நட்சத்திர வனம்!
கோவை நகரமானது இயற்கை வளங்களுக்கும், சுத்தமான குடிநீருக்கும், ரம்யமான காலநிலைக்கும் பெயர் பெற்றது. வேகமாக பரவி வரும் நகரமயமாக்கல் காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு வருகி
கோவை நகரமானது இயற்கை வளங்களுக்கும், சுத்தமான குடிநீருக்கும், ரம்யமான காலநிலைக்கும் பெயர் பெற்றது. வேகமாக பரவி வரும் நகரமயமாக்கல் காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் காடு வளர்ப்புத் திட்டத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஒரு மரத்தை நடுவதன் மூலமாக அந்த ஒரு மரத்தின் பலன் மட்டுமே நமக்கு கிடைக்கிறது. ஆனால், 27 மரங்களை ஒரு வட்டத்தில் நடுவதன் மூலமாக மனிதனுக்குத் தேவையான அனைத்து நன்மை பயக்கும் சக்தியும் கிடைக்கும் என்பதே இந்த நட்சத்திரவனத்தின் அடிப்படை கருத்தாகும். அதன்படி, "கிரேண்ட் வேர்ல்டு எல்டர் கேர்' அமைப்பின் நிறுவனர் மற்றும் சேர்மன் டாக்டர் பிரேம்ராஜ் நட்சத்திர வனத்தை உருவாக்கியிருக்கிறார். இதுகுறித்து,டாக்டர் பிரேம்ராஜ் கூறியதாவது:
""27 நட்சத்திரங்களில், ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு மரத்துடனும் தொடர்புடையது என அகஸ்தியரின் வேத சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவருடைய பிறப்பு நட்சத்திரத்துடன் தொடர்புடைய மரத்தை நடுவது என்பது அவர்களுடைய நேர்மறையான ஆற்றலை அதிகரிப்பதோடு அவர்களுடைய ஆன்மிகத்தையும் உயர்த்தும் என்று நம்பப்படுகிறது.
நட்சத்திரவனமானது ஒன்றாக இணைந்து அனைத்து மரங்களும் ஒரே சக்கரத்தில் வளரும்போது ஏற்படும் நன்மை தரக்கூடிய சக்தியானது மக்களைத் தாக்கும் தீமையை ஒழித்து, நன்மை கிடைக்கச் செய்யும். இந்த வனம் ஒத்தக்கால் மண்டபத்தில் வேலையில் உள்ள 27 பிரபலங்கள் அவரவரது நட்சத்திரப்படியான மரக்கன்றுகளை ஒரே சக்கரத்தில் நட்டனர். பிறப்பு நட்சத்திரங்களுடன் தொடர்புடைய 27 வகையான மரங்கள் இங்கு நடப்பட்டுள்ளன. அதாவது, அஸ்வினி நட்சத்திரத்திற்கு எட்டி, பரணி- நெல்லி, கார்த்திகை - அத்தி, ரோகினி - நாவல், மிருகசீரிடம் - கருங்காலி, திருவாதிரை - செங்கருங்காலி, புனர்பூசம் - மூங்கில், பூசம் - அரசு, ஆயில்யம் - புன்னை, மகம் - ஆல், பூரம் - பலாசு, உத்திரம் - அலரி, ஹஸ்தம் - அத்தி, சித்திரை - வில்வம், ஸ்வாதி - மருதம், விசாகம் - விளா, அனுசம் - மகிழம், கேட்டை - பராஸ், மூலம் - மரா, பூராடம் - வஞ்சி, உத்திராடம் - பலா, திருவோணம் - எருக்கு, அவிட்டம் - வன்னி, சதயம் - கடம்பு, பூராட்டாதி - தேமா, உத்திரட்டாதி - வேம்பு, ரேவதி - இலுப்பை போன்ற மரங்கள் ஒவ்வொரு நட்சத்திற்கும் நடப்பட்டுள்ளன'' என்றார்.
"நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளூவரின் வாக்கிற்கேற்ப, மரம் நடுவதன் மூலமாக மழை பெய்யும். மழை பெய்வதால் அனைத்து உயிர்களும் செழிப்புடன் வாழும் என்பதே அடிப்படைக் கருத்து. ஆகவே, அனைவரும் மரம் நடுவோம், மழை பெறுவோம்.