பள்ளிப் பாடத்தை நாடகமாக்குகிறோம்!
கோவை அகம் நுண்கலைக் கூடம், ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனம் மதுரை நிகழ் நாடக மையத்தினர் இணைந்து அண்மையில் ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் "குதிரை முட்டை' எனும் நகைச்சுவை நாடகத்தை நிகழ்த்தினர். நாடகம் முடிந
கோவை அகம் நுண்கலைக் கூடம், ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனம் மதுரை நிகழ் நாடக மையத்தினர் இணைந்து அண்மையில் ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் "குதிரை முட்டை' எனும் நகைச்சுவை நாடகத்தை நிகழ்த்தினர். நாடகம் முடிந்தவுடன் மையத்தின் நிறுவனர் மற்றும் நாடகத்தின் இயக்குநர் எம்.சண்முகராஜாவை சந்தித்தோம். அவர் வேறு யாரும் இல்லை, "விருமாண்டி' படத்தில் "பேய்க்காமன்' பாத்திரத்தில் நடித்தவர்தான்! 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.ஃபில்., பட்டங்கள் பெற்றவர். தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் பயின்றவர். இப்படியாக பலருக்கு நன்கு பரிட்சயமான நடிகர். நாடகக் கலை மற்றும் அதில் அவரின் பங்களிப்புகளைப் பற்றி நம்மிடம் அவர் பேசியதிலிருந்து...
""அன்றாட வாழ்வில் மனிதர்களைச் சுற்றி இந்த சமூகத்தில் நடக்கும் விஷயங்களை மறுபரிசீலனை செய்து மேடை ஏற்றுவதுதான் நாடகம். இரண்டு பேர் நடிக்க ஒருவர் பார்த்தால் அது மேடை ஏற்றமாகிறது. இது உலகம் முழுவதும் கால மாறுபாடு மனித மனதுடனான வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் நாடகக் கலை வளர்ந்துள்ளது. 60களின் இறுதியில் நவீன நாடகம் என்னும் புது முறை துவங்கியது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை ஆதாரமாகக் கொண்டு உருவாகின. தமிழ்நாட்டில் இந்த நாடக வடிவங்கள் முழுமையாக மக்களிடம் சென்றடையாமல் உள்ள நிலையில் ஆங்காங்கே முயற்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.
நாடகங்களின் வகைகளை, மரபுநாடகம், இசை நாடகம், நவீன நாடகம் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். கதகளி, தெருக்கூத்து, யட்சகானம் போன்றவை மரபு நாடகங்கள்.
வள்ளித் திருமணம், மதுரை வீரன், ஹரிச்சந்திர மயான காண்டம் உள்ளிட்டவை இசை நாடகங்கள். நவீன நாடகத்தை முழுநீள நாடகம், திறந்தவெளி நாடகம், சிறுவர்கள் நாடகங்கள் என வகைப்படுத்தலாம். இதில் முழுநீள நாடகம் என்பது நடிகனை முதன்மையாகக் கொண்டு செட், காஸ்ட்யும், லைட், மேக்-அப் இவற்றை உள்ளடக்கியது.
வீதி நாடகங்கள், நடிகர்கள், ஒரு சமூகப் பிரச்னையை மையப்படுத்தி எந்தவித தொழில்நுட்ப உதவியுமின்றி அரங்கேற்றுவது. அதில் விழிப்புணர்வு அல்லது மக்களுக்குச் சில கருத்துகளைக் கொண்டு செல்வதே முதன்மையான நோக்கமாக இருக்கும்.
சிறுவர்கள் நாடகம் என்பது இரு வகைப்படும் சிறுவர்களுக்காக சிறுவர்களைக் கொண்டே நடத்தப்படுவது ஒன்று மற்றொன்று சிறுவர்களுக்காகப் பெரியவர்கள்
நடிப்பது.
நாடகத்தை ஆதாரமாகக் கொண்டு படைப்பு வழிக் கல்வியை மூன்றாம் உலக நாடுகள் பிரேசில் போன்ற நாடுகளில் "பாவ்லோப்ரேயர்' (கல்வியாளர்) "அகஸ்தோபோவால்' (நாடகக் கலைஞர்) இணைந்து கல்வி பற்றிய சிந்தனைகளை நாடகத்தின் மூலம் எடுத்துச் சென்றனர். இதனால் வகுப்பறைகள் சுதந்திரமாகவும் படைப்பாற்றல் நிறைந்தும் காணப்பட்டன. அதை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு, எங்களின் "நிகழ் நாடக மையம்' மூலம் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு நாடகப் பயணம் மேற்கொண்டோம். மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நாடகத்தை நிகழ்த்திக் காட்டினோம்.
ஆசிரியருக்கும் நாடக நடிகருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாடகக் கலைஞன் கையில் கதைக்கான பிரதி (ஸ்கிரிப்டு) உள்ளது. ஆசிரியர் பாடத்தை கையில் வைத்துள்ளார். நடிகருக்குப் பார்வையாளர்கள் இருப்பதைப் போல் ஆசிரியருக்கு மாணவர்கள் இருப்பார்கள். நடிகருக்கு மேடையைப் போல் ஆசிரியருக்கு வகுப்பறை உள்ளது.
நாடகத்தில் பெறக்கூடிய சுதந்திரமும், சுவாரஸ்யம், படைப்புசார் அனுபவமும் வகுப்பறையில் இல்லாமல் போவதால் அதைப் பெற்றுத்தரும் பொருட்டு நாம் படைப்புவழிக் கல்வியை முன்எடுக்கிறோம். அதனால் பாடத் திட்டத்தில் உள்ள பாடங்களை நாடகமாக நிகழ்த்துகிறோம். சமச்சீர்க் கல்வியில் 7ஆம் வகுப்பில் உள்ள "குதிரைமுட்டை வாங்கிய கதை'யை (பரமார்த்த குரு கதைகள்) நாடகமாக நடித்துக்காட்டுகிறோம். இதன் மூலம் வரிவடிவத்தில் உள்ள பாடத்தை மாணவர்கள் நிகழ்த்துக் கலையாக பார்க்கும்போது கற்றல் என்பது இனிய அனுபவமாகிறது. மனதிலும் எளிதாக பதிந்துவிடுகிறது.
மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 6 முதல் 9 வகுப்புவரையிலான மாணவர்களுக்கு |5 லட்சம் மதிப்பில் 10 மாவட்டங்களில் நாடகப் போட்டிகளை நடத்த உள்ளோம். கல்வியாளர் டாக்டர் வசந்திதேவி தலைமையில் இயங்கும் மனித உரிமை கல்வி இயக்ககம் வாயிலாக ஆசிரியர் மாணவர்களுக்குப் பயிலரங்குகளை நடத்துகிறோம்'' என்றார்.
- சண்முகராஜா பேசி முடிக்கும் போது, அவரின் பேச்சை ஆமோதிப்பது போன்று, மணி ஓசை கேட்டது. "அடுத்த காட்சிக்கு நேரமாச்சி' என்றார் சண்முகராஜா!