முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அடியாத்தி.. இது அலையாத்தி!

டிசம்பர் 26- 2004. இந்த நாளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. உலகையே குலுக்கிய நாள் அது. ஆம், சுனாமி என்னும் ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தை இந்த உலகம் உணர்ந்த நாள். அன்றைய தினம் சென்னை, கடலூர

ஞாயிறு கொண்டாட்டம்

அடியாத்தி.. இது அலையாத்தி!

டிசம்பர் 26- 2004. இந்த நாளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. உலகையே குலுக்கிய நாள் அது. ஆம், சுனாமி என்னும் ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தை இந்த உலகம் உணர்ந்த நாள். அன்றைய தினம் சென்னை, கடலூர

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:50 PM
பகிர்:

டிசம்பர் 26- 2004.

இந்த நாளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. உலகையே குலுக்கிய நாள் அது. ஆம், சுனாமி என்னும் ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தை இந்த உலகம் உணர்ந்த நாள்.

அன்றைய தினம் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், கன்னியாகுமரி என தமிழகக் கடலோரப் பகுதிகள் முழுவதும் கடும் அழிவைச் சந்தித்தன. பல ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டு போனார்கள்.  ஆனால், கடலோரத்தில் இருந்தும்கூட, சுனாமியின் சுவடுகளைக் கூட காணாத ஊர் முத்துப்பேட்டை.

அடுத்து 2008 நவம்பர் இறுதியில் வீசிய நிஷா புயலில் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் சின்னாபின்னமாக்கப்பட்டன. அப்போதும் மழையின் பாதிப்பை மட்டுமே உணர்ந்த முத்துப்பேட்டையில்,  சூறாவளிக் காற்றின் பாதிப்பு பெரிதாக இல்லை.  இப்போது மட்டுமல்ல. இதற்கு முன்பு வீசிய கடும் புயல்களில்கூட முத்துப்பேட்டை பகுதி பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டது.

காரணம், அலையாத்திக் காடுகள்.  

முத்துப்பேட்டையிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிராம்பட்டினம் வரை சுமார் 15 கி.மீ. கடலோரத் தொலைவுக்கு, 12 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பில் இந்தக் காடுகள் பரவியுள்ளன. ""கடலிலிருந்து கடும் வேகத்துடன் வீசும் அலையின் வேகத்தை, காற்றின் வேகத்தைக் குறைத்து, கட்டுப்படுத்துவதால்தான் இந்தக் காடுகளை அலையாத்திக் காடுகள் என்று மக்கள் அழைக்கிறார்கள்'' என்கிறார் இயற்கை ஆர்வலரான மன்னார்குடி எம். செல்வநாதன்.

மேலும் தொடர்ந்தார்:  ""ஆற்று நீரும், கடல் நீரும் கலக்கும் முகத்துவாரப் பகுதிகளில் உப்புத் தன்மை குறைவாக உள்ள நீரீல் வளரும் காடுகளை சதுப்பு நிலக் காடுகள் என்கிறோம். இந்த அலையாத்திக் காடுகளும் அந்த வகையைச் சேர்ந்தவைதான். காவிரியின் பல கிளை ஆறுகள் இங்கு கடலில் கலக்கின்றன.

இதேபோல் சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் காடுகள், மேற்குவங்கம், ஒரிசா மாநிலங்களில் உள்ள சுந்தரவனக் காடுகள் ஆகியவையும் இந்த வகையைச் சேர்ந்தவைதான். முத்துப்பேட்டை அலையாத்திக் காட்டில், அவீசினியா என்னும் இனத்தைச் சேர்ந்த குறுமரங்களே அதிகம் உள்ளன. அதில் இரண்டு வகை மரங்கள் உள்ளன. அவற்றை உள்ளூர் மக்கள் வெண்சுண்டல், கருஞ்சுண்டல் என அழைக்கின்றனர்.

மேலும் ஒரிசா மற்றும் பிச்சாவரம் காடுகளிலிருந்து எடுத்துவரப்பட்ட சுரபுன்னை என்னும் தாவரமும் இப்போது வனத் துறையினரால் இந்தக் காட்டுப் பகுதியில் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. இந்தக் காடுகளில் வளரும் தாவரங்கள் வேர்களால் சுவாசிப்பவை. எனவே,  ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் தண்ணீருக்குள் இருந்து மேல்நோக்கி வளர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான வேர்களைக் காண முடியும்.   இந்த வேர்களுக்கு இடையே தங்கி இனப்பெருக்கம் செய்வதற்காக ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் அலையாத்திக் காடுகளைத் தேடி வருகின்றன.

குறிப்பாக, இந்தப் பகுதியில் பல வகையான நண்டுகள், இறால்கள் அதிகம் கிடைக்க இதுவே காரணம்.  இங்குதான் கொடுவா மீன் அதிக அளவில் கிடைக்கிறது. மேலும், வடகிழக்குப் பருவ மழை காலத்தில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகளும் இங்கு வருகின்றன'' என்கிறார் செல்வநாதன்.

உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் இப்போது ஏராளமானோர் அலையாத்திக் காடுகளைக் கண்டு ரசிப்பதற்காக வருகின்றனர். எனினும், இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், மீனவர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை.

அலையாத்திக் காடுகளை மேம்படுத்துவது குறித்து திருவாரூர் மாவட்ட வன அலுவலர் எம். குருசாமி,  முத்துப்பேட்டை வனச் சரகர் எஸ். மாணிக்கம் ஆகியோர் கூறியதாவது:

""சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விறகுக்காக அலையாத்திக் காடுகளை வெட்டுவது அதிகமாக இருந்தது. ஆனால், விறகு வெட்டும் தொழிலில் ஈடுபட்ட ஏழை மக்களுக்கு இப்போது மாற்றுத் தொழிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விறகு அடுப்புகளைப் பயன்படுத்துவதும் இப்பகுதியில் பெருமளவு குறைந்துவிட்டது. இதனால், விறகுக்காக காடுகள் அழிக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது'' என்றனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களின் எல்லையாக திகழும் முத்துப்பேட்டை பகுதியில் காணப்படும் அலையாத்திக் காடுகளை, இயற்கை அளித்த மாபெரும் கொடை என்றே கூற வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →