மஹா கும்பமேளா!
சனவரி-14 அன்று தொடங்கி, 56 நாட்கள் கோலாகலமாக நடைபெற்று, மஹா சிவராத்திரி ஆகிய இன்றோடு (மார்ச்-10) முடிவடையும் மஹா கும்ப மேளா,
சனவரி-14 அன்று தொடங்கி, 56 நாட்கள் கோலாகலமாக நடைபெற்று, மஹா சிவராத்திரி ஆகிய இன்றோடு (மார்ச்-10) முடிவடையும் மஹா கும்ப மேளா, இந்த உலகில் நடக்கும் எல்லா சமயத் திருவிழாக்களைவிட மிக அதிகமான எண்ணிக்கையில் மக்களை ஈர்க்கிறது. இந்த ஆண்டு கும்ப மேளாவின் சிறப்பு, இது 144 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்ப மேளா என்பது தான். பிப்ரவரி 7ம் நாள் முதல் 11-ஆம் நாள் வரை மஹா கும்ப மேளாவில் கலந்து கொண்டது ஒரு வித்தியாசமான அனுபவம்.
வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர் என்றும், அப்படிக் கடையும் போது வெளிப்பட்ட அமுத கலசத்தை தேவர்கள் எடுத்துக்கொண்டு ஓடிய போது, அமுதத் துளிகள் கீழே சிந்தியதாகவும், அவை சிந்திய இடங்களான ஹரித்துவார், பிரயாகை என்று அழைக்கப்படும் அலகாபாத், நாசிக் மற்றும் உஜ்ஜெய்னி ஆகிய இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கோலாகலமான உற்சவம் கும்ப மேளா என்றும் கூறப்படுகிறது. உஜ்ஜெய்னியில் க்ஷிப்ரா நதியிலும், நாசிக்கில் கோதாவரியிலும், ஹரித்துவாரில் கங்கையிலும் நடைபெறும் கும்ப மேளா, அலகாபாத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் இடமான திரிவேணி சங்கமத்தில் நடைபெறுகிறது. இம்மூன்று நதிகளில் கங்கையும், யமுனையும் கண்ணுக்குத் தெரியும் நதிகள். சரஸ்வதி கண்ணுக்குப் புலப்படாத புராண நதி என்று கருதப்படுகிறது.
கும்ப மேளாவைப் பற்றிய குறிப்புகள் சீனாவிலிருந்து இந்தியாவிற்குப் பயணம் செய்த (629-645 கி.பி.) யுவான் சுவாங் எழுதிய கட்டுரைகளில் காணப்படுவதாக வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. 1895-இல் கும்ப மேளாவைப் பார்த்த மார்க் ட்வெய்ன் தனது "பூமத்தியரேகையைத் தொடர்ந்து: உலகைச் சுற்றி ஒரு பயணம்' என்ற நூலில், கும்ப மேளாவைப் பற்றி மிகப் பரவசத்தோடு இப்படிக் குறிப்பிடுகிறார்: "முதியோரும், எளியோரும், இளைஞர்களும், கொஞ்சம் கூடத் தயக்கம் இல்லாமல் ஆயிரக்கணக்கில் வெறும் நம்பிக்கையால் உந்தப்பட்டு பல்வேறு சங்கடங்களைப் பொறுத்துக் கொண்டு மேற்கொள்ளும் அந்தப் பயணத்தைப் பார்க்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது. இது பக்தியால் உந்தப்பட்டு நடக்கிறதா அல்லது பயத்தால் உந்தப்பட்டு நடக்கிறதா, நான் அறியேன். எந்த உந்துதலால் இது நிகழ்ந்தாலும் இப்படி நடக்கிறது என்பதே உறைந்து போய்விட்ட வெள்ளையர்களான நம் மக்களுக்கு அவர்களின் கற்பனைக்கும் எட்டாத ஓர் ஆச்சரியமாகும்'.
இந்த ஆண்டு மகர சங்கராந்தி நாளான சனவரி 14, பெüர்ணமி நாளான சனவரி 27, ஏகாதசி தினமான பிப்ரவரி 6, மெüனி அமாவாசை நாளான பிப்ரவரி 10, வசந்த பஞ்சமி ஆகிய பிப்ரவரி 15, பெüர்ணமி ஆகிய பிப்ரவரி 25 மற்றும் சிவராத்திரி தினமான மார்ச் 10 ஆகிய நாட்கள் கும்ப மேளாவின் மிக முக்கியமான நாட்களாகக் குறிக்கப்பட்டன. இவற்றுள்ளும், மெüனி அமாவாசை நாளான பிப்ரவரி 10 மிகச் சிறப்பான நாளாகக் கருதப்பட்டு, அன்று மட்டும் கிட்டத்தட்ட 3 முதல் 4 கோடி மக்கள் சங்கமத்தில் புனித நீராடியதாக அரசாங்கக் குறிப்புகளே காட்டுகின்றன. இந்தியாவின் மூலை முடுக்குகள் மட்டுமன்றி, இந்த உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் கும்ப மேளாவிற்கு அலகாபாத்தில் குவிந்த மக்களின் சக்தி நம்பற்கரியதாக இருந்தது. மும்பையின் மக்கள் தொகை, டெல்லியின் மக்கள் தொகை, டோக்கியோவின் மக்கள் தொகை இவற்றையெல்லாம் விட அதிகமான மக்கள், பிப்ரவரி 10 அன்று கும்ப மேளாவில் கூடியதாக நாளேடுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக அரசாங்கங்களைப் பற்றியும், நிர்வாக இயந்திரத்தைப் பற்றியும் பலவகைப்பட்ட கருத்துக்களும், மதிப்பீடுகளும் இருக்கும் இக்கால கட்டத்தில் இப்படிப்பட்ட கூட்டத்தை நிர்வாகம் எப்படிச் சமாளித்தது என்பதைக் கூர்ந்து கவனிக்கவேண்டும்.
சனவரி-மார்ச் 2013-இல் மஹா கும்ப மேளா என்று குறிப்பிட்ட உடனேயே கங்கையும், யமுனையும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தைச் சுற்றி சுமார் 4,800 ஏக்கர் (குறிப்பாக 1936.56 ஹெக்டர்) பரப்பளவுள்ள இடம், கும்ப மேளா மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, அந்த மாவட்டத்திற்கு என்று இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த அதிகாரி ஆட்சியாளராக நியமிக்கப்பட்டு, ஓர் அமைச்சரின் நேரடிப் பார்வையில் ஓர் மிகப் பெரிய நிர்வாக இயந்திரம் முடுக்கிவிடப்படுகிறது. அன்றாடம் லட்சக்கணக்கான மக்களும், மிக முக்கியமான நாட்களில் கோடிக்கணக்கான மக்களும் புனித நீராட வரும் காரணத்தால், கங்கை மற்றும் யமுனை ஆகிய இரண்டு நதிகளிலும் பல்வேறு இடங்களில் தாற்காலிக பாலங்களைக் கட்டி, நதிகளின் போக்கை நான்கு இடங்களில் நிர்வாக இயந்திரம் மாற்றிக் கொடுக்கிறது. இப்படிக் கொடுக்கும் காரணத்தால் பெருவாரியான மக்கள், ஒரே இடத்தில் (கும்பகோணம் மஹா மக குளத்தைப் போல) கூட வேண்டிய அவசியம் இல்லாமல், மிகப் பரந்து விரிந்த இடத்தில் நீராடிவிட்டுப் போக ஒரு வாய்ப்பை நிர்வாகம் ஏற்படுத்துகிறது. அந்த கும்ப மேளா மாவட்டம் அல்லது நகரத்தின் பாதுகாப்பிற்கு 12000-க்கும் மேற்பட்ட காவலர்களும் (பி.பி.சி. அறிக்கையின் படி 30000-க்கும் மேல்), ஆயிரக்கணக்கான துணை ராணுவ அலுவலர்களும் அமர்த்தப்பட்டு, 30-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களும், 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டன. இந்தக் கும்ப மேளா நகரத்திற்கென்றே 156 கிலோ மீட்டருக்கு சாலைகள் போடப்பட்டு, 550 கி.மீ. நீளத்திற்கு குழாய்கள் பொருத்தப்பட்டு, 770 மின்சார கம்பங்களும், 22000 தெரு விளக்குகளும் பொருத்தப்பட்டன. கும்ப மேளா நகரத்திற்குள்ளேயே 14 மருத்துவ மனைகளும் (370 படுக்கை வசதி கொண்ட ஒரு மருத்துவமனை உட்பட), 35000-க்கும் மேற்பட்ட கழிப்பறைகளும் உருவாக்கப்பட்டன.
1936 ஹெக்டர் பரப்பளவில் ஒரு 56 நாட்கள் திருவிழாவிற்காக உருவாக்கப்படும் கும்ப மேளா நகரம், 14 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் கும்ப மேளாவிற்காக வருகை தரும் சாதுக்கள் மற்றும் சந்நியாசிகளுக்கு (அசல் மற்றும் போலி) கூடாரம் அமைப்பதற்கு இடம் ஒதுக்கித் தரப்படுகிறது. அந்தக் கூடாரங்களில், நாடு முழுவதிலிருந்தும் பல்வேறு மடங்களைச் சார்ந்த சாதுக்கள் தாற்காலிக குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு, அவர்களுடைய சீடர்களோடும், பக்தர்களோடும் வந்து தங்குகிறார்கள்.
அப்படித் தங்குபவர்களில் புனித நீராடலுக்கான பாரம்பரிய உரிமையோடு வந்து தங்குகின்ற மடங்கள் 13 பிரிவுகளைச் சேர்ந்தவை ஆகும். அவை அகாரா அல்லது அகாடா என்று அழைக்கப்படுகின்றன. இந்த அகாராக்களுக்கான உரிமை சட்ட ரீதியாகவும் வரையறுக்கப்படுகிறது. 1938-லேயே ஐக்கிய மாகாண மேளா சட்டம் (மய்ண்ற்ங்க் டழ்ர்ஸ்ண்ய்ஸ்ரீங்ள் ஙங்ப்ஹ அஸ்ரீற், 1938) என்ற ஒரு சட்டம் ஐக்கிய மாகாண கவர்னரால் இயற்றப்பட்டது. அச்சட்டத்தின் பிரிவு 8-ன் கீழ் மேளா மாவட்டத்தின் பொறுப்பு அலுவலருக்கு மேளா நகரத்திற்குள் இருக்கும் இடங்களை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது. அந்த அதிகாரத்தின் கீழ், அகாராக்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு உரிமம் வழங்கப்படுகிறது. 1938-ம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தின் கீழும், அதன் அடிப்படையில் 1940-ல் வகுக்கப்பட்ட விதிகளின் கீழும், மேளா நகரத்திற்காக நியமிக்கப்படும் பொறுப்பு அலுவலர், மேளா நகரத்தின் எல்லைகளை மேளா தொடங்குவதற்கு முன்பு குறியிட்டு, பொது மக்களுக்கு அறிவித்து, அரசிதழில் அறிவிப்பு கொடுக்க வேண்டும். இந்த ஆண்டிற்கான கும்ப மேளாவிற்கான மேளா நகரத்தின் எல்லைகள் மேளா பொறுப்பு அலுவலரால் ஆகஸ்ட் 22, 2012-லேயே உத்திரபிரதேச அரசு இதழில் வெளியிடப்பட்டது.
கும்ப மேளாவில் புனித நீராடும் உரிமை பாரம்பரியமாக 14 மடங்களால் (அகாராக்கள் அல்லது அகாடாக்கள்) கொண்டாடப்படுகிறது. மொத்தம் 14 அகாராக்களில் ஒன்று தற்போது இல்லை. எனவே, இந்த மஹா கும்ப மேளாவில், 13 அகாராக்கள் பங்கு கொண்டன. அவை (1) பஞ்சயதி அகாரா மகா நிர்வாணி (2) பஞ்ச் அடல் அகாரா (3) பஞ்சயதி அகாரா நிரஞ்சனி (4) தபோநிதி ஆனந்த் அகாரா பஞ்சயதி (5) பஞ்ச் தஷ்ணம் ஜுனா அகாரா (6) பஞ்ச் தஷ்ணம் ஆவாஹன அகாரா (7) பஞ்ச் தஷ்ணம் பஞ்சாக்னி அகாரா (8) திகம்பர் ஆனி அகாரா (9) நிர்வாணி ஆனி அகாரா (10) நிர்மோஹி ஆனி அகாரா (11) பஞ்சயதி படா உதாசின் அகாரா (12) பஞ்சயதி அகாரா நயா உதாசின் (13) நிர்மல் பஞ்சயதி அகாரா.
மேற்கூறிய 13 அகாராக்களில், முதல் 7 அகாராக்கள் சைவத்தையும், அடுத்த 3 அகாராக்கள் வைராகி வைஷ்ணவத்தையும், அதற்கடுத்த 3 அகாராக்கள் படைப்புக் கடவுளான பிரம்மாவையும் பின்பற்றுவன. இவற்றில் உதாசின் என்பவை சீக்கியர்களையும் உள்ளடக்குகின்றன. பிரம்மாவை வழிபடுபவர்கள் கல்பவாசிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த அகாராக்களை 8-ம் நூற்றாண்டில் ஆதி சங்கரர், சைவம், வைணவம், கெüமாரம், காணாபத்யம், செüரம், சாக்தம் என்று ஆறு பிரிவுகளாகப் பிரிந்து கிடந்த இந்து சமயத்தை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது. ஆனால் சிலர் இந்த அகாராக்கள் கோரக்நாத் அவர்களால் உருவாக்கப்பட்டதாகவும் நம்புகின்றனர்.
ஒவ்வோர் அகாராவும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 52 இடங்களில் இயங்குகின்றன. ஒவ்வொரு ஊர்க் கிளையிலும் தலைமைப் பொறுப்பை ஏற்பவர் மஹந்த் என்று அழைக்கப்படுகிறார். இந்த அகாராக்களை நிர்வகிப்பவர்களுக்கு உயர் மட்டக் குழுவாக 5 பேரைக் கொண்ட குழு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு அகாராவிலும் தலைமைப் பொறுப்பை ஏற்பவர்கள் ஆசார்ய மஹா மண்டலேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அவர்களுக்கு கீழே மஹா மண்டலேஸ்வரர்களும், மண்டலேஸ்வரர்களும், மஹந்துகளும் இயங்குகிறார்கள்.
ஒவ்வோர் அகாராவிற்கும் ஆயுதம் ஏந்திப் போராடும் போராளிகளாக ஒரு காலத்தில் இருந்தவர்கள் தான் தற்போது கும்ப மேளாவின் மிகப் பெரிய கவர்ச்சியாக அல்லது ஈர்ப்புச் சக்தியாக விளங்கும் நாகா சாதுக்கள் ஆகும். அதனால் தான், இன்றும் நாகா சாதுக்கள் கையில் வாள், சூலம் போன்ற ஆயுதங்களை ஏந்தி, குதிரைகள் மீதும், நடந்தும், வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
இதில் ஒரு வியத்தகு செய்தி என்னவென்றால் அகாரா என்ற சொல்லுக்குப் பொருளே மல்யுத்த பூமி என்பதாகும். மகாபாரதத்தில் கண்ணனால் கொல்லப்பட்ட மிகப் பெரிய மல்யுத்த வீரனாகிய ஜராசந்தனின் மல்யுத்தக் களம், இன்றும் பீகாரில் நாளந்தா மாவட்டத்தில் ராஜ்கீர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் மடங்களும், சமய நிறுவனங்களும், வெறும் ஆன்மீகப் பயிற்சிக் கூடங்களாக மட்டுமில்லாமல், உடற்பயிற்சி, வீர விளையாட்டுக்கள் மற்றும் மனப் பயிற்சிக்கான கூடங்களாகவும் இருந்திருக்கலாம் என்பதை அகாரா என்ற சொல்லும் நாகா சாதுக்களின் வரலாறும் நமக்கு உணர்த்துகின்றன. இன்றும் கூட, பெüத்தத் துறவிகளின் மடாலயங்களில் ஒரு பிரிவாக சண்டைப் பயிற்சிக் கலை அளிக்கும் ஷாவலின் கோயில்கள் அமைந்து இருப்பதை நாம் அறிவோம்.
ஒவ்வொரு அகாராவிலும் விளங்கும் அதிகார வரிசையில் நாகா சாதுக்கள் கடைசியில் வந்தாலும், புனித நீராடலுக்கான முக்கியமான நாட்களில் நீராடுவதற்கான முதல் உரிமை நாகா சாதுக்களுக்கே அளிக்கப்படுகிறது. இந்த சாதுக்களைப் பார்ப்பதற்காகவே கும்ப மேளாவிற்கு வருகிற மக்கள் கூட்டம் ஏராளம். இந்த நாகா சாதுக்கள் கடும் குளிர், வெயில், மழை, பனி இப்படி எதுவாக இருந்தாலும், உடலில் ஒரு பொட்டுத் துணி கூட இல்லாமல், உடல் முழுவதும் சாம்பல் அல்லது விபூதி பூசிக்கொண்டு திரிவதையும், அவர்களில் சில பேர் ஒரு காலால் நடப்பவர்களாகவும், சில பேர் பல வருடங்களாகத் தூக்கி நிறுத்தப்பட்ட ஒரு கையோடும், முள் மேல் படுத்து இருப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களில் புகை பிடிப்பவர்களும், கஞ்சா பிடிப்பவர்களும் அடங்குவர். உடலில் துணி இல்லாவிட்டாலும், இவர்களில் பல பேர் கைக்கடிகாரமும், கழுத்தில் பல வகையான ருத்ராட்ச மாலைகளும் அணிந்துள்ளனர்.
மஹா கும்ப மேளாவின் முழுப்பரிமாணத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமேயானால், கிட்டத்தட்ட 5000 கூடாரங்களில் வந்து தங்கும் பல்வேறு சந்நியாசிகளையும், இந்த 56 நாட்களில் புனித நீராடலைத் தவிர, வேறு எந்த நோக்கமோ, இலட்சியமோ இல்லாமல், வசதிகளையும், உடல் அசதியையும் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப் படாமல் வந்து போகும் கோடிக்கணக்கான மக்களையும் பார்க்கவேண்டும்.
கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் பல நாட்களாக நடந்து வந்து மேளா நகரத்திற்குள் நுழைபவர்களையும், வாகனங்களில் வந்தாலும் 20 கி.மீ. தொலைவிலேயே அவை நிறுத்தப்பட்டு, மேளா நகருக்குள் நடந்து வந்து சேரும் மக்களையும் பார்க்கிற போது, இத்தனை கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக எது இருக்கிறது என்று நினைத்து வியக்காமல் இருக்க முடியாது.
குழந்தைகள், முதியோர்கள், பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், ஒரு வேளை சோற்றுக்கு வழியற்றோர், நோயாளிகள், செல்வந்தர்கள், மிக முக்கியப் புள்ளிகள் என்று சமூகத்தின் எல்லா மட்டத்திலிருந்தும் அங்கு வந்து கூடும் மக்களை இணைக்கும் ஒரே பாலம் அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கையும், பக்தியும் தான்.
மூட்டை மூட்டையாக இந்த புனித பயணத்திற்குத் தேவையான பொருட்களைக் கட்டிக் கொண்டு, அவற்றைத் தலை மேலும், தோளிலும், இடுப்பிலும் சுமந்து கொண்டு வரும் மக்கள் வெள்ளம், ஆங்காங்கே கிடைத்த இடத்தில் ஒரு பழைய நாளிதழையோ, ஒரு ப்ளாஸ்டிக் விரிப்பையோ விரித்துவிட்டு தங்களுடைய மூட்டைகளிலிருந்து ஒரு குடும்பத்தையே அவிழ்த்து இறக்கி, ஆங்காங்கே சமையல் செய்து, ஆங்காங்கே அனைவரும் உண்டு மகிழ்ந்து, இரவில் கடும் குளிரில் ஆங்காங்கே வெட்டவெளியில் படுத்து உறங்கி, காலையில் ஒரே சிந்தனையோடு நதியை நோக்கிப் பயணமாகி, அதில் நீராடி கங்கா மாதா, கங்கா மாதா என்று பரவசத்தால் கூக்குரலிடும் போது, அந்த மக்களின் ஆன்ம சக்தியை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.
அரசாங்கமோ, நிர்வாகமோ வசதி செய்து கொடுக்கவேண்டும் என்றுகூட நினைத்துப் பார்க்காமல், தங்களைத் தாங்களே அந்த மக்கள் நிர்வகித்துக்கொண்டு, அமைதியாகப் புறப்பட்டுப் போய்விடுவதைப் பார்க்கும் போது, ஒரு சில அதிகாரிகளோ, 12 ஆயிரம் காவலர்களோ, இவர்களை நிர்வகிக்கவோ, முறைப்படுத்தவோ முடியாது என்பதும், அந்த மக்களின் ஒருங்கிணைந்த சக்தி இந்த ஒட்டு மொத்த விழாவையே நிர்வகித்துவிடுகிறது என்பதையும் நாம் உணர முடியும்.
இதிலே ஆச்சரியப்படத்தக்க செய்தி என்னவென்றால், பொதுவாக திருவிழாக்களில் இளம் பெண்களைக் கிண்டல் செய்யவும், கிடைத்ததைத் திருடிக்கொண்டு போகவும் வரும் கூட்டத்தை, நான் தங்கியிருந்த 5 நாட்களில் பார்க்கவில்லை.
மொழி, இனம், சாதி, அந்தஸ்து, ஆரோக்கியம் ஆகிய பேதங்களைத் தாண்டி, ஒன்றுபட்ட சிந்தனையோடு அங்கு கூடும் மக்களைப் பார்க்கும் போது, அதுவே உண்மையான சங்கமம் என்று எண்ணத் தோன்றும்.
ஆங்காங்கே, பல்வேறு கூடாரங்களில் ஹோமங்களும், ஆன்மீக உரைகளும், தத்துவ விசாரம் சார்ந்த ஆய்வரங்கங்களும், கலை நிகழ்ச்சிகளும், பஜனைகளும், ஆட்ட பாட்டங்களும், காலை முதல் இரவு வரை நடப்பதையும், யார் வேண்டுமானாலும் பல இடங்களில் இலவசமாக பரிமாறப்படும் உணவை உட்கொள்ளலாம் என்பதையும் இந்த மேளா நகரில் நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.
பாரத தேசத்தின் சக்தி, சுவாமி விவேகானந்தர் கூறியதைப் போல், செல்வ வளத்திலிருந்தோ, இயற்கை வளத்திலிருந்தோ, கனிம வளத்திலிருந்தோ, ஆயுத பலத்திலிருந்தோ தோன்றவில்லை. அது எளிய வாழ்க்கையையும், உயரிய சிந்தனைகளையும் இயல்பாகவே போற்றுகிற நம் அன்றாடங் காய்ச்சிகளின் மன வளத்திலிருந்தும், ஆன்ம பலத்திலிருந்துமே தோன்றுகிறது என்பதற்கு மஹா கும்ப மேளாவில் கூடிய கோடிக் கணக்கான மக்களே சாட்சி.