முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

"பொன்னான நேரம்' மிகக் குறைவாக இருக்கட்டும்!

விபத்து நடந்த உடனேயே இப்போது பலருடைய நினைவுக்கு வருவது 108 ஆம்புலன்ஸ் சேவை. ஆனால் இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே - சென்னையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு - சென்னையில

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:41 PM
பகிர்:

விபத்து நடந்த உடனேயே இப்போது பலருடைய நினைவுக்கு வருவது 108 ஆம்புலன்ஸ் சேவை. ஆனால் இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே - சென்னையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு - சென்னையில் ஆம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்துவிட்டார் பி.டி.அலி. "ஆக்சிடென்ட் அண்ட் டெத் கேர் செல்' என்று அதற்குப் பெயர். அதுமட்டுமல்ல, விபத்தில் சிக்கிக் கொண்டவர்களின் உயிர்களைக் காப்பதற்காகச் செய்ய வேண்டிய முதல் உதவிகள் பற்றியும், எப்படி அவர்களைத் தூக்கி வாகனத்தில் ஏற்ற வேண்டும் என்பதைப் பற்றியும், மருத்துவமனைக்கு எவ்வளவு விரைவில் செல்ல வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும் அவர் நடத்தி வருகிறார். அந்த அமைப்பைப் பற்றி அவர் கூறுவது என்ன?

""சாலையில் அடிபட்டுக் கிடப்பவர்களைப் பார்த்துவிட்டு, அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் நிறையப் பேர் செல்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், சாலையில் அடிப்பட்டுக் கிடப்பவர்களுக்கு உதவி செய்யப் போய், காவல்துறையின் விசாரணையிலும், இழுத்தடிப்பிலும் மாட்டிக் கொள்வோமே என்று பயப்படுவதுதான். எதற்கு வீண் தொல்லை? என்று பலர் போய்

விடுகிறார்கள்.

காவல்துறையின் விசாரணை,அவர்கள் தருகிற தொல்லை ஒரு பயமுறுத்துகிற விஷயமாக இருக்கிறது. ஆனால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்பவர்களை விசாரணை என்கிற பெயரில் நிறுத்தி வைக்கக் கூடாது என்று காவல்துறையின் ஆணையே இருக்கிறது. அதுமட்டுமல்ல, உச்சநீதிமன்றம் இப்படி உதவுபவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.

விபத்தால் பாதிக்கப்பட்டவரைப் பற்றி எந்த விவரமும் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லலாம். விபத்தில் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றிய உங்களைப் பற்றிய தகவல்களைத் தர நீங்கள் விரும்பாவிட்டால், தராமலும் இருக்கலாம்.

விபத்தால் பாதிக்கப்பட்டவரின் பெயர், முகவரி போன்றவை அவர் வைத்திருக்கும் டிரைவிங் லைசென்ஸ், அடையாள அட்டை போன்றவற்றில் இருக்கும். அவற்றை வைத்து அவருடைய பெயரைத் தெரிந்து கொள்ள முடியும். இதைக் காவல்துறையினரும், மருத்துவமனையிலும் குறித்துக் கொண்டு ஆவன செய்வார்கள்.

மருத்துவமனையில் தருகிற தகவல்களை வைத்து, காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைத் தயார் செய்வார்கள். இதற்காகத்தான் விபத்து தொடர்பான விவரங்களைக் காவல்துறையினர் கேட்கிறார்கள். எனவே காவல்துறையினரின் தொல்லைக்குப் பயப்படாமல் விபத்தால் பாதிக்கப்பட்டவரை உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

சென்னையில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு உள்ள மருத்துவமனைகள் உள்ளன. அப்படிப்பட்ட மருத்துவமனை அருகில் இருந்தால் விபத்தால் பாதிக்கப்பட்டவரை அங்கே கொண்டு செல்வது நல்லது. ஒருவேளை அப்படிப்பட்ட மருத்துவமனை அருகில் இல்லையென்றால் அருகில் உள்ள எந்த மருத்துவமனைக்கும் கொண்டு செல்லலாம். அவர்கள் தேவையான முதல் உதவிகள் செய்வார்கள். அதற்குப் பின்புதான் அவர்களை வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். விபத்தால் பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை செய்யமாட்டோம் என்று மறுக்க முடியாது. கூடாது. இதற்கும் விதிகள் உள்ளன.

பல சமயங்களில் விபத்தில் சிக்கி ரத்தம் கொட்டிக் கொண்டிருப்பவரை, ஒரு மருத்துவமனையில் ஏற்றுக் கொள்ளாமல், இன்னொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கேயும் ஏற்றுக் கொள்ளாமல், பல மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்குள், அதிக ரத்தப்போக்கின் காரணமாக அவர் இறந்துவிடக் கூடும்.

இப்படி விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முதல் உதவியையும், மருத்துவ சிகிச்சையையும் தர மறுக்கும் மருத்துவமனைகளுக்கான அனுமதியை அரசு நீக்கிவிட வேண்டும் என்பது என் கருத்து.

விபத்து நடந்த இடத்தில், விபத்தில் பாதிக்கப்பட்டு இருப்பவரைப் பார்த்து, அவர் நல்லமுறையில் மூச்சுவிடுகிறாரா? என்று பார்க்க வேண்டும். தலை ஒருபுறமாகச் சாய்ந்து கிடந்தால், நாக்கு மூச்சுக் குழலுக்குள் காற்று செல்லும் பாதையை அடைத்துவிடும். மூச்சுவிட முடியாமல் திணறுவார்கள். அதுபோல அடிபட்ட காரணத்தால் வாய்க்குள் கசியும் ரத்தம், சதை போன்றவை மூச்சுக் குழலை அடைத்துக் கொள்ளும். எனவே விபத்தில் பாதிக்கப்பட்டவர், மூச்சுவிடத் திணறினால் அவர் மூச்சுவிடத் தடையாக இருப்பவற்றை நீக்க வேண்டும். அப்போதுதான் அவரைக் காப்பாற்ற முடியும்.

அதற்கு அடுத்து கவனிக்க வேண்டிய பிரச்னை, அடிபட்ட இடத்தில் இருந்து ரத்தம் அதிக அளவில் வெளியேறுவது. ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க வேண்டும். காயத்தின் இடைவெளிப் பக்கங்களைச் சேர்த்து 10 -15 நிமிடங்கள் தொடர்ச்சியாக அழுத்தினால் ரத்த ஒழுக்கு நின்றுவிடும். சுத்தமான, கிருமிகள் இல்லாத துணியால் காயத்தின் அருகே உறுதியாகக் கட்டுப்போட வேண்டும்.

சிலருடைய உடலின் உட்புறத்தில் எலும்பு உடைந்திருக்கும். அவர்களை மிகவும் கவனமாகத் தூக்க வேண்டும். இல்லையென்றால் உடைந்த எலும்பு உடலின் உட்புற உறுப்புகளில் - இதயத்திலோ, நுரையீரலிலோ, சிறுநீரகத்திலோ குத்தி பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உண்டு.

விபத்து நடந்த இடத்திலிருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் நேரம் பொன்னான நேரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில்தான் மூச்சுவிட முடியாமல் போவதாலோ, குறைந்த இரத்த அழுத்தத்தின் காரணமாகவோ, மூளைக்குக் கூடுதல் பாதிப்பு ஏற்படக் கூடும். போதுமான காற்று இல்லாமையால், ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு குறைந்துவிடும். அதன் மூலம் மூளை சேதமடையக் கூடும். அதுபோல உடலின் உட்புறத்திலோ, வெளிப்புறத்திலோ இரத்த ஒழுக்கு ஏற்பட்டால், குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படும். இதனால் மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்தம் குறைந்துவிடலாம். இதனால் மூளை சேதமடைந்து இரண்டாவது விபத்து ஏற்பட்டுவிடும். எனவே இந்தப் பொன்னான நேரம் மிகவும் குறைவான நேரமாக இருப்பது அவசியம். அதாவது எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு செல்ல முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொண்டு செல்ல வேண்டும்.

மூச்சுவிடுவதில் பிரச்னை, அதிக ரத்தப் போக்கு, எலும்பு உடைந்துபோதல் போன்றவற்றுக்கு எவ்வாறு முதல் உதவி செய்ய வேண்டும் என்பதற்கான பயிற்சிகளையும் நாங்கள் தருகிறோம். விபத்தில் பாதிக்கப்பட்டவரை எந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிந்திருப்பது நல்லது. உதாரணமாக, சென்னையில் சில மருத்துவமனைகளைச் சொல்லலாம். தீக்காயம் பட்டவர்களைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் அங்கே அதற்கு நல்ல சிகிச்சை செய்வதற்கான வசதிகள் உள்ளன. எலும்பு முறிவுக்கு ராயப்பேட்டை மருத்துவமனைக்கும், விரல்களில் பாதிப்பு ஏற்பட்டால் ஸ்டான்லி மருத்துவமனைக்கும், தலையில் பாதிப்பு ஏற்பட்டால் அரசு பொதுமருத்துவமனைக்கும் கொண்டு செல்ல வேண்டும். தீக்காயம் உள்ளவரை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பிறகு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் நேரம் வீணாகும். உயிர்காக்கும் வாய்ப்பு தப்பித்து ஓடிவிடும். இதுபோல ஒவ்வோர் ஊரிலும் இருக்கும் மருத்துவமனைகளையும் அவற்றின் சிறப்பு மருத்துவ வசதிகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நாங்கள் எங்கள் அமைப்பின் மூலமாக விபத்து நடந்த இடத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவுகிறோம். பாதிக்கப்பட்டவரைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லையென்றால், அவர்களைப் பார்த்துக் கொள்ள அரசு பொதுமருத்துவமனையில் எங்களுடைய பணியாளர்களை நியமித்திருக்கிறோம். அவர்கள் ஷிப்ட் அடிப்படையில் வேலைக்கு வந்து, ஆதரவற்றவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, விபத்தினால் பாதிக்கப்பட்டவர் ஒருவேளை இறந்துபோனால் அவருடைய உடலை அவருடைய வீட்டுக்கு எடுத்துச் செல்ல - அது வெளியூரில் இருந்தாலும் கூட - உதவுகிறோம்.

இறந்தவர்களின் உடலை ஆம்புலன்ஸில்தான் எடுத்துச் செல்ல வேண்டுமென்பதில்லை. ரயிலில் ஒரு பெட்டியில் பாதிப் பகுதியை இறந்தவர்களின் உடலைக் கொண்டு செல்வதற்காகவே ஒதுக்கியிருக்கிறார்கள். ரயில் கிளம்புவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இறந்தவரின் உடலைப் பெட்டியில் வைத்து மூடி, குறைந்த செலவில் அனுப்ப முடியும். ஒரு பயணிக்கான பயணக் கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.100 செலுத்தினால் போதும். இதுபோன்ற தகவல்களையும் நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம்'' என்கிறார் பி.டி.அலி.

முழு கட்டுரையைப் படிக்க →