முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கலைகள், கட்டடங்கள், வெற்றிடங்கள்!

தெருக்கூத்து என்றால், புரிசை கிராமம் நினைவுக்கு வராமல் இருக்காது. அங்கே மகாபாரதம் தெருக்கூத்து வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:55 AM
பகிர்:

தெருக்கூத்து என்றால், புரிசை கிராமம் நினைவுக்கு வராமல் இருக்காது. அங்கே மகாபாரதம் தெருக்கூத்து வகையில் வழங்கப்பட்டு வருகிறது. மகாபாரதம் பல கிராமங்களில் பல வடிவங்களில், ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டு வழங்கப்பட்டு வருவதையும் நாம் அறிவோம். ஆனால் இங்கே நடக்கிற மாதிரி வேறு எந்த கிராமத்திலாவது நடக்கிறதா? என்று தெரியவில்லை. துரியோதனனின் உருவ பொம்மையைத் தரையில் பிரம்மாண்டமாக உருவாக்கிக் கிடத்தியிருக்கிறார்கள். பார்வையாளர்கள் அத்தனை பேரும் அதைச் சுற்றி நின்றுகொண்டு பார்க்க, பீமன் கதாயுதத்துடன் துரியோதனன் வேடம் தாங்கியவரை விரட்டிக்கொண்டு துரத்தித் துரத்தி ஓடுகிறான். பிறகு கீழே பிரம்மாண்டமாக இருக்கும் துரியோதனன் பொம்மையின் தொடையைத் தாக்குகிறான். அவனைத் தூக்கிக்கொண்டு மக்கள் பின்னர் பொம்மையிலிருந்து இறங்குகிறார்கள். மற்ற நாட்களில் அது மக்கள் சாதாரணமாக நடமாடும் இடமாக இருந்தாலும், அந்த வெற்றிடம் இந்த நிகழ்ச்சியின்போது வேறு பரிமாணம் பெற்று, படுகளம் ஆகிவிடுகிறது.
 வெற்றிடம் - கட்டடங்களில், பொது மேடைகளில், கூத்து நிகழ்ச்சிகளில், பரதக் கலை அரங்குகளில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பது குறித்த சுவாரசியமான டாகுமென்டரி ஒன்றைத் திரையிட்டுவிட்டு, வி.ஆர். தேவிகா நிகழ்த்திய சொற்பொழிவு, மேற்படி வித்தியாசமான செய்திகளைச் சொல்லியது. நிகழ்ச்சி "இன்டாக்' சென்னைக் கிளையின் சார்பாக நடத்தப்பட்டது. (இந்திய தேசியக் கலை மற்றும் கலாசார பாதுகாப்பு அறக்கட்டளையின் சுருக்கமே இன்டாக்.) வி.ஆர். தேவிகா, தினசரி சர்க்காவில் நூல் நூற்கும் பெண்மணி. காந்திய தத்துவங்களில் ஊறியவர். காந்திய தத்துவங்களைப் பள்ளிகளில் எளிமையான வடிவத்தில் எடுத்துச் சொல்பவர். சுவாரசியமாகக் கதை சொல்வதில் வல்லவர். இவருடைய டாக்டர் பட்டத்துக்கு காந்திய தத்துவங்களைத்தான் எடுத்துக்கொண்டார்.
 இதே குறும்படத்தில், 60-70 வயதான ஆண்கள், எட்டயபுரம் அருகே கோடங்கிப்பட்டி கிராமத்தில் தேவராட்டம் நடனம் ஆடுவதை நள்ளிரவில் படம் பிடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் தேவிகா. மூன்று இரவுகள் தொடர்ந்து அவர்கள் நடனம் ஆடுவார்கள். அதில் ஒரு காலப் பிரமாணம் இருக்கிறது. பாதங்கள் ஒரே மாதிரி வைக்கப்படுகின்றன. கரங்கள் மேலே செல்வதும் அதே கதியில் கீழிறங்குவதும் அத்தனை கச்சிதமாக இருக்கின்றன. ஒரு துளிகூடப் பிசகுவது இல்லை.
 சென்னராயபெருமாள் சாமியின் ஊர்வலம், காந்திகிராமம் அருகே உள்ள கோட்டைப்பட்டியில் காலங்காலமாக நடந்துவருவதைக் காண்பித்தார் தேவிகா. பல நாட்களுக்கு வெறிச்சோடிக்கிடக்கும் வெற்றிடம் எவ்வாறு ஓர் அரங்கின் தோற்றத்தை அடைந்துவிடுகிறது என்பது புரிந்தது. அங்கங்கே சிறு சிறு குழுக்களாகப் பாட்டோடு ஆடும் நடனக் குழுக்களை நோக்கி பெருமாளின் பல்லக்கு வந்துவிடுகிறது. ஒரு கோஷ்டி சிவாஜி கணேசன் திரைப்படத்தில் பாடிய ஒரு பாட்டுக்கு ஏற்ப நடனம் ஆடுவதைக் கண்டுவிட்டு, அங்கே வந்துவிடுகிறார் பெருமாள். நடனம் எங்கே நன்றாக இருக்கிறதோ, அங்கே சென்னராயப் பெருமாள் பல்லக்குப் போய்விடுமாம்!
 கொடைக்கானல் அருகே உள்ள கணி கிராமத்துச் சிறுவர்கள் பாடல் இசைத்துக் கொண்டே லயத்துடன் கோலாட்டம் ஆடிய காட்சியை, உடன் வந்த குறும்படப் புகைப்படக் கலைஞர் ஆர்.வி. ரமணி எடுத்த அற்புதமான காட்சியையும் கிராமக் கலையின் ஓர் அங்கமாகக் காண்பித்தார் தேவிகா.
 காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் சிற்பங்கள் சிலவற்றில் சிவபெருமான் கங்கையைத் தன் சிரசில் தாங்கிக்கொள்ளும் காட்சியை கற்களில் வடித்திருந்தார் சிற்பி. நடராஜர் விக்கிரகத்தில், பிரபைக்கும் அவருடைய உருவத்துக்கும் இடையே, அவருடைய விரிசடை வெற்றிடத்தை ஆக்ரமித்திருந்ததைச் சுட்டிக் காண்பித்தார் தேவிகா.
 பரதக் கலையில் மேடையை நடனக் கலைஞர் எவ்வாறு கையாள்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக, சங்கீதா ஈசுவரன் - "வெகு நாகரிகமாகவே கனக சபையில்' - என்ற வரிகளுக்கு நடனம் ஆடியதைக் காட்சிப்படுத்தியிருந்தார்.
 தேவிகா நடனக் கலையும் பயின்ற பள்ளி ஆசிரியர். அதனால் இரு கைகளையும் வலமும் இடமும் நீட்டி, அவற்றைச் சுழற்றி வெற்றிடத்தைக் காண்பித்துவிட்டு, தரையைத் தொட்டு வணங்கி கைகளை மேலே உயர்த்தி அனைத்து ஜீவராசிகளுக்கும், அனைத்து மக்களுக்கும், வணக்கம் சொல்லிவிட்டுத்தான் நிகழ்ச்சியைத் தொடங்குகிறார். முடிக்கும்போதும் அப்படியே. கட்டடங்களில், மேடைகளில், சாஸ்த்ரிய மற்றும் கிராமக் கலைகளில், சிற்பங்களில் எல்லாம் வெற்றிடம் கையாளப்படுவதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

 
 

முழு கட்டுரையைப் படிக்க →