மதுரை தெற்குமாசி வீதியில் பட்டறை வைத்திருக்கும் பாரம்பரிய பொற் கொல்லர் நாகராஜன் தங்க மோதிரத்தில் தமிழ் எழுத்துகள், அவ்வையாரின் ஆத்திச்சூடி வரிகள், கரும்புடன் கூடிய பொங்கல் பானை, ஜல்லிக்கட்டு காளை, ஐபிஎல் இலச்சினை, திருவள்ளுவர், காந்தி, பாரதி உருவங்களையும், 12 ராசிகளின் வடிவங்களையும் கை விரல்களால் செதுக்கி வருகிறார் நாகராஜன்.
""மோதிரங்களில் ஒன்றிரண்டு ஆங்கில எழுத்துகளை செதுக்குவது எல்லாரும் செய்வதுதான். நான் தமிழின் உயிர் எழுத்துகள் அனைத்தையும் மோதிரத்தின் முகப்பிற்குள் செதுக்குகிறேன். அவ்வையாரின் "அறம் செய்ய விரும்பு' போன்ற வரிகள், "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" போன்ற திருக்குறள் வரிகளை திருவள்ளுவர் உருவத்துடன் மிகச் சிறிய மோதிரத்தில் செதுக்குகிறேன். இது வேறு யாரும் செய்யாதது.
தமிழின் வல்லினம், இடையினம், மெல்லின எழுத்துகளையும் செதுக்குகிறேன். நகைகள் செய்வதில் இயந்திரங்கள் வந்துவிட்டாலும் நுணுக்கமான வேலைகளை விரல்களால்தான் செய்ய வேண்டும். இந்த எழுத்துகளை, இயந்திர உதவியுடனோ, லேசர் கட்டிங்கிலோ செய்ய முடியாது. எழுத்துகளை, உருவங்களை மோதிரத்தில் வரைந்து பிறகு செதுக்க வேண்டும். கடிகாரம் பழுது பார்க்கும் போது ஒரு கண்ணில் பூதக் கண்ணாடி பொருத்திக் கொள்வது மாதிரி கண்ணில் பூதக் கண்ணாடி போட்டுக் கொண்டு செதுக்குவேன். இரண்டு கண்களுக்கும் அணிந்து கொள்ளக்கூடிய விளக்குப் பொருத்தப்பட்ட பூதக் கண்ணாடியும் உண்டு. இரண்டையும் தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்துவேன். பூதக் கண்ணாடி அணியாமல் செதுக்க முடியாது.
எழுத்துகளை உருவங்களை வடிவங்களை இரவு நேரத்தில்தான் செதுக்குவேன். அப்போதுதான் கவனம் செலுத்தி செதுக்க முடியும். பகல் நேரங்களில் பல வேலைகளால், பலருடன் பேச வேண்டிவரும். அலைபேசி அழைப்புகள் வரும் .அதனால் ஒருமனதாக வேலை செய்ய முடியாது. ஆங்கில எழுத்துகளை செதுக்குவது எளிது. அவை இரண்டு வரி எழுத்துகள். தமிழ் எழுத்துகளை நாலுவரி எழுத்துகள். கீழேயும், மேலேயும் கொம்புகள் இருக்கும். அதனால் அவற்றை சிறிதாக்கி செதுக்குவது சிரமமான வேலை. தற்சமயம் தமிழ் எழுத்துகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழில் இன்ஷியல்களை, முழுப் பெயர்களை, ஜல்லிக்கட்டு காளை, கரும்புடன் கூடிய பொங்கல் பானை, திருக்குறள் வரிகள் செதுக்கித் தர கேட்கிறார்கள்.
கரோனா காலத்தில் நகைக்கடைகள் மூடிக்கிடந்தன . அதனால் வேலை இல்லை. அந்த நாட்களில் தமிழ் எழுத்துகள் உள்ள மோதிரங்களை செய்ய ஆரம்பித்தேன்... மதுரை சுற்றுவட்டாரத்தில் இந்த மாதிரி மோதிரங்களுக்கு ஒரு சந்தை உருவாகியிருக்கிறது. மோடி, ஸ்டாலின் உருவங்களை மோதிரத்தில் செதுக்க ஆரம்பித்திருக்கிறேன். சில வாரங்களில் ரெடியாகும்''என்கிறார் நாகராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.