விளையாட்டுக்கு ஒரு வடுவூர்!
தேசிய, மாநில அளவில் கபடி(சடுகுடு), கைப்பந்து(VolleyBall), தொடர்ஓட்டம்(Relay) என பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் வீரர், வீராங்கனைகளைத்
தேசிய, மாநில அளவில் கபடி(சடுகுடு), கைப்பந்து(VolleyBall), தொடர்ஓட்டம்(Relay) என பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் வீரர், வீராங்கனைகளைத் தந்து வருகிற ஊர் வடுவூர். ஆம். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது வடுவூர்.
கோடை விடுமுறை வந்துவிட்டால் கைப்பந்து, கபடி போட்டிகள் நடக்கும் ஊர் வடுவூர். இவ்வூருக்கு மத்திய அரசு ரூபாய் 6 கோடி நிதி வழங்கி இந்தியாவிலேயே முதல்முறையாக ஊரகப் பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்திட உள்ளது.
கடந்த 1964-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் வடுவூருக்குப் பெருமை தேடித் தந்து முதல் துவக்கத்தை தந்தவர் இந்திய தடகள விளையாட்டுப் பயிற்சியாளராக இருந்து மறைந்த வீரர் பி.ராஜசேகரன். இவரைத் தொடர்ந்து தடகளத்தில் முத்திரை பதித்தவர் ரயில்வேயில் விளையாட்டுத்துறை உதவி இயக்குநராக உள்ள ஜி.மோகன்.
வடுவூர் பொதுமக்களுடன் இணைந்து ஸ்போர்ட்ஸ் அகாதெமியினர் வடுவூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம் கட்ட வேண்டும் என முடிவு எடுத்திருந்த நிலையில் இத்திட்டத்தை நிறைவேற்ற தங்களுக்குச் சொந்தமான பூர்வீக இடத்தைத் தருவதாக உறுதி அளித்த வடுவூர் மறைந்த வி.என்.ராமசாமி ஐயங்கார் குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கி அதற்கான இடத்தை பத்திரப்பதிவு செய்து ஸ்போர்ட்ஸ் அகாதெமியிடம் ஒப்படைத்தனர் வி.என்.ராமசாமி மனைவி பூமாஅம்மையார் மற்றும் அவரது நான்கு மகன்களும், மூன்று மகள்களும்.
இதன் தொடர் நடவடிக்கையாக மத்திய, மாநில அரசு அலுவலங்கள், நிறுவனங்களில் பணியாற்றும் வீரர்கள், கொடை உள்ளம் கொண்டவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வடுவூர் பகுதியைச் சொந்த ஊராகக் கொண்டு வெளிநாடு மற்றும் மற்ற மாநிலங்களில் பணியாற்றுபவர்கள் என அனைத்துத் தரப்பினரிடம் இருந்து நன்கொடைகள் பெறப்பட்டு மக்கள் பங்களிப்பால் அந்தத் தொகையைக் கொண்டு மேலும் இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு மொத்தம் மூன்றரை ஏக்கர் விளையாட்டு அரங்கத்திற்காக முடிவானது.
இந்தியாவிலேயே முதல்முறையாக கிராமப்பகுதிக்கு என உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ஒப்புதல் அளித்து இதற்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தது மத்திய அரசு. இதற்கு உதவியவர் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு.
இதனை அடுத்து மேடுபள்ளமாகவும், சாகுபடி நிலமாக இருந்த அந்த மூன்றரை ஏக்கர் இடத்தைச் சமதளமாக்க வேண்டும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜிடம் ஸ்போர்ட்ஸ் அகாதெமியினர் அளித்த கோரிக்கையினை ஏற்று அரசுத்துறை உதவியுடன் சமதளமாக்க ஒத்துழைப்பு வழங்கி இந்தப் பணி விரைவாக முடிக்கவும் உதவினார்.
தென்மண்டல பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் பெஷின் தலைமையில் உயர்மட்டக் குழுவினர் உள்விளையாட்டு அரங்கம் அமையும் இடத்தினை பல கட்டங்களாக ஆய்வு செய்த பின் கட்டுமானப் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு சென்னையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு 11 மாத கால அவகசாம் தந்து பணி ஆணை வழங்கப்பட்டதை அடுத்து, கடந்த 28.10.2013 அன்று கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சுமார் 2400 சதுரமீட்டரில் (அதாவது 60 மீ. நிளம், 40 மீ. அகலம்) உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது. இதில் தரைத்தளம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேபிள்உட் என்ற மரத்தில் அமைகிறது. இந்த விளையாட்டு அரங்கத்தில் கபடி, கைப்பந்து, ஓட்டம், கூடைப்பந்து, இறகுபந்து, டேபிள்டென்னிஸ், சிலம்பம், கராத்தே, சதுரங்கம், கேரம், குண்டு, வட்டு எறிதல், யோகா உள்பட பல்வேறு போட்டிகளுக்குப் பயிற்சி அளிக்கவும், போட்டிகள் நடத்தும் வகையில் விளையாட்டு அரங்கம் அமைய உள்ளது.
விளையாட்டுப் போட்டிகளை ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்படுகிறது. மேலும் இதில் அலுவலகத்திற்கும், சிறப்பு விருந்தினர், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்கவும், உடை மாற்றவும் தனித்தனி அறைகளும், கழிவறை, குளியலறை, உடற்பயிற்சிக்கூடம், நடைப்பயிற்சி பாதை என அனைத்து வசதியும் உள்ளடங்கியது.
மத்திய இளைஞர்நலம் மற்றும் விளையாட்டுத்துறையின் கீழ் இயங்கும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையகத்தின் சார்பில் பயிற்சியாளர்கள், வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதுடன், போட்டிக்கான வீரர்களையும் தேர்வு செய்வார்கள்.
வடுவூருக்கு அருள்மிகு கோதண்டராமர் சுவாமியின் அருள் வேண்டி பல ஊர்களிலிருந்து பக்தர்கள் வருவதுபோல், வசந்தம் தேடி பல்வேறு நாடுகளிலிருந்து பலவகை பறவைகள் வடுவூர் ஏரிக்கு வருவதுபோல், தங்களது தனித்திறமையை காட்டவும் பயிற்சி என்ற பட்டையை தீட்டவும், நாட்டின் பெருமையை உலக அளவில் கொண்டுசெல்லவும், பல்வேறு பகுதிகளிலிருந்து களம் காண வீரர், வீராங்கனைகள் வர உள்ளனர் வடுவூர் உள் விளையாட்டு அரங்கத்திற்கு.