மூலை முடுக்குகளில் எல்லாம் தேடியலைகிறோம்!
பரபரப்பான காட்சிகள், நெஞ்சை திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சிகள், இரத்தத்தை உறைய வைக்கும் கதைப்போக்கு - இப்படி வருகிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் மக்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுகிற, அதேசமயம் விழ
பரபரப்பான காட்சிகள், நெஞ்சை திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சிகள், இரத்தத்தை உறைய வைக்கும் கதைப்போக்கு - இப்படி வருகிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் மக்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுகிற, அதேசமயம் விழிப்புணர்வு ஊட்டுகிற நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார் பா.ராஜநாராயணன்.
விஜய் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிற "நடந்தது என்ன?' நிகழ்ச்சியில் ராஜநாராயணன் வழங்குகிற நிகழ்ச்சிக்குப் பெயர் "விசித்திர வியாழன்'. அது வியாழக்கிழமை ஒளிபரப்பாகிறது.
ராஜநாராயணனின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி.அப்படி என்னதான் இருக்கிறது உங்களுடைய விசித்திர வியாழனில்? என்று கேட்டோம்.
""நான் அடிப்படையில் பத்திரிகையாளன். தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற எல்லாருக்கும் தெரியாத நிகழ்ச்சிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதில் எனக்கு கரையில்லாத ஆர்வம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியை அளித்து வருகிறேன். 125 ஷோக்களுக்கும் மேல் ஓடிவிட்டது. அவற்றில் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கூடலில் 37 வருடங்களாக ஒருவரின் கைகளிலும் கால்களிலும் சங்கிலியால் பிணைத்து வைத்திருந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது அதிர்ந்து போனோம். அவர் அவருக்கே பயன்படாத சாவிக்கொத்து,இருபது பைசா நாணயம் சிறிய பொருட்களைத் திருடும் பழக்கம் உள்ளவர். இதை ஆங்கிலத்தில் கிளெப்டோமேனியா என்பார்கள்.
மிகப்பெரிய மனிதர்களுக்குக் கூட இந்தப் பழக்கம் இருக்கும். இதனால் அவர் இருக்கும் பகுதியில் எந்தப் பொருள் காணாமற் போனாலும் அவரையே திருடன் என்று ஊர் குற்றம் சாட்டியது. அவருடைய பெற்றோருக்கும் தொல்லை கொடுத்தனர். காவல்துறையினரும் அவர் செய்யாத குற்றங்களையெல்லாம் அவர் மீது சுமத்தியதாகக் கேள்விப்பட்டோம். இதனால் அவருக்குப் பத்து வயதாக இருக்கும்போது அவர் கை, கால்களைச் சங்கிலியால் பிணைத்து வைத்தார்கள். இதைக் கேள்விப்பட்ட நாங்கள் அங்கே சென்று அவரைப் படம் பிடித்தோம். அவ்வாறு படம் பிடித்ததை அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த பிரகாஷிடம் காட்டினோம். அவர் உடனே கை, காலில் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியை அகற்ற உத்தரவிட்டார். சங்கிலியை அகற்றியவுடன் அந்த நபர் சுதந்திர மனிதனாக உணர்ந்து மிகவும் சந்தோஷமாகத் துள்ளிக் குதித்தவிதம் என்னால் எப்போதும் மறக்க முடியாதது.
கிளெப்டோமேனியா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் ஒருவர் எப்படி பாதிக்கப்பட்டார் என்பதைச் சித்திரித்திருந்த அந்த நிகழ்ச்சி சிறந்த வரவேற்பைப் பெற்றது.
அதுபோல, மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டிக்கு அருகே உள்ள ஊர் வேலாம்பூர். அந்த ஊரில் பேய் நடமாட்டம் இருப்பதாகப் பயந்து 30 வருடங்களுக்கு முன்பு மக்கள் ஊரைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள். அதனால் அந்த ஊரில் உள்ள வீடுகள் எல்லாம் சிதிலமடைந்து கிடந்தன. நல்ல வளமான நிலமும், நீர் வளமும் உள்ள அந்த ஊருக்குச் சென்று படம்பிடித்தோம். அந்த ஊருக்குப் பக்கத்து ஊரில் ஒரு சாமியாடிப் பெரியவர் இருந்தார். அவரிடம் கேட்ட போது அந்த ஊரில் முனி நடமாட்டம் இருப்பதாகச் சொன்னார். அந்தப் பகுதியின் தாசில்தாரை அணுகிக் கேட்டபோது, வேலாம்பூர் பஞ்சாயத்து என்று இருந்திருக்கிறது. அதற்குக் கீழ் 9 கிராமங்கள் இருந்திருக்கின்றன. அந்த ஊரில் மீண்டும் மக்களைக் குடியமர்த்த ஏற்பாடு செய்யும்படி தாசில்தாரைக் கேட்டுக் கொண்டோம். மூடநம்பிக்கையின் காரணமாக ஓர் ஊர் இப்படி வீணாகலாமா என்ற கேள்வியை நிகழ்ச்சியில் அழுத்தமாக முன் வைத்தோம்.
விழுப்புரம் பக்கத்தில் உள்ள விராட்டிகுப்பம் என்ற கிராமத்தில் ஒரு கிணறு இருக்கிறது. அந்தக் கிணற்றுப் பக்கம் போனால் போகிறவரை அந்தக் கிணறு உள்ளிழுத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையால் 25 ஆண்டுகளாக அந்தக் கிணற்றுப் பக்கம் யாருமே போகவில்லை. நாங்கள் இந்தத் தகவலை தீயணைப்புத்துறை டிஜிபி நடராஜிடம் சொன்னோம். அவர் அந்தப் பகுதியின் தீயணைப்புத்துறைக்குச் சொன்னார். அவர்களுடைய உதவியுடன் அந்தக் கிணற்றைச் சுத்தப்படுத்தினோம். அதற்குள் இருந்த பாம்புகளை வெளியில் எடுத்துவிட்டோம். அந்தக் கிணற்றில் நல்ல தண்ணீர் இருந்தது. மக்களின் மூடநம்பிக்கையின் காரணமாக அந்தக் கிணறு பயன்படுத்தப்படாமல் இருந்ததை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தோம்.
இவை ஒரு சில உதாரணங்களே. நீங்கள் தமிழ்நாடு முழுக்கச் சுற்றிப் பார்த்தால் இதுபோல நிறைய விஷயங்களைப் பார்க்க முடியும்'' என்கிறார்.
பா.ராஜநாராயணன் ஓர் எழுத்தாளரும் கூட. அவருடைய "லிங்கம்', "கிருஷ்ணவேணி' இரண்டும் பிரபல வார இதழ்களில் தொடராக வந்தபோதே பேசப்பட்ட நாவல்கள். இவை இரண்டும் திரைப்படமாக வர உள்ளன.