திரைப்பாடலாசிரியர் மனுஷ்ய புத்திரன் இனி உங்களுடன்...

கமலுக்கும் உங்களுக்குமான அலைவரிசை எப்படி அமைந்தது?

ஆறு வருடங்களுக்கு முன் நான் ஆரம்பித்த "உயிர்மை' பதிப்பகத்தின் துவக்க விழாவில்தான் முதன் முதலாக கமலுக்கும் எனக்குமான சந்திப்பு நடந்தது. அதற்கு முன்பே என் கவிதைகளை மறைமுகமாக காதலித்து என்னை கவனித்து வருகிறார் என்பது எனக்குத் தெரியும். அதன்பிறகு எங்களின் சந்திப்புகள் அவ்வப்போது நடைபெற்றாலும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ள மாட்டோம். ""என்னுடைய புதுப் படம் ஒன்றில் பாடல் எழுத வேண்டும்'' என அவரிடமிருந்து ஒரு நாள் அழைப்பு வந்தது. அப்போதுதான் நிறைய பேசினோம். வன்முறை, வெடிகுண்டு கலாசார வேதனைகளால் எந்த சம்பந்தமும் இல்லாமல் கொல்லப்படும் அப்பாவி மக்களின் வேதனைகள்தான் பாடலின் சூழல் என்றார். எப்போது               வேண்டும் என்றேன். இப்போதே வேண்டும் என்றார்.

""இதற்கு முன் சினிமாவில் எழுதியது இல்லை. கொஞ்சம் டைம் வேண்டும்'' என்றேன். ஷ்ருதி புது ட்யூன் ஒன்று தந்தார். அன்று இரவே பாடலை எழுதி விட்டேன்.

பாடல் கமலை கவர்ந்திருந்ததா?

கண்ணீர் அறியா கண்களும் உண்டோ..?

மண்ணில் பெருகா குருதியும் உண்டோ..?

- என பாடல் வந்து விழுந்ததும், மிகவும் சந்தோஷப்பட்டார். வழக்கமான சினிமா பாடல் இது இல்லை என பெரிய வார்த்தைகளை உதிர்த்தார். 50 வருட உலக சினிமாவின் நீள அகலங்களைத் தெரிந்த சாதனையாளரான கமலின் அந்த வார்த்தைகள் இன்னும் சில இரவுகளின் தூக்கத்தைக் கலைத்துச் செல்கிறது. எழுத்தாக எழுதப்பட்ட வரிகளைப் பாடலாக, கலையாக மாற்றிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. ஷ்ருதியும் கமலும் வரிகள் இசைக்கு மிகவும் பொருந்தியிருப்பதாகச் சொல்லியபோது மிகவும் உற்சாகமாக இருந்தது. முதல் சவாலிலேயே வெற்றி பெற்ற உற்சாகம் அது. அதற்கு அடுத்த நாளே பாடல் பதிவு செய்யப்பட்டது. எனது எழுத்து வாழ்க்கையில் இன்னொரு பரிமாணத்தை நோக்கி நான் நகர்ந்த ஒரு தினமாகவே அந்த நாள் என் நினைவில் இருக்கிறது.

"அல்லா ஜானே' பாடலுக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டதா?

பாடல் வெளிவந்த அன்றே இணையதளத்துக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் நிறைய வரவேற்புகள் வந்திருந்தன. மிகச் சிறந்த வரிகள் என பத்திரிகைகள் கொண்டாடின. ஈழத்தோழன் ஒருவன் எங்களுக்காக எழுதப்பட்ட பாட்டு இது என கண்ணீர் வடித்திருந்தான். அந்த சகோதரனின் கண்ணீர் என் பேனாக்களுக்குப் புதிய பலத்தைக் கொடுத்திருக்கிறது.

இந்தப் பாடலின் வெற்றிக்கு வரிகள் மட்டுமல்ல, ஷ்ருதி ஹாசனின் அற்புதமான இசையும் கமல் ஹாசனின் உணர்ச்சிகரமான குரலும்தான் முக்கியக்         காரணங்கள். இசையும் குரலும் வரிகளும் வெகுநேர்த்தியாக ஒன்றை மற்றொன்று எவ்வாறு முழுமை செய்யமுடியும் என்பதை "அல்லா ஜானே' வெளிப்படுத்தியிருக்கிறது.

சினிமா பாடல்களை ரசிப்பதுண்டா?

தமிழ் சினிமா பாடல்களின் தீவிர ரசிகன் நான். கண்ணதாசனையும், வைரமுத்துவையும் பெரிதாக மதிக்கிறேன். தமிழ் மொழியில் கவிதைகளைப் புனைந்து தந்தப் பெருமை அந்த இருவருக்கும் உண்டு.

""ஒவ்வொரு தமிழனின் வாழ்க்கையிலும் நான் சஞ்சலத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்'' என கண்ணதாசன் சொல்லுவார். தமிழைச் சரளமாகச் சொல்லும் வல்லமை அவருக்கு எங்கே உருவானது என்பது இன்று வரைக்கும் புரியாத புதிர்.

"இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிர்விடும்..' என எழுதி தமிழர்களை முணுமுணுக்க வைத்தவர் வைரமுத்து. தமிழ் சினிமாவின் பாடல்களை வேறு தளத்துக்கு அழைத்துச் சென்றவர் அவர்.

  இப்போது உள்ள இளைய தலைமுறை கவிஞர்களும் நன்றாகதான் எழுதுகிறார்கள். 90-க்குப் பிறகு பாடல்களை கேட்கிற மனப்பக்குவம் உள்ளிட்ட எல்லாமே மாறிவிட்டது. அர்த்தமற்ற வரிகள் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. நா.முத்துகுமாரின் வெயிலோடு விளையாடி... என்னை ஏதோ செய்தது.

""இலக்கியவாதிகளுக்கு உள்ள சுதந்திரம் கதாசிரியர்களுக்கு இல்லை'' என கமல் வருத்தம் தெரிவித்திருக்கிறாரே..?

சினிமாவில் யாரும் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாது. அப்படி செயல்பட்டால் கதை சாத்தியப்படாது. இயக்குநர்தான் அங்கு கேப்டன். அவர்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார். இதையும் தாண்டி வர்த்தக ரீதியாக வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதைப் பொறுத்தவரையில் கமலின் வருத்தம் நிச்சயம் அர்த்தப்பட்டு நிற்கிறது.

உங்கள் பார்வையில் தமிழ் சினிமா?

கொஞ்சம் காலமாகவே தமிழ் சினிமாவில் மாற்றம் நடந்து வருகிறது. எதார்த்தமான வாழ்க்கையை அதன் பக்கத்தில் சென்று நம் படைப்பாளிகள் பார்த்து வருகிறார்கள். எதார்த்தத்தை அதன் அருகில் நின்று பதிவு செய்ய துணிந்துவிட்டார்கள். அத்திப்பூத்தது போல பாலு மகேந்திராவும், மகேந்திரனும் செய்ததை நெருஞ்சிப் பூ பூப்பதைப்போல செய்து விட்டார்கள். "பருத்தி வீரன்' அதில் முதல் நெருஞ்சிப் பூ என எடுத்துக் கொண்டாலும் சரி, இரண்டு வருடங்களாக இது தொடர்கிறது. கலாசாரங்களைப் பதிவு செய்ய முற்படுவது சினிமாவில் தைரியமான விஷயம். ரசிகர்களும் எதார்த்தத்தை ஆதரிக்கிறார்கள். இடையில் வியாபார ரீதியாகவும் சில இயக்குநர்கள் சினிமா செய்கிறார்கள் அவர்களுக்கு அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. மாற்றம் தொடர்ந்தால் உலக அரங்கில் தமிழ் சினிமாவின் உயரம் தெரிய வரும்.

மனுஷ்யபுத்திரன் திரைப் பாடலாசிரியராக  தொடர்வாரா?

எழுதுவதுதான் என் வேலை. இந்தப் பாடல் தந்த உத்வேகம் என்னை தொடர்ந்து எழுத ஆசையைத் தூண்டியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆவல் கொண்டிருக்கிறேன். அதற்கான சூழலை காலமும் நேரமும் அமைத்துக் கொடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT