நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்!
சமீபத்தில் குடும்பத்தினருடன் வெளியே செல்ல வேண்டியிருந்தது. அதற்காக தற்போது சென்னை நகரில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் கால் டாக்சி ஒன்றினை புக் செய்துவிட்டு வாசலில் வந்து காத்திருந்தோம்.
சமீபத்தில் குடும்பத்தினருடன் வெளியே செல்ல வேண்டியிருந்தது. அதற்காக தற்போது சென்னை நகரில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் கால் டாக்சி ஒன்றினை புக் செய்துவிட்டு வாசலில் வந்து காத்திருந்தோம். சொன்ன நேரத்திற்குச் சரியாக வந்து நின்றது வண்டி. ""நீங்கள்தான் அழைத்தீர்களா''? என்றபடி டிரைவர் சீட்டில் இருந்து இறங்கினார் தேவகி என்ற பெண்மணி. ஆச்சரியத்தின் ஊடே பயணம் செய்தபடியே அவரிடம் பேச்சு கொடுத்தோம். இதோ அவர்
நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""எனக்கு சின்ன வயதில் இருந்தே டூ விலரில் இருந்து புதுவிதமான எந்த வண்டியைப் பார்த்தாலும் அதை எடுத்து ஒரு ரவுண்டு ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். திருமணத்திற்குப் பின்பு என் கணவர் ஓர் ஆட்டோ டிரைவர் என்பதால் அவர் சவாரிக்குப் போகாத நேரத்தில் அவருக்குத் தெரியாமல் ஆட்டோவில் அமர்ந்து ஆட்டோவை ஸ்டார்ட் செய்து பார்ப்பது, அதன் பிறகு மெல்ல ஓர் அடி நகர்த்தி நிறுத்திவிடுவது என கொஞ்சம் கொஞ்சமாக நானே ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டேன். நன்றாக ஓட்டக் கற்றுக் கொண்ட பிறகு ஒருநாள் ஒரு ரவுண்டு எடுத்து ஓட்டும்போது என் கணவர் அதைப் பார்த்துவிட்டார். என்ன சொல்வாரோ என ரொம்பப் பயந்து போனேன். ஆனால், அவர் அதைப்பற்றி எதுவுமே கேட்கவும் இல்லை. திட்டவும் இல்லை. உள்ளுக்குள் ரசித்தார்.
இந்நிலையில் என் தோழியின் மூலம் சென்னை, அண்ணாநகர் சாந்தி காலனியில் "அ சஉர’ என்ற பெண்கள் நல மன்றம் இருப்பதாகவும் அதன்மூலம் அவர்கள், பெண்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப ஏதாவது ஒரு கைத்தொழிலைக் கற்றுக் கொடுத்து வேலையும் வாங்கிக் கொடுப்பதாகவும் கேள்விப்பட்டு சென்று பார்த்தேன். அப்போது அங்கே கார் டிரைவிங் கற்றுகொடுப்பதைப் பார்த்தேன். அதில் அதிக ஆர்வம் ஏற்பட்டு கார் ஓட்டவும் கற்றுக்கொண்டேன்.
அதன் பிறகு அந்த அமைப்பின் நிர்வாகக் குழு என்னைப்போன்று கார் ஓட்டக் கற்று கொண்ட வேறு சில பெண்களுக்கும் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னார்கள். ஆனால், அந்தச் சமயத்தில் கால் டாக்சி எல்லாம் கிடையாது. அப்போது 3 ஸ்டார், 5 ஸ்டார் போன்ற பெரிய ஓட்டல்களுக்கு வரும் கஸ்டமர்களின் கார்களைப் பார்க்கிங் செய்வதற்கென ஆட்கள் இருப்பார்கள். அந்த வேலையில் எங்களைச் சேர்த்து விடுவதற்காக ஓட்டல்களில் சென்று பேசினார்கள். எந்த ஓட்டல்களும் முன்வராத நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள "ஓட்டல் ஜி.ஆர்.டி' நிர்வாகம்தான் எங்களுக்கு முதலில் அனுமதி தந்தார்கள். அங்கே வரும் லேடி கஸ்டமர்களின் கார்களைப் பார்க் செய்யும் வேலையை வாங்கித் தந்தார்கள். அந்தச் சமயத்தில் திடீரென என் கணவர் மாரடைப்பால் இறந்துவிடவே கூடுதல் குடும்பப் பொறுப்பும் எனக்குச் சேர்ந்து கொண்டது. இதனால் கடந்த 2009-இல் இருந்து கார் ஓட்டி வருகிறேன்.
இந்நிலையில் நான் "ஓட்டல் சவேரா'வுக்கு மாற்றப்பட்டேன். அப்போது ஒருநாள் நானும், இன்னொரு தோழியான மஞ்சுளாவும் கார் எடுப்பதையும், நிறுத்துவதையும் பார்த்த ஓட்டல் சவேராவின் உரிமையாளர் மீனாரெட்டி அம்மாவுக்கு எங்களை மிகவும் பிடித்திருந்தது. அதனால் எங்களுக்கு உதவும் வகையில் அவர்கள் உறுப்பினராக இருந்த "பர்ன்ஸ்ரீட்ங்ள் இப்ன்க்ஷ'' மூலமாக எனக்கும், என் தோழிக்கும் ஆளுக்கொரு கார் வாங்கிக் கொடுத்தார்கள். அதன் பிறகு பார்க்கிங் செக்ஷனில் இருந்து ஓட்டலுக்கு வரும் டூரிஸ்ட்டுகளைக் காரில் அழைத்துச் செல்லும் வேலையைக் கொடுத்தார்கள். மேலும் அந்த கிளப்பின் மற்ற உறுப்பினர்களான நடிகை ரம்யா கிருஷ்ணன், சுஹாசினி, சைலஜா போன்ற பல பிரபலங்களின் மூலம் "ரஹய்க்ங்ழ் ல்ண்ஸ்ரீந்ன்ல்’ என கால் டாக்சி சென்டரும், ‘ல்ங்ய்ற்ஹஷ்ண். ஸ்ரீர்ம்’ என்று ஒரு வெப்சைட்டும் தொடங்கி வைத்தார்கள். இந்தத் துறைக்கு வரும்வரை வீட்டைவிட்டு எங்கேயும் தனியாகச் சென்றதில்லை. அதனால் ஆரம்பத்தில் வழி தெரியாத பிரச்னை கொஞ்சம் இருந்தது. அதனால் ஆரம்பத்தில் சென்னைகுள்ளேயேதான் ஓட்டிக்கொண்டிருந்தோம். அதன் பிறகுதான் மகாபலிபுரம், கோவளம் என நகரத்துக்கு வெளியேயும் போக ஆரம்பித்தோம். இதைத் தவிர கடந்த ஆறுமாதங்களாக தற்போது பிரபலமாக இருக்கும் கால் டாக்சியிலும் டிரைவாக வேலை செய்கிறேன். என்னால் முடிந்தவரை நானும் பெண்கள் நல மன்றத்தின் மூலம் சிலருக்கு கார் ஓட்டச் சொல்லிக் கொடுத்து கால் டாக்சியில் வேலையும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.
பொதுவாக என் காரில் பெண்களை மட்டும்தான் ஏற்றிச்செல்வேன். தம்பதிகளாக வந்தால் ஆண்களை அனுமதிப்பேன். தினசரி பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறேன். அவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள். தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை இப்போது வந்துவிட்டது'' என்றபடி எங்களைச் சேர வேண்டிய இடத்தில் பத்திரமாக இறக்கிவிட்டுவிட்டு, சிரித்துக்கொண்டே விடைபெற்றார்.