அடுத்தடுத்த வெற்றிகள் கூடி வந்திருக்கிற அமைதி; சாந்தமாக உட்காருகிறார் விஷ்ணு! ""அடுத்த கணம் என்னன்னு யோசிக்க தெரியாமல் வாழ்க்கை இருந்துச்சு. இதோ இப்போ மூன்று படங்கள் முடித்துத் திரும்பிப் பார்த்தால் எனக்கே கொஞ்சம் பெருமை வருது. சின்ன விபத்து வாழ்க்கையின் எல்லா நிமிடங்களையும் மாற்றி எழுதிவிட்டது. கிரிக்கெட்தான் எல்லாம்னு இருந்த என்னை மாற்றியது ஒரு விபத்துதான். சினிமாவுக்கு வந்ததைத்தான் சொல்கிறேன். இதோ அடுத்து "குள்ள நரி கூட்டம்'னு ஒரு படம் ரெடியாகி விட்டது. ஆடலும் பாடலும் காதலும் நிறைஞ்ச படம். கொண்டாட்டமாய் பார்த்து ரசிக்கலாம்.'' நம்பிக்கையோடு கை குலுக்கிப் பேசுகிறார் விஷ்ணு. தமிழக வடக்கு மண்டல ஐ.ஜி.யான ரமேஷ் குடவாலாவின் மகன்.
சட சடவென கிராமத்து சினிமாக்கள்தான் பண்ணுவேன்னு அடம் பிடிக்காம கலவையான கதைகள் எடுத்து பண்றீங்க. இந்த நிதானம் வந்தது எப்படி?
முதல்ல எனக்கும் புரியலை. வரும் போதே பெரிய வேகத்தோடு சினிமாவுக்கு வந்தேன். ஆர்வம், வெறி எல்லாம் சேர்ந்து "வெண்ணிலா கபடி குழு'ன்னு வெற்றியை தந்துச்சு. அப்புறம் நிச்சயம் சரிவுகளைப் பார்க்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிதான் "பலே பாண்டியா', 'துரோகி'ன்னு வந்து நிக்கறேன். ரொம்ப சோதனையான காலம் இருந்துச்சு. அதில் நான் கத்துக்க வேண்டிய விஷயங்களும் நிறைய இருந்துச்சு. நான் அழகன் இல்லை. புஜபலங்களோடு எந்த விதமான கவர்ச்சியும் இல்லாத நார்மல் பையன். அழகா ஆடிப் பாடி ஃபைட் பண்ணிட்டு மட்டுமே போக முடியும். அதனால்தான் அவசரப்படாமல் நல்ல கதைகளை, கேரக்டர்களை நம்ப ஆரம்பிச்சேன். நான் இந்த அளவுக்கு ஆரம்ப வெற்றிகளில் இருக்கேன்னா அதுக்கு டைரக்டர்களும் காரணம்.
"துரோகி' படத்தில் முதன் முதலா ஆக்ஷன் கேரக்டரில் வந்திருக்கீங்க?
ஆமாங்க. நானே எதிர்பார்க்காத வாய்ப்பு. படத்தோட இயக்குநர் சுதா. மணி சாரோட மாணவி. "எப்பவும் ஃபயராகவே இருக்கணும். யாரையாவது அடிச்சு உதைக்கலாமாங்கிற மாதிரியே பார்க்கணும்'னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இயல்பாவே நான் ரொம்ப அமைதி. ஆனா, என் இயல்பை மாத்தி வேறொரு மாதிரி ஆக்கிட்டாங்க. நிறைய போன்கால்ஸ். நம்பிக்கை தருது. கேரியரில் "துரோகி' முக்கியமான படம்.
"பலே பாண்டியா' ஷூட்டிங் சமயம் உங்களுக்கும் பியாவுக்கும் காதல்னு கிசுகிசுகள் வந்ததே?
பியாவுக்குத் தமிழ் தெரியாது. பியாவுக்குத் தெரிஞ்ச ஹிந்தி எனக்குத் தெரியும். அதனால் மத்தவங்களோட பேசறதுக்காக முதல்ல என்னை மீடியேட்டர் ஆக்கினாங்க. டயலாக் சொல்லித் தரச் சொன்னாங்க. அதை வெச்சு யாராவது கதை கட்டி இருப்பாங்க. முதலில் பழகக் கூச்சப்பட்டேன். இப்போ பியா எனக்கு நல்ல ஃப்ரண்ட். "தமிழ் தெரியாத பொண்ணு எவ்வளவு அழகாப் பேசுது. நீ இப்படி சொதப்புறியே'னு திட்டு
வாங்கி சவாலாக நடித்தேன். பியாவுக்கு என் நன்றி கலந்த வாழ்த்துகள்.
கிரிக்கெட், போலீஸ் என உங்களுக்குக் கனவு இருந்துச்சு, இப்போ சினிமாதான் வாழ்க்கையாகிடுச்சு.. எப்படியிருக்கு?
"உன் கனவில் வந்ததை நிறைவேற்றும் வரை நீ வேறு எதுவாகவும் ஆகாதே'னு ஒரு பொன்மொழி இருக்கு. கிரிக்கெட், போலீஸ் இப்போ சினிமான்னு வந்து நிக்கறேன். "அவனுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து லைஃபையே கெடுக்கப் போறே'னு நிறைய பேர் அப்பாகிட்ட சொன்னதைக் கேட்டிருக்கேன். அதையெல்லாம் காதுல போட்டுக்காம "சினிமாவுல நடிக்க போறியா'னு கேட்டு டாட்டா காட்டி அனுப்பி வெச்சார். எல்லாருக்கும் இருக்கிற மாதிரி எனக்குன்னு சினிமாவுல ஒருத்தர்கூட கிடையாது. நான் ஸ்பெஷல்னு எனக்குத் தெரியாமலே வளர்த்தார். "அவனுக்கு என்ன போலீஸ் பையன் கொஸ்டின் பேப்பரே கிடைக்கும்' என நிறையப் பேர் ஸ்கூலில் சொன்னாங்க. கிரிக்கெட் பக்கம் போனா "ரெக்கமண்ட்ல இந்திய டீமில் அவன் இடம் பிடிச்சுடுவான்' எனச் சொன்னாங்க. சினிமான்னு வந்தா முதல் படத்தோட புரடியூசர் உங்க அப்பாதானேன்னு கேட்டாங்க. ஆனா, எதுவுமே உண்மை கிடையாது. "அவன் அவனாகவே வளர்ந்து பின்னாடி எந்த திசையில் போகலாம்னு அவனே முடிவெடுக்கட்டும்' என்பதுதான் இப்போதும் என் அப்பாவின் ஆசை. தேங்க்ஸ் அப்பா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.