முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நகைச்சுவை ஏக்கம்!

நடிகைகளில் சிலருக்கு மட்டும் பக்கத்துவீட்டுப் பெண் போல அத்தனை பாந்தமான முகம் அமைந்துவிடும். "உறவுகள்' தொடரில் சித்ராவாக வரும் ஸ்ரீதுர்கா அந்த ரகம். அவரை அவரது  இல்லத்தில் சந்தித்தபோது...  உங்களைப் பற்

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:33 PM
பகிர்:

நடிகைகளில் சிலருக்கு மட்டும் பக்கத்துவீட்டுப் பெண் போல அத்தனை பாந்தமான முகம் அமைந்துவிடும். "உறவுகள்' தொடரில் சித்ராவாக வரும் ஸ்ரீதுர்கா அந்த ரகம். அவரை அவரது  இல்லத்தில் சந்தித்தபோது... 

உங்களைப் பற்றி?

அப்பா, அம்மா, இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்ச காலம் மாடலிங் துறையில் இருந்தேன். தற்போது பத்து வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில்தான் இருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு பாண்டிச்சேரிக்குப் போய்விட்டதனால் அங்கிருந்து தினமும் நடிக்க வந்து கொண்டிருந்தேன். இப்போது சென்னையில் திருவல்லிக்கேணிக்கு வந்துவிட்டேன்.

நடித்துக்கொண்டிருக்கும் தொடர்கள்?

சன் டி.வி.யில் மதியவேளையில் ஒளிபரப்பாகும் "உறவுகள்', "வசந்தம்' ஆகிய இரண்டு தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். கேப்டன் டி.வி.யில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்று தயாரித்து வழங்குகிறேன். 

"உறவுகள்' அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

ஒரு குடும்பத்தில் சொந்தபந்தங்களுக்குள் நடக்கிற சம்பவங்கள்தான் "உறவுகள்' தொடர். இதில் எனக்கு செய்யாத தவறுகளுக்காகப் பழி சுமப்பதுபோன்ற கதாபாத்திரம். இந்தத் தொடருக்காக நடிக்க வந்துவிட்டால் அதில் நடிக்கும் எல்லாருமே என் சொந்த குடும்பம் போன்றே தோன்றும். ரொம்ப சோகமான காட்சிகள் வரும் போது என்னை மறந்து அழுவேன். அந்த அளவு அந்த கேரக்டரோடு இன்வால்மெண்ட் ஆகிவிட்டேன். 

ரசித்து நடித்த கேரக்டர் எது?

இதுவரை நடித்த எல்லா கேரக்டருமே பிடிக்கும். "ஊஞ்சல்', "அலைகள்', "சிகரம்' என எல்லாமே. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் "ஊஞ்சல்' தொடரில் நடித்த வேடம். அதில் முதல் பாதியில் நெகடீவ் கேரக்டர் செய்திருந்தேன். இரண்டாம் பாதியில் செய்த தவறை உணர்ந்து திருந்தி வாழும் பாஸிடீவான கேரக்டர். அது ரொம்ப பிடித்திருந்தது.

ரசிகர்களைச் சந்தித்ததுண்டா?

உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் நிறைய பேருக்கு என் முகம் தெரியும், பெயர் தெரியாது. ரசிகர்கள்  கேரக்டர்கள் பெயரை வைத்துதான் கூப்பிடுவார்கள். அது ஒரு வகையில் வருத்தமாக இருந்தாலும், ஒரு வகையில் என் நடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததை நினைத்து சந்தோஷமாக இருக்கும். 

இதுவரை கிடைக்காத கேரக்டரை நினைத்து  ஏங்குவதுண்டா?

ஜாலியாக மற்றவர்களை சிரிக்க வைத்து பார்க்கும் நகைச்சுவை கேரக்டர்கள் ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி கேரக்டர்கள் நிறைய கிடைக்கவில்லையே என்று வருந்தியது உண்டு. ஜெயா டிவியில் "பொய் சொல்ல போறோம்' என்ற தொடரில் ஒரு டிராக் மட்டும் காமெடி செய்திருப்பேன். அதில் ரொம்பவே விரும்பி நடித்தேன்.

நீண்ட நாட்களாக சின்னத்திரையில் இருக்கும் நீங்கள் பெரியதிரை பக்கம் போகவில்லையே, ஏன்?

ஒரு சில படங்கள் நடித்திருக்கிறேன். எனக்கு முக்கியத்துவம் இருப்பது போன்ற நல்ல வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். 

சினிமா இன்டஸ்ட்ரியிலேயே வேறு துறையில் வர வேண்டும் என்று நினைத்ததுண்டா?

பாடுவதும், ஆடுவதும் ரொம்ப பிடிக்கும். என் குடும்பமே ஒரு சங்கீத குடும்பம். நானும் முறைப்படி சங்கீதம் பயின்றிருக்கிறேன். அதனால் அந்தத் துறையில் வர வேண்டும் நினைப்பேன். அதுதவிர சின்ன வயதிலிருந்தே போட்டோகிராபி மேல் ஆசை உண்டு.  அதனால் சினிமாடோகிராபராக வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.

உங்கள்  திருமணம் எப்போது? காதல் திருமணமாக  இருக்குமா?

காதல் திருமணமா, வீட்டில் பார்த்து வைக்கும் திருமணமா, எப்போ, எங்கே, யாரோட என்பது எல்லாம் தெரியவில்லை. இதுவரை யார்மீதும் காதலும் வரவில்லை.

வருங்காலத்  திட்டம்?

இசைப்பள்ளி நடத்த வேண்டும் என்று ஆசை உண்டு. ஆர்வம் இருந்தும், படிக்க வசதியில்லாத குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை உண்டு. கண்டிப்பாக அதற்காக முயற்சி செய்வேன்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.